வெள்ளிக்கிழமையின் பின் மாலைப்பொழுது மெதுவாய் நெருங்கிக்கொண்டிருந்தது. 
அநியாயத்துக்கு எனது நண்பர்கள் கூட்டம் திருந்திவிட்டது போலிருந்தது 
அவர்களின் அமைதி. புதுவருடம் பிறந்து 3 கிழமைகள் ஆகியிருந்தும் 
அநியாயத்துக்கும் நல்லவர்களாய் இருக்கிறார்களே இவனுகள் என்று நினைத்தபடியே 
இருந்தேன். 
நத்தார் பரிசாக கிடைத்தவொரு திராட்சைப்பழரச போத்தல் மேசையில் இருந்தது.
 அதைப் பார்த்ததும் மனது குஷியாயிற்று. அப்போது தான் வந்தது அந்த தொலைபேசி.
 
தொலைபேசியில் அழைத்தார் ஒரு பெண்மணி, மிகவும் வயதானவர்.
”நான் கணிணி பற்றி நன்கு அறிந்தவள். 1970 இல் இருந்து கணிணி பாவித்துவருபவள். எனது நண்பிகளுக்கு நான் தான் கணிணி திருத்துவேன்.
ஆனால் இன்று என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே வா!” என்று அதிகாரம் கலந்த அன்பான கட்டளையிட்டார் அவர்.
சற்று
 அவருடன் பேசி கணிணியின் பிரச்சனை என்ன என்று அறிந்துகொண்டேன். வெள்ளி இரவு
 .. நேரம் இல்லை என்று சற்று பிகு பண்ணினேன். கெஞ்சினார், நான் வயதானவள் 
என்றார், கணிணி இன்றி எதுவும் இயங்காது என்றார். 
மனது இரங்கியது போல் நடித்தேன். சரி வருகிறேன். ஆனால் ... என்று கூறி விலையை பேசிக்கொண்டேன். அது பிரச்சனை இல்லை உடனே வா என்றார்.
வெளியே
 குளிர் -14 எனவே குளிருக்கான கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன். 
பனி வாகனத்தை மூடியிருந்தது. கை விறைக்க விறைக்க பனியைத்  தட்டிவிட்டு, 
உறைபனியைச் சுறண்டியெடுத்த பின் வாகனத்தினுள் ஏறிக்கொண்டேன். குளிர் முள்ளந்தண்டை 
சில்லிடவைத்துக்கொண்டிருந்தது.
ஒஸ்லோவின் செல்வச்செழிப்புள்ள பகுதியில் அவர் வீடு அமைந்திருந்து. 
மாலை 08:00 க்கு அவர் வீட்டை அடைந்த போது வீதியில் எவரும் இல்லை. 
அனைவரையும் குளிர் விரட்டியடித்திருந்து. நான் அவர் வீட்டையடைந்து என்னை 
அறிமுகம் செய்து கொண்டேன். எனது பெயரை நான்கு முறை உச்சரிக்க 
முயற்சித்தார். நல்லவேளை என் அம்மா அவ்விடத்தில் இருக்கவில்லை. 
கணிணியைக் காட்டினார். கணிணிக்கு அருகில் அமர்ந்துகொண்டேன். நான் 
கணிணியை இயக்கினேன். அவர் தனக்கு 80களில் இருந்து கணிணியுடன் பரீட்சியம் 
இருப்பதாயும், தனக்கு கணிணி பற்றி அதிகம் தெரியும் என்றார். 
ம்ம் கொட்டினேன்.
தான் மிகப்பெரிய ஒரு பெற்றோலிய கம்பனியில் உயர்ந்த பதவியில் 
இருந்ததாகவும், அங்கு தான் பயின்ற, பாவனையில் இருந்த மென்பொருட்களின் ஒரு 
நெடும் பட்டியலைக் கூறி இவை உனக்கு தெரிந்திருக்காது என்றும் கூறினார்.
இல்லை, தெரியும் என்றால் வேலியில் நின்றிருந்த ஓனாணை  எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாகிவிடும் என்பதால் தெரியாது என்றேன்.
அப்போது அவர் உனக்கு பூனை என்றால் பயமா என்றார். இல்லை என்றேன். 
எனக்கும் பூனைக்கும் ஜன்மமப்பகை உண்டு என்பதை அடக்கியே வாசித்தேன். தனது பூனை 
தூங்கிக்கொண்டிருக்கிறது. அது விழித்ததும் உன்னிடம் வரும் என்று ஒரு போடு 
போட்டார். என்னிடம் வந்தால் பூனைக்கு ராகுகாலம் என்று நினைத்துக்கொண்டே. 
அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தேன்.
அவர் கணிணி தனது இயக்கத்தை 
நிறுத்தியிருந்து. அதன் harddisk பழுதடைந்திருந்ததை கண்டுகொண்டேன். அதை 
அவரிடம் கூறிய போது ”சரி ..பணம் தருகிறேன் போய் வாங்கி வா” என்றார். ஏதோ 
கடையில் பால் வாங்கி வா என்பது போல.
வயதானவர் என்பதால் மிகவும் மரியாதையாக ”இல்லை இதை விற்கும் கடை இப்போது பூட்டியிருக்கும்” என்றேன். 
”என்ன செய்யலாம்?” என்றார்
எனக்குத் தெரிந்த பாக்கிஸ்தான் 
நண்பரின் கடையில் பழைய Hard disk இருக்கலாம் அல்லது எனது வாகனத்தினுள் உள்ள
