உயிர்த்திருந்தாலன்றி உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை

எப்போது மட்டக்களப்பிற்குச் சென்றாலும் எனது பாடசாலையான மெதடிஸ்த மத்திய கல்லூரியைத் தரிசிக்கவும், எங்கள் காலத்து அதிபரான பிரின்ஸ் சேர்ஐ  சந்திக்கவும் தவறுவதில்லை, நான்.

எனது பாடசாலைக்கு எனது நெஞ்சில் மிக முக்கியமானதோர் இடமிருக்கிறது. அதேபோல் எனது அதிபரிலும் பெருமரியாதையிருக்கிறது. எனது பேராசான் அவர். மட்டக்களப்பின் சரித்திரத்தின் மிக முக்கிய மனிதர்களில் ஒருவர் அவர் என்பதை பல பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றும் Price G. Casinader இன் மாணவன் என்பதில் எனக்கு ஏகத்துக்கும் பெருமையிருக்கிறது. என்னைச் செதுக்கிய உளி அவர். அது எனது பாக்கியம்.

எமக்கிடையிலான உறவு 1976ம் ஆண்டு பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் இருந்து ‌மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு இடம்பெயர்ந்த நாட்களில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. இனியும் தொடரத்தான் போகிறது.

இம் முறை ஊருக்குச் சென்றிருந்த போதும் அவரைத் தேடிச்சென்றேன். வீடு பூட்டியிருந்தது. அருகில் விசாரித்தேன் தெரியாது என்றார்கள். அவரின் வீட்டு தொலைபேசி இலக்கத்திற்கு தொலைபேசினேன். நீண்ட நேரத்தின் பின் தொலைபேசியை எடுத்தார். மனிதர் களைத்திருப்பது அவரின் பேச்சில் தெரிந்தது. சேர், நான் சஞ்சயன் கதைக்கிறேன், உங்களை பார்க்க வந்திருக்கிறேன், உங்களை சந்திக்கலாமா என்றேன். Why not  என்று ஆங்கிலத்தில் பதில் வந்தது.

88 வயதில் இருதய சத்திரசிகிச்சை, கண் சத்திர சிகிச்சை, ஏனைய வயயோதிபத்தின் நோய்களுடன், தனிமையில் அவர் தனது வாழ்வின் அந்திம காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறார், எனது பேராசான். ஒரு வருடத்தின் பின் அவரைக் காணப்போகிறேன் என்னும் மகிழ்ச்சி இருந்தாலும் மனிதரிடம் எனக்கு ஒரு வித பயம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதை உணர்ந்துகொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் கதவினைத் திறந்தவர் ”என்னடா உனக்கு இன்னும் மயிர் முளைக்கவில்லையா” என்றார் அவருக்கே உரிய நகைச்சுவையுடன்.  நான் இன்னும் சின்னப்பிள்ளை சேர். அது தான் இன்னும் தலைமயிர் முளைக்கவில்லை என்றேன் சிரித்தபடியே. அப்ப நானும் சின்னப் பிள்ளைதான்  என்றார் தனது தலையைத் தடவியபடியே. இருவரும் சிரித்துக்கொண்டோம். அவரிடம் கற்றுக்கொண்டவற்றில் நகைச்சுவையும் அடங்கும்.

”இருங்க மகன்” என்றபடியே சாய்மனைக்கதிரையில் சாய்ந்துகொண்டார்.. அவருக்கருகில் உட்கார்ந்துகொண்டேன். அருகில் இருந்த பழைய காற்றாடியை இயக்கினார். அதை அவரை நோக்கி திருப்பிவிட்டேன். கனிந்த கண்களினூடே புன்னகைத்தார். வீட்டுக் கூரைக்குள் எலியொன்று ஓடி ஒளிந்ததைக் கண்டேன்.

