இன்று ஒரு கருந்தரங்கில் கலந்துகொள்வதற்காய் ஒஸ்லோ நகரத்தின் மையப்பகுதியல்
அமைந்திருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குச் சென்றிருந்தேன்.
கருத்தரங்கின் இடைவேளையின் போது ஏனையவர்களுடன் அமர்ந்து மதிய உணவினை
ருசித்துக்கொண்டிருந்த போது ஜன்னலினூடாக விடுதிக்கு வெளியில் என் கண்கள்
உலாவின. சற்றுத் தூரத்தில் உறைபனிச்சறுக்குச் சப்பாத்துடன் தம்மை மறந்து
விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் என் கண்ணில் தெரிந்தார்கள்.
எனது இளவரசிகள் இருவரும் நாம் வட மேற்கு நோர்வேயில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்திருந்த காலங்களில் இந்த உறைபனி சறுக்கு (skating) விளையாட்டில்
மிகுந்த விருப்புடையவர்களாக இருந்தார்கள். எனது மூத்தவளுக்கும்
இளையவளுக்கும் இடையில் நான்கு வருட இடைவெளியுண்டு. முத்தவளே முதலில் இந்த
விளையாட்டைத் தொடங்கினாள்.
நாம் வாழ்ந்திருந்த கிராமத்தில் ஒரு குளம் இருக்கிறது. பனிக்காலத்தில்
அது உறைந்துபோகும். அந் நோரங்களில் அக் குளம் ஒரு திருவிழாவைப்போன்று
காட்சியளிக்கும். சிறுவர்களில் இருந்து 60 - 70 வயது முதிர் இளையோர் வரை
பலரும் உறைபனிச்சறுக்கில் ஈடுபடுவார்கள். குளத்தைச் சுற்றி வாகனங்கள்
நிறுத்தப்பட்டிருக்கும்.
எனது முத்தவளுக்கு 5 வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். ஒரு நாள்
சிறுவர் காப்பகத்திலிருந்து அவளை அழைத்து வந்துகொண்டிருந்தேன். நாம் அந்தக்
குளத்தை கடந்து வரும்போது குளத்தில் பலரும் உறைபனிச்சறுக்கில் ஈடுபடுவதை
அவதானித்த அவள் தானும் சறுக்கி விளையாடவேண்டும் என்று அடம் பிடித்தாள்.
சரி பார்ப்போம் என்று கூறினேன். வீடு வந்ததும் உறைபனியில் சறுக்குவது
எப்போது என்று கேட்டபடியே இருந்தாள்.
எனது வீட்டில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் என்னுடன் தொழில்புரிந்த
ஒரு நோர்வேஜிய நண்பர் இருந்தார். அவருக்கு இரு குழந்தைகள் இருந்தார்கள்.
அவர் ஆசிரியர். அவர் மனைவி வைத்தியர். எனது மகளுக்கு அவர்களுடன் மிகுந்த
பழக்கமுண்டு.அவர்களுக்கும் அவளில் மிகுந்த அன்பிருந்தது. அவரின் குழந்தைகள்
என்னவளை விட சற்று வளர்ந்தவர்களாதலால் எனது குழந்தையுடன் விளையாடுவார்கள்.
அவரின் மகள் ஒரு குதிரையை தன் பெற்றோருடன் சண்டைபிடித்து வளர்க்கத் தொடங்கினாள். அவர்களின் குதிரை லாயம் அவர்கள் வீட்டில் இருந்து சிறிது
தூரத்தில் இருந்தது. அவள் குதிரையை தனது வீட்டுப்பக்கமாக அழைத்துவரும்
போது எங்கள் வீட்டின் பின்புறமுள்ள வீதியாலேயே அழைத்துவருவாள். எனது
மகளுக்கு குதிரை அறிமுகமாகியது இந்நாட்கிளிற்தான்.
எனது மகளுக்கு அந்தக் குதிரை அழைத்துவரப்படும் நேரம் தெரிந்திருந்திருக்க வேண்டும் அல்லது அந்தக் குதிரைக்கு நாம் வீட்டுக்குப் பின்புறம் நிற்கும் நேரம் தெரிந்திருந்திருக்கவேண்டும். அடிக்கடி நாம் சந்திக்க நேர்ந்தது. எனது கையைப் பிடித்தவறாறே குதிரையின் வயிற்றுப்பகுதியை தடவுவதே மகளுக்கு பாதுகாப்பாய் இருந்தது. காலப்போக்கில் மகள் குதிரையின் முகத்தை தடவும் அளவுக்கு முன்னேறிய போது குளிர் காலம் வந்திருந்தது. குதிரையின் நட்பினால் எனது நண்பரின் மகள் எனது மகளுடன் நட்பாகிப்போனாள்.
