என்னைத் தேடி ... ஒரு யாத்திரை

15.06.2012 எனது வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று காலை தூக்கத்தில் இருந்து விளித்துக்கொண்‌டபோதே உடலஙெ்கும் ஒருவித உற்சாகமும் விறுவிறுப்பும் படர்ந்திருந்தது.

நேற்றைய இரவு, எனது பாதயாத்திரையின் கடைசி இரவு, நேற்றைய நாள் மிக நீண்டதாக இருந்தது. ஏறத்தாள 42 கி.மீ தூரம் நடந்திருந்தேன். என்றுமில்லாதவாறு உட்சாகமாயும் இருந்தேன். கடந்த சில நாட்களாக என்னுடன் இணைந்து நடந்துகொண்டிருக்கும் Frank என்னும் நெதர்லாந்து நண்பரும் ”உன்னால் தான், 42 கிமீ நடந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டேயிருந்தார். கேட்பதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

நேற்றிரவு, இருவரும் மிகச் சிறப்பான ”ஸ்டேக்” என்னும்  உணவினை உண்டோம். சற்று வைன் எடுத்துக்கொண்டோம். எங்களுக்குள் பெருமை ஊறி ஊறி வழிந்து கொண்‌டிருந்தது.  இருவரும் கடந்து வந்த நாட்களை நினைவுறுத்தினோம். ஒன்று இரண்டல்ல, 750 கி.மீற்றர்களை கடந்திருக்கிறோம். உடல்வலிகள், களைப்புக்கள், அலுப்புக்கள் என்று 23 நாட்களும் ,அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன். ஸ்பெயின் நாட்டின் Pampalona என்னும் நகரத்தில் இருந்து Santiago De Compostela என்னும் இடத்திற்கு  நடந்து வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 18 கி.மீ கடந்தால் நடைப்பயணம் முடிவுறுகிறது.

நாளை காலை 6 மணிக்கு ஒருவரை ஒருவர் எழுப்பவேண்டும், என்று பேசிக்கொண்டோம். ப்ராங்க் தன் காதலியிடம் ” ஒரு இலங்கைத் தமிழ் ”விசரன் (Mad man)” என்னை என்று 42 கி.மீ நடக்கவைத்தான் என்று என்னைப் பார்த்து கண்ணடித்தபடியே தொலைபேசியில் கூறிக்கொண்டிருந்தார். அவருக்கு இரவு வணக்கம் கூறி எனது அறையினுள் புகுந்துகொண்டேன்.

உடம்பில் ஊறியிருந்த அற்ரினலீன் குறைந்ததாயில்லை. மீதமிருந்த 18 கீ.மீற்றரையும் கடந்திருக்கலாமோ என்று எண்ணினேன். தூக்கம் தொலைந்திருக்க ”ஏன் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினேன் என்று சிந்தனையோடியது.

கடந்து போன சில ஆண்டுகளாக சில பிறழ்வுகளை அனுசரித்து வாழவேண்டியதாயிருக்கிறது. எனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்காக சில வழமைக்கு மாறான முடிவுகளை எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. இனியும் அப்படியேயே இருக்கும் என்பதையும், நான் நன்கு உணர்ந்துமிருக்கிறேன். கடந்த காலத்தை கடந்து கொள்வது இலகுவாயில்லை, நிகழ்காலமும் அப்படியே.

மன அழுத்தங்களுடன், இடிந்துபோன கற்பனைகளுடன் தனியே, தனிமையுடன் வாழ்வது என்பது இலகுவல்ல. எல்லாவற்றையும் புதிதாய் நிறுவிக்கொள்ளும் அவசியமுமிருக்கிறது. மிக முக்கியமாய் என்னுடன் நான் சமரசப்பட வேண்டியிருந்தது, இருக்கிறது. மன அழுத்தங்களில் இருந்து வெளிப்படவேண்டியிருந்தது.

