ஆசான்களைக் கொண்டாடுவோம்


நேற்று (10.05.2017) ஆசிரியர் தினம்.

எனது முதல் ஆசான் எனக்கு நடைபழக்கிய எனது தாயாராகத்தான் இருக்கமுடியும். இப்போது அவருக்கு வயது 84. நேற்று அவருடன் தொலைபேசினேன்.

முதுமையின் உலகில் மிதந்துகொண்டும் அலைந்துகொண்டும் இருக்கிறார் அவர். காலத்தோடு அவருக்கிருக்கும் கணக்கு அது.

எனது மகள்களின் பெயர்களையும் காலம் அவரிடம் இருந்து பறித்துக்கொண்டுவிட்டது என்பது வேதனையான உண்மை.

ஆனால் என் பேராசான் அவர் நினைவில் இருந்து இன்னும் மறையவில்லை. அவருடன் பேசும்போது சுகம் விசாரித்ததாகச்சொல் என்றார்.

அது இருக்கட்டும்.

எனது ஆசான்களில் அசைக்க முடியாத தனியிடத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரின் முன்னைநாள் அதிபரான எனது பேராசான் பிரின்ஸ் சேர் (பிரின்ஸ் காசிநாதர்) பெற்றிருக்கிறார்.

அவர் தனது 92வது வயதில், தன்னந்தனியே வாழ்கிறார். மட்டக்களப்பில் அவர் வாழும் வீதியின் பெயர் Love lane.

அவருடன் தொலைபேசினேன். என்னை அவர் இன்றுவரை மறக்கவில்லை என்பதை அவர் பேச்சு எடுத்துக்காட்டியது.

தளர்ந்த சிங்கத்தின் குரலில் பேசினார்.

தொலைபேசியின் ஊடாக அவர் மூச்சு பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

சஞ்சயன், எனக்கு 92 வயதாகிவிட்டது. அண்மையில் தன்னிலை மறந்து வீதியில் அலைந்து திரிந்ததாக என்னை அறிந்தவர்கள் இப்போது கூறக்கேட்கிறேன் என்று அவர் கூறியபோது...

”ஆம், அன்று மாலையே அச்செய்தி எனக்குக் கிடைத்தது. உங்கள் மாணவர்கள் உங்களை தாங்கிக்கொண்டார்கள்“ என்றேன்.

”மிக மோசமான கண்டிப்புடைய ஒரு ஆசிரியனில் இத்தனை கரிசனம் காட்டும் என் மாணவர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போகிறேன்.“ என்றார்.

விரைவில் high jump போட்டியில் வென்றுவிடுவேன் என்று தனது முதுமையின் அந்திமத்தை அவருக்கேயுரிய நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். சிரிக்க முடியாத நகைச்சுவை அது.

உனது தம்பி, தங்கை, தாயார் ஆகியோருக்கு எனது அன்பைத் தெரிவி என்றபோது, நெகிழ்ந்து கரையத்தான் முடிந்தது.

எமது உரையாடல் முடியும்போது, மகன், முற்பிறப்பில் நீ எனது மகனாய் இருந்திருக்கவேண்டும். உனது அன்பிற்கும், என் மீதான உன் கரிசனைக்கும் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கட்டும், என்று கூறியபோது அவர் கரம்பற்றி ஆறுதலாய் இருக்கத்தோன்றியது.

ஆசிரியன் என்பவன் காலம் கடந்தவன். அவனே உலகின் பெரும் படைப்பாளி.

என்னையும் வழிப்படுத்திய இன்றும் வழிப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நீவிர் இன்றி அடியேன் இல்லை.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்