மனிதத்தை மீட்டுத்தரும் உரையாடல்கள்

மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை.

திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது.

முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், என்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எனது நிம்மதியையும் இழக்க நேர்ந்தது என்பதை இந்நாட்களில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இப்போதும் கூட நான் உரையாடலுக்கும் விவாதத்துக்குமான முழுமையான இடைவெளியை புரிந்து கொண்டேனா என்று என்றால் இல்லை என்பதே எனது பதிலாகவும் இருக்கிறது. ஆனால் அவையிரண்டுக்கும் மிகப் பெரிய இடைவெளியுண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். உரையாடும் கலையை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் வந்திருக்கிறது இந் நாட்களில்.


உரையாடுவதால் மட்டுமே மற்றைய மனிதர்களை எம்மால் புரிந்துகொள்ளமுடியும் என்பது மெல்ல மெல்ல புரிந்திருக்கிறது.

உரையாடலுக்கும், வாதம் - தர்க்கம் என்பவற்றிற்கான வேறுபாடுகளை நாம் அறிவதன் முலமே அவற்றிற்கிடையிலான வேறுபாட்டையும், மனித வாழ்வில் உரையாடலின் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

முதலில் வாதம் - தர்க்கம் செய்யும் போது நாம் எவ்வகையான நோக்கங்களைக் கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்
  • எமது கருத்து சரியானது என்பதை நிலைநாட்ட முயற்சிக்கிறோம்.
  • அதற்கான காரணங்களைக் கூறி விவாதிக்கிறோம்.
  • எதிராளியிடம் கருத்தில் உள்ள பலவீனங்களைத் தேடுகிறோம்.
  • எதிராளி தனது கொள்கையில் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்க முயற்சிக்கிறோம்.
  • அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டால் அவர் பலவீனப்படுகிறார் எனக்கொள்கிறோம்.
  • எமது உடல் மொழி (body lanquage) மூலமாயும் ஆதிக்கக்கம் செலுத்துகிறோம். (கை காலை ஆட்டி ஆர்ப்பாட்டமாய் பேசுதல்).
உரையாடல் செய்யும் போது நாம் எவ்வகையான நோக்கங்களைக் கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்.
  • எமது கருத்தினை விளங்கப்படுத்துவதன் மூலம் புரியவைக்க முயற்சிக்கிறோம்.
  • எம்முடன் பேசுபவரின் கருத்தை நிதானத்துடன் உள்வாங்கிக் கிரகிக்கிறோம்.
  • பேசுபவரிடம் உள்ள சிறப்புக்களை, திறமைகளை அவதானிக்கிறோம்.
  • பேசுபவர் எம்முடன் பேசும்போது அவருக்கு பாதுகாப்பான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறோம்.
  • பேசுபவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டால் அதை ‌அவரின் உயர்ந்த பண்பாகக் கொள்கிறோம்.
  • எமது உடல் மொழி (body lanquage) மிகவும் இனிமையானதாக, மற்றவருக்கு ஆறுதல் தருவதாக இருக்கும்படியாக நடந்துகொள்கிறோம் (ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான உடல்மொழி)
மேற் கூறிய இரண்டு மொழியாடல்களின் தன்மையையும் நாம் பார்க்கும் போது நமக்கு இவை இரண்டும், இரு வேறு திசைகளில் பயணிப்பதை அறியக்கூடியதாய் இருக்கிறது.
நான் விவாதம் - தர்க்கம் தவறு என்று கூறவில்லை. அதற்குரிய சந்தர்ப்பங்களில் அவற்றை நாம் நாடலாம். மனிதர்கள் சக மனிதனை புரிந்துகொள்ள முயலும் போது தர்க்கம், விவாதங்களை விட உரையாடலே அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை அதிகரிக்கிறது.
எஞ்சியிருக்கும் எனது வாழ்நாளில் உரையாடலுக்கே அதிகநேரம் செலவிட விரும்புகிறேன். வாதம் - தர்க்கம் புரிந்து அலுத்துவிட்டது. அதனால் எஞ்சியிருக்கும் வெற்றிகளை விட தோல்விகளும், ஏமாற்றங்களுமே அதிகம்.
நாம் ஒருவருடன் உரையாடும் போது உரையாடுபவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று நோக்குவோமானால் ஒரு உரையாடலை மேற்கொள்பவாகள் ஒரே கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கிடையில் சமத்துவம் இருக்கவேண்டும். இச் சமத்துவத்தின் மூலமாக பலவீனமானபவர்களும் அவர்களின் கருத்தை முன்வைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அதே நேரத்தில் உரையாடல் ஒன்றில் அதிக ஆதிக்கம் செலுத்துபவரின் வாதம் செய்யும் தன்மை அற்றுப்போகிறது.

