”எங்கே” (எங்கள் போராட்டம்?) ஒரு பார்வை

அண்மையில் எழுத்தாளர் தியாலிங்கம் ஐந்து புத்தகங்களின் அறிமுகவி‌ழாவினை ஒஸ்லோவில் நடாத்திருந்தார். ஒரு பயணத்தின் காரணமாக என்னால் அந் நூல் அறிமுகவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மாசி மாத இலக்கியப் பூங்காவில் வைத்து எனது கையில் ஐந்து புத்தகங்களைத் தந்தார்.

அதில் சில புத்தகங்களை நான் முன்பே வாசித்து அவை பற்றி எனது மனதுக்குத் தோன்றியதை எழுதி பதிவிட்டிருந்தேன். வெளியீட்டுக்கு முன்பே ”திரிபு”, ”எங்கே” ஆகிய நாவல்களை தியாகலிங்கத்திடம் கேட்க சங்கடமாக இருந்ததனால் வெளியீட்டு விழா முடியும்வரை காத்திருக்க வேண்டியேற்பட்டது. ”எங்கே” என்னும் நாவல் பற்றிய பலத்த எதிர்பார்ப்பு என்னிடம் இருந்ததனாலும், திரிபு புத்தகத்தை நண்பர் ஒருவருக்கு கொடுத்ததாலும் ”எங்கே” நாவலை முதலில் வாசிக்கத் தொடங்கினேன்.

எப் புத்தகமாயினும் அப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன் புத்தகத்தை மேலோட்டமாகப் புறட்டிப்பார்ப்பது எனது வழக்கம். இம்முறையும் புறட்டினேன். கண்ணில்  பட்டது 111ம் பக்கம். அதில் இப்படி எழுதியிருக்கிறார் தியாகு:

”எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி எந்தத் திசையில் விருத்தியடைந்து சென்றது? ஆன்மீகத்திலா? கலையிலா? அல்லது காதல் வசனம் பேசுவதிலா?  ஏன் எங்கள் சமுதாயம் வளர்ச்சி குன்றியதாக, தரவுகளை விட்டு தற்பெருமை பேசுபவர்களாக, இறுதியில் நாடற்ற பரதேசிக் கூட்டமாக மாறியது?”

என்னை சற்று நேரம் ஸ்தம்பிக்க வைத்தது இந்தக் கேள்வி. தியாகலிங்கத்தின் நாவல்களில் எப்போதும் ஒரு செய்தி அல்லது சமுதாயம் மேலான விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். எங்கே நாவலும் பலவிதமான கேள்விகளை, விமர்சனங்களை எம்மீதும், நாம் கடநது வந்த பாதைமீதும் வைக்கிறது. அவை சிந்தனையையும் தூண்டிவிடுகின்றன.

எனக்கு எப்புத்தகமாயினும் அப் புத்தகத்தைப் பற்றிய எழுத்தாளரின் கருத்தை அறியும் ஆவல் அளவுக்கதிகமாய் இருக்கிறது. எனவே நான், முன்னுரையில் அதிக ‌நேரம் செலவிடுவதுண்டு.

அண்மைக் காலங்களில் எனது மனதுக்குள் தோன்றிமறையும் இனம்புரியாத சில உணர்வுகளுக்கு சிறப்பான, இலகுவான முறையில் என்னால் வடிவம் கொடுக்க முடியாதனால் ஒரு வித ”எழுத்து வெற்றிடம்” என்னை சூழ்ந்திருந்தது. இரண்டே இரண்டு பக்கங்களில் நான் நினைத்ததன் சாராம்சத்தை அப்படியே எழுதியிருந்தார் நண்பர் தியாகலிங்கம். நாம் கடந்து வந்த பாதைகளும், வாழும் தளமும், ஒரே சிந்தனையோட்டமும் இதற்குக் காரணமாயிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது,  எனக்கு.

