நானும் எத்தனையோ குடிகாரர்கள், வெறிகாரர்கள், வெறிகாறிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன்.
1980ல்
செங்கலடியில் முதலாவது அனுபவம் கிடைத்தது. அன்று அந்த நண்பன் குடித்தது
பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம். ஆனால் எடுத்த வாந்தியோ
ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது.
பின்பு 1986 இல் இந்தியாவில்
இரண்டு, முன்று புதிய குடிகாரர்களுடன் தினமும் இரவில் மொட்டைமாடியில்
பெரும்பாடுபட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவன் எனது மடியில் படுத்திருந்தே
குடித்தான். சிரித்தான். காதலில் உருகினான், அழுதான். வாந்தியெடுத்தான்.
நான் தினமும் அவனையும் கழுவி, மொட்டைமாடியையும் கழுவிய நாட்கள் அவை.
பின்பு நோர்வே வந்தபின்னும் வெறிகார்களுக்கும் எனக்குமான உறவு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது. போத்தலும் கிளாசும் போன்று.
எத்தனையோ
இம்சையரசர்களை சந்தித்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். மணிக்கணக்காக
அலட்டல் கதைகளை கேட்டுமிருக்கிறேன். வாந்திகளை சுத்தப்படுத்தி, தலைக்கு
தேசிக்காய் தேய்த்து குளிப்பாட்டியுமிருக்கிறேன்.
தங்களை TMS, பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என்று நினைத்த கழுதைகளின் பாட்டுக்கச்சேரிகளை எனது விதியை நொந்தபடியே கேட்டிருக்கிறேன்.
சோமபானம்
தந்த வீரத்தால் போலீசுக்குச் சென்றவர்களை மீட்டு அழைத்துவந்திருக்கிறேன்.
அந்த வீரர்களின் அழகிய ராட்சசிகள் உண்மையான ராட்சசிகளாகமாறியதையும்
கண்டிருக்கிறேன்.
கடும் பனிக்காலத்தில் சாரத்தைக் (கைலி) களற்றி
காது குளிர்கிறது என்பதனால் தலையில் சுற்றியபடியே தெருவில் அழகிய அங்கங்கள்
ஆட ஆட நடந்த பெருமனிதர்களோடும் பழகியிருக்கிறேன்.
ஒரு
மாலைப்பொழுதில் 99 பெண்களுக்கு முத்தமிடடுவிட்டேன் என்று கூறி, பினபு 100
பெண்ணைத் தேடித்திரிந்தவரை சமாளித்து வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறேன்.
ஒரே ஒரு விஸ்க்கிப்போத்தலால் ஈழத்தின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பெரும் அரசியல்வாதிகளையும் சந்திக்கக்கிடைத்திருக்கிறது.
குடியும் குடித்தனமுமாய் இருந்து போய்ச்சேர்ந்த நண்பனை சுடுகாடுவரை அழைத்தும்போய் அவன் எரிந்துருகியதையும் கண்டுமிருக்கிறேன்.
ஆனால், நேற்று ஒருவர் சற்று பதத்தில் இருந்துபோது காட்டிய கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.
நேற்றைய மனிதர் என்னை
கடித்துக் குதறி,
சப்பி,
மென்று,
தின்று,
குற்றுயிராக்கிவிட்டார்.
என்ட ஒஸ்லோ முருகன் சத்தியமாகச் சொல்கிறேன்
நேற்றைய மனிதர்போன்று எவரையும் நான் சந்தித்ததில்லை. இன்று காலை எழும்பியபோது காது வலித்தது, தலையணையில் சிவப்பாய் ஏதோ இருந்தது. ரத்தமாய் இருக்குமோ?
அல்ப்பமான ஒரு
கிளாஸ் பழரசத்தைக் குடித்துவிட்டு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுவதெல்லாம்
அநியாயம். குடிகாரர்களின் சரித்திரத்துக்கே இழுக்கு. அதுவும் ஒரு
தொலைபேசியினூடாக இரண்டரை மணிநேரமாக இந்த அழகான அப்பாவியை
இம்சைப்படுத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்.
மறுபிறவியல் ஒரு சொட்டு சோபானமும் கிடைக்காதிருப்பதாக என்று அவரை நான் சபிக்கிறேன்.
#நண்பேன்டா!
///அன்று அந்த நண்பன் குடித்தது பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம். ஆனால் எடுத்த வாந்தியோ ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது.////
ReplyDeleteவாந்தியில் சித்திரம் கண்ட ரசனை என்னை எங்கோ சுவரில் சிறுநீரால் சித்திரம் வரைந்த நினைவுக்கு அழைத்து சென்றுவிட்டது....
///நேற்றைய மனிதர்போன்று எவரையும் நான் சந்தித்ததில்லை. இன்று காலை எழும்பியபோது காது வலித்தது, தலையணையில் சிவப்பாய் ஏதோ இருந்தது. ரத்தமாய் இருக்குமோ? ///
கடைசிவரை அவர் ரத்தம் வரும் வரை உங்களை என்ன சொல்லி உங்களை வதைத்தார் என்பதை சொல்லாதவரை நான்கள் தப்பித்தோம்.............
ஒரே ஒரு மூடியளவு குடித்துவிட்டு, பெரும் குடிகாரன்போல் ஆட்டம் போடுபவர்களை கம்பஸ் காலத்தில் சந்தித்தேன். தனிப் பதிவு எழதவேணும் :-)
ReplyDelete