பனியில் உருகும் நினைவுகள்
இன்று காலை பனி கொட்டி ஊரையே மூடிவிட்டிருந்த போது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அவரின் இருப்பிடத்திற்குப் போனேன். அவர் வரும் வரை எனது வாகனத்தில் உட்கார்ந்திருந்தேன். அருகிலேயே ஒரு கடையிருந்தது. கடைக்குள் போவோரையும் வருவோரையும் பார்த்திருந்தேன். வெளியில் ஒரு நாய் கட்டப்பட்டிருந்தது. அந்த நாயும் எல்லா நோர்வே நாய்களைப் போல மிகவும் அன்பாகவும், பண்பாகவும் அதனருகால் கடந்து செல்பவர்களைப் பார்த்து வாலை ஆட்டியபடியே நின்றிருந்தது.
கடைக்குள் இருந்து ஒரு 4 -5 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை ஒன்று தனது பாட்டியுடன் வெளியில் வந்து கொண்டிருந்தாள். அவள் கையில் ஐஸ்கிறீம் இருக்க ஐஸ்கிறீமின் பேப்பரை உரிப்பதில் அவளின் முழுக்கவனமும் இருந்தது. தாய்க்குத் தெரியாமல் பாட்டியை ஐஸ்கிறீம் வாங்கித்தர வற்புருத்தி வாங்கியிருப்பாள் என நினைத்துக் கொண்டேன்.
ஐஸ்கிறீமை உரித்து வாயில் வைத்தபடியே இழுத்தால் பனியில் சறுக்கிப்போகும் ஒரு வித விளையாட்டுப் பொருளில் குந்தியிருக்க பாட்டி அவளை இழுத்துப் போனார். இவளோ ஐஸ்கிறீமில் உலகை மறந்திருந்தாள்.
எனக்கும் சில வருடங்களுக்கு முன் இப்படியான பனியில் சறுக்கும் இனிமையான சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அப்போதெல்லாம் உணராத ஒருவித எகாந்தம் இன்று அதைப்பற்றி நினைக்கும் போது மனதைப் அள்ளிப்போகிறது.
முதலில் மூத்த மகளின் 1 - 4 வயது வரையான பனிக்காலங்களில் அவளின் பனிச்சறுக்கு உபகரணத்தை இழுத்துத் திரிந்திருக்கிறேன். ஆரம்பத்தில் அவளால் அதில் தனியே குந்தியிருக்க முடியாது. எனவே நாம் வாழ்ந்திருந்த இடத்தில் குன்று போன்ற இடத்திற்கு சென்று அங்கிருந்தபடியே கீழ்நோக்கிப் போகும் பாதையால் வழுக்கிக் கொண்டு போவோம். நான் குந்தியிருக்க அவள் எனது கால்களுக்கிடையில் பாதுகாப்பாய் இருப்பாள். வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கீச்சிடடுக் கத்துவாள். நானும் சேர்ந்து கத்துவேன். சிவந்து குளிர்ந்து போயிருக்கும் அவளின் அழிகிய கன்னங்கள். மீண்டும் மேலே வரும் போது மெதுவாய் கைபிடித்து நடப்பாள். நடந்து களைத்ததும் ஏறி உட்கார்ந்து கொள்வாள். நானும் அவளை கவனமாக மேல்நோக்கி இழுத்து வருவேன். மீண்டும் குன்றின் உச்சிக்குப் போவோம். மீண்டும் சறுக்கி குழந்தையின் உல்லாச உலகில் அவளுடன் உலாவருவேன்.
சில ஆண்டுகளின் பின் சிறிய மகளும் இந்த விளையாட்டில் இணைந்துகொண்டாள். அவளுக்கும் அவளின் அக்காவுக்கும் 4 வயது வித்தியாசம். நான் குறிப்பிட்ட பனிச்சறுக்கு உபகரணத்தில் ஒரு பெரிவரும் ஒரு சிறிய குழந்தையும் மட்டுமே உட்கார முடியும். எனவே எங்களுக்கு இடப்பிரச்சனை வந்தது. அதையும் தனது சாதூர்யத்தால் தீர்த்தாள் மூத்தவள். நானும் இளையவளும் குந்தியிருக்க எம்மை தள்ளி வேகம் கொடுத்த பின் அவள் எமக்குப் பின்னால் இருந்த சிறிய இடத்தில் ஏறி நின்று எனது கழுத்தைக் கட்டிக் கொள்வாள்.
அதை விட மிக இனிமையான, இதமான, வாஞ்சை நிறைந்த கணங்கள் என் வாழ்வில் கிடைத்ததில்லை. நின்றபடியே என் கழுத்தில் முகம் பதித்து ஆனந்தத்தில் வெளிப்படும் மூத்தவளின் மகிழ்ச்சியொலியும், கீச்சிடும் சின்னவளின் ஒலியும், உலகையும் என்னைம் மறந்த எனதொலியும், நாம் சறுக்கிச்சென்ற வழிஎங்கும் வழிந்தோட, அவர்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் சலிக்காத விக்கிரமாதித்தன் போல் நான் குன்றின் உச்சிக்கு இழுத்து வருவேன். சின்னவளை தனது கால்களுக்குள் இருத்தி பாதுகாப்பாக வைத்திருந்த படியே எனக்கு கட்டளையிட்டுக்கொண்டிருப்பாள் முத்தவள்.
அது ஒரு கனாக்காலம். இன்றும் என் மனதை தடவிப்போகும் நினைவுகளிவை. எனது வாழ்வின் இனிமையான காலங்கள் அவை.
இன்று காலை அக் குழந்தையை கண்ட போது மீண்டும் எனது குழந்தைகளை அதேபோல் இழுக்கும் ஆசை வந்து போனது.
அவர்கள் இருவரும் வளர்ந்து விட்டார்கள். எனது ஆசையைச் சொன்னால் ஆளையாள் கண்ணைச்சுருக்கி பார்த்தபடியே புன்னகைப்பார்கள். அதனர்த்தம் அப்பா குழந்தைத்தனமாக கதைக்கிறார் என்பதாயிருக்குமோ?
இருக்கலாம் ...
இன்றைய நாளும் நல்லதே
Subscribe to:
Post Comments (Atom)
விட்ட இடத்தை மீண்டும் தொட்டுச்செல்லும் நினைவுகள்.........நினைவுகளுக்கு மட்டும் தான் சுதந்திரம் இருக்கிறது ,
ReplyDeleteஎங்கும் போய் வரலாம். ..
நெஞ்சை தொட்டு தாலாட்டும் கடந்த கால நினைவுகள். அருமை. கவலை வேண்டாம் மீண்டும் இந்த சந்தர்பம் வரும் பேரப்பிள்ளைகளுடன்.
ReplyDelete