ஒளி மறுக்கப்பட்ட விடிவெள்ளிகள்

நேற்றை அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதே பெருங்காரியமாய் இருந்தது, நேற்றிரவு.


இன்று காலை என்னை அழைத்துச் செல்வதற்காய் வந்திருந்தவரின் மோட்டார் சைக்கிலின் பின்னால் அமர்ந்திருந்தேன்.

மோட்டார்சைக்கில் நகர்ப்புறத்தைத் கடந்து கிறவல் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. வெய்யிலும் வெம்மையான காற்றும் முகத்திலடிக்க சுற்றாடலை அவதானித்துக்கொண்டிருந்தேன். கோடைகாலமாகையால் வறண்டுபோன வயல்களும், எலும்பும்தோலுமான கால்நடைகளும், வெயிலை பொருட்படுத்தாது தத்தம் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனிதர்களும், வீதியோரத்து கடைகளும் என்று காட்சிகள் கடந்துகொண்டிருந்தன. மனம் எதிலும் லயிக்கவில்லை. என்னை அழைத்துச் சென்றவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் மோட்டார்சைக்கிலை நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டோம். கொண்டு சென்ற குளிர் நீர் அமிர்தமாய் இருந்தது. இன்று நாம் மூன்று முன்னாள் போராளிகளை சந்திப்பதாக இருந்தது. முதலாமவரின் வீடு அருகில் இருப்பதானவும் என்னை இவ்விடத்தில் நிற்கும்படியும் கூறி என்னை அழைத்துவந்தவர் அந்த பெண்போராளியின் வீட்டுக்குச் சென்றார்.  என்னை அழைத்துச் செல்லாததன் காரணம் அந்து போராளியும் அவர்களின் குடும்பத்தாரும் முன்பின் அறியாத என்னைக் கண்டால் இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் என்று கருதலாம், எதையும் பேசப் பயப்படலாம் என்று அவர் அறிந்திருந்தார்.

நிமிடங்கள் மிகவும் மெதுவாகவே கடந்துபோய்க்கொண்டிருந்தது. கடந்து ‌ சென்ற மனிதர்கள் சந்தேகக்கண்ணுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராணுவத்தினர் தண்ணீர் வண்டி ஒன்றினை ஓட்டிப்போயினர். ஒரு இ.போ.ச பஸ் புழுதியை இறைத்தபடியே கடந்து போனது. வீதியெங்கும் கிறவல் தூசு செம்மஞ்சலாக பறந்துகொண்டிருந்தது.

தூரத்தில் இருந்து  எனது நண்பர் கையைக் காட்டி அழைத்தார். அவரை நோக்கி நடக்கலானேன்.  வேலிகளுக்கப்பால் இருந்து சந்தேகமான பார்வைகள் என்னை துளைத்துக் கொண்டிருந்தன.

ஒரு கழிமண் குடிசையின் முன் நின்றிருந்தேன். முத்தத்தில் கல் அடுப்பில் சோறு பொங்கிக்கொண்டிருக்க, வளவுக்குள் ஆட்டுக் குட்டிகள் மூன்றும் கோழிகள் சிலவும் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு பெண் எமக்கு பிளாஸ்டிக் கதிரைகளை எடுத்துத் தந்தார். அவரும்  அவற்றில் ஒன்றில் அமர்ந்து கொண்டார். அவரின் இரு முழங்கைகளும் பல அறுவைச்சிகிச்சைகளை சந்தித்திருக்கின்றன என்பதை தழும்புகளும், இடம்மாறி இருந்த முழங்கை மூட்டுகளும் காட்டின.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரது கண்களில் சந்தேகம் இருந்தது. சந்தேகம் வேண்டாம் நான் உங்கள் வாழ்பனுபங்களை அறிந்துகொள்ளவே தொடர்புகொண்டேன் என்றேன். அவர் நம்ப மறுத்தார். இறுதிவரை நம்பமறுத்தார். இறுதி நாட்களில் நடந்த சிலதை மட்டும் மிகவும் அவதானமாக வார்த்தைகளை தேர்தெடுத்து தேர்தெடுத்துக் கூறினார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு நம்ப முடியாத தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் 2009ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதியளவில் பலருடன் ஒருவராகக் காயப்பட்டிருந்த போது அவரையும் ஏனைய காயப்பட்டிருந்த 12 புலிகளையும் காப்பாற்றிய புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் இவர்களை இராணுவத்தினரிடம் அழைத்துப்போய் ஒப்படைத்துவிட்டு மீண்டும் யுத்தப்பிரதேசத்துக்குள் சென்றார்கள் என்றார். அதிர்ந்து போன நானும் என்னுடன் வந்திருந்து நபரும் இச் செய்தியை மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். அவர் பேசுவதற்கு விரும்பவில்லை ன்பதை அவரின் முகத்தில் இருந்த பயம் காட்டிக்கொண்டிருந்தது.