”என்னமோ புத்தகம் எழுதினாயாம், என்று  சொன்னார்களே, எனக்கொன்று தா  என்றார் உரிமையான அதிகாரத்துடன். எடுத்துக் கொடுத்தேன். சற்றுநேரம் அட்டைப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் அப்படி இப்படித்தான் என்பதால் அவர் புத்தகத்தை வாசிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ”என்ன விசயத்தை எழுதியிருக்கிறாய்” என்றார். முன்னாள் போராளிகளின் இன்றைய வாழ்க்கைத்துயரங்கள் என்றேன். தலையை மேலும் கீழும் ஆட்டினார்.

”நீ எங்கள் பாடசாலையின் வழிகாட்டிகள் சங்கத்தில்” இருந்தாயா? என்றார். பெருமையுடன்  ”ஆம்” என்றேன். அதன் ஆங்கிலப் பெயர் தெரியுமா? என்றார். நெஞ்சை நிமிர்த்தி ”Pathfinders Club” என்றேன். அவரின் கண்கள் ஒளிகொண்டன. ”வழிகாட்டிகள் சங்கம்” ”வழிகாட்டிகள் சங்கம்” என இருமுறை தனக்குள் சொல்லிக்கொண்டார்..

அடுத்து வந்த ஒரு மணிநேரமும் அவரின் நினைவுகள் வழிகாட்டிகள் சங்கத்தினை ஆரம்பித்த காலத்தின் கதைகளில் இருந்து, அதனூடாக சமுதாயம் பெற்ற நன்மைகள்பற்றியும், மாணவர்கள் சமூகசேவையினை கற்றுக்கொண்டது பற்றியும், அவரின் மனதினைக் கவர்ந்திருந்த ஒரு இஸ்லாமிய மாணவரையும் பற்றிப் பேசினார். சாதீயம், இனம், மொழி கடந்த சேவை மனப்பான்மை வழிகாட்டிகள் சங்கத்திடம் இருந்ததையும் பல கதைகளினூடே கூறிக்கொண்டிருந்தார். அவர் கண்கள் பெரும் ஒளிகொண்டிருந்தன, கனவுலகில் பேசிக்கொண்டிருப்பதுபோன்று பேசிக்கொண்டிருந்தார்.

அவருடன் உரையாடும் போது அவரின் பழைய கதைகளை அவரின் அனுமதியுடன் நான் ஆவணப்படுத்துவதுண்டு. அவ்வப்போது பல அரிய முக்கிய தகவல்கள் கிடைக்கும் அன்றும் அப்படித்தான்.

அப்போது அவரின் முன்வீட்டில் வசிப்பவர் வந்தார். அவரும் இவரது மாணவர். ”என்ன சேர்..  இண்டைக்கு பெரிய சத்தமாய் இருக்கிறது, சந்தோசமாய் இருக்கிறீங்க போல” என்றார் அவர்.

எனது முக்கிய மாணவர்களில் ஒருவன் நோர்வேயில் இருந்து வந்திருக்கிறான். அவனுடன் பேசும்போது நான் உயிர்க்கிறேன். இன்றும் அப்படித்தான் என்றார் ஆங்கிலத்தில். எத்தனை பெரிய வார்த்தைகள் அவை. நெஞ்சு விம்மி, கண்கள் கலங்கின. அதை அவர் கவனித்திருக்கவேண்டும். உண்மைதான் சஞ்சயன் உன்னுடன் கதைப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்றார். நான் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

எனது வாழ்க்கை இப்படியான சில பொழுதுகளில் மிக மிக அழகாகவிருக்கிறது. நான் மனதுக்குள் பெருமையை உணர்ந்துகொண்டிருந்தேன்.

மாலை மீண்டும் வருவதாய்க் கூறி புறப்பட்டேன். எத்தனை மணிக்கு வருவாய் என்றார். அவரின் கேள்வியில் அவரின் தனிமையின் வீரியம் புரிந்தது எனக்கு. 7 மணிபோல் வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டேன்.