வாழ்க்கை என்பது இலகுவல்ல.அது பெரும் புரியாத புதிர். எந்நேரமும் எதுவும் நடக்கலாம். வாழ்க்கை என்னை பல விதங்களிலும் ஆழ இழுத்து, புறட்டியெடுத்து, ஒரு கரையில் தனிமையில் தூக்கியெறிந்திருக்கிறது. விளித்தெழுந்த கணங்களில் தனிமை என்னும் குளிரில்  தனியே, தன்னந் தனியே நடுங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். நான் தனிமைமையை உணரும் தருணங்கங்கள், மிகவும் வலிமிகுந்தவை மட்டுமல்ல, என்னை மிகவும் பலவீனமாய் உணரும் தருணங்களும் அவையே. சுய பரிதாபம் என்னை வெற்றிகொள்ளும் தருணங்கள் எல்லாம் நான் தனிமையை உணர்ந்தவையகவே இருந்திருக்கின்றன.

சில பிறள்வுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் பூசலி்ன்றி வழவேண்டியிருக்கிறது. அதன் பிரதிபலனே இந்த தனிமை. எனவே இந்தத் தனிமை என்பது நான் வரவழைத்துக் கொண்டது. எனவே அதனுடன் சமரசமாகவேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது. சமரசம் என்று பேசுவது இலகு.சமரசம் பற்றி ஏனையவர்களுக்கு அறிவுரை வழங்குவதும் இலகு. ஆனால் அதுவே எனது வாழ்வில் என்றாகும் போது பெருத்த சிரமமாயிருக்கிறது.

எனது தவறுகளை உணர்ந்துமிருக்கிறேன். அதேவேளை உறவுகளுக்கும், கலாச்சாராத் தழைகளுக்கும் கட்டுப்பட்டு என் மனதுக்கு ஒவ்வாததோர் வாழ்க்கையை வாழவும் நான் விரும்பவில்லை. அப்படியானதேர் வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதாகவும்  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.

இளமை கழிந்து, வயோதிபத்தை எதிர்நோக்கி இருக்கும் காலம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. எனது முடிவுகள் எனது வாழ்க்கையின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படியான சிந்தனையோடிய நாட்களில் தான் இந்தப் பாதயாத்திரையின் எண்ணம் தோன்றிற்று. 
ஆம், என்னுடன் நான் சமரசமாவதற்காகவே இந்த நடைப்பயணத்தை ஆரம்பித்தேன்.
இந்த பாதயாத்திரையின் போது பல பல மணிநேரங்கள்  தன்னந்தனியே என்னுடன் உரையாடிபடியே நடந்திருக்கிறேன். இரவுகளில் வானத்தைப் பார்த்தபடியே படுத்துக்கிடந்திருக்கிறேன். பல நேரங்களில் மனதின் ஆற்றாமை கண்களினூடாக வழிந்தோடியிருக்கிறது. என்னை நானே வெற்றி கொள்வதற்காய் எனது சக்தியெல்லாம் திரட்டி  13 -14 மணிநேரங்கள் தொடர்ந்து நடந்திருக்கிறேன். அந்நேரங்களில் கிடைத்த ஓர்ம உணர்வானது மனதிற்கு பெருத்த ஆறுதலைத் தந்தது. அந்த உணர்விற்காகவே அந்த வலியை விரும்பினேன்.

நாளையுடன் நடைப்பயணம் முடிவடைகிறது. ஆனால் என் மனது ஆறியிருக்கிறதா, என்னுடன் நான் சமரசமாயிருக்கிறேனா, பழிக்குப்பழி உணர்வுகள் அடங்கியிருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ‌அதற்காக இன்னும் பல பல ஆயிரம் கி.மீற்றர்கள் நீ நடக்கவேண்டியிருக்கலாம் என்கிறது மனது.

ஆனால் இழந்துபோயிருந்த சுயமதிப்பும், சுய நம்பிக்கையும் மீண்டிருக்கிறது. என்னாலும் முடியும் என்னும் நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. மன அழுத்தம் குறைந்திருக்கிறதா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

வாழ்க்கையென்பது அத்தனை இலகுவல்ல நண்பர்களே. சாண் ஏற முழம் சறுக்கும் விளையாட்டுத்தான் அது. எமது சமூகத்தில், வாழ்க்கைச் சிக்கல்களை கடந்துகொள்வது என்பதும் இலகுவல்ல. நக்கல், குத்தல் கதைகளும், கற்பனைக்கதைகளும், தாமேதோ பரிசுத்தமானவர்கள் என்பவர்களும் வாழும் சமூகமல்லவா எம்முடைய சமூகம். மெது மெதுவாய் இவற்றையும் கடந்து போகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

15.06.2012 அன்று காலை நண்பர் Frank எழுவதற்கு முன்பாகவே நான் எழுந்து கொண்டேன். Frank இன் கதவைத் தட்டி எழுப்பிய பின், எனது காலில் இருந்த காயங்களுக்கு மருந்திட்டபின்  நடப்பதற்கு ஆயத்தமானோம்.