உங்கள் கையில் புத்தகம் கிடைத்தால் இந்த முன்னுரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடனிருக்கும்  கொள்கைகள், கருத்துக்கள், விமர்சனங்கள், விமர்சனமற்ற பக்தி, வறட்டுக் கௌரவம் ஆகியவற்றை சற்றே களைந்து உங்கள் சிந்தனைக் குதிரையை தட்டிவிடுங்கள். உணரவேண்டிய பலவற்றை உணர்ந்து போவீர்கள் என்பதற்கு நான் உறுதி தருகிறேன். முன்னுரையில் சற்று அரசியலும் உண்டு. அதுவும் ஒருவிதத்தில் அவ்விடத்தில் அவசியமானதே.

முன்னுரையில் இருந்து ஒரு சிறு பகுதி:

”ஈழத் தமிழன் ஒவ்வொருவருக்கும் மனிதம், மனச்சாட்சி, சமூகநீதி பற்றிய அலசல் இருக்கவேண்டும். ஈழப்போராட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் தான் அநீதி இழைக்கப்பட்டது என்று ஒரு போதும் கூறமுடியாது. அது பிடியற்ற கத்தியாக பார்க்குமிடமெல்லாம் பாய்ந்த வரலாறுண்டு. அந்தச் சோகங்களில் எனக்குத் தெரிந்த சிலவேனும் ஆதாரப்படுத்தப்படவேண்டும். எனக்கேன் தொல்லையென மௌனித்து இருப்பதால் பல உண்மைகளை நாம் எம் வருங்கால சமுதாயத்திற்குச் சொல்லாது மறுதலித்துச் செல்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எங்கள் போராட்டத்திலும் Holocaust பல தோன்றி மறைந்தன என்பதை இனபேதமற்று வருங்காலச் சந்ததிக்காய் ஆதாரப்படுத்தல் வேண்டும். அதிலிருந்து சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளுதல் சாத்தியம்.”

மேற் கூறப்பட்ட கருத்தில் பலருக்கும் ஏற்புடையதாக இருப்பினும் அதை இன்றைய சூழ்நிலையில் வெளிப்படையாகப் பேசுபவர்கள் மிகக் குறைவு. ஆனால் துணிந்து இது பற்றி பேசும் தியாகலிங்கத்தின் எண்ணம் எமது சமுதாயத்தின் மேலான அக்கறையே அன்றி வேறொன்றுமில்லை. பேசாப் பொருளையும் பேசுவது அவசியம் என்பதை தியாகலிங்கம் வாசகர்களுக்கு தனது ”என்னுரை”யினூடாக உணர்த்தியிருக்கிறார்.

தியாகலிங்கம் 1980 களிள் PLOT  அமைப்பில் இருந்தவர். அதன் காரணமாக இந்தியாவிலும் வாழ்ந்தவர். பின்பு PLOT அமைப்பின் உட்பூசல்களின் காரணமாக அதில் இருந்து வெளியேறி தற்போது ஏறத்தாள இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயில் வாழ்ந்து வருகிறார். இந்த நாவலின் கதையயும் நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய  நாடுகளினூடாக நகர்ந்து போகிறது.

என் சந்ததியினருக்கு பெற்றோருடன் இருந்த உறவுக்கும் அதிலும் முக்கியமாய் தந்தைமாருடன் இருந்த உறவுக்கும் இன்றைய சந்ததியினரின் தந்தை - மகன் உறவையும் மிகவும் யதார்த்தமாகக் கூறியிருக்கிறார். நாவல் எனது தந்தயாரை மிகவும் நினைவூட்டியது.

நாவலில் அவர் தனது ஊரை (காரைநகர்) வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் விதமும் அழகானது. 10ம் அத்தியாயத்தில் சூரன் போர் நடைபெறும் நிக‌ழ்வினை கூறியிருக்கும் விதமும் என்னை மிகவும் கவர்ந்து.