மாலை குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியாது போனதால் தொலைபேசியில் அறிவித்தேன். பறவாயில்லை உனது வேலை முடிந்ததும் வா என்றார். 8 மணிபோல் அவரைச் சந்தித்தபோது சிற்றூண்டியுடன் காத்திருந்தார், மனிதர். அதற்கிடையில் பழைய மாணவர் சங்கத்தலைவரையும் அழைத்து அறிமுகப்படுத்தினார். அடுத்தவருடம் பாடசாலையின் 200 வது ஆண்டு நிறைவுவி‌ழா. மிகச்சிறப்பாக நடாத்தவேண்டும் என்றார். இன்றும் பாடசாலையின் நினைவுகளிலேயே அவரின் அதிக நேரங்கள் கழிகின்றன என்பதை அறியக்கூடியதாய் இருந்தது.

அனைவரும் சென்ற பின் உன்னிடம் ஒரு விடயம் கேட்கவேண்டும் என்றார். கேளுங்கள் என்றேன். நான் பாடசாலை பழையமாணவர் சங்கத்தின் தலைமைப்பதவியை ராஜனாமா செய்யவேண்டும் என்று பலரிடம் சொல்லித்திரிந்தாயாமே என்றார். ஆம். நீங்கள் கூறுவதில் சற்று உண்மையிருக்கிறது. ஆனால் முழுவதும் உண்மையல்ல என்றேன்.

உனக்கு உன் கருத்தை வெளியிட முழு உரிமையும் இருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனாலும் அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என்றார். பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தில் இருந்த இழுபறிநிலமைகள் பற்றி நான் வைத்திருந்த கருத்துக்களையும், அவற்றை நிவர்த்திசெய்வதற்காக உங்களை தலைமைப்பதவியை தவிர்த்து பழையமாணவர் சங்கத்தின் அதியுயர் மேலாளராக (Patron) இயங்கும்படியுமே நான் கூறியிருந்தேன் என்றேன். இது பற்றி சில வருடங்களுக்கு முன் அவருடன் உரையாடியதையும் நினைவூட்டிய போது ” தற்போது உன்னைப் புரிந்து கொள்கிறேன்” என்றார். எனது மனம் பெரும் ஆறுதலை உணர்ந்துகொண்டிருந்தது.

நுளம்புக்கடியினை பொறுத்துக்கொண்டு ‌அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இருவரும்  மகிழ்ச்சியானதொரு மாலைப்பொழுதினை உணர்ந்துகொண்டிருந்தோம்.

பேராசானுக்கு உதவியாய் இரவுப்பொழுதுகளில் தங்கும் ஒருவர் வந்தார். அவர் கையில் எனது படுவான்கரை புத்தகம் இருந்தது. இது உங்களுக்கு எப்படிக்கிடைத்தது என்றேன் அவரிடம். அய்யா தந்தார் என்றார்.

இவர் படுவான்கரையைச் சேர்ந்தவர். நீ உண்மை எழுதியிருக்கிறாயா என்று பார்ப்பதற்காக அவரிடம் கொடுத்திருக்கிறன் என்றார் பேராசான்
”எப்படி எழுதியிருக்கிறான்” என்றார் அவரின் உதவியாளரை நோக்கி.
”உண்மையை பயமில்லாமல் எழுதியிருக்கிறார்” என்றார் அவர்.
என்னட்ட படிச்சவன் அவன். வேற என்னத்தை எழுதுவான் என்று வெடித்துச் சிரித்தார்:
நான் பெருமையில் மிதந்துகொண்டிருந்தேன்.

மறுநாள் காலை மீண்டும் வருவதாய்க: கூறிப் புறப்பட்டேன்.  இரவு முழுவதும் எனது மனம் அவரையே நினைத்துக்கொண்டிருந்தது.

கடந்த வருடம் மட்டக்களப்பில் தங்கியிருந்து ”படுவான்கரை” புத்தகத்திற்கான தகவல்களை திரட்டியபோது அறிமுகமானார் ஒரு முன்னாள் போராளி. ஒரு காலை முற்றாக இழந்தவர். இரு குழந்தைகள், மனைவி, தாயார் என அவரின் குடும்பம் இருந்தது. வறுமையில் அடிபட்டுப்பொயிருந்தார்.

