காலத்தைக் காயும் மனசு

இன்று (29.06.2014) எங்கள் பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆண்டு சேவை நிறைவுநாள். மட்டக்களப்பில் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு நின்றிருந்து தோழமைகளின் தோளில் கைபோட்டு, பால்யத்து நினைவுகளில் நனைந்தெழும்பவும், என் ஆசிரியர்களை சந்தித்து பேசி மகிழவும் நினைத்திருந்தேன். நினைப்பது எல்லாம் நடப்பதில்லை என்ப‌தை வாழ்க்கை மீண்டும் நிறுவிப்போயிருக்கிறது.

இன்று காலை முகப்புத்தகத்தினுள் நுழைந்தபோது விறைத்து நிற்கும் சாரணீயர்கள், பெரும் புன்னகையுடன் பாடசாலைச் சீருடையுடன் வீதியெங்கும் வரிசையாய் நிற்கும் மாணவர்கள், பாடசாலையின் முன்னாலிருக்கும் அழகிய பந்தல், விழா மண்டபத்தின் அழகு, விழா நடைபெறும்போதான படங்கள், மகிழ்ச்சியாய் கைகோர்த்திருக்கும் பழைய மாணவர்கள், எனது பேராசான் பிரின்ஸ் Sir பாடசாலையின் விழாவில் உரையாற்றும் புகைப்படம் என்று பல பல புகைப்படங்களைப் பார்க்கக் கிடைத்தது. அந்நிமிடத்தில் இருந்து  வாழ்நாளில் இனி‌யொருபோதும் கிடைக்கமாட்டாத ஒரு அற்புதமான நாளை இழந்திருக்கிறேன் என்னும் எண்ணம் என்னை பற்றிக்கொண்டிருக்கிறது. மனம் நீர் நிரம்பிய மண்ணைப்போல் கனத்திருக்கிறது. என் நினைவுகள் அனைத்தும் வெய்யில் நிறைந்த மட்டக்களப்பின், வெபர் விளையாட்டரங்கிற்கு முன்னாலிருக்கும் சீனிப் பனையின் அருகில் உள்ள Cartman மண்டபத்தையும், அதைச் சூளவுள்ள உயிரோட்டமான கட்டடங்களிலும் நின்றலைகிறது.

ஆண்டு 1976, மாதம் தை. இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் இருந்து மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டு, நான் ஆறாம் வகுப்பிலும், தம்பி 2ம் வகுப்பிலும் சேர்க்கப்படுறோம். அதே நாள் பாடசாலையின் விடுதியிலும் சேர்க்கப்படுகிறேன். அம்மா மட்டுமே எங்களை பிபிலையில் இருந்து அழைத்து வந்திருந்தார். ஒரு நாள் எங்களுடன் விடுதியில் தங்கியுமிருந்தார். அந்த நாளின் எனது மனநிலையை இன்றும் உணரக்கூடியதாய் இருக்கிறது. புதிய மனிதர்களைக் கண்ட பயமும் வெருட்சியும் கலந்த உணர்வு. புதிய பாடசாலை என்றும் பயமும் சற்று மகிழ்ச்சியும் கலந்த மனநிலை, புதிய சூட்கேஸ் (புத்தகப்பை) எதனையும் ஆச்சர்யமாய் பார்த்த மனம், நாட்டு ஓட்டினால் வேயப்பட்டிருந்த ஒற்றைமாடிக் கட்டடம், வெள்ளையுடுப்புடன் நின்றிருந்த மாணவர்கள், அவர்களை தன் கண்ணிணால் மட்டும் ஒரு மந்திரவாதியைப்போல் கட்டடிப்போட்ட ஒரு வெள்ளைக்காரனைப்போன்ற ஒரு மனிதர் என்று அன்றைய நாள் அப்படியே மனதுக்குள் படிந்துபோயிருக்கிறது.