சாதீயம், சமுதாய ஏற்றத்தாள்வு, மக்களின் அன்றாட வாழ்கை நிகழ்வுகள்,  உப்புநீர்க் கிணறுகள், காரைதீவின் ஏனைய பகுதிகள், காரைதீவில் வாழ்ந்திருந்த சிங்களவர்கள், கடற்படையினர் இப்படி பலதையும் மிக நூணுக்கமாக அவதானித்து கதையோட்டத்தினூடாக அவற்றை நேர்த்தியாக நகர்த்தும் தன்மையினால் கதையில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை புகுந்து கொள்கிறது. ‌அதை விட நோர்வேயில் நடைபெறும் தந்தை - மகன் உரையாடல்களும், PLOT அமைப்பின் பிரச்சனைகளும் கூட அப்பட்டமான உண்மைகள் என்பதனால் இதை நாவலா, உண்மைக் கதையா என்று நம்புவதற்கு எனக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. இருப்பினும் நாவலை வாசித்து சில மணிநேரங்களாகிய பின்பும் இது ஒரு உண்மைக் கதையா என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாதிருக்கிறது, எனக்கு. அதுவும் தியாகலிங்கத்தின் எழுத்தின் வெற்றி என்பேன் நான்.

நாவலில் அரசியல், தமிழாராய்ட்சி மகாநாடு, சிவகுமாரன், துரையப்பா என்று ஆரம்பிக்கிறது. உரையாடல்களினூடே பல உண்மைச்சம்பவங்களையும், அவை தந்த அந்தக் காலத்து விறுவிறுப்புக்களையும் கலந்திருப்பதால் எம்மை மீண்டும் 70 களின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார் தியாகலிங்கம்.

சிவகுமாரனின் மரணத்திற்குப் பின்பு நடைபெறும் சம்பாசனையில் அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மையை இளையசமுதாயம் சந்தேகிக்கும் தன்மையையும் கூறி, அவர்களின் பாதைகள் பிரிவுபட்ட சரித்திரத்தையும் அவர் சுட்டிக்காட்ட மறக்கவில்லை. துரையப்பாவின் மரணம், அவரை ஆதரித்த, ஏதிர்த்த எம் மக்கள், அந்தக்காலத்து அரசியல் பிரச்சாரங்கள், அரசியலில் சாதீயம், த. வி. கூட்டணியின் தந்திரங்கள், மக்களின் மனநிலை என்று போரட்ட வரலாற்றின் ஆரம்ப நாட்களையும் க‌தையோட்டத்தோடு கலந்துவிட்டிருப்பது சிறப்பு.

நாவலில் இடையிடையே அரசியல் உட்குத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்  வாசகர்கள் தம்மை தமது  கொள்கைசார் அமைப்புக்களில் இருந்து, அரசியற் கருத்துக்களில் இருந்து சற்று நேரம் விடுவித்தக்கொண்டு, தம்மை ஒரு வாசகனாக மட்டும் பார்ப்பார்களேயானால் அந்த அரசியற் உட்குத்துக்கள் கூட ஒரு வித சுயவிமர்சமாகவே தெரியும். நான் இ்விடத்தில் சுய விமர்சனமென்பது எமது விடுதலைக்காய் புறப்பட்ட அனைத்து இயக்கங்களையும் குறிக்கிறது.

83 ஜூலை காரைதீவுக்கு கொடுத்த பரிசு, நீண்ட விதவைகளின் பட்டியல் என்னும் என்னும் பகுதியினூடே எமது ஆயுதம் கலந்த விடுதலைப் போராட்டம் கதையினுள் புகுகிறது. கலவரத்திற்கு பின் PLOT  இன் கொள்ளை பரப்புக் கூட்டத்தினில் கலந்து கொள்ளுவதன் மூலம் காதாநாயகனின் போராட்ட வாழ்வும் பங்களிப்பும் ஆரம்பமாகின்றன.

நானும் இவ்வாறான சில கூட்டங்களுக்குச் சென்றிருப்பதால் நாவலில் உள்ள ”உரிமைகள் கொடுக்கப்படுவதில்லை, எடுக்கப்படவேண்டியவை” போன்ற வசனங்கள் எனக்கும் பரீட்சயமானவையாகவே இருக்கின்றன. PLOT இன் அந்தக்காலத்துப் பரப்புரைகளை அவற்றின் உள்ளர்த்தமும் தொனியும் பிறளாதவாறு எழுதியிருப்பது சிறப்பு.

