யாம் பெற்ற இன்பம்

இந்தப் பத்தி விவாதமேடைக்கானது அல்ல. மாறாக எமது சமூகத்தில் ஒரு உரையாடலை ஏற்படுத்தினால் மகிழ்வேன்.

ஓஸ்லோவில் அன்னைபூபதிபாடசாலை மற்றும் தமிழர்வள ஆலோசனை நிலையம் ஆகிய நிறுவனங்களுக்கும், இந்நிறுவனங்களை விடுதலைப்புலிகளின் காலத்தில் ஆரம்பித்தவர்களுக்கும் இடையில் பெரும் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருப்பதுமட்டுமல்லாது அவை இப்போது பொதுவெளியில் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றன.

இவ்விடயத்தில் அன்னைபூபதி மற்றும் தமிழர்வள ஆலோசனை நிலையங்களில் கல்விகற்ற இளையோரும்  இந்நிறுவனங்கள் தொடர்பாக மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க முற்படுவதையும் அவதானிக்க முடிவதுடன் இவர்களுடைய கருத்துக்களுக்கு இளையோரிடமிருந்து காத்திரமான ஆதரவும் எழுந்துள்ளதை காண முடிகிறது.

எனது பத்தியின் நோக்கம் இவ் உள்ளக முரண்பாடுகளை ஆராய்வது அல்ல. மாறாக இவ்விடயத்திலுள்ள அறம்சார்ந்த தார்மீகம்பற்றிய எனது மனப்போக்கைப் பதிவதே இதன் நோக்கம்.

இதுபற்றிப் பேசுவதெனின் நான் ஏறத்தாழ 1990களின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

இக்காலகட்டத்திலேயே நோர்வேயில் விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் பலமடைந்துகொண்டிருந்தன.

நான் அப்போது நோர்வேயின் வடமேற்குக் கிராமமொன்றில் வாழ்ந்திருந்தேன். அக்கிராமத்திற்கு அருகில் இருந்த வேறு இரண்டுகிராமங்களிலும் பல தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள். அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை எந்தவித சலசலப்பும் இன்றி ஓடிக்கொண்டிருந்தது.

அன்னைபூபதி பாடசாலையின் கிளையொன்றினை அங்கு ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காகவே அப்பாடசாலையை இயக்கிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைக்கொண்டு அச்சிறிய பாடசாலை பிளவுபடுத்தப்பட்டது.

அப்பிளவானது எவ்வளவு பெரிய பிரிவொன்றினை அந்த மூன்று கிராமங்களுக்கும் இடையில் ஏற்படுத்தியது என்பதை அங்குள்ளவர்கள் மட்டுமே அறிவர். இத்தனை ஆண்டுகள் கடந்தபின்பும்;  அப்பிளவின் வீச்சு இப்போதும் அச்சமூகத்தில் தன் தாக்கத்தை நிலைநிறுத்தியபடியே இருக்கிறது.
மேலே குறிப்பிட்டது ஒரு சிறு உதாரணமே. இதேபோன்று புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்தும் பல கதைகளைக் கூறலாம்.

மாற்றுக்கருத்தாளர்கள் எவ்வாறு சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, மலினப்படுத்தப்பட்டு, நகைப்பிற்குட்படுத்தப்பட்டார்கள், நோகடிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் நாம் மணிக்கணக்காய் உரையாடலாம்.

மாற்றுக்கருத்தாளர்களுடன் உரையாடுவதே கடுங்குற்றமாகப் பார்க்கப்பட்டு காலமது. துரோகி, ஒற்றர் என்ற பட்டங்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டதும் அக்காலங்களிற்தான்.

காலம் 2009ஐ கடந்தபோது விடுதலைப்புலிகளுக்குள்ளும் பிளவுகள் ஆரம்பித்தன. ஜனநாயகநீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களில் எத்தனைபேர் தங்களின் கடந்தகாலத்தை, தாம் தமிழ்ச் சமூகங்களிடையே ஏற்படுத்திய பிளவுகளை, அவற்றிற்கான முனைப்புக்களை, மாற்றுக்கருத்தாளிகளை கையாண்ட முறைகள் தொடர்பான சுயவிமர்சனத்தைப் பொதுவெளியில்  முன்வைத்துள்ளார்கள்? இவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.

8 ஆண்டுகள் கடந்துபின்பு இப்போது, ஒருபோதுமில்லாதவாறு விடுதலைப் புலிகள்சார்ந்த அமைப்புக்களின் உள்ளகமுரண்பாடுகள் பொதுவெளியில் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.

நான் கூறிய அந்த சிறுகிராமங்களில் வாழ்ந்த மக்கள் அக்காலங்களில் எவ்வாறு பிளவுபடுத்தப்பட்டார்களோ அதே பாணியில் இப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விரோதிகளாகப்  பார்க்கத்தொடங்கியுள்ளார்கள்.

