காலையில் சாதமா?

நண்பர் ஒருவர் ஒஸ்லோ வந்ததால் என்னுடன் தங்கியிருக்கிறார்.

அவரது தாயாரும், நண்பரது தற்போதைய உரிமையாளரும் சமையற்கலையில் விற்பன்னர்கள். இதனால் எனது நண்பர் ஒரு சாப்பாட்டுப்பிரியராகவே காலத்தைக் கடத்திக்கொண்டுவருகிறார்.

நேற்று மதியம் கடையில் சாப்பிட்டோம். இரவு பாண் இருக்கிறது என்றேன். சாதம் கிடையாதா? என்றார். பின்பு அவரே நாளை காலையில் சாதம் சாப்பிடுவோம் என்றார்.

”காலையில் சாதமா?”அவரின் இந்த ஒரு வசனமே எனது இரவுத் தூாக்கத்தை கெடுத்துவிட்டது.

இந்த வீட்டுக்கு இரண்டுவருடங்களுக்கு முன் வரும்போது 1 கிலோ பசுமதி அரிசி வாங்கிவந்தேன். அதில் அரைக்கிலோவுக்கு அதிகமாக இன்னும் மிகுதி இருந்தது. எனவே மனதை தைரியப்படுத்தியபடி தூங்கிப்போனேன். நண்பர் செம குறட்டையுடன் இரவைக் க(ழி)ளித்தார்.

காலையில் சாதம் கேட்பானே பாவி என்றதனால் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசையக் கழுவினேன். அரிசி குறைவாக இருக்கும் போலிருப்பது போலிருந்தது. சற்று அரிசியைச் சேர்த்துக்கொண்டேன். மீண்டும் கழுவும்போதும் அரிசி குறைவாக இருப்பது போல் இருந்தது. இப்போது மேலும் சிறிது அரிசியைச் சேர்த்துக்கொண்டேன். அரிசி வெந்து சோறானதும் ஊருக்கே அன்னதானம் கொடுக்குமளவுக்கு சோறு இருந்தது.

நண்பர் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் என் மர மண்டைக்கு சோற்றுக்கு கறி வேண்டுமே என்ற நினைப்பு வந்தது. என்னிடம் இருந்தவை இவைதான் sweet sauce, chips, salt & pepper. cheese. இன்றைக்கென்று எனது உணவை ருசியாக்கும் ஊறுகாயும் தீர்ந்திருந்தது.

நண்பரிடம் என்னிடம் இருப்பவற்றில் எதனுடன் சாதம் சாப்பிடப்போகிறீர்கள் என்றேன்.

மனிதர் பயந்து நடுங்கி மயங்கிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் கூலாக எனது குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து அதிலிருந்து இறைச்சிக் கறி, இறைச்சிப்பொரியல் என வெளியில் எடுத்துத் தந்தபடியே ...”உன்னிடம் வரும்போது முன்ஜாக்கிரதையாக இருக்கட்டும் என்று வீட்டுக்கார அம்மா தந்துவிட்டார்” என்றார்.

இதைத்தான் சொல்வது ”இடுக்கண் களைவதாம் நட்பு” என்று.

ஒஸ்லோ முருகா! உன் கிருபையால் இன்று காலையிலேயே இறைச்சிக்கறி, இறைச்சிப்பொரியுலுடன் சோறு.

யூ ஆர் ரியலி கிரேட் .. மை லார்ட்............ நண்பர்ளே! எனது இந்த நண்பரை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள், என்னிடம் விருந்தினராக வரும்போது மட்டும்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்