இயக்கத்தில் இணைதல், குறுக்கிடும் சிறுபருவக் காதல், வீட்டைப் பிரியும் சோகம் என்று இவையெல்லாவற்றையும் கடந்து வந்ததனாலோ என்னவோ மிகவும் தத்ரூபமாக இவற்றை வர்ணித்து எழுதியிருக்கிறார். இயக்கத்தில் சேர்ந்த பின் ஏற்படும் ஆரம்ப காலப் பயத்தை அவர் ”வீரப் போரின் வித்துக்கள், பயத்தில் தான் முளையிடப்படுகின்றனவோ” என்று எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். எத்தனையோ அர்த்தங்கள் அந்த வாத்தைகளுக்குள் ஒளிந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் B முகாம், சவுக்குத் தோப்பு, கொடிக்கம்பம், பண்ணையார் என்று பலருக்கும் அறிமுகமான இந்தச் சொற்களுடன் PLOT   இயக்கத்தினுள் நுளையும் தியாகலிங்கம் நாவலின் இறுதிவரை இந்தியாவில் PLOT முகாம்களில் நடந்தேறிய மிகவும் வேதனையான, கொடுமையான போராட்ட வரலாற்றை கூறிச் செல்கிறார்.

தியாகலிங்கம் கூறும் PLOT விடயங்களை நான் ஏற்கன‌வே ”புதியதோர் உலகம்”  புத்தகத்தினூடாகவும் மற்றும்  சில நண்பர்கள்  மூலம் அறியக் கிடைத்த  தகவல்கள் போன்றவற்றினாலும் அறிந்திருப்பதால், நாவலின் பின் பகுதியை எங்கோ கேட்டிருக்கிறேன் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதே வேளை அவ்வுணர்வு தியாகலிங்கம் எதையும் புதிதாய் புனையாமல் உள்ளதை உள்ளபடியே எழுதியிருப்பதை உணர்த்துகிறது.

முக்கியமாக நோர்வேயில் நடந்தேறிய சில உண்மைச் சம்பவங்களையும், அது பற்றிய தனது கருத்தையும் ஓரு இடத்தில் கூறியிருக்கிறார். அவையும் நாவலின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.

இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல பல சர்வதேசப் பிரச்சனைகளையும், அவற்றினுள் அடங்கியிருக்கும் சில பதில் கிடைக்காத ஆனால் பதில் தேட வேண்டிய கேள்விகளையும் நாவலினூடே ஓரிடத்தில் முன்வைக்கிறார். ஒரு சராசரி மனிதனாக தனது நாட்டுடன் மட்டும் நின்று விடாமல் வேறு நாடுகளில் நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், கதையின் நாயகனின் சிந்தனையோட்டத்தில் எவ்வாறு கலந்து  அவனது சமநிலையை பாதிக்கிறது என்பதையும் கூறுகிறார்.

தியாகலிங்கத்தின் எழுதிய திரிபு தவிர்ந்த ஏனைய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். ”எங்கே” அவயனைத்தையும் விட எனது மனதை மகவும் கவர்ந்திருக்கிறது. அதற்கு இந் நாவலை அவர் மிகவும் சிறப்பான மொழியாடலுடனும், நம்பகத்தன்மையுடனும் படைத்திருப்பதே காரணம்.

2009ம் ஆண்டுக்கு முன் மாற்று இயக்கங்களில் இருந்தவர்கள் எவ்வாறு நடாத்தப்பட்டார்கள், அவர்களின் மன உளைச்சல்கள், அவர்கள் வேதனைகள், அவர்களின் கருத்துச் சுதந்திரம் ஆகியன வெளிநாடுகளில் எவ்வாறு இருந்தது என்பதை அவர் இன்னும் மிகவும் ஆழமாகவும், ஆதார நிகழ்வுகளை கதையினுள் புகுத்தியும் இருந்திருந்தால் இப்புத்தகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. அவற்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகமிருக்கிறது.

