யாத்திரையின் முதலிரவு


19ம் திகதி பின் மாலைப் பொழுதில் Barcelona விமானநிலையத்தில் இறங்கிய பொழுது தான் புரிந்தது, நான்  spanish மொழி தெரியாது திண்டாடப் போகும் அவலம். 


எதைக் கேட்டாலும் சீ ..சீ (si si) என்றார்கள். விமானநிலையத்தில் இருந்து நான் உள்ளூர் பிரதான புகையிரதநிலையம் செல்லவேண்டும். சுற்றுலா பிரயாணிகளின் அலுவலகம் நான் வருவதை அறிந்ததாலோ என்னவோ அலுவலகத்தை பூட்டிப்விட்டுப் போயிருந்தார்கள்.

ஒருவர் படித்தவர் மாதிரி இருந்தார். அவரிடம் எனது கேள்வியை கேட்டேன். அவரின் பார்வை பதில் சொன்னார். உடற்சேதம் ஏற்படுவதற்கு முன் நகர்ந்து கொண்டேன்.

விமானநிலையத்தை விட்டு வெளி‌யேறினேன். சற்றுத் தூரத்தில்  பலர் ஒரு bus க்கா காத்திருப்பது புரிந்தது.  எனவே அங்கு சென்றேன்.

ஒருவரிடம் மட்டும் கேட்பதைத் தவிர்த்து, எனது இனிமையான குரலை உயர்த்தி இந்த bus புகையிரதநிலையம் செல்லுமா என்றேன்.  உடனே பலர் சீ ..சீ என்றார்கள்.  வெறுத்துவிட்டது எனக்கு. அருகில்  நின்றிருந்த ஒரு புண்ணியவதி ஆங்கிலத்தில்  புரியவைத்தாள். இந்த bus மூலமாக நகரத்துக்கு போய் அங்கிருந்து நிலக்கீழ் தொடரூந்து மூலம் புகையிரத நிலையத்தை சென்றடைய வேண்டும் என்றாள். அந்த bus இல் ஏறி பாதுகாப்பாக அவளருகிலேயே அப்பாவி போல குந்திக் கொண்டேன்.

நான் busஇல் ஏறிய போது நேரம் நடுநிசி இருக்கும். வழியெங்கும் மக்கள் விதிகளில் உலாவிக்கொண்டிருந்தனர். உணவுக்கடைகள் திறந்திருந்தது. வெப்பநிலை ஏறத்தாள 20 பாகை இருக்கும்.

அந்த புண்ணியவதி இடையில் இறங்கிக் கொண்டாள். எனது விதியை நொந்து கொண்டேன். சற்று நே‌ரத்தில் bus ஒரு இடத்தில் நின்றது. நான் எனது பயணப் பொதியை இறுக்கட்டிப்பிடித்தபடியே சிவனே என்று உட்கார்ந்திருந்தேன். சாரதி  என்னைப்பார்த்து ஏதோ சொன்னார். yes yes என்று விட்டு குந்தியிருந்தேன். மனிதருக்கு வந்ததே கோபம். வெளியே போ என்று கையைக் காட்டினார். அப்போது தான் புரிந்தது அது தான் bus இன் இறுதித் தரிப்பு என்று. சாரதியைப் பார்த்து புன்னகைத்தபடியே இறங்கிக் கொண்டேன்.

வயிறு புகைந்தது. நாலைந்து உணவகங்களுக்கு முன்னால் நாலைந்து தரம் நடந்து நிலமையை உளவு பார்த்த பின் ஒரு உணவகத்தினுள் புகுந்து கொண்டேன். அழகான பெண்ணொருத்தி அருகில் வந்து அழைத்துப்  போய் ஒரு மேசையில் குந்த வைத்தாள். மெனு வந்தது. எதுவும் புரியவில்லை. பின்பு இன்னுமொருத்தியை அழைத்து வந்து எனக்கு மொழிபெயர்ப்பாளராக வைத்தாள் முன்னவள். எனக்கு பசிக்கிறது சிறந்த உணவு ஏதும் இருக்கிறதா? என்றேன் என்னிடம் கேட்டு, அவளிடம் சொல்லி, அவளிடம் கேட்டு என்னிடம் சொன்னாள். எங்கள் உணவகத்தின் சிறந்த உணவை  உனக்கு தருகிறோம் என்று சொல்லி மறைந்து போனாள்.

சற்று நேரத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள அனைத்து கடல் வாழ் உயிரினங்களையும் கொலை செய்து என் முன்னால் வைத்திருந்தாள். வாழ்க்கையில் காணாத உயிரினங்களும் இருந்தன. எனக்கு புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை  உண்டால் சிறுநீரகத்தில் கல்  உண்டாகும் வியாதி உண்டு. டாக்டர் என்னை கடல் உணவில் மீனை மட்டுமே உண், என்றிக்கிறார். இவளோ மீனைத் தவிர்த்து மீதமிருக்கும் அனைத்தையும் தந்திருக்கிறாள். இவளிம் சண்டைபிடித்தால் சீ ..சீ என்று சொல்வாள் எனவே பிரச்சனை வேண்டாம் என்பதால் மௌனமாக விழுங்கத் தொடங்கினேன். வேறு ஏதும் வேணுமா என்றாள்? தண்ணீர் என்றேன். உண்டு முடிந்ததும் அருமையான ஒரு டெசேர்ட் தந்தாள். அந்த மாலைப் பொழுதை காப்பாற்றியது அந்த டெசேர்ட் தான். அதன் பிறகு உணவின் விலையை அவள் சொன்னபோது தான் தலைசுற்றியது. 40 யூரோவை அழுது அழுது  கொடுத்துவிட்டு அசட்டுச் சிரிப்புடன் வெளியேறினேன்.

