இன்று மாலை ஒருவர் தொலைபேசியில் அவசர அவசரமாய் அழைத்தார். தனது உயிர் பிரியப்போவதற்கு முதல் என்னிடம் பெரும் இரகசியத்தை சொல்ல வேண்டும் என்பது போல் தனது பிரச்சனையை சொல்வதிலும் பெரும் அவசரம் காட்டினார். இதனால் அவரின் பிரச்சனை என்னவென்றே எனக்கு விளங்கவில்லை. அய்யா மெதுவாய் உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள் எனக்கு கேட்க நேரமிருக்கிறது என்றேன். எனக்கு நேரமில்லையே என்றார்.. மிகுந்த அவதியுடன். பின்பு ஏதோ புரிந்தவர் போல முன்பை விட சற்று வேகம் குறைத்து தனது பிரச்சனையை விளக்கினார்.
அவரின் கணணி திடீரென அவரது ஆவணங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டது என்பதே அவரின் பிரச்சனையாக இருந்தது.
”எப்படி நடந்தது” என்றேன்
அவரது கணணிக்குள் வைரஸ் பூந்திருப்பதாக பெரிய சிவப்பு எழுத்தில் காட்டியதாம். அதன் பின் அவர் ஒரு தரம் ”ஓகே”பட்டனை அமத்தியதும் இது நடந்தது என்றார். என்னத்துக்கு ”ஓகே” பட்டனை அமத்தினீர்கள்.. அது என்னத்தை செய்வதற்கு ”ஓகே” கேட்டது என்று கேட்டேன். தெரியாது என்றார்.
மாலை 7 மணி போல் வருகிறேன் என்றேன். இல்லை இல்லை இது தலைபோகிற வேலை உடனே வா என்றார். சரி என்று சொன்னேன்
பனிக்குளிரில் நடந்து போய் கதவைத் தட்டியதும், கதவைத் திறந்தபடியே இன்று நீ கடவுளுக்குச் சமமானவன் என்றார். சிரித்தேன். வீட்டுக்குள் போகு முன்பே வாசலில் வைன் பொத்தல்கள் அடுக்கியிருக்கக் கண்டேன். வா எனது காரியாலயத்திற்கு என்று என்னை அழைத்துப்போனார். அது ஓரு காரியாலயம் எவ்வளவு குப்பையாய் இருக்கக் கூடாதோ அந்தளவு குப்பையாய் இருந்தது அது. காரியாலத்தினுள்ளும் வைன் போத்தல்கள் நிரம்பி வழிந்தன. ஆகா.. ஒரு பெருங்குடிகாரனிடம் அகப்பட்டிருக்கிறேன் போல் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் மனிதர் மிகவும் நிதானமாகவே இருந்தார்.
கணணியைப் பார்த்தேன் .. மிகவும் பழைய கணணி. 6 ஆண்டுகளாக பாவிக்கிறார் என்றார். கணணியுலகத்தில் 6 ஆண்டுகள் என்பது கற்றாலத்துக்குச் சமம் என்றும், உன் கணணியை திருத்துவதை விட நீ புதிய கணணி வாங்குவது சிறந்தது என்றேன். அப்படியா சங்கதி.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதே என்றார். என்ன என்ற போது கணணி வாங்குவது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தவிர அதை வாங்கியபின் தேவையான மென் பொருட்களை எப்படி போடுவது என்றும் தெரியாது என்றார். நான் அதற்கு உதவுகிறேன் என்ற பின் கடைக்குப் போய் புதிய கணணி வாங்கிவந்தோம்.
தான் ஒரு ”வைன் ருசிப்பாளர்” என்று தனது தொழிலின் பெயரை சொன்னார். இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்படியானதோர் தொழில் செய்பவரை இன்று தான் சந்திக்கிறேன் என்றேன். தன்னால் பல விதமான சுவைகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடியும் என்றார். எனக்கு ஞாபகசக்தியே இல்லை என்றேன் நான். விழுந்து விழுந்து சிரித்தார்.
வீட்டுக்கு திரும்பினோம். வீடு முழுவதும் வைன் சம்பந்தமான பொருட்கள், படங்கள், கலைப் பொருட்கள், புத்தகங்கள் என எங்கும் எதிலும் வைன் ஆக இருந்தது. அவர் வீட்டு பைப்ஐ திறந்தால் வைன் வந்திருக்குமோ என்னமோ?
என்ன உணவுக்கு என்ன வைன், அது எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், எப்படி பரிமாறவேண்டும் என்றெல்லாம் புத்தகங்கள் இருந்தன. எப்படி குடிக்க வேண்டும் என்றும் புத்தகம் இருக்கா என கேட்கத் தோன்றியது எனக்கு.. ஆனால் அவலை அடக்கிக் கொண்டேன்.