இருவரும் நடக்கலானோம். 18 கிலோ மீற்றர்கள். ஒரு மணிநேரத்திற்கு 4 கிலோமீற்றர்கள் என்றால் 4,5 மணிநேரத்தில்  யாத்திரை முடிவடையும் என எண்ணியிருந்தோம். எம்மால் அமைதியாக நடக்கமுடியாதிருந்தது:  அவரை நானும், என்னை அவரும் முந்தியபடி நடந்துகொண்டிருந்தோம். உணவிற்கு கூட நடையை நிறுத்தவிரும்பவில்லை நாம். மழையும் குளிரும் எம்மை தொடந்து கொண்டிருந்தது.

Santiago De Compostela  நகரம் கண்ணில் தென்படத் தொடங்கியது. ஓட்டமும் நடையுமாய் நடந்துகொண்டிருந்தோம். நகரம் நெருங்க நெருங்க எமது நடையும் வேக‌மெடுத்தது. உடல்வலிகள் மறைந்துபோயிருக்கு நடையும் ஓட்டமுமாய் முன்னேறிக்கொண்டிருந்தோம்.

நகரத்தின் வீதிகளினூடே நடந்த போது ஏற்பட்ட மனதின் உணர்வுகளை வார்த்தைகளில் கூறுவது இலகுவல்ல. வெற்றிகொள்ளமுடியாத ஒன்றை வெற்றிகொண்ட மனநிலை அது.

எனது குழந்தைகளின் நினைவுகள் மனமெங்கும் நிறைந்திருந்தன. உணர்ச்சிகளின் உச்சத்தில் கண்கள் கலங்கி வழிந்தோடிக்கொண்டிருக்க, முகத்திலடித்த மழையில் அவை கழுவுப்பட்டுப் போயின. குழந்தைகளை அருகில் அமர்த்தி இந்தப் பயணத்தைப் பற்றிச் உரையாடி மகிழவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எமது நடை குறுகிய வீதிகளூடாக Santiago De Compostela  என்னும் பழம்பெரும் தேவாலயத்தை வந்தடைந்தது. பாதயாத்தீகர்களின் சம்பிரதாயப்படி எமது வரவைப் பதிந்து கொண்டபின், எமக்கு எமது யாத்திரையை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இருவரும் சிறந்ததொரு விடுதியில் தங்கிக்கொண்டோம். Frank ப்ராங்க் நாளை அவர் பயணமாவதால் விடைபெற்றுக்கொண்டார்.

இன்றை நாளின் நினைவாக வலது கையில் குழந்தைகளின் பெயர்களான காவியா, அட்சயா என்று பச்சை குத்திக்கொண்டேன். முழங்கையில் இருந்து மணிக்கட்டுவரையில் சுற்றியிருந்த மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரினூடாக ‌இரத்தம் கசிந்துகொண்டிருந்து. அதனூடாக இரத்தமும் கறுப்பு நிறமும் கலந்த எழுத்துக்கள் தெரிந்தன. மனம் காற்றில் சருகாய் இருந்தது.

அன்று மாலை மீண்டும் தேவாலயத்தினுள் சென்றமர்ந்து கொண்டேன். பேரமைதி சூழ்ந்திருந்தது அங்கு. அவ்வமைதி என்னையும் அரவணைத்துக்கொண்டபோது, நானும் என்னை மறந்து உட்கார்ந்திருந்தேன்.

அமைதியின் பரிசுத்தம் என்னை மெது மெதுவாய் ஆட்கொண்டிருந்தது.
நான் இன்னும் என்னுடன் சமரசமாகிக் கொள்ளவில்லை என்றது மனது.

மீண்டுமொருமுறை யாத்திரை செல்லவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

2 comments:

பின்னூட்டங்கள்