இன்று காலை நிலக்கீழ் தொடரூந்தில் எதையோ சிந்தித்தபடி
பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கருகில் ஒரு குழந்தையின் மழழைச் சத்தம்
கேட்டது.நிமிர்ந்து பார்த்தேன். ஒரு சீனக் கண்களுடன் ஒரு ஆண் குழந்தை தனது
பாட்டியுடன் மழழை மொழியில் ஏதேதோ பேசியபடி வியையாடிக்கொண்டிருந்தது.
ஏறத்தாள ஒரு வயதிருக்கலாம் அவனுக்கு. சொற்கள் அற்ற ஒரு வித மழழைமொழியில்
மழழை ஒலிகளால் பாட்டியுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பாட்டியும் தன்னை
மறந்து குழந்தையாய் மாறி குழந்தையுடன் பேசியபடியே
விளையாடிக்கொண்டிருந்தார். குழந்தை பாட்டியின் இரு காதுகளையும் ஆட்டினான்.
இழுத்தான். பாட்டியின் முகத்தை முத்தத்தால் ஈரமாக்கினான். பாட்டி ஏகாந்தமான
உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தொடரூந்து தனது கடமையில்
கண்ணாயிருந்தது. நான் இவர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.
குழும உணர்வு, இன
உணர்வு, மொழி உணர்வு என்பன யாவும் ஒரு வித சொந்தம் - உறவு என்ற பதத்தையே
குறிக்கின்றன. நான் இக் குழுவை, குழுமத்தை, மொழியை, இனத்தை,
நாட்டைச்சேர்ந்தவன். உறவு முறைகளும் ஒரு வித குழும உணர்வு தானே. எனது
குடும்பம், எனது சந்ததி, உறவுகள் என்று எம்மை நாம் எங்கெல்லாம்
மற்றவர்களுடன் இனைத்துக்கொள்கிறோமோ அங்கெல்லாம் இந்த சொந்தம் (belonging)
உருவாகிறது.
எனக்கும் இப்படியான சில சொந்தங்கள் இருக்கின்றன. அண்மையில் யாத்திரை
சென்றிருந்த போது சில இடங்களில் நான் தனிமையை உணர்ந்த நேரங்களில்
என்னருகில் மேற்குறிப்பிட்ட எந்த சொந்தமும் இருக்கவில்லை. பெரும் வெளியில்
தனியே அலைவது போலிருந்தது மனநிலை. ஒரு வித அநாதரவான உணர்வை உணர்ந்தேன். ஒரு
வித பயம், வெறுமை, பிடிப்பின்மை போன்ற தனிமையுணர்வுகளை
உணரக்கூடியதாகவிருந்தது.
அந் நேரங்களில் ஒரு நோர்வேஜியர் ஒருவரைச் சந்தித்தால் மனம் குழும
உணர்வை உணர்ந்தது. தனிமையுணர்வுகள் அகன்று போயின. சாதாரணமாய் இயங்க
முடிந்தது. நோர்வேஜியர் இல்லாதவிடத்து சுவீடன்நாட்டவர்கள் அல்லது
டென்மார்க் நாட்டவர்கள் எனினும் கூட அவர்களுடன் நோர்வேஜிய மொழியில்
உரையாட முடிவதால் அந்த குழும எண்ணம் உருவாகி மனதை ஆறுதல்படுத்தியது.
கால்பந்து விளையாட்டுக் குழுக்களின் ரசிகர்கள், ஒரே பாடசாலையில்
கல்விகற்றவர்கள், ஓரே ஊரைச் சேர்ந்தவர்கள், இப்படி மனிதர்கள் குழும
உணர்வினை உணர்வதன் மூலமாக தங்களை மற்றவர்களுடன் இணைத்து ஒரு வித குடும்ப
உணர்வினைப் பெற்றுக்கொள்கிறார்கள். குடும்ப உறவுகள், ஏனைய மனித உறவுகள் கூட
ஒருவித குழும உணர்வுதான்.
சிலர் இந்த குழும உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு வாழவும் செய்கிறர்கள்.