எவ்வாறு நாம் ஒரு உரையாடலை உருவாக்கலாம்?
  • மற்றவரின் கருத்தை மிக அவதானமாகக் கேளுங்கள். ஒரு உரையாடலுக்கு ”கேட்டல்” என்பது இன்றியமையாதது. ஒருவரை புரிந்து கொள்வதற்கு மிக அவதானத்துடனான, புரிதலுடனான ”கேட்டல்” முக்கியமானது. 
  • எவரையும் உங்களை புரிந்து கொள்ளும்படி திணிக்காதீர்கள். உரையாடலின் நோக்கம் உரையாடுபவரின் கருத்தை மாற்றியமைப்பதல்ல. உரையாடலில் திணிப்பு என்பதற்கு இடமில்லை. உரையாடலானது கேட்டல், உணர்தல், மற்றவரின் கருத்தை நான் புரிதல் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. உங்களால் மற்றவர்களை உங்கள் கருத்துகளின் மூலமானக மாற்றமுடியாது போகலாம். ஆனால் உரையாடலின் மூலம் உங்கள் கருத்தை மற்றவர்கள் அவதானிக்கும்படி செய்யலாம்.
  • விமர்சனமின்றி  மற்றவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள். புரியாத விடையங்களை கேள்விகளின் மூலமாக தெளிவுபெற முயலுங்கள்.
  • ஒரு வளமான உரையாடலானது அவ்வுரையாடலில் பங்கு பெறுபவர்களின் மனத் துணிச்சலிலேயே தங்கியிருக்கிறது. தனக்கும் மற்றவருக்கும் உண்மையாகவும், திறந்த மனப்பான்மையுடனும் இருப்பவர்களால் சிறந்த உரையாடல்களை நாடாத்திக்கொள்ள முடிகிறது.
நான் எப்போதாவது சிறந்த உரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கிறேனா என்று என்னை நான் அண்மையில் கேட்டுக் கொண்டேன். முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது. இருப்பினும் இன்னும் சிறந்த முறையில் அவ்வுரையாடல்களை நான் நடாத்தியிருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனூடாக பல மனித மனங்களை வென்றிருந்திருக்கலாம்.

தவிர இப்படியான சிந்தனைகள் தோன்றும் போது வாழ்வின் அனுபவங்களே அவற்றை கற்பித்துப்போகின்றன என்பதும் புரிகிறது. தவிர இடையிடையே எனக்குக் கிடைத்த பயிற்சிப்பட்டறைகளும், வாசிப்பும், சம்பாசனைகளும், வாழ்வினைப் புரிந்த மனிதர்களின் அறிவுரைகளும் பலதையும் போதித்துப் போகின்றன.

இந்த உரையாடல் பற்றிய ஞானம் எனக்கு அண்மையில் கிடைத்த அனுபவமே.

இன்றைய நாளும் நல்லதே!


14 comments:

  1. அருமையான கட்டுரை.

    ReplyDelete
  2. நல்ல பட்ட அனுபவம்.அத்தனையும் உண்மை.நான் அறிந்த மட்டில் அனுபவத்தோடு வயதின் பக்குவமும்தான் இந்த ஞானத்தைத் தருகிறது !

    ReplyDelete
  3. நானும் அனுபவித்தேன், நான் உரையாடலாகக் கூறும் பொழுது , எந்த மொழியானாலும் அனைவரும் புரிவார்கள்.விவாதமாக உணர்ச்சிவசப்பட்டால் எனக்கே புரியுமோ தெரியாது.உண்மையான கட்டுரை.

