மனதின் எச்சரிக்கைகளும் சில மனிதர்களும்

மனிதர்களை எடைபோடுவது ஒரு கலை. அது எனக்கு இன்னும் முழுமையாக கைவரவில்லை போலவே இருக்கிறது. எவரைப் பார்த்தாலும் நம்பலாம் போலிருக்கிறது. அதிகமாக நம்பியும் விடுகிறேன். ஆனால் அந் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும்போது என்னில் எனக்கு பலத்த எரிச்சல் வருகிறது. ஆனால் சிலரின் கண்களைப் பார்த்தவுடனேயே மனது பலமாய் எச்சரிக்கை மணியடிக்கிறது, அடித்திருக்கிறது. அப்படி எச்சரிக்கை மணியடித்த பின்பும் நான் ஏமாந்திருக்கிறேன். இதன் காரணமாக மனிதர்களை நான் தேவைக்கு அதிகமாகவே நம்புகிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏமாற்றம் என்னும் சுவரில் அடிக்கடி மோதி மூக்குடைபட்டுக் கொண்டிருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் நோர்வேயி்ல் ஒரு இடத்திற்கு குடிபெயர நேர்ந்தது. அங்கு ஒரு தமிழர் இருந்தார். வரை நான் நேரடியாக சந்திக்க முதலேயே அவர் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஏனோ அவரின் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் உருவாகவில்லை. அவரை சந்தித்த போதும் இருவரும் பெரிதாய் பேசிக் கொள்ளவும் இல்லை. நானும் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டேன். அவரும் என்னைக் கவனிக்கவில்லை.  இந் நிகழ்ச்சியும் அவர் பற்றிய எனது கணிப்பை உறுதி செய்வதாகவே இருந்தது. பல காலங்கள்அவர் மீதான எனது கணிப்பு மாறாமலே இருந்தது.

ஆனால் 15 வருடங்களின் பின் நான் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்த பின்னால் அந்த 15 வருட வாழ்வினை நினைத்துப் பார்க்கும் போது அவரே எனது மனதுக்கு நெருங்கியவராக இருக்கிறார். நாம் நண்பர்களாவதற்கு சில காலங்கள் எடுத்தது. நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் எமக்கிடையே புரிதல் இருந்தது. நான் தடுமாறி விழுந்தெழும்பிய போதெல்லாம் கைகொடுத்துதவியவர். பேச்சுத் துணையாய், அறிவுரை கூறுபவராய், நண்பனாய் வந்து பேருதவி புரிந்தவர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை நான் தவறாகக் கணித்திருந்தை நினைத்தால் எனக்கே என்மீது எரிச்சல் வருகிறது.

இன்னொருவர் இருந்தார், இருக்கிறார். நாம் நெருங்கிப்பழகுவதும் இல்லை. அடிக்கடி பேசிக்கொள்வதும் இல்லை. ஊருக்குள் மிகவும் பிரபல்யம் அடைந்தவர். வயதானவர், அனுபவமிக்கவர், நியாயமான மனிதராய் இருப்பார் என்று நினைத்திருந்தேன். அவரது தோரணையைப் பார்த்து. நடையுடை பாவனையும் அப்படியே இருந்தது.

எமக்குள் சில விடயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. இருப்பினும் இருப்பினும் மனிதன் சக மனிதனுடன் பேசலாம் என்னும் மிக இலகுவான சித்தாந்தத்தை பின்பற்றுபவன் நான். எனவே எவ்வித உள்நோக்கமும் இன்றி மிகவும் நட்பாகவே பழக விரும்பினேன். பழகினேன். பலர் என்னை எச்சரித்திருந்தாலும் தீர ஆராயமல், அவர் பற்றி ஒரு வித கெட்ட அபிப்பிராயத்தை அவர் மீது கொள்ள அன்று என் மனம் ஒப்பவில்லை.

ஆனால் சில காலங்களின் பின் அவரது நடவடிக்கைகள் இவரும் ஒரு பெரிய மனிதரா? இவரயா சமூகம் தூக்கிப்பிடிக்கிறது என்னுமளவுக்கு அவரது செயல்கள் இருந்தன.

தமது கருத்துக்களுக்கு மாற்றான கருத்தக்களை கொண்டவர்களை சற்றேனும் மதிக்க வேண்டும் என்பதையாவது அவர் உணர்ந்திருந்தால் நான்  ஆறுதல்பட்டிருப்பேன்.