அன்றைய நாளில் இருந்து இன்றுவரை எனது நிழலைப்போன்று என் வாழ்க்கை முழுவதும் என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது எனதருமைக் கல்லூரி. இந்த நிழல் நான் வாழும்வரை என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதை நான் உணர்ந்தகொண்டிருக்கிறன். தகிக்கும் வெம்மையின் நடுவே நிழலில் அடைக்கலமாவது எத்தகையதோ, அத்தகையது வாழ்வின் வெம்மையில் என் கல்லூரியின் நினைவுகள்.

1960 - 1970வதுகளின் மத்தியில் கிறீஸ்தவ பாடசாலையாக இருந்தாலும் ஏனைய மதங்களுக்கு சம உரிமை அல்லது அதிக உரிமையளித்து மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்திய பெருமை எனது கல்லூரிக்கும், பிரின்ஸ் Sir க்குமே உரித்தானது. எமது சமூகக் கட்டமைப்பில் இதை செயற்படுத்துவது என்பது இலகுவானதல்ல. இருப்பினும் செயற்படுத்தி காட்டிய பெருமையும் எனது கல்லூரிக்குண்டு. எனது புனிதப் பூமியில், நான்கு மதங்களுக்கும் தனித்தனியே வழிபாடுசெய்வற்கு ஒழுங்குகளும், இஸ்லாமிய மாணவர்கள் 5 முறை தொழுவதற்கு மசூதிக்கு சென்றுவரவும் அனுமதியிருந்தது.

இன்றும் மூதூர், வாகரை பகுதியில் இருந்து அம்பாரை வரையிலான தென்கிழக்குப் பகுதிவரை எமது கல்லூரிக்கு இருக்கும் பெரும் மரியாதையே மேற்கூறியதற்குச் சாட்சி. தென்கிழக்கு மாகாணத்தில் பெருங் கல்லூரிகள் அற்ற அக்காலத்தில் விழுதுவிட்ட பெரு விருட்சம்போல் இன மத பேதமின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்டது எனது கல்லூரியும் அதன் விடுதியும்.

எந்த ஆசிரியரைக் குறிப்பிடுவேன்? அத்தனை அத்தனை அற்புதமான ஆசிரியர்கள். 33 - 35 வருடங்கள் தொடர்ந்து ஒரே கல்லூரியில் கற்பித்த என் தமிழாசான் சர்மா ‌Sir, பாடசாலையே வாழ்வு என்று வாழ்ந்த புண்ணியமூர்த்தி ஆசிரியர், கிருஸ்ணபிள்ளை, ருத்திரமூர்த்தி, இந்திரானி ஆசிரிகைகள், சங்கீத ஆசிரியர் மகாலிங்கம், பாடசாலக்கு மிக அருகிலேயே குடியிருந்த (இன்றும்  அங்கேயே குடியிருக்கும்) சிங்கள  ஆசிரியை, உப அதிபர்கள் ஆனல்ட் Sir, அருளன்னராஜா, அருளானந்தம் ஆகியோர், விளையாட்டு ஆசிரியர்களாய் பாடசாலையை தேசிய ரீதியில் நிமிரவைத்த சௌந்தராஜன், கமல்ராஜ் ஆசியர்கள், ஆங்கில ஆசிரியை பாலசிங்கம், தமிழாசான் விஜரட்ணம், விவசாய ஆசிரியர்கள் தேவராஜன், குணரட்ணம் ஆகியோர், விடுதி பெறுப்பாளர் சுந்தரலிங்கம் அண்ணண், கிளாக்கர் செல்வராஜா அண்ணண், ஆசிரியராயும், விடுதிப்பொறுப்பாளராயும், எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்து இன்று இல்லை என்றாகிவிட்ட காத்தான்குடி கபூர் மாஸ்டர், பாடசாலையின் மௌலவி, பாடசாலை தொட்டுவிடக்கூடிய தூரத்தில் வாழ்ந்திருந்த பீடில்ஸ் டீச்சர் இப்படி நினைவுக்குள் முத்துக்குளிக்கும் போது பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பெயர் எழுதாவிட்டாலும் அல்லது மறந்துவிட்‌டிருந்தாலும் எங்களை செதுக்கிய எத்தனையோ பெருந்தகைகள் பாதம்பட்ட புனிதப்‌பூமி அது.