அவர்களின் வாழ்வு தனிமையிலும், வெறுமையிலும் கழிந்து போவதாகவே
உணரமுடிகிறது. சிலர் வாழ்வின் அனுபவங்களினால் இப்படியான குழும உறவுகளை
தவிர்த்து தனிமையில் வாழ்ந்தாலும் அவர்களும் பல இடங்களில் தம்மை
மற்றவர்களுடன் இணைத்து குழும உணர்வு தரும் பாதுகாப்புணர்வை
உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒஸ்லோவில், பிச்சைக்காரர்கள் கூடும் இடம், போதைவஸ்துப்பாவனையாளர்கள்
கூடுமிடம், வெளிநாட்டவர்கள் கூடுமிடம், மதுபான நிலையங்கள்,
ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடுமிடம் என்று பல இடங்கள் இருக்கின்றன.
சமுதாயத்தில் தமக்கென்று ஒரு இடமில்லாத பலர் தம்மை இப்படியான இடங்களில்
அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம் குழும உணர்வு கொடுக்கும் பாதுகாப்புணர்வை
பெறுகிறார்கள் என்றால் அது மிகையில்லை. அவர்கள் எவரும் தனிமையில் இல்லை
என்பதையெ இந்த பாதுகாப்புணர்வு உணர்த்திப்போகிறது.
இந்த பாதுகாப்புணர்வை உணராதவர்களே தனிமையில் சிக்கித்தவிக்கிறார்கள். வாழ்க்கை அவர்களை புறட்டிப்போட்டு பந்தாடிக்கொண்டே இருக்கிறது.
குழும உணர்வுக்காக பலர் பல வித செய்கைகளைச் செய்கிறார்கள், அவை மிகச்
சிறந்த மனிதத்தன்மையான செயல்களில் இருந்து குழும உணர்வுக்காக இன்னொரு
மனிதனின் உயிரை பறிப்பது வரை விரிந்து கிடக்கிறது.
அதேவேளை குழும உணர்வு இல்லாது போகும் போது மனிதர்களிடையே ஒற்றுமையும்
இல்லாது போகிறது. இதற்கு உதாரணமாக புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்
தமிழ்ர்களை எடுத்துக்கொள்ளலாம். 2009ம் ஆண்டு வைகாசி மாதத்துக்கு முன்பு
ஒரே குழுமமமாக இருந்த பெரும்பான்மை புலம் பெயர் தமிழர்கள் இன்று அவர்களின்
குழும அடையாளத்தை இழந்ததனால், அவர்களுக்கிடையில் பலவிதமான சிக்கல்களுடனும், பூசல்களுடனும்
வாழ்வதை அவதானிக்க முடிகிறதல்லவா?
அந்த தொடரூந்தில் அமர்ந்திருந்த குழந்தையும் பாட்டியும் குடும்பம் என்னும் குழும உறவின் பாதுகாப்புணர்வில்
தம்மை மறந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே தொடரூந்தில் குடும்பம்
என்றும் குழும உறவு அற்ற சிலரும் இருக்கலாம். குடும்ப உறவில் மட்டும் தான்
குழும உறவு தந்து போகும் பாதுகாப்புணர்வும், நம்பிக்கையும்
இருக்குமென்பதில்லை.
மனிதர்கள் எங்கொல்லாம் இன்னொரு மனிதனிடம்
பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உணர்கிறார்களோ அங்கு தனிமை
தோற்றுக்கொண்டேஇருக்கிறது. அப்படியே இருக்கக் கடவதாக.
இன்றைய நாளும் நல்லதே
மனிதர்கள் எங்கொல்லாம் இன்னொரு மனிதனிடம் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உணர்கிறார்களோ அங்கு தனிமை தோற்றுக்கொண்டேஇருக்கிறது. ஆனால் தனிமை நல்லது!
ReplyDeleteஃஃஃஇந்த பாதுகாப்புணர்வை உணராதவர்களே தனிமையில் சிக்கித்தவிக்கிறார்கள்.ஃஃஃஃ
ReplyDeleteஉண்மை தான் சகோ சமூக கட்டமைப்புகள் மனிதனாலேயே தான் சிதைக்கப்படுகிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்