கொலையாகாமல் மீண்ட நட்பு

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் சுயமாய் சிந்திக்க, இயங்க சுதந்திரமாய் மூச்சுவிடும் இடைவெளி வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அதற்கேற்ப மற்றையவர்களின் பிரச்சனைகளுக்குள் தேவைக்கு அதிகமாக தலைபோடுவதில்லை நான். எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, நண்பர்கள் இப்படியான உறவு நிலைகளில் கூட தனிமனிதனுக்கு வேண்டிய மூச்சுவிடும் இடைவெளி இருப்பது அவசியம் என்பது என் கருத்து.

மற்றயவர்களின் வாழ்வை நாம் வாழ முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் எங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது. நாம் ஒருவருக்கு அறிவுரை வழங்கலாம், நன்மை தீமை பற்றி விளக்கலாம், வழிகாட்டலாம் ஆனால் குறிப்பிட்ட விடயம் பற்றி முடிவெடுப்பது அவரின் தனி உரிமை. அதனுள் தலையிட நமக்கு உரிமையில்லை என்பதே எனது கருத்து. சிறு குழந்தைகளைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. வளர்ந்தவர்களைப் பற்றியே பேசுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரிடத்தில், ஒருவர் மிகவும் நாகரீகமற்ற முறையில் ஒருவரைப் பற்றி பேசுகிறார்.  இது பெரும் பிரச்சனையாக  வெடித்த போது குறிப்பிட்ட நபர் தனது வாழ்க்கைத்துணை தனக்கு சார்பாக பேசவேண்டும் என்கிறார். அவரின் வாழ்க்கைத் துணையோ இல்லை, எனது கருத்தின் படி தவறு உன் மீது இருக்கிறது, எனவே நான் எனது கருத்தையே வலியறுத்துவேன் என்கிறார். இதுவே பெரும் பிரச்சனையாக வெடித்து ஓய்ந்தது.

வாழ்க்கைத் துணை ஏதும் தவறு செய்யுமிடமிடத்தில் அதை பிழை என்று சொல்வதனால் குறிப்பிட்ட நபர் வாழ்க்கைத் துணையை ஆதரித்து தனது கருத்தை சொல்லவில்லை என்று கூறலாமா? அப்படி கூறினால் தான் அது உண்மையான உறவின் வெளிப்பாடா? இல்லை என்பேன் நான்.

எனக்கேதோ அதில் எற்பில்லை. செய்யப்பட்ட பிழையை ஒருவரின் பகுத்தறிவு பிழை என்கிறது. அவர் அதை நிமிர்ந்த நெஞ்சுடன் தனது துணைக்கு சொல்வதிலேயே உண்மையான புரிந்துணர்வும், நியாயமும் இருக்கிறது என்பேன் நான். அதைத் தவிர்த்து பிழையை சரி என்று வாதிக்கும் போது நியாயமும், உண்மையான அன்பும் தோல்வியுறுகின்றன அங்கு.

தவறை தவறு என்று சொல்வதில் தானே உண்மையான நட்பு, ஏனைய உறவுகள் பலமடையும்? இல்லையா?

இதே போன்று தான் சில நண்பர்களும் தமது நண்பர்கள் தமது தமது எத்தகைய செய்கையையும் ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். ஒரு வேளை அவர்களின் நண்பர் அவர்களின் கருத்துக்கு எதிர்கருத்தினை கொண்டிருந்தாலே நண்பர்கள் கண நேரத்துக்களுள் பகைவர்களாகிப்போகின்றனர்.

மிகவும் ஆறுதலாக சிந்தித்துப் பார்த்தால் இப்படியான நேரங்களில் நாம் மற்றவர்களை சிந்தித்து செயற்பட அனுமதிக்கிறோம் இல்லை என்பதும் எமது கருத்தை ஒரு வித வன்முறையு‌டன் அவர்கள் மீது திணிக்கிநோம் என்பதும் புரியும். அதாவது அவர்களின் ”மூச்சுவிடும் இடைவெளியை” நாம் தடைசெய்கிறோம். இதனால் பல பிளவுகள் உறவுகளுக்கிடையில் ஏற்பட்டுவிடுதை நாம் மறுப்பதற்கில்லை.