சாரணீயம், சிரமதானம், வழிகாட்டிகள் சங்கம் (pathfinders), Rotaract, Leo கழகங்கள், கையெழுத்துப்பத்திரிகைகள், தாளலய நாடகம், நாடகங்கள், வாசிகசாலை, பன்றிப் பண்ணை, கால்பந்து, கிறிக்கட், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், இல்ல விளையாட்டுப்போட்டிகள், சுற்றுலாக்கள், அணிவகுப்புக்கள், பாடசாலை பரிசளிப்பு விழாக்கள், மதம்சார்ந்த விழாக்கள் என்று எத்தனை எத்தனை நினைவுகளையும், வாழ்வுக்கு அவசியமான நெறிகளையும், விழுமியங்களையும் கற்றுத்தந்த இடம் எனது பாடசாலை.

திங்கள்தோறும் நடைபெறும் அசெம்பிளி கூட்டங்களில் கூறப்பட்ட அறநெறி மற்றும் விழுமியம் சார்ந்த கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. ”கப்பல் மூழ்கும் வேளையிலும் தலைமைமாலுமியின் கட்டளைக்காக காத்திருந்த மாலுமியின் விசுவாசம்பற்றிய” கதை, ஒற்றுமையை விளக்குவதற்கு கூறப்பட்ட ”ஒற்றைக் கம்பின் பலவீனமும், பலகம்புகளின் பலமும் கதை, பகலில் லாம்புடன் மனிதர்களைத்தேடிய ஞானியின் கதை,  ஆப்ரஹாம் லிங்கனின் கதை, எடிசனின் கதை, சீசரை கத்தியால் குத்திய புரூட்டஸ் கதை, சாமாரியன் கதை என்று 8 வருடங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கேட்ட கதைகள் ஏராளம். அவற்றில் இருந்து கற்றுக்கொண்ட அறநெறிகள், வாழ்வியற் கருத்துக்கள் என்று எத்தனை எத்தனை நினைவுகளை பாடசாலை எனக்குத் தந்திருக்கிறது.

விடுதியில் வாழ்ந்திருந்த காலங்களில் வீட்டில் இருந்து எனக்கு சிறிய சுருள் ஒன்றில் சீனி கொண்டுவந்துதரும் தோழமை,  பசித்திருக்கும்போது பள்ளிவாசலில் இருந்து கொணர்ந்து தரப்படும் இஸ்லாமிய நண்பனின் கஞ்சி, பொழுதுவிடியுமுன்னான காலைப்பொழுதில் கிறீஸ்தவ, இந்து மாணவர்களுக்கிடையில் நடக்கும்  பூப்பறித்து மாலைகட்டும்போட்டி, விடுதியில் முழுநிலவின்று இரவுப்பொழுதில் நடக்கும் விளையாட்டுக்கள், முட்டைப்பூச்சிகளுடனான யுத்தம், இரண்டு இறைச்சித்துண்டுகளுடன் உணவுண்ட இனிமையான காலங்கள், மூன்றிலெரு துண்டுப் பாண்,  சிற்றூண்டிச்சாலையில் வைத்த கடன், சிற்றூண்டிச் சாலையை நடாத்திய மனிதர், வெற்றீயீட்டிய கால்ப்பந்துபோட்டிகளின் பின்னான Cap collection நிகழ்வு, விளையாட்டு ஆசிரியரையும், அதிபரையும் தோளில் தூக்கி நகரமெங்கும் சுற்றியது இப்படி எத்தனையோ  நிகழ்வுகள் பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் அறையப்பட்டிருக்கிறது. மூச்சு நின்றுபோகும்போது மட்டுமே மறையக்கூடிய நிகழ்வுகள் அவை.

