காலை 9 மணி நெருங்கிக் கொண்டிருந்தது நான் தூக்கம் கலைந்து எழும்பியபோது. தூக்கம் வராமல் ஏதோதோ அரைத்தூக்க நினைவில் ஓடிக்கொண்டிருந்தது இரவு முழுவதும். நிம்மதியான தூக்கம் என்று சொல்ல முடியாது. அதனால் மனதும் உடம்பும் களைத்துப்போயிருந்தது. காலை. 9 மணி நிலக்கீழ் தொடரூந்தை பிடிப்பதற்காக குளிரைக் கடந்து அவசர அவசரமாய் நடந்து கொண்டிருந்தேன். வானம் நீலமாய் இருக்க சூரியன் இளஞ்சூட்டை பரப்பிக்கொண்டிருந்தது.
நான் குடியிருக்கும் தொடர்மாடியை கடந்து எதிரே இருந்த வாகனத்தரிப்பிடத்தையும் கடந்து நடக்கும் போது எனக்கு முன்னால் ஒரு தாயும் ஒரு 4 - 5 வயதுப் பெண்குழந்தையும் நடந்து கொண்டிருந்தனர். அந்தக் குழந்தை குளிருக்கேற்ற உடை உடுத்திருந்தாள். முதுகில் ஒரு கரடிப்பொம்மை பை ஆடியபடி தொங்கிக் கொண்டிருந்தது. அவளைக் கடந்த போது திரும்பிப் பார்த்தேன். சிவந்திருந்தத கன்னங்களுடன் கண்ணசை் சுருக்கி என்னைப் பார்த்தாள். புன்னகைத்து அவளை நோக்கி ”ஹாய்” என்பது போல கையை அசைத்தேன். அவளின் பிஞ்சுக்கரங்களும் மெதுவாய் அசைந்தது.
அவர்களைக் கடந்த போய் நிலக்கீழ் தொடரூந்துக்காய் காத்திருந்தேன். சற்று நேரத்தில் அவர்களும் தொடருந்து நிலையத்தை நோக்கி மெதுவாய் நடந்து வருவது தெரிந்தது. படிகளின் அருகில் வந்த போது தாயின் கையை விட்டு விட்டு ஒவ்வொரு படியாய் பாய்வதும் பெருமையாய் தாயைப் பார்த்து ஏதோ சொல்வதும் மீண்டும் ஒரு படி பாய்வதுமாய் வந்து சேர்ந்து சற்று நேரத்தில் தொடருந்து வந்தது. ஏறி யன்னலோரமாக உட்கார்ந்த போது எனக்கு முன்னால் இருந்த இருக்கயைில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் அவளின் தாயுடன்.
ஊதா நிற குளிர்கால ஜக்கட் தலையில் ஊதா நிறத்திலான பஞ்சுத் தொப்பி, ஊதா நிற சப்பாத்து என மிக அழகாய் இருந்தாள். தாயின் உடையியும் நிறமும் அவர்கள் ஈரான், ஈராக் அல்லது கூர்டிஸ்தான் மக்களாயிருக்கலாம் என ஊகிக்க வைத்தது என்னை. எனவே அக் குழந்தை எனக்கு பக்தாத் பேரழகியை விட அழகாய்த் தெரிந்தாள்.
அவளையே பார்ப்பதைக் கண்டதும் தாயின் கையுக்குள் தலையை சரித்து என்னை மெதுவாயப் பார்த்தாள். நான் புன்னகைத்து கையை அசைத்தேன். தயக்கத்துடன் கையை அசைத்தாள். சற்று நேரத்தில் என்னை மறந்து தாயுடன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படியானதோர் தூய்மையான, ஆர்ப்பாட்டமற்ற, குழந்தைததனமான அழகு குடியிருந்தது அவளின் முகத்தில்.
சற்று நேரத்தில் தொடரூந்தில் இருந்து அவள் இறங்கிய போதும் கைகை அசைத்தேன். தற்போது தயக்கமின்றி அழகாய் சிரித்து கையை அசைத்துப் போனாள். மனம் அவளின் பின்னேயே போனது. அந்தக் குழந்தையின் புன்னகையில் நனைந்திருந்த மனது மிகவும் ஏகாந்தமாய் இருந்தது. மனதிலும் உடம்பிலும் இருந்த களைப்பு மறைந்து போயிருந்தது.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது உண்மைதான்.
.
குழந்தையும் தெய்வமும் ஒன்று .........என்பார்கள் முதலில் கானும போது ஏற்ப்படும் மிரட்சி, பின்பு பழகி போக ஒரு தயக்கம்.
ReplyDeleteபின்பு பழகியது போன்ற உணர்வு . இத்தனயும் பார்வையாலே, இதயத்தைக் கொள்ளை கொள்ளும் ...
...இது தான் குழந்தை மனசு ........உங்கள் ரசனை அழகு .
பிள்ளைகள் எப்போதுமே அழகு!
ReplyDelete