நாலுகால் மனிதமும் இரண்டுகால் மிருகமும்

இன்று காலை இனிமையாகவே விடிந்தது. நேற்றிருந்த சுகயீனங்கள் இன்றிருக்கவில்லை. சனிக்கிழமை எனவே இந்தக் கிழமை முழுவதும் பின்போடப்பட்ட வேலைகள் நிறையவே இருந்தன. உடுப்புத்தோய்த்தல், கணணி திருத்தவேலைகள் இரண்டு,  சப்பாத்துக்கடை, நண்பரின் வீட்டுக்குப்போதல் என்றிருந்தன அவை.

முதலில் கணணி திருத்தவேலைக்குப் போனேன். குளிர் -4 என்றிருந்தது.  வாகனத்தை நிறுத்தி வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன். வொவ் வொவ் என்று குரைத்தபடியே நாக்கை தொங்கப்போட்டபடியே பாய்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு அல்ஷேசன் நாய். என் இதயம் வாய்க்குள் பாய்ந்து வந்த மாதிரி இருந்தது எனக்கு. கேட்டில் இருந்த கையை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டேன்.. ஒரு தற்பாதுகாப்புக்காக.

இரு தரம் குலைத்த பின் கேட்டிற்கு முன்னால் நந்தி மாதிரி குந்திக் கொண்டது. என் இதயம் வாயில் இருந்து மெதுவாக நெஞ்சுக்குள் திரும்பிப் போனது.

சற்று நேரம் மௌனத்தில் கடந்து போனது. பின்பு, நாயைப் பார்த்து ”ஹாய்” என்றேன். நம்மூர் நாய் என்றால்  ”உர் உர்” என்று தனது அதிருப்த்தியை  காட்டியிருக்கும். ஆனால் இதுவோ எழுந்து நாக்கை தொங்கப்போட்டபடி வாலை ஆட்டியது. அதனால் எனது பயம் சற்று நீங்கியதால் எனது முச்சும் இதயமும் சாதாரணமாக இயங்கத் தொடங்கியிருந்தது.


இருப்பினும் எனக்கும் நாய்களுக்கும் ஒத்து வருவதில்லை என்னும் ஞாபகம் வர கேட்டை திறக்கும் எண்ணத்தை கைவிட்டேன். மீண்டும் நான் அதனுடன் நட்பை பேணுகிறேன் என்பதை வலிறுத்த ”ஹாய்” என்று குரலில் தேன் குழைத்து அழைத்தேன். நாய் ”கேட்டில் (gate)” காலை வைத்து கம்பிக்குள்ளால் முகத்தை நீட்டி என்னை நக்க முயற்சித்தது. அதன் தலை முழுவதும் கம்பியினூடாக வெளியேவரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின் உயிரைக் கையில் பிடித்தபடி மெதுவாய் கையை நீட்டினேன். நாய் கையை நக்கி நட்பை உறுதி செய்தது.

நாய்கள் பயந்தால் வாலை கால்களுக்கிடையில் சுருட்டிவைக்கும் என அறிந்திருந்ததால் அதன் வாலைப் பார்த்தேன். அது நிமிர்ந்து மேல் நோக்கியபடி ஆடிக்கொண்டிருந்தது.  அதாவது அது எனக்குப் பயப்படவில்லை என்று அர்த்தம். நம்பள பார்த்து யார்தான் பயப்படுகிறார்கள்? நம்ம வீட்டுக்கு அருகாமையில் ஒரு குட்டி குட்டி குட்டி நாய் இருக்கிறது. அது ரொம்ப ரொம்ப  சின்ன நாய். அது ஒரு கிலோ தேறாது. உயரம் 15 சென்டிமீட்டர், நீளம் 20 சென்டி மீற்றர் இருக்கும்... சோகம் என்னான்னா அந்த நாய் கூட நம்மள கண்டா ஊறுமுது... குலைகிறது. அந்த நாய் கூட என்னைப் பார்த்து பயப்படவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)

நாயின் உரிமையானர் எனது நிலையைக் கண்டு, நாய் கடிக்காது வாருங்கள் என்றார். சில வேளைகளில் கடித்தால் க‌டி வாங்குவது நானல்லவா.. எனவே தயங்கித் தயங்கி நின்றேன். அவரும் விடுவதாயில்லை. வாருங்கள் அது கடிக்கவே கடிக்காது என்று உத்தரவாதம் தந்து கொண்டிருந்தார்.  என் வாழ்வுக்கு உத்தரவாமில்லாமல் போகிறது என்று நினைத்தபடியே உட்புகுந்தேன். என்ன அதிசயம்... நாய் என்னை சுற்றிச் சுற்றி வந்து, மணந்து, மணந்து பார்த்தது. (காலையில் தான் குளித்திருந்தேன்). பின்பு திருப்திப்பட்டது போல எனது கண்களை உற்றுப் பார்த்தது. நானும் உற்றுப்பார்த்தேன். அதில் நட்பின் ஒளி தெரிந்தது எனக்கு. பின்பு, அது எனக்கு வழிகாட்டியபடியே நடந்து போய் வாசல் நின்றுகொண்டது.