காலம் தனது வித்தையைக் காண்பிக்கத்தொடங்கியிருக்கிறது. அதிகாரம், அடக்குமுறை, ஏமாற்று போன்றவற்றால் காலமெல்லாம் ஒரு சமூகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாது என்பதற்கு இதுவும் ஓரு சிறிய உதாரணம்.

இன்றுவரையான காலங்களின் நிகழ்வுகளில் இருந்து நாம் எதையாவது கற்றிருக்கொண்டுள்ளோமா? இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.
மற்றையவர்களை நோக்கி நாம் குற்றம் சுமத்தும்போது குறைந்தபட்சம் எமது முதுகுப்பையில் கனம் இல்லாது இருக்கவேண்டும் என்பது  குறைந்தபட்டச நடைமுறை வழக்கு.

தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அதுபற்றிய சிறு அக்கறையையேனும் வெளிப்படுத்தாது, தங்களால் அக்காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன், அவமதிக்கப்பட்டவர்களுடன், பிளவுபடுத்துப்பட்ட சமூகங்கள் தொடர்பாக எதுவுமே நடவாததுபோன்று காலத்தை நகர்த்துவது என்பது சமூக அக்கறையுள்ளவர்களின் செயற்பாடு எனக் கருதமுடியுமா?

மேற்கூறியதன் கருத்து தவறிழைத்தவர்கள் எவரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது என்பதல்ல. ஆனாலும் இழைத்த தவறுகள்தொடர்பான பிரக்ஞையின்றி இருப்பது காத்திரமான சமூகப்போராளிகளுக்குரிய மனப்பாங்கு எனக்கொள்ள முடியுமா?

இக்கருத்தை எந்தவொரு அமைப்பைச் சார்ந்தும் நான் முன்வைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் கூறவிரும்புகிறேன்.

அதேபோன்று இன்று குற்றம்சாட்டப்படும் பகுதியினரும் கடந்தகாலங்களில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளமாகவே இருக்கின்றன. அவர்களும் சமூக அக்கறையை முன்னிறுத்திய செயற்பாடுகளை நோக்கி மாற்றங்களை உள்வாங்கும் தன்மையுடன் நகருதலும் அவசியம் எனக் கருதுகிறேன்.

இன்றைய புலம்பெயர் சமூக அரசியற் களநிலவரத்தில் 2009க்கு முன்னான காலம்போன்று, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை இயக்கலாம் என்ற எண்ணம் இப்போதும் உயிர்ப்பானது எனக் கருதுவதும், அவ்வாறான எண்ணங்கொண்ட செயற்பாடுகளில் அமைப்புக்களை ஈடுபடுத்த முனைவதும், அவற்றைப் பேண முன்வருகின்ற சிந்தனையை வளர்ச்சிப்போக்காக கருதலாமா?

ஆரோக்கியமான, சுதந்திரமான சுய சிந்தனைகளுடன் வளரும் இளையோரிற்கு, ஜனநாயகத்திற்கு மாறான கருத்துக்களை, செயற்பாடுகளைத் திணிப்பது அவர்களிடத்தில் எம்மைப்பற்றிய தவறான விம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டாமா?

சமூக அரசியற் களநிலவரங்களின் வளர்ச்சிப்போக்கிற்கு அமைய சமூகக்கட்டமைப்புக்களும், மக்கள்சார் நிறுவனங்களும் தங்களில் நெகிழவுத்தன்மைகளை ஏற்படுத்தி மாற்றங்களுக்கு தம்மை தகவமைத்துக்கொள்ளாவிடில் அவ்வமைப்புக்கள், மக்கள்சார்ந்த பொதுநிறுவனங்கள் மெதுமெதுவாகத் தங்கள் பலத்தை சமூகத்தில் இழந்துவிடும் என்பதே நடைமுறை யதார்தம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு உதாரணமாக, பெரும் பாரிய பலத்துடன் இயங்கிய பல அமைப்புக்கள் 2009க்குப்பின் பலமிழந்துபோனதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடமுடியும்.

கடும்போக்குவாதிகளுக்கு இவ்வாறான சமூகசெயற்பாட்டு இயங்குநிலைப்போக்கு ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கக்கூடும்.

இருப்பினும் காலமும், சமூகமும் யதார்த்தவாதிகளுக்கு சார்பாகவே எப்போதும் இருந்துவந்துள்ளது என்பதையாவது இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது பேரவா.

------------------
இப்பத்தியின் தலைப்பானது முரண்நகையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டது. யாம் என்பது எமது சமூகத்தைக் குறிக்கிறது

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்