அவமானத்தின் சுமைகள்

சில நாட்களுக்கு முன் காலை ஒஸ்லோ நகர நிலக்கீழ் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த ”வார்சாவில் கடவுள்” என்னும் புத்தகத்தில் முழ்கியிருந்த என்னை அருகில் இருந்து வந்த தொலைபேசிச் சம்பாசனை இவ்வுலகுக்கு மீண்டும் இழுத்து வந்தது.

அருகில் ஒரு நோர்வேஜியப் பெண் அமர்ந்திருந்தார். நடுத்தர வயதிருக்கும். அவளின் பேச்சில் பலத்த சீற்றமும், ஆற்றாமையும், ஏமாற்றமும் தெரிந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தனது நண்பியுடன் பேசிக்கொண்டிருந்தார். தனது குரல் தேவைக்கதிகமாக உயர்ந்து மற்றவர்களுக்கும் கேட்கிறதே என்ற சிந்தனை அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

அவரின் சம்பாசனையின் உள்ளடக்கம் இது தான். அன்று அவர் தற்போது அமர்ந்திருக்கும் நிலக்கீழ் தொடருந்தை வந்தடைய முதல் ஒரு சாதாரண பேரூந்தில் பயணித்திருக்கிறார். நோர்வேயில் உள்ள சில பேரூந்துகளில் உட்புகுவதற்கு பல கதவுகள் உண்டு. இவர் பின்னாலிருந்த கதவுவழியாக உட்புகுந்து தனது டிக்கட்ஜ வாங்குவதற்காக சாரதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போது உட்புகுந்த டிக்கட் பரிசோதனையாளர் இவரிடம் டிக்கட்ஜ கேட்க இவர் தான் அதற்குத் தான் சாரதியிடம் போய்க் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். பரிசோதகரோ இவரை நம்பாமல் நீ என்னைக் கண்டதும் தான் நீ சாரதியிடம் போகிறாய் என்றிருக்கிறார். இவர் வாதிக்க அவர் எதிர்க்க சம்பாசனை சூடாகியிருக்கிறது. இவரை 3 - 4 பரிசோதகர்கள் சூழ்ந்துகொண்டு ஒரு திருடனைப் பார்ப்பது போல் பார்த்திருக்க பேரூந்தினுள் இருந்தவர்களின் கண்களும், கதைகளும், பரிகாசச்சிரிப்புகளும் இவரை அவமானத்தின் உச்சிக்கே கொண்டுபோயிருக்கிறது. இவர் தனது கருத்தை மாற்றாததனால் சற்று நேரத்தில் போலீஸ் வந்து இவரை கைது செய்திருக்கிறது. பரிசோதகர் 150 $ தண்டம் விதித்தித்திருந்தார்.

இதை சொல்லி முடியும் போது அவரின் கண்ணளில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. குரல் பேச முடியாமல் தளுதளுத்தது. அவற்றைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல் பேசிக்கொண்டிருந்தார். நண்பரை பேச விடாமல் இவரே பேசிக்கொண்டிருந்தார். என்னால் அவரின் மனநிலையை மிக நன்றாக புரியக்கூடியதாக இருந்தது.

நானும் இரண்டு இடங்களில் பலத்த அவமானங்களை கடந்திருக்கிறேன். அவற்றின் அசூசையையும், பிசுபிசுப்பையும் இன்றும் உணரக்கூடியதாக இருக்கிறது.

ஒரு முறை வேறொர் நாட்டில் விடுமுறைக்கு போயிருந்த போது, அதுவும் பட்டப்பகலில் ஒரு பெரிய கடைத் தொகுதிக்கு வெளியில் ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த பொலீசாரால் நேர்மையற்ற முறையில், மிகவும் கீழ்ததரமாக நடத்தப்பட்டேன். நான் அந்தத் தவறை செய்யவில்லை என எனக்காக வாதாடியவர்களின் கருத்துக்களைக் கூட அந்தப் பொலீசார் கேட்காத போலீசார் எனது கருத்தையா கேட்பார்கள்? போலீசாரின் நடவடிக்கையில் பதவியின் அதிகாரத்தன்மையும், அடாவடித்தனமும், மனிதாபிமானமற்ற செயற்பாடுமே தெரிந்தது. எனக்காக வாதாடியவர்கள் மன்னியுங்கள் என்று என்னிடம் சொல்லி தங்கள் விலாசத்தையும் போலீசாரிடம் கொடுத்துப் போனார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கும் வர தயாராய் இருந்தனர்.

ஒரு கட்டடத்தின் சுவரினை நோக்கியிருக்கும் படி கட்டளையிடப்பட்டேன். அங்கு நான் நின்றிருந்த போது என்னைக் கடந்து போனவர்களின் பார்வைகளை என் முதுகைத் துளைத்து என் மனதில் படிந்துபோனது. அங்கிருந்த காற்றில் கலந்து வந்த சொற்களும், குசு குசுப்புக்களும் எனது செவிப்பறையில் படிந்து உறைந்து போயின, கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீர் தோலில் ஊறி இரத்தத்தில் கலந்து போனது. இன்றும் அந்த நிமிடத்தினை திரும்பிப்பார்த்தால் அந்தப் பார்வைகளும், காற்றும், என் கண்ணீரும் அப்படியே மனதிலாடுகின்றன. ஏதோவொரு அசூசையான உணர்வு என்னை கவ்விக் கொள்ளும். அவமானத்தின் நிர்வாணமும் உணர்வேன். மலத்தை உடலெங்கும் அப்பிவிட்டது போலிருக்கும் அவ்வுணர்வு.