அவருக்கு அறிமுகமாகிய ஒரு தொழிலுக்கு முதலீடாக 70.000 இலங்கை ரூபாய் பெறுமதியான ஒரு இயந்திரம் வழங்கியிருந்தேன். இன்று அவர் வறுமையில் இருந்து மீண்டு, ஒரு ஆட்டோ, சிறு தொழிட்சாலை ஆகியவற்றின் உரிமையாளராக முன்னேறியிருக்கிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுவதுண்டு.

மறுநாள் அவரை அழைத்து எனது பேராசானிடம் அறிமுகப்படுத்தினேன். சற்றுநேரத்தின் பின் அவர் விடைபெற்றுக்கொண்டார்.

அவர் விடைபெற்றதும், ஆங்கிலத்தில் My son  என்றழைத்த போது அவர் குரல் தழுதளுத்திருந்தது. ஒரு இருதயமில்லாதனவைப்போல் எனது மாணவர்களை நான் கண்டித்திருக்கிறேன், அடித்திருக்கிறேன், நீயும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இன்று எனது அந்திமக்காலத்தில் என்னை நீங்கள் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் எவ்வாறு நன்றி சொல்வது? என்றார்.

எனக்கு நீ, லட்சம் லட்சமாக பணம் தந்திருந்தாலும் இன்று நீ செய்த செயல் அதற்கீடாகாது. எனது வழிகாட்டிகள் சங்கத்தின் பலாபலன்களை நான் 30 ஆண்டுகளின் பின்பும் கண்டுகொண்டிருக்கிறேன். ஒரு ஆசிரியனுக்கு இதை விட வேறு என்ன பெருமை இருக்கமுடியும். உன்னால் எங்கள் பாடசாலைக்குப் பெருமை, எனக்குப் பெருமை என்றார். நான் பேசும் நிலையில் இருக்கவில்லை. மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்தார் எனது பேராசான், கலங்கிய கண்களினூடே.

உன்னை எனக்கு நன்கு நினைவிருக்கிறது. பிரளிக்காரன் (குழப்படிக்காரன்)  நீ. நீ எப்ப‌டி வருவாய் என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் இருந்தது. நீ சமுதாயம் பற்றிய பிரக்ஞையுடன், சக மனிதனை நேசிக்கும் மனிதனாய் இருப்பது, நான் ஒரு ஆசிரியனாய்  ‌வெற்றிபெற்றிருக்கிறேன் என்பதைக் காட்டுகிறது என்றார்.

தேவைக்கு அதிகமான புகழ்ச்சிதான் என்றாலும், என்னை அணுவணுவாக செதுக்கி உருவாக்கிய பெருமனிதர் அவர். எதுவும் கூறமுடியாதிருந்தது. உடல் முழுவதும் ஒருவித பெருமையை உணர்ந்துகொண்டிருந்தேன்.

அவரின் கடும் கண்காணிப்பில் இருந்தவர்களில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் கள்ளனுக்கு போலீஸ் வேலை கொடுப்பது போன்று என்னை தலைமை மாணவத் தலைவனாக அறிவித்திருந்தார். என்னை வழிநடத்தியவர்களில் மிகப்பெரிய பங்கு இவருக்குண்டு.

பலதையும் உரையாடிக்கொண்டிருந்தோம். இன்றைய சமுகக்கட்டமைப்பில் மனிதநேயத்தை வளர்க்கும் செயற்பாடுகள் இல்லையென்பது அவரது பலத்த வேதனையாக இருந்தது. பாடசாலைகள் சிரமதானத்தை மறந்துவிட்டன, சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று என்னைப்பார்த்துக்கேட்டார். அவரைப்போன்று என்னிடமும் அதற்கான பதில் இருக்கவில்லை.

நான் புறப்படவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதைக் அறிவித்தேன்.

மகன், வாழ்க்கை, என்னை பாலைவனங்களுக்குள்ளாலும், ரோஜாத் தோட்டங்களினுள்ளாலும் அழைத்துப்போயிருக்கிறது. ஒரு ஆசிரியனாய் என் வாழ்க்கை கழிந்ததையிட்டு பெருமைப்படுகிறேன். நான் எனது கடைசிக் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். அடுத்தமுறை நீ வரும்போது நான் இருப்பது சந்தேகமே. எனதருமை மாணவனே! கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் ரட்சிப்பாராக என்றார்.