விடுதியில் சித்திரக்கதைப்புத்தகங்களுக்கு பலத்த கிராக்கி இருந்தது. இதை அவதானித்த ராஜேந்திரன் (ஞானம்) அதையே வியாபார உத்தியாக்கி, சித்திரக் கதைப்புத்தகங்களை வாடகைக்குவிட்டான். சில நாட்களின் பின் பலரும் அதே தொழிலை ஆரம்பித்ததனால் அனைவரின் வியாபாரமும் படுத்துப்போனது. பாடசாலையில் நடக்கும் பிஸ்கட் சீட்டு, இடைவேளை நேரங்களில் விற்பனையாகும் பாலைப்பழம், கஜூப்பழம், மிளகாய், உப்பு தூவிய மாங்காய், இரால்வடை, ஜஸ்பழம் இவையெல்லாம் பால்யத்தின் பசுமையான நினைவுகள்.

விடுதியில் வாழ்ந்திருந்தபோது சிறுநீர் கழிக்க நடுச்சாமத்தில் எழுப்பும் பேய்க்கு பயந்த தோழன். அவன் சிறுநீர் கழிக்கும்பொது அம்போ என்று விட்டு விட்டு ஓடும் நாம். நனைந்த சாரத்துடன் பயத்தில் கத்தியபடியே ஓடிவரும் அவன். சனி மதியம் தண்ணீர்த் தொட்டியருகே உடுப்புத்தோய்த்து குளிக்கும் திருவிழா, வைகாசி வெய்யிலுக்கு வரண்டுபோகும் கிணறு, மாநகரசபையின் வாசல் உள்ள தண்ணீர் பைப். Life boy  தேய்த்து நுரை தள்ளி குளிக்கும் நாம், அவ்வப்போது பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்கள், ஞாயிறு மாலை விடுதிக்கு வரும் தும்புமிட்டாய் விற்பனையாளன், விடுதிக்கு அருகிலிருக்கும் வீட்டில் இருந்து களவெடுத்த கோழி, அன்றைய கோழிக்கறி, விடுதியைவிட்டு ஓடுபவர்களை பிடித்துவரும்போது இருக்கும் பெருமிதம் இப்படி ஆயிரம் இருக்கிறது பட்டியலிட.

எனது பால்யத்தை நான் நன்கு அறிவேன். பதுளையில் இருந்த காலத்தில் நான் தேவைக்கு அதிகமாகவே பிஞ்சிலே பழுத்திருந்தேன். பீடி பிடிக்கும் பழக்கம் இருந்தது, காவாலித்தனமான பேச்சு, பாடசாலைக்கு கட் அடிப்பது, சிறு சண்டித்தனம், எதிலும் கவனமற்ற தன்மை, கடைசி வாங்கில் முதல் மாணவன் என்ற பல பெருமைகளுடனேயே இப்பாடசாலைக்கு வந்துசேர்ந்தேன்.

 பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாளே எனது ஆங்கில புலமையை பரிசோதித்தார் எனது அதிபர் Prince Sir. அவர் வாயில் தமிழ் பெரும்பாடுபட்டது, படுகிறது இப்போதும். ஆங்கிலமே அவர். எனது தாயார் வைத்தியர் என்பதால் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று அவர் நினைத்தது மகா தவறு என்பதை அவர் அன்று உணர்ந்திருக்கவேண்டும். அவர் எதைக்கேட்டாலும் நான் yes அல்லது no  என்னும் இரண்டு சொற்களைவைத்து சாமாளித்துக்கொண்டேன். அதன் பின் அவர் பல ஆண்டுகள் என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவே இல்லை.