கணணியை இயக்கிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். அவர் ஒரு கட்டடக்கலை நிபுணராம். ஆனால் கடந்த 30 வருடங்களாக வைன் சுவைப்பவராகவும், ஆலோசனையாளராகவும், விரிவுரையாளராகவும், இறக்குமதியாளராகவும் தொழில் புரிகிறாராம். தனது தொழில் மிகுந்த மனத்திருப்தியைத் தருவதால் தான் இதை தொடர்ந்து செய்து வருவதாகச் சொன்னார். அவரிடம் இருக்கும் பண்டகசாலையில் 40 000 வைன் போத்தல்கள் இருப்பதாகவும் அதில் 40 வருட பழைய வைன் போத்தல்களும் இருக்கின்றன என்றும் சொன்னார். தன்னோடு இந்த வியாபாரம் அழிந்து விடலாம் என்னும் சந்தேகம் அவரிடம் இருந்தது. அதற்கான காரணம் இது ஒரு தனி மனிதனின் அறிவில் தங்கியிருக்கும் தொழிலாக இருக்கிறது என்றார். தனக்கு மட்டுமே இத் தொழிலின் பல இரகசியங்களும், நுட்பங்களும், தொடர்புகளும் உண்டு என்றும் தனது வாரிசுகள் இத் தொழிலில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வேதனையைத் தருகிறது என்றும் சொன்னார்.
நான் வைன் பற்றி எதுவும் தெரியாத ஞானசூன்யம் என்றேன். அதற்கு அவர் எனது கணணி அறிவு அதிலும் மிகவும் குறைந்தது என்றார். என்னை வைன் சுவைக்கும் படி அறிவுறுத்தினார். போதைக்காக வைன் அருந்துவதில்லை என்றும் அதை ரசிக்கவும், ருசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.
கணணிக்கு ஒரு ரகசியச்சொல் (பாஸ்வேர்ட்) தேவை என்றேன். தன்னிடம் பல வருடங்களாக ஒரே ரகசியச்சொல் மட்டுமே இருக்கிறது என்றும் அதையே இதற்கும் இடச் சொன்னார். அதை பதிந்து கொடுத்தேன். தனது இரகசியச் சொல்லின் அர்த்தம் என்ன என்று தெரியுமா என்றார். தெரியாது என்றேன். அது வைன் உற்பத்திசெய்யும் ஒரு நாட்டில் பெருமளவில் வைன் விளையும் ஒரு மாநிலத்தின் பெயர் அது என்றும் விளக்கம் தந்தார். மனிதர் எப்போதும் ”வைன்” உடனேயே வாழ்கிறார் போலிருந்தது எனக்கு.
கணணிக்குத் தேவையான மென்பொருட்களை உட்புகுத்தி முடிந்ததும் அவருக்கு அது பற்றி விளக்கினேன். புரிந்து கொண்டேன் என்றார். ஆனால் அதை என்னால் நம்பமுடியாதிருக்கிறது என்றேன். பெரிதாய் சிரித்து, தேவையென்றால் நீ இருக்கிறாய் தானே என்றார்.
சிரித்தபடியே விடைபெற்றேன். வரும் வழியில் அவரிடம் அறிவுரை கேட்டு அதன் படி ஒரு வைன் போத்தல் வாங்கி குடிக்கவேணும் என்னும் ஆசை வந்தது. ஆனால் அவரிடம் நான் இது பற்றிக் கேட்டால், என்ன உணவை உண்ணப்போகிறாய் இந்த ”வைன்” உடன் என்பார். நான் சோற்றுடன் ஆட்டுக்கறியும், கத்திரிக்காய் பொரியலும், பருப்பும், கரட் சம்பலும் என்றால் அவர் அதற்கு தன்னிடம் வைன் இல்லை என்றும் ஆனால் கள்ளு இருக்கு என்று சொல்லக்கூடுமோ?
இன்றைய நாளும் நல்லதே.
.
மிக இயல்பான நடை உங்களுக்கு கை வந்திருக்கிறது! நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவழக்கம் போல எழுத்து நடை சூப்பர்... தலைப்பு கச்சிதம்...
ReplyDeleteகவரும் எழுது நடை. நிறைய எழுதுங்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த பதிவின் கடைசி பத்தியில் உள்ள உங்கள் ஆசை நிறைவேற நீங்கள் ஒரு "தமிழ் பெரும் குடி மகனை" விரைவில் சந்திக்க வேண்டும்.
ReplyDelete