அம்மா ஒரு மந்திரவாதி

அம்மா ஒரு மந்திரவாதியாக இருக்கவேண்டும். அல்லாவிட்டால் எவ்வாறு அவர் எனது மனநிலைகளை இவ்வளவு நுணுக்கமாய் அறிகிறார்?

எனக்கு, இந்த கணிணியுகத்திலும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் உரையாடிய பின்பும், மாதத்திற்கு ஒரு கடிதம்போடும் ஒரே ஒரு ஜீவன், அப்பாவின் அழகிய ராட்சசி தான்.

கடந்த ஒரு மாதமாக எனது மனம் மிகவும் சோர்ந்திருக்கிறது. தனிமையின் தார்ப்பர்யம் ஒவ்வொரு மார்கழிமாதமும் என்னை அலைக்கழிக்கும். இந்த மார்கழியும் அதற்கு விதிவிலக்கல்ல.

இன்று, எனது அறையினை சற்று தூய்மைப்படுத்தியபோது கண்ணில்பட்டது ஒரு கடிதம். அச்சுப்பதித்தது போன்ற எழுத்து. அது யாருடையது என்று கூறத்தேவையில்லை. என் மனதிலும் உயிரிலும் கலந்துபோன அம்மாவின் முத்து முத்தான கையெழுத்து. அக்கடிதம் புரட்டாதி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இன்றுவரை நான் அந்தக் கடிதத்தை திறந்து வாசிக்கவில்லை.

81 வயதிலும் எவ்வாறு அவர் இவ்வளவு அழகாக எழுதுகிறார் என்று நான் நினைப்பதுண்டு. அத்தனை அழகான கையெழுத்து எங்கள் அம்மாவின் கையெழுத்து. கடிதத்தை கையில் எடுத்தபடியே உட்கார்ந்துகொண்டேன்.

வெள்ளைநிற கடிதஉறை. அதில் என் பெயரும், விலாசமும் எழுதப்பட்டிருக்கிறது. மனது பெரிதாய் அடித்துகொள்கிறது...
வெளிச்சத்தில் கடிதத்தினை தூக்கிப்பிடித்துப் பார்த்து, அந்தக் கடிதத்தினை கிழிக்கின்றேன். உள்ளே ஒரு வாழ்த்து அட்டை இவ்வாறு ஆரம்பிக்கிறது.

For you, Dear son!
மறுபக்கத்தை திருப்புகிறேன். அதில் அம்மா இவ்வாறு எழுதியிருக்கிறார்...
அன்பு நிறைந்த சஞ்சயனுக்கு!
இன்றும் எப்பவும், சிறந்த குறைவற்ற அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
சுகம், சந்தோசம், மனஅமைதி நிறையவே பெறுவாயாக.
அன்புள்ள அம்மா.
என்றிருந்தது
.
இந்த கடிதம் எனக்கு புரட்டாதி 30ம் திகதிக்கு முன் வந்திருக்கவேண்டும். ஆனால் நான் அதனை இன்றுவரை திறந்துபார்க்கவில்லை. ஏன்? அக் கடிதத்தை ஏன் இன்று நான் திறந்துபார்க்கவேண்டும்?
அதிலும், மனதளவில் நான் நொருங்கிப்போயிருக்கும் இன்றைய நாளன்று,
அந்தக் கடிதம் என் கண்களுக்கு ஏன் தென்படவேண்டும்.... ?

அதனை நான் திறந்துபார்க்கிறேன். அங்கு அம்மா என் மனதுடன் உரையாடுகிறார்....... அவர் இப்படிக் கூறுகிறார்....
"சுகம், சந்தோசம், மனஅமைதி நிறையவே பெறுவாயாக"

வாழ்க்கையில், சில கேள்விகளுக்கு பதில் இல்லை. அது போன்றதே ......
ஏன் இதுவரை நான் அந்தக் கடிதத்தை திறந்து வாசிக்காதிருந்தேன் என்பதும், இன்று நான் அக் கடிதத்தினை வாசித்தேன் என்பதும்.

தாய் உயிரைக் கொடுப்பவள் மட்டுமல்ல.... வாழ்நாள் முழுவதும் அதை சுமந்து திரிபவள் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்....

அம்மாவின் மடியில் விழுந்துகிடந்து ஓவென்று கத்தி அழவேண்டும்போலிருக்கிறது....

மழையெனப் பெய்யும் காமம்

பசித்த மானுடம் (கரிச்சான் குஞ்சு) மற்றும் கங்கணம் (பெருமாள்முருகன்)  ஆகிய நாவல்களை நத்தார் விடுமுறையின்போது வாசித்து முடித்தேன்.