அதன் பின் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலதிகாரி ஒருவர் மட:டும் என்னை நம்பினார். ஆனால் அவரால் ஏதும் செய்ய முடியாதிருந்தது. விடுதலை செய்யப்பட்டேன்.

அடுத்து வந்த நாட்கள் கடும் மழையில் நனைந்த கோழி போல் உடலும், மனமும் எவ்வித உயிர்ப்புமின்றி இருந்தது. எவரைப் பார்த்தாலும் என்னை அந்த இடத்தில் வைத்து பார்த்தவர் போலவும், அவர்களின் கண்கள் என்னை துளைப்பது போலவும் தெரிந்தது. வெளியே போகும் ஆர்வம் குறைந்தது, விடுமுறையின் மகிழ்ச்சி கரைந்து மனம் கனத்துப் போனது.

வழக்கு வெல்லப்பட முடியாதது என்று அறிந்ததும் வழக்கை போலீசாரே வாபஸ் வாங்கினார்கள். நண்பர்களும், நெருங்கியவர்களும் என்னதான் ஆறுதலைச் சொன்னாலும் அதனால் ஏற்பட்ட வடு மட்டும் இன்று  வரை ஆறவில்லை. இனியும் ஆறப்போவதில்லை.

அவமானத்தின் ரணங்களும் அத ன் ஆழங்களும் வெளியில் தெரிவதில்லை. காலம் சிலதை செப்பனிட்டாலும் வடுக்களும் தடயங்களும் வாழ்நாள் முழுவதும் பெரும் சுமையாக சாதாரணமானவர்களின் முதுகில் ஒட்டிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறது. மிகச் சிலரே இச் சுமைகளை இறக்கி வைக்கிறார்கள். நான் இன்னும் அவர்களில் ஒருவனாகவில்லை என்பது எனக்கு மிக நன்றாகவே புரிகிறது.

எனக்கு அறிவிக்கப்பட்ட இன்னும் ஒரு அவமானத்தை ஜீரணித்து நிமிரவே ஆண்டுகளாகியது. இன்றும், அவை நினைவில் வந்து போகும் போது வெறுப்பும், வன்மமும், குரோதமும் எனக்குள் பெருந்தீயாய் கொழுந்து விட்டெரியும். சுயபரிதாபம் அணையுடைத்து ஓடும்போதெல்லாம்  என்னை அவமானப்படுத்தியவர்களை அதே போல் அவமான நிர்வாணமாக்கி அதே அசுத்தத்தை அவர்களுக்கு பூசிவிட விரும்பினாலும், இன்று  அதை  செயற்படுத்துவதற்கான வசதி, அதிகாரம் அனைத்துமிருந்தாலும் ஏனோ மனம் மட்டும் அதை செய்ய அனுமதிக்க மறுக்கிறது.

இந்த அவமானங்களினால் யார் நண்பன்,  யார் எதிரிகள் என்பது மட்டும் தெட்டத்தெளிவாய் புரிந்திருக்கிறது. அநத வகையில் அவமானம் எனக்கு நல்லதொரு பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது என்பேன் நான்.

அவமானப்படுத்தப்படுத்தப்பட்ட திரௌபதைகும் அவளை அவமானப்படுத்திய துரியோதனனுக்கும் நடந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தக் கதையில் எனது பெயர் கொண்ட ஒருவனும் இருக்கிறான் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அவமானம் போதிக்கப்பட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்.


இன்றைய நாள் மிக மிக நல்லது.



.

7 comments:

  1. அவமானப் படுவதும்,அவமானப் படுத்துவதும் சிலருக்கு சாதாரண விஷயங்கள். ஆனால் மென்மையான மனங் களைக்கொண்டவர்களுக்கு அவமானம் என்பது அழியாத கல்வெட்டு.உங்கள் பதிவு என்னையும் பட்டியலிடத் தூண்டுகின்றது.

    ReplyDelete
  2. அவமானங்களின் வடுக்கள் நன்றாக பிரதிபலிக்கிறது கதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அவமானம் என்பதி பிறர் பார்வையில் இல்லை... நம் மனதில் தான் இருக்கிறது... தவறு செய்யாதது நம் மனதுக்கு தெரிந்தால் போதும்.

    கெட்டதை தூர வீசி இயல்பாய் இருங்க.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சந்தர்ப்பம் சூழ்நிலை கிரகபலன்கள் சிலவேளைகளில் எம்மை இப்படியான சிக்கல்களில் மாட்டிவிடுகின்றன. போகட்டும் விட்டுத்தள்ளுங்கள். அனைத்தையும் மறந்து விடுங்கள்.

    ReplyDelete
  5. மறந்ததாக நினைத்திருந்த அவமானம் ஒன்றை நினைவு படுத்திவிட்டீர்கள் !

    ReplyDelete
  6. எல்லோரும் இது போல ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு தான் அலைகிறோம்.

    ReplyDelete
  7. நான் அறியாது கவலை என்னையும் பற்றி கொண்டது. நான் கொண்ட அவ்மானங்களும் நினைவில் வந்தது!

    ReplyDelete

பின்னூட்டங்கள்