ஆனால் அவர் மீது, அவரின் கொள்கைகள் மீது, அவரின் பெரிய மனிதத்தன்மையின் மீது நான் பரிதாப்படும் அளவுக்கு அவர் நடவடிக்கைகள் இருந்தன. முக்கியமாக ”புறம் சொல்லல் ஆகாது” என்பதை அவர் அறியாதிருந்தார். சிலவற்றை கேட்கக்கிடைத்த போது அவர் மீதிருந்த மரியாதை குறைந்து போயிருந்தது.

மேற்கூறிய இரண்டு  சம்பவங்களும் நான் மனிதர்களை பிழையாக எடை போட்டதையே காட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் ஒருவரைக் கண்டதும் மனம் அருகில் செல்லாதே, தூர விலகிப் போ என்றது. ஆயினும் ‌ஒரு பெரிய மனிதரின் வேண்டுகோளுக்காக குறிப்பிட்ட நபருடன் பழக வேண்டியேற்பட்டது. அதுவும் ஒரு சில மணி நேரங்களே பழகினேன். என் மனது எச்சரித்தது சரி என்பதை உணர்த்திப் போனார் மனிதர் மிக குறுகிய நேரத்தில்.

அப்போது நான் இந்தியாவில் வாழ்ந்திருந்தேன். அம் மனிதரை ஒரு அலுவலகத்திற்கு அழைத்துப்  சென்று அவருக்கு தேவையான உதவியினைச் செய்யுமாறு என்னை ஒரு பெரியவர் கேட்டுக் கொண்டார். என்னால் மறுக்க முடியவில்லை. குறிப்பிட்ட நபருடன் புறப்பட்டேன். பஸ்ஸில் போவது என்று முடிவாகியது. அவரை பயணச்சீட்டு எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஆம் என்று தலையாட்டினார்.  பஸ் பயணத்தின் போது டிக்கட் பரிசோதகர்கள் என்னிடம் டிக்கட் கேட்ட போது அவரைக் காட்டினேன். அவரோ தன்னிடம் எனது டிக்கட் இல்லை தன்னிடம் இருப்பது தனது டிக்கட் என்றார். அவமானப்பட்டு வீடு வந்த போது என் மனதின் எச்சரிக்கையை நான் கவனிக்காதிருந்திருக்கிறேன் என்பது நன்கு புரிந்திருந்தது. ஆனால் அவரை நான் சரியாக எடை போட்டிருந்தேன் என்பது தற்போதும் ஆறுதலைத் தருகிறது.

இப்போதெல்லாம் ஓரளவு என் மனதின் எச்சரிக்கைகளை கேட்கத் தொடங்கினாலும் மனிதர்களை நம்பி ஏமாறும் தன்மை மட்டு்ம் மாறாதிருக்கிறது இன்னும்.

அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று உள்ளாற விரும்புகிறேனோ என்னவோ. பல மனிதர்களுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதே எனக்கு போதுமாய் இருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே!

5 comments:

  1. //மனிதர்களை நம்பி ஏமாறும் தன்மை மட்டு்ம் மாறாதிருக்கிறது இன்னும்//
    உண்மைதாங்க. என்னாலும் நம்பாமல் இருக்க முடியவில்லை

    ReplyDelete
  2. உங்கள் ஏமாற்றங்களை நினைத்து வருந்துகிறேன். அனுதாபங்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி. சில நேரங்களில் சில மனிதர்கள். உண்மையில் நல்லவன் என்றும் யாரும் இல்லை. அதே நேரத்தில் முழுக்க முழுக்க கெட்டவன் என்றும் யாரையும் முத்திரை குத்தி விடவும் முடியாது. சந்தர்ப்பம் தான் தீர்மானிக்கிறது. நானும் உங்களைப் போலத்தான். நம்பி ஏமாந்த சந்தர்ப்பங்கள் அதிகம். அதுவும் வெளி நாட்டு வாழ்கையில்... சொல்லவே தேவையில்லை.

    ReplyDelete
  4. பொதுவாகவே அதிகம் முகஸ்துதி பண்ணுபவர்க்ளைநான் அதிகம் நம்புவதில்லை.இருந்தும் ஒருவரை பார்த்தவுடனே எடைபோடுவ்து போடுவ்து கஸ்டம்தான்.இதில் பெண்க்ள் ஓரள்வு திறமையான்வர்க்ள். ஒருவரை பார்த்த்வுட்னே எடைபோடுவ்தில். உங்க்ள் ப்திவு பார்த்தலும் பதில்எழுதுவ்து இதுதான் முதல் முறை ,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete

பின்னூட்டங்கள்