காமத்துடன் மனிதர்கள் நடாத்தும் போராட்டமானது எத்தகையது என்பதை இந்த இரு நூல்களும் தத்தமது கதைமாந்தர்களினூடாக அழகாகக் கூறுகிறன.

காமம் மழையைப் போன்றது. அது வெள்ளமாயும் பாயும், வறண்டும்போகும் என்று எங்கோ வாசித்திருக்கிறேன்.

மழைபோன்ற காமம் இல்லாவிட்டால் மனிதன் வறண்டுவிடுகிறான் என்பதற்கு உதாரணமாக ”கங்கணம்” நூலின் நாயகன் மாரிமுத்து காண்பிக்கப்படுகிறான். வெள்ளம்போன்ற அதீத காமம் மனிதனை எவ்வாறு அழிக்கிறது என்பதற்கு  உதாரணமாக ”பசித்த மானுடத்தின்” நாயகன் கணேசன் காட்டப்படுகிறான்.

எனக்கு கங்கணம் அதிகமாக பிடித்துக்கொண்டது என்றே கூறுவேன்.  கிராமத்து மனிதர்கள், குடும்ப உறவுகள், சாதீய நடைமுறைறைகள், மொழியாடல், கதை பின்னப்பட்ட யதார்த்தம், திருமணமாகாதவனின் வாழ்க்கை, காமவேட்கை, கனவுகள் என்று  பலதும் மிக அழகாக கூறப்பட்டிருக்கிறது.

பசித்தமானுடத்தில் ஓர்பாலுறவு முக்கிய இடத்தினைப்பெற்றிருக்கிறது. அதீதக் காமம் ஆண்களிடத்தில் மட்டுமல்ல பெண்களிடத்திலும் உண்டு என்பதும் இங்கு பேசப்படுகிறது. தொழுநோய் கண்ட கணேசனுக்கு தனக்கு வைத்தியம்செய்யும் கன்யாஸ்திரிகளிமும்,  அவனுடன் பிச்சையெடுக்கும் கண்பார்வையற்ற பிச்சைக்காரின்மேலும் கட்டுக்கடங்காத காமம் ஏற்படுகிறது.  கன்யாஸ்திரிகளிடத்தில் காமுறுவது தவறு என உணர்ந்து, விலகி வேறு இடம் செல்வதால் ஒருவிதத்தில் தப்பிக்கொள்ளும் அவன்,  கண்பார்வையற்ற பிச்சைக்காரயினை திட்டமிட்டே அடைவதும், மனிதனின்  மனச்சாட்சிக்கும் காமத்துக்குமான போராட்டங்கள்.

இறுதியில் அவன் காமத்தை வென்று துறவியாவதும்,  கதை ஒரு வித happy endingஆக முடிவதும் எந்தளவு யதார்த்தமானது என்ற கேள்வியில் உழன்றுகொண்டிருக்கிறேன்.

இவ்விரண்டு புத்தகங்களையும் அடுத்துடுத்து வாசிக்கக் கிடைத்தது தற்செயல் சம்பவமே. ஆனால்  இவற்றை அடுத்தடுத்து வாசித்தனால் மனிதவாழ்வில் காமம் எத்தனை வடிவங்களில் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை அறியக்கூடியதாக இருந்தது.

சற்று நாட்களுக்கு முன்பு புதுமைப்பித்தனின் ”காஞ்சனை”  என்னும் சிறுகதையில் உள்ள படிமங்களையும், சூட்டுசுமங்களையும் அறியக்கிடைத்தது. அங்கும் காமம்தான் கருப்பொருள். ஆனால் அது ஒரு பேய் என்னும் உருவகத்தினுள்ளால் படிமமாகக் காட்டப்படுகிறது. கதாநாயகனின் படுக்கையில் பிணவாடையும், துர்நாற்றமும் அடிக்கிறது.

எஸ். ரா காமத்தினைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

”கனியில் துளையிட்ட புழு வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டிருப்பதைப் போல காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்து கொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர்கொள்வதும், வெற்றி கொள்வதும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாகவும், அறியாமை நிரம்பியதாகவுமே இருக்கிறது. உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தைஎப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.

காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்படவேண்டிய ஒரு ரகசியமல்ல. அதே சமயம் கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும் அழுவதும் போல அது ஒரு உணர்சியின் வெளிப்பாடு! ”

எஸ். ராவைப்போல் பல சிக்கலான விடயங்களை இலகுவாகவும் ஆழமாகவும் கூறுபவர்கள் மிகக் குறைவு.

”கங்கணம்”, ”பசித்த மானுடம்” ஆகிய நூல்கள் மனித உணர்ச்சிகளை,  அதன் செயற்பாடுகளை, அதன் பலாபலன்களை கூறுகின்றன.