படைப்பாளி என்பவன் சமூகப்பிரஞ்ஞையுடன் இருக்கவேண்டும் என்பதை தியாகலிங்கம் நாவலின் பல இடங்களில் சூட்சுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். வாசகர்களை சிந்திகவும் தூண்டுகின்றன அவரது எழுத்துக்கள்.

தமிழர்கள் கடந்து வந்த பாதை பல விதங்களிலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது அவ்வளவு இலகுவானதல்ல. விமர்சித்தாலே எதிரி என்னும் சிந்தனையுடது எமது சமூகம்.

PLOT இன் முக்கிய விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டது போல, ஏனயை இயக்கங்களின் முக்கிய விடயங்கள் உண்மையுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவை, நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் முக்கியமான படைப்புக்களாக இருக்கும், இருக்க வேண்டும்.

தியாகலிங்கத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

8 comments:

 1. புத்தகங்களை எங்கே வாங்கலாம்?

  ReplyDelete
 2. பின்வரும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
  ratnamt67@gmail.com

  அல்லது

  முகப்புத்தகத்தில் இவரை நாடுங்கள் https://www.facebook.com/karai.nakaran

  அல்லது
  நோர்வே வாருங்கள்.. வாங்கித் தருகிறேன்.
  எப்பூடீ வசதி?

  ReplyDelete
 3. இந்தப் புத்தகத்தை வாசித்தால் பல கனவுகள் வரும் ..வாசிக்காமல் விடுகிறதே நல்லம் ...அவ்ரின் எழுத்து முன்பு ஒருமுறை வாசித்து பல நாட்களாக மன்தி அழுத்திய வண்ணம் இருந்தது ...அந்தத் திறமை அவரிடம் உண்டு ...

  ReplyDelete
 4. அருமையான புத்தகம் போல் உள்ளது வாங்கி படிக்கத்தான் வசதி இல்லை....

  ReplyDelete
 5. ஐயா நோர்வே வருவது கடினம் பார்க்கலாம் புத்தகம் நண்பர்கள் அனுப்பி வைக்கின்றார்களா என்று .
  உண்மையில் சில விடயங்கள் பதிவு செய்யப்படனும் ஆதீத எதிர்ப்பார்ப்புடன் போன இளைஞர்களின் வாழ்வு இழந்த துயரம் பதிவு செய்ய வேண்டும் இயக்க வேறுபாடுகள் தாண்டி.

  ReplyDelete
 6. வெளியாகும் நூல்கள் விரைவில் எல்லாருக்கும் போய்ச்சேரும் காலம் எப்போது வருமோ. அன்மையில் தியாகுவின் நூல் வெளியீட்டு விழாவைப்பார்த்தேன் அவரின் நூல் இங்கு இன்னும் வரவில்லை.

  ReplyDelete
 7. ///ஈழப்போராட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் தான் அநீதி இழைக்கப்பட்டது என்று ஒரு போதும் கூறமுடியாது. அது பிடியற்ற கத்தியாக பார்க்குமிடமெல்லாம் பாய்ந்த வரலாறுண்டு. அந்தச் சோகங்களில் எனக்குத் தெரிந்த சிலவேனும் ஆதாரப்படுத்தப்படவேண்டும். எனக்கேன் தொல்லையென மௌனித்து இருப்பதால் பல உண்மைகளை நாம் எம் வருங்கால சமுதாயத்திற்குச் சொல்லாது மறுதலித்துச் செல்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ///

  ///தமிழர்கள் கடந்து வந்த பாதை பல விதங்களிலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது அவ்வளவு இலகுவானதல்ல. விமர்சித்தாலே எதிரி என்னும் சிந்தனையுடது எமது சமூகம்.//

  பல உண்மைகளை தொகுத்து இருக்கிறீர்கள் ..........................

  ReplyDelete
 8. அன்புக்குரிய சஞ்சயன். உங்கள் எழுத்து நாவலை வாசிக்க தூண்டுகிரது. புத்தகம் எங்கே கிடைக்கும். எழுத்தாளர் தியாகலிங்கத்தின் தொலைபேசி இலக்கம் என்ன? எனது இலக்கம் 92503237

  ReplyDelete

பின்னூட்டங்கள்