விக்கிரமாதித்தன் உயிரோடு இருக்கிறான்

¨
ஞாயிற்றுக்கிழமை புறநகர்ப் பகுதி ஒன்றில் ஒரு நண்பருக்காய் எனது வாகனத்தினுள் காத்திருந்தேன்.

அருகே ஒரு சிறு எரிபொருள் நிலையம். அது மூடி இருந்தது வெளியே சிறு மெது மழை அவ்வப்போது தூறிகொண்டிருந்தது.

அவ்விடத்தில் ஒரு சிறுவன். 8 - 9 வயதிருக்கலாம். தனது ” சாகசம் செய்யும் மிகச் சிறிய சில்லுகளுடைய சைக்கிலுடன்” நின்றிருந்தான்.

அவனுக்கு அண்மையில்தான் அந்தச் சைக்கில் கிடைத்திருக்கவேண்டும். சாகசம் செய்வதில் அவன் பயிற்சி இன்றி இருந்தான்.

அவனது முயற்சி அங்கிருந்த சிறு உயரமான பகுதிக்கு சைக்கிலுடன் பாய்ந்து ஏறுவதாக இருந்தது.அவனின் தோழி சற்றுத் தூரத்திற்கப்பால் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவன் ஒவ்வொரு முறையும் விழுந்தான். எழுந்தான் மீண்டும் விழுந்தான்.
சில வேளைகளில் எனக்கே வலிக்கும்படியாக விழுந்தெழும்பினான். எழும்பி அடுத்த அடி வைக்கமுன்பே மீண்டும் விழுந்தெழும்பினான்.

நான் அவன் கை முறிந்திருக்கும் என்று நினைத்தேன். அவனோ ”இதெல்லாம் சகஜமப்பா” என்பதுபோன்று மீண்டும் விக்கிரமாதித்தனானான்.

கையில் தோல் உரிந்து ரத்தம் வந்தது. காற்சட்டையில் துடைத்துக்கொண்டான். முழங்காலில் காயம் வந்தபோது எச்சிலை தொட்டு துடைத்துக்கொண்டான். காற்சட்டையில் பொத்தல் விழுந்தது. அவன் கண்கொள்ளவே இல்லை

நான் அவதானிப்பதைக் கண்டாலும், காணாதவாறு காட்டிக்கொண்டு பயிற்சியில் கருத்தாயிருந்தான்.

ஒரு முறை நன்றாக அடிபட்டுவிட்டது. குந்தியிருந்து அழுதான். இதைக் கண்ட தோழி அருகில்வந்து காலைப்பார்த்தபடி ஆறுதல் சென்னபின் அவனது தலையைக்கோதிவிட்டு கால்பந்தாட சென்றுவிட்டாள். அழுது ஆறியபின் மீண்டும் எழுந்துகொண்டான்.

ஏறத்தாள 30 நிமிடங்கள் அங்கு நின்றிருப்பேன். அவனோ ”இன்று இதை நான் சாதிக்காது வீடு திரும்புவதில்லை” என்பதுபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்து பாய்ந்து விழுந்தபடியே இருந்தான்.

நான் புறப்பட்டபோது பெருவிரலை உயர்த்திக்காட்டினேன். அவனும் பெருவிரலை உயர்த்திக்காட்டினான்.

அவனை விட்டகன்ற நேரத்தில் இருந்து அவன் என் நினைவுகளில் என்னை பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறான். அவனை நானும் மானசீகமாய் நினைததுக்கொண்டிருக்கிறேன்.

அவன் அந்த சிறு மேடையின் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டிருக்கவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்கிறது.

இன்று செவ்வாய்க்கிழமை. காலை விளித்தெழும்பியபோதும் முதலில் நினைவில் வந்தவனும் அவனே.

திடீர் என அவன் எனக்கு எதையோ குறிப்பால் உணர்த்துகிறான் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்குள் கண்ணுக்குத்தெரியாத ஒரு சங்கிலித்தொடர்பு இருக்கிறதோ?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்