வாசித்துப்பாருங்கள்.

மணவிலக்கானவனின் சாட்சியம்

கனடாவில் வெளிவரும் ”உரையாடல்” இலக்கிய இதழில் (2014) வெளிவந்த கட்டுரை.
 
நான் விவாகரத்தானவன். இப்பதிவானது எனது சுயத்தை நான் கேள்விக்குட்படுத்தியபோது என்மனதில் தோன்றியவையே. மற்றவர்கள் என்னுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பேசுவது நாகரீகமற்றது என்பதால் நான் மற்றவரின் எதுவித சரி, பிழைகளைப் பற்றியும்  இங்கு பேசப்போவதில்லை. இந்தப் பதிவினை நீங்கள் வாசித்தபின்  சக மனிதன் ஒருவனின் தவறுகளைக் 'கற்றுக்கொண்ட பாடங்களாக”  நோக்குவீர்களாயின் நான் இப்பதிவினை எழுதிய நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்பேன். பின்னூட்டங்களையும் 'சஞ்சயன்" என்னும் தனிமனிதனின் வாழ்க்கையனுபவம் என்பதைத்தவிர்த்து இது பேசப்படவேண்டியதொரு விடயம், பலரும் சுயத்துடன் உரையாடவேண்டிய விடயம் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் எழுதுவீர்களாயின் இரட்டிப்பு மகிழ்ச்சி.

மனித உறவுகள் மிகவும் சிக்கலானவை. அதிலும் சேர்ந்து வாழும் மனிதர்களின் உறவுகள் மிகவும் மிக மிகச் சிக்கல்கள் நிறைந்ததாக மாறிவிடுவதுண்டு. நானும் இப்படியானதொரு உறவினைக் கடந்து வந்தவன். அந்த வலிகள் இன்றும் என்னுள் உறைந்துவிட்டிருக்கின்றன. இன்றும் சில சம்பவங்களோ, நினைவுகளோ, அல்லது காட்சிகளோ அந்த நாட்களை அல்லது சம்பவங்களை உயிர்ப்பித்து விடும். அப்போது அவை நடைபெற்றபோது இருந்த மனநிலை, சூழ்நிலைகள் நினைவில் வந்து, என்னில் எனக்கு அருவருப்பு ஏற்படும், இதயம் படபடக்க உடம்பு முழுவதும் ஒருவித பலத்த அசௌகரீயத்தை உணர்வேன், அந்த நினைவில் இருந்து உடனேயே கழன்று கொள்ளவேண்டும் போல் உணர்வேன். ஏதோ அசிங்கந்தை மிதித்துவிட்டது போலிருக்கும்.

தற்போதேல்லாம் கடந்து காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் பல ஆண்டு இடைவெளி ஏற்பட்டிருப்பதால், கடந்துபோன வாழ்க்கைச் சம்பவங்கள் எனது பிழைகளை அப்படியே படம் போட்டுக்காட்டுகின்றன. ஆச்சரியமாய் இருக்கிறது. நான் அத்தனை மோசமான குணங்களைக் உடையவனா என்று எண்ணும்போது!

கோபம் தலைக்கேறி நின்று ஆடும்போது,  நிதானம் இழந்து, என்னிலை மறந்து எத்தனை எத்தனை கூத்துக்களைக் காட்டியிருக்கிறேன். கொலைவெறி என்பதன் உண்மை அர்த்தத்தை மிக நெருக்கமாகவே உணர்ந்து,  சக மனிதன் ஒருவனுக்கு எத்தனை வலிகளை கொடுக்க முடியுமோ அதை அளவற்றுக் கொடுத்திருக்கிறேன். எனக்குள் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்பதை சில ஆண்டுகள் கடந்த பின் சற்று எட்டத்தில் இருந்து, கடந்துபோன காலத்தை எட்டிப்பார்க்கையில் புரிகிறது. அக்காலங்களில் வன்முறை என்ற பிரக்ஞை இல்லாமலே வன்முறையுடன் புணர்ந்து அடங்கி ஓய்ந்திருந்திருக்கிறேன். மற்றையவரின் வலி எனக்கு மகிழச்சியாய் இருந்திருக்கிறது.

குழந்தைகளின் மனநிலைகளை எள்ளளவேனும் கருத்தில்கொள்ளாது, மற்றையவர் மீதான எனது உளவியல் வன்முறை இருந்திருக்கிறது. மெதுவாய் ஆரம்பிக்கும் உரையாடல், சொற்களின் வீரியத்தால் வேகம்கொண்டு, விவாதமாகி, வெடித்துச் சிதறும்போது குழந்தைகளின் கனவுகளை நான் அழித்திருந்ததை அந்நாட்களில் புரிந்து கொள்ளமுடியவில்லை. இன்று மிஞ்சியிருப்பது குழந்தைகள் மீதான எனது குற்ற உணர்ச்சி மட்டுமே.