இருப்பினும் என்னைக் கண்ட முதலாவது நாளேஅவர் என்னை மிக நன்றாக எடைபோட்டிருக்கவேண்டும் என்றே இப்போது எண்ணத்தோன்றுகிறது. கொல்லன் பட்டறையில் இரும்பை சூடாக்கி, சுற்றியலால் அடித்து, நெளித்து, சீர்செய்து, மீண்டும் குளிர்நீரில் இட்டு, அதன்பின் மீண்டும் சுடுகாட்டி வாட்டி எடுத்து நிமிர்த்துவதுபோல் என்னை ஒரளவு நிமிர்த்தியெடுக்க அவர்க்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டன. அந்தக்காலத்தில் திருடன், கையெழுத்து மாத்துபவன், கடைசிவாங்குத் தளபதி, சிங்கள ஆசிரியைக்கு ” நான் முட்டாள்” என்று ஏப்ரல் முதலாம் திகதி ஒட்டியவன் என்று பெரும் பெருமைகளுடன் அவரின் கந்தோருக்கு அடிக்கடி சென்று ”முகம்வீங்கி” அங்கிருந்து வந்திருக்கிறேன்.

கள்ளனை போலீசாக்கினால் திருட்டு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ என்னை மாணவர் தலைவன், தலைமை மாணவர் தலைவன், விடுதியின் தலைமை மாணவ தலைவன் என்று பதவிகளைத் தந்து பண்படுத்தினார். பாடசாலையின் முதலாவது Rotaract  கழகத்தின் தலைவராகவும் வலம் வந்திருக்கிறேன்.

இந்தப் பதவிகளின் மோகம் என் கண்களை மறைத்தபோது ஒரு நாள் ஒரு சிறிய மாணவனிடம் ”உனது அக்கா வடிவானவள்(அழகானவள்), கடிதம் தருகிறேன் கொண்டுபோய் கொடு” என்றேன். அது அவரின் காதுக்கு போனபோது என்னை அழைத்து கன்னத்தில் அறைந்து ” பாடசாலையால் கலைத்துவிடுவேன்”  என்று கூறியனுப்பினார்.

இதேபோல் கணிதப்பாடத்து புள்ளிகள் 17 என்றிருந்ததை 77 என்று மாற்றியதை அனைத்து பாடங்களின் கூட்டுத்தொகையையும் கூட்டிப்பார்த்து கண்டுபிடித்தார். அன்றுதான் குற்றவாளியை தண்டிக்காது அவனின் மனச்சாட்சியுடன் பேசவைத்தால் அவன் திருந்துவான் என்னும் இரகசியத்தையும் எனக்கு கற்பித்தார். அன்று அவர் அடிக்காமல் ஒரு மணிநேரம் பேசினார். நான் தலைகுனிந்தபடியே அழுதுகொண்டிருந்தேன்.

 பிற்காலத்தில் இராணுவம் என்னை தேடியகாலங்கலில் நான் பாடசாலையில் நின்றிருந்தேன் என்று பொய்கூறி என்னைக் காப்பாற்றிய ஒரு சம்பவமும் உண்டு.

ஒரு பாடசாலையானது ஒரு மாணவனை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கையே அதற்கு உதாரணம். பாடசாலைகளே மாணவர்களின் அறநெறிகள், விழுமியங்களுக்கான அளகோல் என்பது எனது கருத்து.

எனது பால்யத்தை நான் நன்கு அறிவேன். இவன் உருப்படுவானா என்று ஊருக்குள் பலருக்கும் சந்தேகமிருந்தது, பெற்றோர் உட்பட. இருப்பினும் எனக்கு அதிஸ்டம் என் பாடசாலையினூடும், எனக்குக்கிடைத்த ஆசிரியர்களூடாகவும் வந்தது.

