நேற்று வலைமேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட செய்தியொன்றை படித்ததனால் மனம் சற்று தேவைக்கும் அதிகமாகவே கனத்துப்போனது.
ஆப்கானிஸ்தானில் உள்ள நோர்வேஜிய யுத்தவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளியின் கதை. வலியின் உச்சம்.
மனிதர் வறுமையை ஒழிப்பதற்காய் ஈரானில் இருவருடங்கள் தொழில்புரிந்து நாடுதிரும்பிய பின் தனக்கு என்று நிட்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் முடிக்க தீர்மானித்து, திருமண நாளும் குறிக்கப்பட்டு, திருமணநாள் அன்று மணமகன் கோலத்தில் திருமணநிகழ்வுக்கு பயணிக்கும் போது அவர் பயணித்த வாகனம் கண்ணிவெடியில் சிக்கிக்கொள்கிறது. பாரதூரமாய் காயமடைந்தாலும் உடனடியாக வைத்திய உதவி கிடைக்காமல் பல மணிநேரங்களின் பின் நோர்வேஜிய யுத்த வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுகிறார்.
அங்கு சிகிச்சை முடியும் போது மனிதரின் இடது கால், வலது பாதம், இடது கை என்பன அகற்றப்பட்டிருக்கிறது. மேலும் பாரிய காயங்களுடன் உயிர் தப்புகிறார். இவர் உயிர் தப்பியது வைத்திய ஆச்சர்யங்களில் ஒன்று என அவருக்கு தெரிவித்திருக்கிறார்கள் வைத்தியமளித்த அதிகாரிகள்
சற்று சிந்தித்துப் பார்த்தால் அவருக்கு மட்டுமான சோகமில்லை இது. அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் இந்தச் சம்பவம் தூக்கியடித்திருக்கும். அந்தப் மணப்பெண் தொடக்கம் இவருடன் சம்பந்தப்பட்ட எத்தனையோ மனிதர்களை அந்த ஒரு சம்பவம் தாக்கியிருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மீள முடியாத சோகத்தை கொடுத்திருக்கிறது.
வாழ்வின் கனவுகள் தலைகீழாக மாறுவதற்கு ஒரு சிறு கணம் காணும் என்பதை மீண்டும் மீண்டும் வாழ்வு எமக்கு அறிவித்துக்கொண்டேயிருக்கிறது.
இதே போல் எம்மூரிலும், ஏனைய இடங்களிலும் எத்தனை எத்தனை மனிதர்களின் கனவுகள் கலைந்திருக்கும். அங்கவீனமானவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் இப்படி எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் இருட்டில் நடப்பது போல அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தால் மனச்சாட்சி வெளியில் குந்தியிருந்து என்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கிறது எனக்கு. எத்தனை எத்தனை வசதிகளுடன் வாழ்கிறோம். ஒரு 10 நிமிட பசியை பொறுக்க முடிகிறதா எம்மால்? எத்தனை எத்தனை விதமான உடைகள், கருவிகள், வாகனங்கள், விழாக்கள், பயணங்கள்... எனக்கு நாம் எதையோ மறந்துவிட்டது போலிக்கிறது.
எனது வேலைத்தளத்தில் சென்ற வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயளாரான ”கோபி அண்ணணின்” நெருங்கிய முண்ணணி ஆலோசகர் ”யான் ஏகர்லான்ட்” என்பவர் சொற்பொழிவு ஆற்றினார்.
அவரின் சொற்பொழிவு உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்னும் தொனியிலேயே இருந்தது. அவரின் ஆதாரங்கள் 1900 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை நடந்த சம்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ரீதியிலும் தர்க்க ரீதியிலும் அமைந்திருந்தன.
யுத்தத்தினால் இறப்பவர்களின் தொகை கணிசமாக குறைந்திருக்கிறது
போர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது
சர்வதிகாரிகள் குறைந்திருக்கிறார்கள்
ஐனநாயக நாடுகள் அதிகரித்திருக்கின்றன என்றெல்லாம் ஆதாரபூர்வமாக தர்க்கித்தார்.
யுத்தத்தை விட உலகில் முக்கிய பல பிரச்சனைகள் இருக்கிறது என்றார்.
யுத்த்தால் இறப்பவர்களை விட போதைப்பொறுட்களின் வியாபாரத்தால் இறப்பவர்களின் தொகை கணிசமாக இருக்கிறது.
கடந்த 15 - 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் இயற்கை அழிவுகள் மிகுந்த அபாயத்தை மனிதவர்க்கத்துக்கு ஏற்படுத்துகிறது என்றார்.
அதிகரித்து வரும் மனிதர்களின் எண்ணிக்கை எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு மிகவும் முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதும் அவரின் கருத்தாய் இருந்தது.
ஆனால் அவர் உரையின் இறுதியில் உலகம் கடந்த காலத்தை விட தற்போது முன்னேறியிருக்கிறது என்பதற்கான ஆதரங்களைத் தந்து தனது உரையை முடித்தக் கொண்டார்.
அவரின் உரை என்க்கு அன்று மகிழ்ச்சியைத் தந்தது. ஓடிப்போய் அவரைச்சந்தித்து உங்கள் உரை சிறப்பாக இருந்தது என்றேன். அதன் பிரதி கிடைக்குமா என்ற போது அனுப்பிவைப்பதாகச் சொன்னார்.
ஆனால் நேற்று பத்திரிகையில் வாசித்த செய்தியும் அது ஏற்படுத்திய சிந்தனையோட்டங்களுக்கும் பின் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பததை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. எனக்கேதோ மனிதத்தை இழந்து நாம் உலகத்தை முன்னேற்றுகிறோம் போலிருக்கிறது. காய்ந்து வறண்ட பூமிக்கும், மனிதநேயமற்ற முன்னேற்றங்களும் இடையில் வித்தியாசமில்லை. புரிந்ததா நட்பே?
இன்றைய நாளும் நல்லதே
.
காலத்தை வெல்ல யாரால் முடியும் ?
ReplyDelete