    ReplyDelete
  4. கருத்துக்களால் மோதிக்கொள்வதுதான் என் வழக்கம். நான் 'நினைக்காத' ஒன்றை என்னால் சொல்லமுடியாது. ஆனால் இதே காரணத்தால் நிறையப் பேருக்கு நான் எதிரியானேன். நான்தான் தவறு செய்கிறேனோ என்று அப்பப்ப சிந்திப்பதுண்டு.

    ReplyDelete
  5. Nice post. You know what, in my life with my wife whenever I start உரையாடல், it ends up in தர்க்கம். What about in your case?

    ReplyDelete
  6. உரையாடல் கலையை மேம்படுத்துவதற்கு உதவக் கூடிய கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு.

    ReplyDelete
  7. அருமையான கட்டுரை ஆழமானதும் கூட..........பல இடங்களில் எனக்கென்றே சொன்னது போன்ற உணர்வை அடைந்தேன் உண்மைதான் உரையாடல் என்பது அருமையான மொழியாடலே ஆனால் அது அவளவு சுலபமாக எங்கள் மனதுக்கு இசைந்துவிடும் என்று தோன்றவில்லை.......கண்டிப்பாக அதை அனுபவம்தான் உணர்த்தவேண்டும் இதை நடைமுறைபடுத்தும் அளவுக்கு....... பல மனங்களை வெற்றிருக்கலாம் உண்மைதான்.................

    ReplyDelete
  8. உரையாடல், வாதம் - தர்க்கம்....
    புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது உங்கள் கட்டுரை.

    ReplyDelete
  9. 60 அகவையைக் கடந்திருக்கிறேன்.என் உரையாடல்கள் பெரும்பாலும் தர்க்கங்களாகவே முடிந்திருக்கின்றன.இனிமேலாவது உள்ளார்ந்த உரையாடல் நிகழ்த்த் முயற்சிக்கிறேன்.எனக்கு நல்ல கேட்கும் செவிகள் இருக்கின்றன.பயிற்சியும்,முயற்சியும் வெற்றி தரும் என் நம்புகிறேன்.வாழ்த்தும் நன்றியும்.

    ReplyDelete
  10. its relay true : Ievlo tha english Thariyum , So naama tamil pesuvom . ... .

    Ungaloda ientha karuthu nejamana unmai . Naakuda neriya murai Uriyadal pannum poothu Vettriyum kedaichu irukku >> aana athu vettri iella , ieppa puriyuthu . Uriyadal apdinavay VEttri Tholvi sambatha patathu alla . AAna Thargam Apdinaa Kandi paa Vettri tholvi irukko ieliyo Yaaravathu oruthar manasu Ksata padum .... Konjam Uriyaada Muyarchi panra ok

    ReplyDelete
  11. Naanu thanga

    Naan Uriyada porano THargam Panna poranoo

    Naa mega mega Satharanamanavan >>>>>>>>>>>>>>>>>>>>>>

    Iethu mattum puriyuthu >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    Aana matha manasa purinjuketta Naan mega mega Assatharanamanavan >>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  12. தங்கள்,கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  13. நீங்க சொன்ன தர்க்கத்துக்கும்.. உரையாடலுக்கும் பெரிய வேறுபாடு உண்டுதான்.

    தர்க்கங்கள் ஒரு போதும் எதிராளியின் கருத்தை ஏற்பதில்லை.. தன் வழி பிழையாக உணர்ந்தாலும் அதை ஏற்காமல் வெற்றி பெறுவதையே நோக்காக கொண்டிருக்கும்.. அது ஒரு வெறி(போதை) வெற்றி பெற்றவர் குரூர மகிழ்ச்சியில் இருக்க... எதிரி அவமானத்தின் உச்சத்தில் இருப்பார்...

    சில வேளைகளில் இருவருமே தாம் தான் வெற்றி பெற்றதாக நினைப்பர்.

    ஆனால் உரையாடல் அப்படியல்ல.. ஆரோக்கியமான விட்டுக் கொடுப்புடன் கூடிய, இருவரும் மகிழ்ச்சியும் தெளிவும் பெறக்கூடிய விடயம்..(Y)

    ReplyDelete

பின்னூட்டங்கள்