நிலக்கீழ் தொடரூந்துக்கு வழியைக் கேட்க நினைத்த போது போலீ்சு அருகில் நின்றிருந்தார். அவரிடம் கேட்டேன். அவரும் நோ இங்கிலிசு என்றா‌ர். அருகில் இருந்த அழகானபெண்போலீசு அழகான ஆங்கிலத்தில் அழகாக வழிகாட்டினார். இந் நாட்டில் பெண்கள் மட்டும் தான் ஆங்கிலம் பேசுவார்களோ என்று எண்ணத் தோன்றிற்று.

நிலத்துக்கு கீழ் அமைந்திருந்தது தொடருந்து நிலையம். அதை வார்த்தைகள் வர்ணிக்க என்னால் முடியாது. Oslo  நகரத்தின் நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களை இதனுடன் ஒப்பிட்டால் oslo முருகன் என்னை மன்னிக்கவே மாட்டார். எங்கு போவது, எப்படி போவது என்று தெரியாது முளித்துக் கொண்டிருந்தேன் நேரமோ நடுநிசி 1 மணி. சிலரிடம் கேட்டேன். தெரியாது என்பதை எனக்குத் தெரியாத மொழியில் செல்லியபடியே நகர்ந்தனர். மீண்டும்  தாய்க்குலம் உதவியது. ஒரு விதமாக Barselonaவின் புகையிரநிலையம் வந்து சேர்ந்தேன். புகையிரதநிலையம் காலை 5 மணிக்கு திறக்கும் என்று எழுதியிருந்தது வாசலில்.

தூக்கம் வந்தது. புகையிரதநிலைய வாசலுக்கருகில் பலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். என்னினமே என் சனமே என்று சொல்லியபடியே அவர்களுக்கருகில் படுத்துக்கொண்டேன். திடீர் என்று விழித்துப் பார்த்த போது என்னினத்தையும் சனத்தையும் காணவில்லை. காலை வெளித்திருந்தது. நேரம் 6 மணி ஆகியிருந்தது. வாரிச்சுருட்டிக்கொண்டு புகையிரத நிலையத்தினுள் ஓடினேன்.

எனது புகையிரதம் 7.35 மணிக்கு என்று இருந்ததை நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் பிரயாணச்சீட்டைபெற்றுக்கொணடு காலையுணவுக்காக ஒரு உணவகத்தில் குந்திக்கொண்டேன். நோரம் 7.15 மணியானவுடன் புகையிரதத்தில் ஏறிக் கொண்டேன். எனது இருக்கையில் குந்தியபோது தான் எனது iPod மற்றும் எனது ‌jacket ஆகியவற்றை எங்கோ தவறவிட்டது தெரியவந்தது. இறங்கி ஓடினேன்.  காலையுணவு உணவு உண்ட கடைக்காரர் தன்னிடம் இல்லை என்னார். புகையிரதம் புறப்பட இன்னும் 5 நிமிடங்களே இருந்தன. விதியை நொந்தபடியே ஓடிவந்து புகையிரதத்தில் குந்திக் கொண்டேன். அப்போது தான் கவனித்தேன் எனது தொலைபேசியை எனது இருக்கையில் விட்டுவிட்டு iPod தேடி ஓடியிருந்ததை. சரி தொலைபேசியாவது மிஞ்சியதே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

புகையிரதம் ஓடிக் கொண்டிருந்தது. தூங்கிப்போனேன். திடீர் என்று மூளையில் ஏதோ பொறி தட்டியது. துடித்தெழுந்து எனது பயணப்பொதியை திறந்து மேல் பக்கத்தில் பார்த்தேன். iPod மற்றும் எனது ‌jacket ஆகியவை என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

iPod ஐ இயங்கிக் கொண்டிருந்துது காதில் ”மயக்கம் என்ன” படத்தின் பிறை தேடும் பாடல் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

விரைவில் ரெபின்சன் குரூசோவின் பயணத்தின் போது அவருக்கு வெள்ளிக்கிழமை என்றதோர் நண்பர் கிடைத்தது போல எனக்கும்  பேபே என்று ஒரு நண்பர் கிடைத்தார் என்னும் கதையைச் சொல்கிறேன்.

புகையிரதம் ஓடிக்கொண்டிருக்கிறது Pamplona நோக்கி

இன்றைய நாளும் இனிமையானதே.

5 comments:

  1. சுவாரசியமான பயண தொகுப்பு!

    ReplyDelete
  2. இனிதே தொடருங்கோ யாத்திரையை முடியும் இடங்களில் பதிவையும் பகிருங்கோ!

    ReplyDelete
  3. Very nice ...We are waiting for more...

    ReplyDelete

பின்னூட்டங்கள்