இன்று எனக்குள் இருக்கும் அறநெறிசார் விழுமியங்களின் அத்திவாரம் எனது பாடசாலையே இட்டதே. ”நீ ஒரு சமூகப் பிராணி, எனவே என்றும் சமூகத்திற்கு பிரதியுகாரமாய் இரு” என்னும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே எங்கள் பாடசாலையின் வழிகாட்டிகள் சங்கம் (Pathfinders), சாரணியம், சிரமதான‌ம், Rotaract, Leo கழகங்கள் என்பன இயங்கின.


வாழ்க்கையின் அயர்ச்சியில் மயங்கிப்போயிருந்தாலும், 49 வயதிலும், பாடசாலையுடனான மிக நெருக்கமான, ஆத்மார்த்தமான தொடர்பு பேணப்பட்டுக்கொண்டே வருகிறது. ஊருக்குச் செல்லும் காலமெல்லாம் எங்கு செல்ல மறந்தாலும் பாடச‌ாலைக்கும், அதிபரின் வீட்டுக்கும் செல்வதை மட்டும் மறந்ததில்லை. காலமானது ஆசான் (அதிபர்) மாணவன் என்னும் உறவை மெதுவாக மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது, ஆசானிடத்தில் முன்பிருந்த பயம் கலைந்து, பக்தியும் ஆத்மார்த்தமான நட்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும், ஆசான் மாணவன் என்னும் உறவைக்கடந்துவர முடிந்திருக்கிறது. அதன் காரணமாக பாடசாலை, சமூகம், காலக்காற்றாடி சுளற்றிவிட்ட நாட்களின் நினைவுகள், தனது கனவுகள், நி‌ராசைகள், ஆதங்கங்கள், சரி பிழைகள், கடந்துவிட்ட வாழ்க்கை, நோய்மை, தனிமை என்று ஒரு நண்பனைப்போன்று என்னுடன் உரையாட முடிகிறது,  எனக்கும் தயக்கங்கள் இன்றி எதையும் பேசிப் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.

இன்று மதியம், நண்பரொருவருக்கு தொலைபேசினேன். நிகழ்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்ததாயும், அனைவருக்கும் மகிழ்ச்சி என்றும் அறியக்கிடைத்தது. என் மனதுக்குள் ஏதோவொன்று அடைத்த, இழக்கக்கூடாத‌ ஒரு நாளை இழந்துவிட்டதுபோன்று உணர்ந்தேன். நண்பர் தொடர்ந்தார் ” சஞ்சயன் வருவானா” என்று எனது அதிபரான Prince Sir நேற்று விசாரித்தாக அவர் சொன்னபோது என் கண்கள் கலங்கி, தொண்டை அடைத்து குரல் தளும்பினாலும், மனது, காற்றில் சருகாய்மாறி பறந்துகொண்டிருந்தது.
மாதா பிதா குரு தெய்வம்  என்பவற்றில் நான்காவதில் நம்பிக்கை இல்லை எனக்கு. ஆனால் மூன்றாவதில் அதீத நம்பிக்கை இருக்கிறது.

வாழ்க்கை அற்புதமானது.

2 comments:

  1. நண்பர் Lingathasan Ramalingam Sornalingamஅவர்களின் உதவியினால் //சீசரை கத்தியால் குத்திய யூடாசின் கதை// என்று எழுதியிருந்ததை 'புரூட்டஸ்' மாற்றியிருக்கிறேன். நன்றி

    ReplyDelete
  2. பிற்காலத்தில் ஒரு மாபெரும் மேதையாக வரபோகும் ஒரு மாணவனையும் அன்றுதான் களுதாவளை கிராமத்திலிருந்து அதே ஆறாம் வகுப்பிலும் விடுதியிலும் சேர்த்திருந்தார்கள்.என்கிற வரலாற்று முக்கியத்துவமான பதிவை தவறவிட்டுவிட்டாயா நண்பா.

    ReplyDelete

பின்னூட்டங்கள்