பிரதியெடுக்கப்பட்ட கனாக்காலங்கள்

அன்றொரு நாள் எனது கணணி மக்கர் பண்ணத் தொடங்கியது. எனவே அதில் உள்ள ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்கத்தொடங்கினேன். அப்போது பல காலமாக கண்ணில் படாத சில புகைப்படங்கள் கண்ணில்பட்டன. புகைப்படங்கள் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிப்போகக்கூடியவை என்பதையும், மயிலிறகு போல் மனதை மிருதுவாய் வருடக்கூடியவை என்பதையும் கடந்த சில நாட்களாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

ஒரு சில புகைப்படங்களைக் கண்ணுற்ற போது அந்தச் சம்பவங்கள் மட்டுமல்ல, அந்தப் புகைப்படத்தில் பதியப்பட்டிராத ஆனால் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் இருந்த சுற்றுச்சூழல், ஒலிகள், வாசனைகள், மனிதர்கள், காலநிலை இவை எல்லாவற்றையும் மனம் உணர்ந்த போது நான் ஒரு ஏகாந்தமாக மனநிலையில் இருந்தேன். நினைவுகள் பின்னோக்கிப் போய் அந் நாட்களில் வாழ்ந்துகொண்டிருந்தன.

17.08.2006 ம் திகதி காலை, வடமேற்கு நோர்வேயில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்திருந்தோம் நாம். அன்று காலை எங்கள் வீட்‌டின்  காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்தது.

என்னை தூக்கத்திலிருருந்து வலுக்கட்டாயமாக எழுப்பிக்கொண்டிருந்தாள் எனது இளைய மகள் பூக்குட்டி.

”அப்பா, நேரமாகிறது எழும்பு”  என்று சினுங்கினாள் பின்பு கடுமையான குரலில் கட்டளையிட்டாள். நான் அவை ஒன்றும் கேட்காதது போல் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவது போல நடித்தேன். இரண்டு தரம் அழைத்துப் பார்த்தாள். பின்பு வந்து போர்வையை இழுத்தெறிந்து என்னை உலுப்பினாள். கோபப்பட்டாள். சிரித்தபடியே அவளைத் துக்கியபடியே எழுந்து குளியலறைக்கு அழைத்துபோனேன். கட்டியணைத்து முத்தமிட்டாள்.

அவள் அன்றுதான் முதன் முதலாக பாடசாலைக்குச் செல்கிறாள், எனவே அவள் இருப்புக்கொள்ளாமல் பரபரத்துக்கொண்டிருந்தாள். யார் யார் பாடசாலைக்கு இன்று வருவார்கள், என்ன அங்கு நடக்கும், தனது ஆசிரியை கண்டிப்பானவரா, விளையாட விடுவாரா என்ற அவளின் கேள்விகளுக்கிடையில் அவள் பல் துலக்கி, குளிப்பாட்டி, கிறீம் பூசி உடையணிவித்தேன்.

உன்னுடன் சிறுவர்பூங்காவில் படித்தவர்கள் தானே அங்கு வருவார்கள், நீ அந்த ஆசிரியரை ஏற்கனவே சந்தித்துப் பேசியிருக்கிறாய், உங்களை அதிக நேரம் விளையாடவிடுவார்கள் என்றெல்லாம் கூறியபடியே குளிக்கவைத்து, தலைமயிரை சிக்கெடுத்து அழகாக வாரிவிட்டேன்.

சில நாட்களுக்கு முன், பாடசாலை முதல்நாளுக்கு என்று அவள் உடைகள் வாங்கியிருந்தாள். எனக்கு உடைகள் வாங்கும் கலை பற்றிய பேரறிவு இல்லாததால்  அந்த விடயத்தில் நான் தலையிடுவதில்லை. பூக்குட்டியும், காவியாவும் தாயாரும் உடைகள், சப்பாத்து வாங்கியிருந்தார்கள்.

என்னுடன் வந்து புத்தகப் பையை வாங்கிக் கொண்டாள். முதல் நான் இரவு பென்சில்களை தீட்டி அவளது பென்சில் பெட்டியினுள் வைத்துக்கொண்டாள். அடுத்த நாளுக்கான உடைகளை மினுக்கி வைக்க உத்தரவிட்டாள், துங்குவதற்கு முன் ஆயிரம் கேள்விகள்  கேட்டாள். எனது பாடசாலை அனுபவத்தை கேட்டறிந்தாள். அக்காவின் அனுபவங்களை சொல்லச் சொல்லி பல கேள்விகளைக் கேட்டாள். நானும் காவியா அக்காவும் அவளருகில் படுத்திருந்து  அவளின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே அவளுக்கு முன் தூங்கிப் போனோம்.

குளித்து  தயாரானதும் உச்சம் தலையில் இருந்து சப்பாத்து வரை அழகான உடை, தலைமயிர் கிளிப், நெட் போன்றதொரு hair band, சிறிய அழகான தோடு, நீண்ட காட்சட்டை  என்பவற்றை அணிந்து கொண்டாள்.

உணவு உண்ண பொறுமையில்லாதபடியே கட்டாயத்துக்கு பாணை விழுங்கினாள். சப்பாத்தை அணிந்து கொண்டு புத்தகப்பையுடன் வீட்டுக்கு வெளியில் காத்திருந்தாள். நான் தயாராகும் வரையில் 4 - 5 தரம் என்னை ”என்ன செய்யுறீங்க அப்பா, நேரம் போகுது” என என்னையும், அக்காவையும் அழைத்துக்கொண்டிருந்தாள். அதன் பின்னான காலங்களில் நான் தினமும் 4-5 முறை  ”என்ன செய்யுறீங்க பூக் குட்டி, நேரம் போகுது” என்று அழைக்கவேண்டியிருந்தது.

வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. வாகனத்தில் ஏறும் போது. வழமை போல் யார் அப்பாவுக்கு அருகில் உட்கார்வது என்ற பிரச்சனை வந்த போது அவளே வென்றாள். வேகமாக ஓடு, நேரம் போகிறது என்றபடியே கடந்த போன அறிமுகமானவர்களுக்கெல்லாம் கைகாட்டிக்கொண்டு வந்தாள். காவியா கண்ணாடியில் என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் சிரித்தேன். தனது தங்கை தனது பாடசாலையில் கல்வி பயில்வது அவளுக்கு பெருமையாயிருந்தது. தங்கையின் நடவடிக்கைகள் அவளுக்கு சிரிப்பாகவும் இருந்தது.

வாகனத்தை நிறுத்தி வெளியே வந்து போது என் கைகைப் பிடித்துக் கொண்டாள். அவளது முகத்தில் விறுவிறுப்பின் பயம் தெரிந்தது. அவனுடன் மெதுவாய் பேசியபடியே வகுப்புக்கு அழைத்துப் போகும் வழியில் ஒரு படம் எடுத்தக்கொண்டேன். அழகாய் சிரித்தாள் படம் எடுக்கும் போது.

ஆசிரியர் வாசல் வரை வந்து பூக்குட்டியின் கையைப் பற்றி குலுக்கி அழைத்துப் போனார். திரும்பிப் பார்த்தாள் புன்னகைத்துக் கொண்டோம். என் மனதுக்குள் அவள் பாடசாலை தொடங்கியதை ஜீரணிக்க முடியாத தவிப்பு ஏற்பட்டது. அவள் இனி குழந்தையில்லை என்பதும் புரிந்தது. இன்று நான் இதை எழுதும் போது அவளுக்கு 12 வயதாகிறது. இருப்பினும் குழந்தையாகவே எனக்குள் இருக்கிறாள்.

பல பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். எல்லோரும் சிறுவர்பூங்கா மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். நாம் பேசிக் கொண்டிருந்தோம். சில குழந்தைகள் அ‌டிக்கடி வந்து தத்தமது பெற்றோரின் கைகளுக்குள் அடைக்கலமாகினர்.  என் பூக்குட்டி வரவே இல்லை. வரமாட்டாளா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அடிக்கடி தனது நண்பியிடம் ஏதொ சொல்லிச் சிரித்தபடியே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களின் அழகை ரசித்தபடியே நின்றிருந்தேன் நான். ஒரு சிறிய இடைவேளியின் போது காவியா வந்தாள். எப்படிப் போகிறது என்றாள்? சிரித்தேன். மனியடித்த போது தனது நண்பிகளுடன் அவள் மறைந்து போனாள்.

ஏறத்தாள ஒரு மணி நேரத்தின் பின், ஆசிரியர் என்னிடம் நீங்கள் விரும்பினால் போகலாம் என்ற போது பூக்குட்டியை அழைத்து பாடசைலை முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கூறி, விடைபெற்றபோது கட்டியணைத்து முத்தம் கொடுத்தேன். வெக்கப்பட்டு நெளிந்தாள்.

வெளியே வந்து ஜன்னலினால் பார்த்தேன். ஆசிரியரின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். திரும்பிப் பார்க்கமாட்டாளா என்று ஏங்கியபடியே நின்றிருந்தேன், சில நிமிடங்கள்.

என்னைப் பார்த்து அழகாய் புன்னகைத்து கையை ஆட்டி விடைகொடுத்தாள். வாயில் கையைவைத்து காற்றில் முத்தம் அனுப்பினேன். அவளும் அப்படியே செய்து நண்பியுடன் சேர்ந்து சிரித்தாள்.

என் உடல் நகர்ந்தாலும் மனம் நகர மறுத்தது. 

ஒரு புகைப்படத்திற்கு இவ்வளவு ஞாபகசக்தியிருக்குமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை நினைவுகளை தூண்டிவிடுகிறது ஒரு புகைப்படம்.

அந்த நாட்கள் என் வாழ்வினை அழகுபடுத்திய மிக அற்புதமாதமான நாட்கள் என்பதை மறுபபதற்கில்லை. இதே போல் பல புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றினுள்ளும் ஏறாளமான கதைகள் ஒளிந்திருக்கலாம்.

இன்றைய நாளும் நல்லதே!
3 comments:

 1. புகைப்படங்கள் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிப்போகக்கூடியவை என்பதையும், மயிலிறகு போல் மனதை மிருதுவாய் வருடக்கூடியவை

  அழகான பூக்குட்டிப் பதிவு !

  ReplyDelete
 2. பழைய புகைப்படங்கள் wine மாதிரி, நாட்பட நாட்பட அதன் பெறுமதி அதிகரிக்கும். என்னிடமும் பழைய புகைப்படங்கள் உண்டு. அதைப் பார்த்து ஏதாவது கிறுக்கத் தொடங்க, "கடைக்குப் போய்ப் பாணும் பட்டரும் வாங்கி வா", அல்லது "பெடியள் சண்டை போடுறாங்கள், கவனி" என்றமாதிரி தொட்டாண்டி வேலைகள் செய்யச்சொல்லி ஓடர் வரும். Continuity அறுந்தால் பிறகு எழுத முடியாது.

  ReplyDelete
 3. என் உடல் நகர்ந்தாலும் மனம் நகர மறுத்தது., அருமை

  ReplyDelete

பின்னூட்டங்கள்