அவரின் பயத்தை கண்ட நான் பறவாயில்லை, நீங்கள் விரும்பும் போது தொடர்பு கொள்ளுங்கள் நாம் அப்போது பேசுவோம் என்றேன். தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தார். நாம் புறப்பட்டோம்.

வெய்யில் தனது உக்கிரத்தை ஊருக்குள்ளும் காற்றிலும் காட்டிக்கொண்டிருந்தது. கொண்டுவந்திருந்த நீர் முடியும்தறுவாயில் இருந்தது. இன்று மேலும் இருவரைச் சந்திக்கும் திட்டம் இருந்ததால் நீரை மிச்சப்படுத்திக்கொண்டேன்.

மோட்டார் சைக்கில் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. தார்ப்பாதைகள், சீமெந்துப்பாதைகள், கிறவற்பாதைகள் என்றில்லாமல் ஒற்றையடிப்பாதைகளினூடாகவும், வெட்டை வெளிகளினூடாகவும்  ஒரு மணிநேரம் ஓடிய பின் ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாறிய பின் மீண்டும் ஒரு அரை மணிநேரப் பயணம். ஒரு வீட்டு முற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அருகிலேயே அவரின் உறவினர்கள், தாயார் நின்றிருந்தார்கள்.

தெளிந்த முகம். தெளிவான வார்த்தைகள், வசீகரமான முகம், மீசை என்றிருந்தார்.பொது விடயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். தாயார் இடையிடையே பேச்சில் கலந்து கொண்டார்.  பத்துவருடங்களுக்கு முன் இயக்கத்துக்குச் சென்றவர் இருமாதங்களுக்கு முன் தான் வீடு திரும்பியிருக்கிறார். தாயார் அவர் வீரச்சாவடைந்ததாகவே நினைத்திருந்திருக்கிறார். இத்தனை வருடங்களும்.

இறுதி யுத்தத்தின் பின் புனர்வாழ்வு முடிந்த பின் ஒரு பாதிரியார் இவரை பாதுகாத்திருக்கிறார். அவரிடம் இவர் தனது தாயாரின் விலாசத்தை கொடுக்க மறுத்திருக்கிறார். காரணம் தன்னால் அவர்களுக்கு இனி எவ்வித உதவியும் இல்லை, தவிர தன்னை பாதுகாப்பதில் பலத்தை சிரமத்தை குடும்பத்தவர்கள் எதிர்கார்ப்பார்கள் என்று நினைத்ததனால் குடும்பத்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை அவர். பாதிரியாரின் பலத்த அழுத்தத்தின் பின் பாதிரியார் விலாசத்தைப் பெற்று குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதிய பின் குடும்பத்தினர் வன்னி சென்று இவரை அழைத்துவந்திருக்கின்றனர். இதைக் கூறியபோது அத் தாயின் அழுகை கலந்து தளுதளுத்த குரல்ஒலி என் உயிரை ஊடுருவிப்பாய்ந்தது.

சற்று நேரத்தின் பின் அத்தாய் ”தம்பி, உன்ட கண்ணை ஒரு தரம் அண்ணைக்கு காட்டு” என்றார். அவர்கள் பயந்திடுவார்கள் என்றார் அவர். நான் நீங்கள் விரும்பினால் அகற்றுங்கள் என்றேன். அப்போது அவர் தன் கண்ணை மூடியிருந்த துணியினை அகற்றினார்.

நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள்.  அவர் இரண்டு செக்கன்களின் பின் கண்ணை மீண்டும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டார். என்னால் ஒரு செக்கன் கூட அவரின் கண்கள் இருந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை. இரண்டு கண்கள் இருந்த இடங்களிலும் 3 - 4 சென்டிமீற்றர் அளவுக்கு இரு குழிகள் இருந்தன. கண்கள் இல்லாத  அவரது உருவம் பயங்கரமாக இருந்தது:. படங்களில் இப்படியான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் என் முன்னே அதுவும் இரண்டு அடிகளுக்குள் அப்படியான காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோனேன். சுதாரித்தக்கொள்ள சில நிமிடங்களாயின. ” பார்த்தீங்களா அண்ணை .. அது தான் சொன்னேன் என்றார் அவர்”  2008ம் ஆண்டு ஒரு செல் அவரின் கண்களை பறித்துப்போயிருக்கிறது.

சற்று நேரம் அங்கு பேச்சு இருக்கவில்லை. மெதுவாய் அவரின் கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் ஆதரவாய் னது கையைப் பற்றிக் கொண்டார்.. பார்வையின் மொழியோ, பேசும் மொழியோ எதுவும் அங்கிருக்காவிடினும் எம் கைகளின் ஸபரிசங்கள் பேசிக்கொண்டன. எம் வாழ்வுக்காய் போரா‌டிய ஒரு இளைஞன், வாழ்வின் வசந்த காலத்தில் இருக்கவேண்டிய வயது அவருக்கு, ஆனால் வாழ்வையே தொலைத்துவிட்டுவந்து நிற்கிறார். தொழில் இல்லை, வருமானமில்லை, தந்தையில்லை, தாயாரின் மற்றும் தங்கையின் குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள்: அவரின் எர்காலத்தை சற்று சிந்தித்துப்பார்த்தேன். அவருக்கு ஒரு 25 வயதிருக்கலாம். மிகுதிக் காலத்தை எப்படி கழிக்கப் போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவரின்  வாழ்க்கையை பதிவு செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. என்னால் அங்கு நிற்கமுடியாதிருந்தது. எனவே மீண்டுமொருநாள் அவரிடம் வருவதாகக் கூறி புறப்பட்டேன்.

இன்னும் ஒருவரை சந்திக்கவேண்டியிருந்தது. மனமோ  கலங்கிப் போயிருந்தது. அந்தச் சந்திப்பையும் பின்போட்டுக்கொண்டேன். மோட்டார் சைக்கில் வயல்,  வறண்டுபோயிருந்த வாய்க்கால்கள், கிறவற்பாதைகளினூடாக கிழக்குப் பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. கிழக்குப் பக்கத்து வானம் இருட்டியிருந்தது.


அனுபவங்கள் தொடரும்.....


................................................................................................................................

நீங்கள் யாரேனும் நேரடியாக உதவிதேவைப்படுபவர்களுக்கு உதவிரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க.
adsayaa@gmail.com

3 comments:

  1. :(மனதை நெருடுகிறது சொந்தமே!!!!1

    ReplyDelete
  2. ///நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள். அவர் இரண்டு செக்கன்களின் பின் கண்ணை மீண்டும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டார். என்னால் ஒரு செக்கன் கூட அவரின் கண்கள் இருந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை. இரண்டு கண்கள் இருந்த இடங்களிலும் 3 - 4 சென்டிமீற்றர் அளவுக்கு இரு குழிகள் இருந்தன. கண்கள் இல்லாத அவரது உருவம் பயங்கரமாக இருந்தது:. படங்களில் இப்படியான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் என் முன்னே அதுவும் இரண்டு அடிகளுக்குள் அப்படியான காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோனேன். சுதாரித்தக்கொள்ள சில நிமிடங்களாயின. ” பார்த்தீங்களா அண்ணை .. அது தான் சொன்னேன் என்றார் அவர்” ////

    இது போன்ற நம்பமுடியா, மறைக்க பட்ட பல சம்பவங்கள் இன்னும் எத்தனை எத்தனை ஆனால் இது எத்தனை பேருக்கு தெரியும்???? எங்கள் கவலை எல்லாம் எப்போது தலைவர் வருவார் மீண்டும் யுத்தம் வெடிக்கும் என்பதுதான் .... அனுபவங்கள் நெஞ்சை நெருடுகிறது... எவ்வளவு இழப்புக்கள்... வலிகள் தான் மிச்சம்..

    ReplyDelete
  3. எங்கள் வாழ்வுகள் கேள்விக்குறியாகிப்போய் கிடக்கு.அழுதேவிட்டேன்.ஒருவர் இருவரா உதவி செய்து நிமிர்த்திவிட !

    ReplyDelete

பின்னூட்டங்கள்