அப்படி பேசாதீர்கள். அடுத்தவருடம் எங்கள் பாடசாலையின் 200வது வருடம் என்றேன். நாம் அப்போது மீண்டும் சந்திப்போம் என்றேன். அருகே அழைத்து கைகளைப் பற்றிக்கொண்டு என்னை ஊடுருவிப்பார்த்தார்.  பார்வையின் கூர்மை என்னை பேச்சிழக்கச் செய்தது. அமைதியாய் நின்றிருந்தேன்.

மகன்! நான் களைத்துவிட்டேன். எனது நாட்கள் நீண்டு செல்கின்றன. ஆண்டவனின் இறுதியழைப்புக்காக காத்திருக்கிறேன். உனக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன். அது எனது வாழ்வின் அனுபவத்தின் பிழிவில் இருந்து நான் அறிந்துகொண்டது.

”உயிர்த்திருந்தாலன்றி உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை” என்று கூறி, புரிகிறதா என்றார். அவர் கைகளை அழுத்தியபடியே புரிகிறது சேர், மிக நன்றாகப் புரிகிறது என்றேன்.
Good bye, my son  கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றார்  ஆங்கிலத்தில்.  அவரின் கணீர் என்ற குரல் நெஞ்சை ஊடுருவிப்பாய்ந்தது, என்றும் போல்.


7 comments:

 1. PriNce G. Casinader

  ReplyDelete
 2. உண்மைதான் பல தலமை ஆசிரியர்கள் தான் அடுத்த தலைமுறையை சீர்திருத்தும் சிற்பிகள் அதை அவர்கள் உணர்வதில் இருக்கு அவர்களின் வாழ்வின் ஒளி!

  ReplyDelete
 3. மத்திய கல்லூரியின் மாணவன் என்பதால் ஆர்வமாய் படித்தேன்...அழகாய் எழுதி இருக்கீங்க ஆனாலும் எனக்கு அவர்களை தெரியாது நான் படிக்கும்போது அருளானந்தம் சார்தான் அதிபரா இருந்தார்....என்னையும் ஏதோ கிறுக்க கற்றுக்கொடுத்த கண்ணாம்மா ( திருமதி தம்பையா ) ஆசிரியைக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ...வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி

  ReplyDelete
 4. இந்தப் பதிவு என்னை, நான் அதிகம் நினைக்க விரும்பாத பழைய பள்ளிக் காலங்களுக்கு அழைத்துச் சென்றது. என் போன்றவர்களை செதுக்கத் தெரியாத உபாத்தியாயர்கள் நிறைந்திருந்த இடமாகவே நினைவில் நின்ற போதும், அதிபர் காசினாதர் அக்காலத்தில் ஒழுக்கத்தை நிலை நிறுத்தினார். அவருக்கும் எனக்கு கற்பித்தல் செய்த ஒன்றிரண்டு ஆசிரியர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 5. Sanjayan, Another master piece. I loved reading every word of it. I love to see "Prince Sir", the voice and power of powerless in my next visit to SL. I owe a lot to him. I was not his student, but I have learned lot from him more than his students.
  Dr Seyed Alavi Sheriffdeen
  Australia

  ReplyDelete
 6. can you upload some pictures please?

  ReplyDelete
 7. ஒரு ஆசிரியரின் அந்திமக்காலத்தை உயிர்பித்துக்கொண்டிருக்கும் நல்ல மாணவனாக நல்ல இதயமாக தங்களை கண்டு கொள்கிறேன் . அத்துடன் பேராசானிடம் இருந்து கற்ற பெருமைகளையும் உளிக்கு கல்லாகிய நினைவுகளையும் சுவாரஸ்யத்துடன் கூடிய தங்கள் அனுபவம் உண்மையிலேயே பெருமைக்குரியது .. வாழ்த்துக்கள் .

  ReplyDelete

பின்னூட்டங்கள்