உரிமையாளர் வந்து உள்ளே அழைத்துப் போக முதல் நாய் உள்ளே புகுந்தது. ”கீரூ” எங்கே போகிறாய்? என்றார். ”கீரூ” நின்று அவரை நிமிர்ந்த பார்த்தது. அவர்கள் இருவரும் பரஸ்பரம் கண்களால் எதோ பேசிக் கொண்டார்கள். சரி உள்ளே போ என்றார் உரிமையாளர். ”கீரூ” வாலையாட்டியபடியே உள்ளே போனது.

அவரின் கணணி மாடியில் இருந்ததால் நாம் மாடிக்கு போனோம்.  படியில் ஏறிக் கொண்டிருக்கிறேன் என்னைத் தாண்டி ”கீரூ” மேலேறிக் கொண்டிருந்தது. ”கீரூ” வை ”கீழே போ” என்றார் உரிமையாளர். அது கீழ்ப்படிய மறுத்து என்னை சுற்றி சுற்றி வந்தது. கையை நக்கியது. எனது காலுடன் தன் உடம்பை தேய்த்தபடி நின்றது. (நல்ல வேளை காலைத் தூக்கவில்லை ”கீரூ”. உரிமையாளர் இவன் இப்படித்தான்  பதிய மனிதர்களுடன் மிகவும் இலகுவாக ஒட்டிக் கொள்வான் என்றார்.

பின்பு ”கீரூ” அருகில் படுத்துக்கொண்டது. நானும் கணணணி திருத்துவதில் கவனம் செலுத்த உரிமையாளர் தான் வெளியில் செல்வதாகச் சொல்லிப் புறப்பட்டார். ”கீரூ” தூங்கிப்போயிருந்தது.


திடீர் என யாரோ எனது முழங்கைபக்கமாக தள்ளுவது போலிருந்ததால் திரும்பிப் பார்த்தேன். கீரு தனது முகத்தை எனது கையை நோக்கி கொண்டுவந்து கொண்டிருந்தது. அதன் கழுத்தை தடவிவிட்டேன். ”கீரூ” கண்கள் சொருக நான் தடவியதை  அனுபவித்துக்கொண்டிருந்து. தடவியதை நிறுத்தினேன் எனது கையில் தனது முகத்தை கொண்டுவந்து தேய்த்தது. மீண்டும் தடவியபடியே ”என்னய்யா முகத்தை தடவவா” என்று தமிழில் கேட்டேன். ஒரு மாதிரியாகப் பார்த்தது.  உடனே நோர்வேஜிய மொழிக்கு மாறி மீண்டும் அதேயே கேட்டேன். பதிலுக்கு கண்ணை சொருகியபடியே என் தடவலை அனுபவித்துக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தின் பின் எனக்கு முன்னால் வந்து குந்திக்கொண்டு வாலை ஆட்டிற்று. ”என்ன பிரச்சனை” என்றேன் நோர்‌வேஜிய மொழியில். என்னை பார்த்தது... பார்த்தது.... பார்த்துக்கொண்டே இருந்தது. என் வாழ்வில் என்னை அத்தனை ஆழமாய் எந்த நாயும் பார்த்ததில்லை. அதன் மண்நிற பளிங்கு நிற கண்கள் ஒரு வித ஒளியைக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு வித ஆழமான வசீகரமும், நட்பும் அளவில்லாத அமைதியும் தெரிந்தன. நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது எதையோ போதிக்கிறது போல உணர்ந்தேன். நிமிடங்கள் மெளனமாய் எம்மை கடந்து கொண்டிருந்தன. கடந்து போன அந்த நிமிடங்களில் நான் நாய்களின் இனத்துடன் நட்பாகிப்போனேன். மனதுக்குள் அமைதி குடிவந்திருந்தது. பயங்கள் அகன்றிருந்தன. ”கீரூ”சற்று நேரத்தில் என்னருகே வந்து கையை நக்கிற்று. முகத்தை தடிவிக்கொடுத்தேன். மீண்டும் கையை நக்கிவிட்டு அருகில் நின்றிருந்தது.

பின்பு வெளியில் போவதும், என்னிடம் வருவதும், அது வந்ததும் நான் அதன் தாடையை தடவுவதுமாய் நேரம் போய்க் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அருவருப்பாய் இருந்த நாயின் வாசனை இப்போ மறைந்து போயிருந்தது.

