எனது அதிபரும் பேராசானுமாகிய Prince Sirக்கு இன்று 89 வயது.

அவரது கொல்லன்பட்டறையில் பழுக்கக்காச்சப்பட்டு, நெளிவெடுக்கப்பட்டு, புடம்போடப்பட்டவர்கள் என்ற பெருமைபெற்ற மாணாக்கர்களில் நானும் ஒருவன்.

இன்று அவருடன் உரையாடினேன். எங்கள் குடும்பத்தில் இருந்து இன்று அவருக்கு நான்கு தொலைபேசி அழைப்புக்கள் வரும் என்றார். அம்மாவும், தங்கையும் உட்பட.


அவர் யார் என்று அறியாத காலத்தில் தங்கை அவரை எங்கள் வீட்டினுள் அனுமதிக்காது வாசலில் நிறுத்தி கேள்விகளால் விசாரனை நடாத்தியதை இன்றும் நினைவுறுத்திச் சிரித்தார். இந்த உலகத்தில் என்னை வாசலில் நிறுத்திய சின்னப் பெட்டை உன் தங்கை மட்டும்தான் என்றார். நாம் சேர்ந்து சிரித்தோம்.

அவரது வசீகரமான மந்திரக்குரல் சற்று தளர்வுற்றிருந்தாலும்,அதன் மந்திரத்தன்மை மாறாதிருக்கிறது. அவரது நகைச்சுவையுணர்வு அவரை நன்கு அறிந்தவர்களுக்கு புரியும். அதிலும் மாற்றம் இல்லை.

கண் சத்திரசிகிச்சையினால் வாசிப்பு தடைபட்டிருக்கிறது என்பது அவரது மிகுந்த ஆதங்கமாய் இருக்கிறது.

”வாழ்வின் அந்திமக்காலத்தில் இறைவனின் அழைப்புக்காய் காத்திருக்கிறேன், மகன்”...... என்றார்.

என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

”மனம்விட்டுப்பேசக்கூடியவர்களில் நீயும் ஒருவன். எப்போ வருகிறாய்? உன்னைச் சந்திக்கவேண்டும்” என்றார்.

”கூடிய விரைவில்” என்றிருக்கிறேன்.

எம்மிடம் குரு சிஸ்யன் என்ற என்ற எல்லைகள் சற்றே மறைந்து ஒருவித ஆர்த்மார்த்மான உணர்வு குடிவந்திருக்கிறது.

அவரருகில் உட்கார்ந்து அவரது முதுமையுற்ற, சுருக்கங்களுள்ள, கருநீல நிறமாய் நீண்டோடும் நாளங்கள் தெரியும் அவரது கைகளைப்பற்றியிருந்து உரையாடும் நேரங்களில் காலம் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.

மட்டக்களப்பின் ஒரு சகாப்தம் அவர். நான் ஆவணப்படுத்த விரும்பும் மனிதரும் அவர்தான். ஆனால் இது இன்னமும் சாத்தியப்படவில்லை.

இம்முறையும் இலங்கை செல்லும்போதும் அவரது சாய்மனைக் கதிரையருகே, மின்விசிறியின் காற்றல் அமர்ந்தபடி, பழங்கதைகள் பேசி, சிரித்து, விடைபெறும்போது May God Bless You என்று ஆசீர்வாதம் பெறும் நாளுக்காய் காத்திருக்கிறேன்.

அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் THE ONE AND ONLY "Prince" of our Bt/ Methodist Central College.

21 July 2015

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்