வலியின் வலிகளும், சுகங்களும்

”வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய்”. சற்று முன் இணைய வானொலியில் இவ் வார்த்தைகளைக் கேடடேன். எத்தனை உண்மையான வார்த்தைகள். அதைக் கேட்ட நேரம் முதல் மனதுக்குள் இதே வார்த்தைகள் ஆடிக்கொண்டேயிருக்கும் சுவர்க்கடிகாரத்தின் ஊசல் போல் மனதினுள் ஆடிக்கொண்டே இருக்கின்றன.

ஒரு தாய் பிரசவ வலியினூடாகவே முழுமையாக வாழ்கிறாள். தந்தைக்கு இவ்வாறான இயற்கையான வலிகள் இல்லை எனினும் அவனும் வலிகளினூடாகவே தந்தை என்னும் நிலையை உணர்கிறான் என்பது உண்மைதானே.  அவன் குழந்தை விழும் போது , அழும் போது, வாழ்வில் துயருரும்போது தந்தைக்கு வலிக்கிறது. எனவே தந்தையும் வலியினூடாகவே வாழ்கிறான்.

அபியும் நானும் என்னும் திரைப்படத்தின் ஒரு பாடலில் ஒரு வரி இப்படி எழுதப்பட்டிருக்கிறது ”தந்தைக்கும் தாயமுதம் சுரந்தம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே” எத்தனை அற்புதமான வரிகள்.  நானும் இந்த வரிகளின் உண்மையை அணுவணுவாக அனுபத்திருந்திருக்கிறேன்.  அந் நாட்களை மீண்டு கொள்ளும் போது  என் குழந்தைகள் ஏதோவொரு வலியை உணரும் போது நானும் அவ் வலியினை சேர்ந்தே உணர்ந்து, வாழ்ந்திருந்ததே நினைவில் சுவையாய் நிற்கிறது. இங்கும் வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய் என்பது நிறுவப்படுகிறது, வாழ்வியலில்.

நட்பு எப்போது இனிக்கிறது? வலியினை பகிரும் போது தானே. மகிழ்ச்சியினை பகிரும் கணங்கள் எனோ மகிழ்ச்சி என்னும் காற்றில் கரைந்து போவதாயே உணருகிறேன். ஆனால் வலியினை பகிரும் கணங்கள் நட்பின் ஈரலிப்பை அப்படியே உணர்த்தி நிற்கும்.

காதலும் வலிக்கும் போது தானே இனிக்கிறது. பதின்மக்காலங்களில்  ஏக்கங்களுடன் அலைந்த காலங்களே நினைவில் அதிக பாரத்துடன் பதிந்து போயிருக்கிறது. நிறைவேறாக் காதலின் நினைவுகளுடன் வாழ்பவர்கள் அதன் வலியை சுகிப்பதாகவே அறிகிறேன். சுயபரிதாபத்தின் சுகங்களுக்குள் இது அடங்கக் கூடும். 

எந்தவொரு வெற்றியை அடைவதற்கும் ‌ வலிகளைத் தாங்கித் தானே ஆக வேண்டும். உதாரணமாக ஓட்டப் போட்டியில் தசைகள் வலிக்க வலிக்க ஓடிய பின்பே வெற்றியினை சுவைக்க முடிகிறது.  இங்கும் வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய் என்பது உண்மையாகிறது.

ஏதோ திசையறியா காட்டில் அலைந்தருந்த நேரத்தில் இவ் வாசகங்கள் ஏனோ வாழ்க்கையின் நியதியினை போதித்துப் போயிருக்கிறது, எனக்கு. தவிர நான் பயணிக்கும் திசை சரியானது என்றும் உணர்த்திப் போயிருக்கிறது.

வாழும் வார்த்தைகள் இவை என்றால் அது மிகையில்லை.


இன்றைய நாளும் நல்லதே!


.

1 comment:

  1. அருமையான பதிவு இது..!

    ReplyDelete

பின்னூட்டங்கள்