உயிரூட்டும் சித்திரங்கள்


எனது அறையின் கதவருகில் ஒரு சித்திரம் தொங்குகிறது. பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறேன் அதை.

அச் சித்திரத்தில், வானம் நீலமாய் இருக்கிறது. வெள்ளைநிற முகில்கள் இருப்பது போல வானம் அமைக்கப்பட்டிருக்கிறது. வட்டமான மஞ்சல் நிறச் சூரியன், அதன் கதிர்கள் ஒன்று பெரிதாயும் அடுத்தது சிறிதாயும் சூரியகைச் சுற்றி கதிர்வீசிகொண்டிருக்கின்றன. கதிர்கள் சிவப்பாயும், மஞ்சலாயும் இருக்கிறது.

நிலம், புற் பச்சை நிறமாயிருக்கிறது. அந்தச் சித்திரத்தில் இரண்டு கரையிலும் பச்சை நிறத்தண்டுடன் சிவப்பு நிறத்திற் கூடிய இரண்டு ரோஜாப்பூக்கள் இருக்க, அவற்றிற்கு நடுவில் உலகத்தின் அழகையெல்லாம் தன்னகத்தே கொண்ட ஒரு குழந்தை, இரட்டைப்பின்னல், pink  நிறச் சட்டை, நீல நிற காலுறை, பச்சைச் சப்பாத்துடன், நீல நிறக் காட்சட்டையுடன், ஊதாநிற மேலுடையுடன், பச்சைச் சப்பாத்துடன் நிற்கும் ஒருவரின் கையை கோர்த்தபடி நிற்கிறாள்.

இருவரும் பெரிதாய் சிரிக்கிறார்கள். அவளின் உதடுகளுக்கு சிவப்புச் சாயம் பூசப்பட்டிருக்கிறது. அவர்களைச் சுற்றி பெரிதொரு இதயம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டிருக்கிறது. இதயத்தினுள் "Adsayaa+Appa" என்று எழுதப்பட்டிருக்கிறது..

இச்சித்திரத்தின் பின்பக்கத்தில் அட்சயாவால் அப்பாவுக்கு கொடுக்கப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. Leonardo வின் Mona Lisaவை இதனுடன் ஒப்பிடப்படும் போது Mona Lisa பெறுமதியில்லாததாகிறது, எனது வாழ்வு மதிக்கப்படமுடியாதளவு பெறுமதியுடையதாகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் எனது பூக்குட்டி எனக்கு வரைந்து தந்த படம் இது.

தினமும் அதைக் கடந்து போகும் போது நினைவுப் புன்னகை ஒன்று பரிசாய்க் கிடைக்க என் வாழ்வும் அழகாகிறது.

வாழ்வினை சிறு சிறு கணங்களும், செயல்களுமே அழகாக்குகின்றன என்பதற்கு இதுவே ஆதாரம்.

கரு கருவென்று எனக்கு முடியிருக்கிறது இந்தச் சித்திரத்தில்... ஏன்?

சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை. எனவே இந்தக் கேள்வியையும்பதில் கிடைக்காத கேள்விகளுடன் சேர்த்துவிடுகிறேன்.


இன்றைய நாளும் நல்லதே!

1 comment:

  1. அழகான பூக்குட்டியும் அப்பாவும்!

    ReplyDelete

பின்னூட்டங்கள்