அந்த வருடம் கடும் குளிர் வீசியது. எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த குளம்
உறைந்துவிட்டிருந்தது. ”உறைபனிச் சறுக்கு” திருவிழாவும் ஆரம்பித்தது.
சறுக்கும் சப்பாத்து வாங்கிக் கொண்டோம். குளிர்தாங்கக் கூடிய உடைகளை
அணிந்து கொண்டு குளத்திற்கு மகளை அழைத்துப்போனேன். மகளுக்கு சறுக்கும்
சப்பாத்தை அணிவித்தேன். அவளால் இரு கால்களையும் ஒருமித்துவைத்துக்கொள்ள
முடியாது தடுமாறிய போது, சில அறிவுரைகள் கூறினேன். அப்பா உனக்கு இதைப்பற்றித்தெரியாது என்றாள் மகள். அவள் கூறுவதிலும் பேருண்மை இருப்பதால் எதிர்த்துப்பேச முடியவில்லை என்னால். அந் நேரம், கடவுள் அனுப்பிய தேவதை போன்று வந்தாள், நண்பரின்
மகள்.
எனது மகளிடம் சில கட்டளைகளையிட்டாள். எனது கால்களைப் பார், இப்படிச்
செய், அப்படிச் செய்யாதே என்றாள். இப்படி ஓடு என்றாள். அங்கு ஒரு அதிசயம்
நடந்துகொண்டிருந்தது. எனது மகள் 5 நிமிடங்களுக்குள் மிகவும் நிதானமாக பனியில் சறுக்கிக்கொண்டிருந்தாள். நான் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்தபடியே மகளுக்கான hotdog தயாரித்துக்கொண்டிருந்தேன்.
இப்படி சறுக்கத் தொடங்கிய எனது மகள் பிற்காலத்தில் தனது தங்கைக்கும்
பனியில் சறுக்கக் கற்றுக்கொடுத்தாள். இருவரும், ஓர் நாள் என்னையும் அழைத்தார்கள்.
கெஞ்சிக்கூத்தாடி தப்பித்துக்கொண்டேன்.
தற்போது காலம் என்னை அக்கிராமத்தில்
இருந்து பெயர்த்தெடுத்து ஒஸ்லோவிலும், குழந்தைகளை லண்டனிலும்
நிறுத்தியிருக்கிறது.
இன்று ஒஸ்லோவின் ஒரு பிரபல்யமான விடுதியில்
இருந்தபடியே குழந்தைகள் பனியில் சறுக்கி விளையாடுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மனம் முழுவதும் நாம் வாழ்ந்திருந்த கிராமத்திலும், எனது மகளுக்கு பனியில் சறுக்கக்கற்றுக்கொடுத்தவளின் நினைவில் நனைந்திருந்தது.
அந் நினைவுகளில் நனைந்தபடியே உணவு எடுப்பதற்கான வரிசையில் நின்றிருந்தேன்.
எனக்கு முன்னாலிருந்தவரின் முதுகுப்புறத்தைக் கண்டதும், இவரை எங்கோ கண்டிருக்கிறேனே என்று மனம் கூற, எனது கை தன்னிச்சையாக அவரை தட்டிய போது அவர் திரும்பினார்.
அங்கு ஆச்சர்யமான அதியம் காத்திருந்தது எனக்கு, எனது மகளுக்கு பனிச்சறுக்கு கற்பித்தவளின் தந்தையும், எனது
நண்பருமானவர் அங்கு நின்றிருந்தார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடினோம்.
எனது குழந்தைகளைப் பற்றி விசாரித்தார். அவரின் மகள் வைத்தியராக
கடமையாற்றுவதாகக் கூறினார். அவளை அன்பாய் விசாரித்ததாய்க் கூறுங்கள் என்று கூறி விடைபெற்றுக்கொண்டேன்.
சில சந்திப்புக்களுக்குக் காரணம் தேடுவதில் அர்த்தமில்லை. அப்படியான ஒரு சந்திப்புத்தான் இதுவும் என்றது மனம்.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்