உரிமையாளர் வந்தார். ”கீரூ” வை வெளியே அழைத்தார். போக மறுத்து காலடியில் படுத்துக் கொண்டது. அவரும் அதை அனுமதித்தார். வேலை முடிந்து புறப்பட்டேன். எனது பையை முகர்ந்து பார்த்தது, காலைமுகர்ந்தது கையை நக்கிற்று. நானும் குனிந்து நிதானமாய் அதன் கண்களுடன் எனது கண்களை கலக்க விட்டேன். கூர்மையான அதன் கண்கள் என்னை ஊடுருவிப்போய் எனக்குள் எதையே தேடியது போலவும், அது தேடியது கிடைத்தது போலவும் இருந்தது ”கீரூ வின் கண்களில். ”கீரூ”வின் தாடையையும் அதன் தலையையும் தடவி விடை பெற்றேன். முன் கேட் மட்டும் என்னுடனேயே வந்தது. மீண்டும் அதன் தலையை நீவி நோர்வேஜிய மொழியில் ” சென்று வருகிறேன்” என்றேன். மீண்டும் கையை நக்கிற்று. வாகனத்தில் ஏறி இருந்து ”கீரூ வைப் பார்த்தேன். என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. வீடு வரும் வழியில் என் கையை மணந்த பார்த்தேன். ”கீரூ வின் வாசனை அங்கிருந்தது ஏனோ மனதுக்கு இதமாய் இருந்தது.

நாய் வளர்க்கும் மனதிர்களிடம் எனக்கு பெருமரியாதை எற்பட்டிருக்கிறது. அவர்களின் நாய்கள் கடிப்பதில்லை ஆனால் அவர்கள் கடிக்கும் கடியோ... விஷக்கடி....  இனி நானும் திருப்பிக்கடிக்கலாம் எனக் கொள்க. :-)


இன்றைய நாளும் நல்லதே!


.

8 comments:

 1. நாயுடனான உங்கள் நட்பு அனுபவத்தை ரசித்துப் படித்தேன்.

  ReplyDelete
 2. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  ReplyDelete
 3. நாய்களுக்கும், எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போலும்.நான் மிகவும் நேசிக்கும் உயிரினம் அது.இது வரை நான் சுமார் 40 நாய்களை வளர்த்திருப்பேன். வெவ்வேறு இனங்கள். அவற்றுடன் வெவ்வேறு வகையான அனுபவங்கள்.
  ஒரு கட்டத்தில் நாய்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு ,அவற்றுடன் உரையாடும் ஜீவராசியாக நானும் ஆகி விட்டேன்.ஒரு நாய் காலையில் என்னிடம் வந்து அதனுடைய பாஷையில் 'குட் மோர்னிங் ' சொல்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
  இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாரிய சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உள்ளாகி ,வைத்தியசாலையில் இருந்து மீண்டு வந்த எனக்காக நான் வளர்த்த நாய் ஒன்று குற்றுயிரும் ,குலையுயிருமாக உயிரைக் கண்களில் மாத்திரம் தேக்கி வைத்துக் கொண்டு காத்துக் கிடந்தது.'மலோறி!' என்று அதன் பெயரைச் சொல்லி தலையை நான் வருடிக் கொடுத்த சில நிமிடங்களில் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல அது தன் இறுதி மூச்சை விட்டு,இறந்து போனது.
  அதே வேளை நான் ஊட்டி வளர்த்த ' மனித விலங்கொ'ன்று என் மரணாவஸ்தையை 'ரசித்துக்' கொண்டிருந்தது.இப்படி இந்த 'நாய'கனுக்கு நாய்களுடன் ஏராளமான அனுபவங்கள்.விரிவாக அவற்றையெல்லாம் ஒரு நாவலாக்க ஆசை.இப்போது என்னிடம் வெவ்வேறு இனங்களை சேர்ந்த நான்கு நாய்கள் உள்ளன.
  அவற்றுடன்தான் என் பெரும் பாலான பொழுதுகள் கழிகின்றன.நாய்களைப் பற்றிய நினைவுகளைக் கிளறிய உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 4. நீங்களும் ஒரு நாய்க்குட்டியை வேண்டி வளர்க்கலாம் தானே?

  ReplyDelete
 5. மனிதன் கடித்தால் திருப்பிக் கடிக்கலாம் . நாய் கடித்தால் திருப்பிக் கடிக்க்லாமா?
  ஹா ஹா சும்மாஜோக்குங்க. மிகவும் நன்றி யுள்ளது நாய்........

  ReplyDelete
 6. சிறந்த அனுபவம்

  நாய் என்னை சுற்றிச் சுற்றி வந்து, மணந்து, மணந்து பார்த்தது. (காலையில் தான் குளித்திருந்தேன்).
  நல்லவேளை வழமை போல் குளிக்காமல் சென்றிருந்தால் என்ன நிலைமை

  ReplyDelete
 7. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

  @Farhan: வேணா.. அழுதுடுவன்

  ReplyDelete
 8. "வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன்" உங்கள் ஊரிலும் "கேட் கதவு" என்று தான் சொல்விங்களோ?
  இப்பதான் புரியுது நிங்களும் சால்ட் உப்பு போட்டு சாப்புடுற
  தமிழர் தானே!!!!

  ReplyDelete

பின்னூட்டங்கள்