இன்று நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத ஒரு பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டார் என்பது அறியக்கிடைத்தது. அப்போது நான் அவருடன் நின்றிருந்தேன். என் மனமோ அவர் அதைப் பற்றி என்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்தது. அவரோ ஏதும் போசாமல் நான் விடைபெறுகிறேன், எனது மனது சரியில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

எனது மனம் காயப்பட்டுப்போனது. மிகவும் நெருங்கிய நண்பர். எம்மிடையே ஒளிவு மறைவு இல்லை. எனது  நாற்றங்கள் அனைத்தையும் அவர் அறிவார். அவரின் வாழ்க்கையின் சகல பாகங்களையும் நான் அறிவேன். இப்படி இருக்க இவர் என்னிடம் ஏன் இதைப் பற்றி கூறவில்லை என்று என் மனது என்னை கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தது. அவர் மீது பலத்த எரிச்சலும் வந்தது. பின்பு அவர் என்னிடம் பேசிய போது எரிந்து விழுந்தேன் ‌அவர்‌ மீது.

இது பற்றியே நாள் முழுவதும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். நெஞ்சு முழுவதும் ஏதோ ஒரு வித சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அவரின் செய்கையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பலத்த எரிச்சலில் உளன்றுகொண்டிருந்தேன். நண்பனிடம் பகிர முடியாத ரகசியம் என்ன இருக்கிறது. நம் நட்பு உண்மையான நட்பா என்று எனக்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.


சற்று நேரம் தூங்கி எழுந்ததும் மனம் சற்று இலகுவாய் இருந்தது. இருப்பினும் நண்பரின் செய்கை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். திடீர் என ஞானம் பிறந்தது போலிருந்தது எனக்கு.

நண்பரின் தனி மனித சுதந்திரத்துக்குள் நான் தாம்.. தோம் என்று குதித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். பிரச்சனை எனக்கில்லை. அவருக்குத் தான். அது பற்றி யாருக்கு சொல்வது என்பதை முடிவெடுப்பதும் அவர் தான் என்பது சிறிது சிறிதாய் முளைக்குள் புகுந்திருந்த போது மனம் இலகுவாகிப் போனது. எனது முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டேன்.

நண்பர் வேதனையில் வாடும் போது அதற்கு ஆறுதலாயிருப்பதே பண்பான செயல், அதைத் தவிர்த்து அவர் மீது அர்த்தமில்லா கோபத்தை காட்டுவது எனது நட்பை கேவலப்படுத்து போலானது என்பதை உணர்ந்துகொண்டேன். என் மனதும் இலகுவாகிப் போனது.

நண்பருக்கு ஒரு அழகிய பூங்கொத்து  பரிசளித்து உன் சிக்கல் தீர வாழ்த்துகிறேன் என்றேன். தொலைபேசியல் நேரம் வரும் போது நிட்சயமாய் இது பற்றி உன்னுடன் பேசுவேன் என்றார். அதை முடிவு செய்வது நீ என்றேன். அவரின் சிறிது நேர மௌனம் நம் நட்பும், உறவும் எத்தகையது என்று எனக்குணர்த்திப் போனது.

சில நேரங்களில் மெளனத்தின் மொழி பல வார்த்தைகளை விட அர்த்தமுள்ளதாகிறது.

மூச்சுவிடும் இடைவெளி என்பது எல்லோருக்கும் அவசியம். அதை மற்றவருக்கு வழங்குவதன் மூலம் நாம் உறவுகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு இன்றைய சம்பவம் ஒரு சாட்சியாகிறது.

இன்றைய நாளும் நல்லதே!

5 comments:

  1. >எனது கருத்தின் படி தவறு உன் மீது இருக்கிறது, எனவே நான் எனது கருத்தையே வலியறுத்துவேன் என்கிறார்

    அநேகமாக வாழ்க்கைத் துணைகள் smarter ஆக இருக்கிறார்கள்.:-(

    ReplyDelete
  2. சில நேரங்களில் மெளனத்தின் மொழி பல வார்த்தைகளை விட அர்த்தமுள்ளதாகிறது.

    very good

    ReplyDelete
  3. மௌனம் சிலவேளைகளில் எத்தனையோ பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்துவைக்கிறது. இது எனது அனுபவம்

    ReplyDelete
  4. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete

பின்னூட்டங்கள்