 ஒரு பெட்டியினுள்ளும் இருக்கலாம் என்றேன்.
”உனது வாகனத்தினுள் பார்” என்றார். 
அவரின் அதிஸ்டம், என்னிடம் ஒரு பழைய Hard disk இருந்தது.
அதை  கணிணியினுள் பூட்டி வேலையைத் தொடங்கினேன்.
அவரோ
 தனது வாழ்க்கை பற்றி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். தனியே வாழ்கிறாராம், 
காதலர்கள் இருந்தார்களாம். ஆனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று தான் 
கவலைப்படவில்லை என்றும் கூறினார். 
அவர் வீடு முழுவதும் பூனைகளின் படங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என்று 
எங்கும் பூனை மயமாக இருந்தது. அவரின் ஒரே ஒரு துணை அந்தப் பூனைதான் 
என்றும், ஒரு முறை தான் இரண்டாவது மாடிப்படியில் இருந்து கீழிறங்கும் போது 
விழுந்து, காயமுற்று மயக்கமுறுவதற்கு முன் ”அய்யோ நான் இப்போ 
இறக்கப்போகிறேன், வீட்டில் இருக்கும் பூனையை யார் காப்பாற்றப்போகிறார்கள்” 
என்று நினைத்ததையும் கூறினார். 
அவருக்கு முதுகெலும்பில் ஒரு நோய் இருக்கிறது. அதனால் பல மருந்துகள், 
களிம்புகள், குளிசைகள் பாவிக்கிறார். அவையெல்லாம் மேசையெங்கும் 
பரவிக்கிடந்தன. மிகவும் அதிகமாகப் புகைத்தார். பாரதிராஜாவின் படங்களில் 
வரும் கனவுக்காட்சிகள் போன்று சிகரட்டின் புகை அவரது வீட்டுக்குள்  வெள்ளை 
வெள்ளையாய் உலாவிக்கொண்டிருந்தது. தான் புகைப்பதில் எனக்கேதும் ஆட்சேபனை 
உண்டா என்றார்.  இல்லை என்று தலையை ஆட்டினேன். 
அவருக்கு பேச்சுத்துணை இல்லை, அதனாலோயே என்னை வதக்கி 
எடுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. முதுமையில், தனிமை கொடியது என்பதை நான் அவர் மூலமாயும் உணர்ந்துகொண்டிந்தேன்.
நேரம்
 கடந்துகொண்டிருந்தது.  தேநீர், பிஸ்கட் தந்தார். ஒரு சிகரட் முடிய முதல் 
அதிலேயே  அடுத்ததை பற்றவைத்துக்கொண்டார்.  இடையிடையே தனது வாழ்க்கைப் 
பிரச்சனைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். பூனை இன்று அதிகமாய் 
தூங்குகிறது என்றார். பூனை தொடர்ந்து தூங்கவேண்டும் என்று ஒஸ்லோ முருகனை 
வேண்டிக்கொண்டேன்.
அவரது ஒரே சகோதரியான தங்கை, அதீத மதுப்பழக்கத்தின் காரணமாய் குறைந்த வயதில் இறந்திருக்கிறார். அவருக்கு
 ஒரு மகன் இருக்கிறார். இவரினதும்,  சகோதரியினதும் தாயார் இறந்த பின், 
சொத்துக்களை பிரித்தெடுப்பதில் இவரின் தங்கையின் மகனுடன் மனக்கசப்பு 
ஏற்பட்டதால், தனது  சொத்துக்களில் ஒரு சதத்தையேனும்  அவருக்கு எழுதவில்லை 
என்றும், தனது ஒன்று விட்ட சகோதரியின் மகனுக்கே எழுதியுள்ளதாயும் 
குறிப்பிட்டார். அவரின் பேச்சில் அவர் ஏமாற்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளமுடிந்தது.
இடையிடையே என்னைப் பார்த்து  ”உன்னால் எனது கணிணி உயிர்தப்பியது ” 
என்று கூறினார். நான் தலையை ஆட்டியபடியே, அதிகமாய் புகழ்கிறீர்கள் என்றேன்.
 விழுந்து விழுந்து சிரித்தபடியே ”உன்னால் எனது கணிணி உயிர்தப்பியது” 
என்றார் மீண்டும். நான் தலையையும் ஆட்டவில்லை. வாயையும் திறக்கவில்லை.
நேரம் நடுநிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதும் பூனை 
தூங்கிக்கொண்டேயிருந்தது. நானும் கணிணியை திருத்திமுடிக்கும் நிலையில் 
இருந்தேன். அவரை அழைத்து கணிணியை
 ஒரு முறை இயக்கிப் பார்க்க வேண்டினேன். வந்தார், இருந்தார், இயக்கினார். 
தலை ஆட்டினார், ”உன்னால் எனது கணிணி உயிர்தப்பியது என்றார், மீண்டும். நான்
 வாயைத் திறக்கவே இல்லை.
அவரிடம் இருந்து கைகுலுக்கி விடைபெற்ற போது அவர் காலருகில் பூனை ”மியாவ்வ்” என்றது. 

 
 
தனிமை கொடுமை என்பது இதைத்தான் போலும் விசரன் அண்ணா!
ReplyDelete