மற்றையவர்களின் மனநிலைகளைப் புரியாது வார்த்தைகளைத் தீட்டி நுனியில் விச வார்த்தைகளைப் பூசியபின், குறி தவறாது எய்திருக்கிறேன். மற்றையவரின் எதிர்வினையில் வீறுகொண்டு எழுந்து மீண்டும் மீண்டும் அதிக வார்த்தை விசம் கலந்து எய்திருக்கிறேன். ஒரு வாழ்க்கையை வார்த்தைகள் அழித்துக் கொண்டிருந்ததை அன்று என்னால் உணரமுடியவில்லை, குரூரங்களின் வெற்றி தந்த போதையினால். எனது குழந்தைகளின் மனம், அமைதி ஆகியவை பற்றிய எதுவித சிந்தனையும் இருக்கவில்லை, ஏன், எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய பிரக்ஞையும் இருக்கவில்லை என்றே இன்று உணர்கிறேன்

வானில் இருந்து விழும் எதையும் மௌனமாய் ஏந்திக்கொள்ளும் பூமிபோல, குழந்தைகளும் பெற்றோரின் யுத்தகளத்தை, குரூரமான வார்த்தைகளை, தூசணங்களை, செயல்களை, குரூங்களை எதுவித விமர்சனமும் இன்றி, எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டார்கள். அவை ஏந்திய அனைத்தும் என்னை நோக்கி ஏதோ ஒரு விதத்தில், ஒரு நாள் வீசப்படும் என்று தெரியாதவனாய்  நான் விதைத்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவுதான் இன்று தன்னம் தனியே ஒரு தோல்லியுற்ற தந்தையின் மனநிலையில் நான் கடந்துகொண்டிருக்கும் வாழ்வு. குழந்தைகளினுள்ளும் நாம் விதைத்த அந்த விசத்தின் விதைகள் விதைக்குப்பட்டிருக்குமோ என்ற கேள்வி பெரும் பாறையின் கனத்துடன் மனதினுள் இருக்கிறது.

இரண்டு பெரிய மனிதர்கள் தத்தமது கருத்துப்பகிர்வுகளை  சுமூகமாக முடித்துக் கொள்ளத் தெரியாதவர்களாய் இருந்ததால், ஆரம்பத்தில் கருத்துப் பகிர்வாக இருந்தவை எல்லாம் காலப்போக்கில் விவாதங்களாக மாறி, விவாதங்கள் வார்த்தைக் குண்டுகளில் வெடித்துச் சிதறி முடிந்தபோது எனது வாழ்க்கையின் அத்திவாரம் பிளவுபடத் தொடங்கியருந்ததை நான் அறிந்துகொள்ளவில்லை. வாழ்வு தரும் சமிக்ஞைகளை அவதானிப்பதும், அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம் என்பதும் இன்று புரிந்திருக்கிறது. அன்று அது புரியவில்லை. ஏன் என்பதற்கான பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
காலப்போக்கில் எதைப் பேசினாலும், எப்படி பேசினாலும் வார்த்தை யுத்தம் ஏற்படலாம்  என்னும் நிலை வரலாம் என்றபோது பேசாது இருப்போம், என்ற சுடலை ஞானம் வரும். ஆனாலும் அதுவும் சற்று நேரம்தான். மீணடும் வேதாளம் முருங்கையில் ஏறிப் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும்.

ஒன்றாய் இருந்த படுக்கை வேறு வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு, உனது, எனது என்று பாகம் பிரிக்கப்பட்டு, தனித்தனிச் சமையல் என்று ஆகியிருந்த காலமும் இருந்தது.

தொலைபேசியில் மற்றயவரைக் குறை சொல்லியே மகிழ்ந்த காலங்களும், எனது தவறுகள் மிகக் குறைவு என்று நியாயம் கற்பித்த நாட்களும், அடங்காப்பிடாரி என்று மற்றையவர் முன்னிலையிலேயே ஊருக்கு அறிவித்த நாட்களிலும் எனது தவறுகளை நான் உணர்ந்து கொள்ளவில்லை. எந்த  நேரத்திலும் மற்றவருடைய மனநிலையை நான் புரிந்து கொண்டு அதிகம் விட்டுக்கொடுத்துப் போகாத மனநிலை சிறிது சிறிதாகவே எனக்குள் புகுந்து இறுதியில் அவையே வாழ்க்கையாகியது.

பேச்சற்று, குறுஞ்செய்தியில் மட்டுமே பேசிக்கொண்டேன். மற்றையவர் வாய் திறந்த நேரங்களில் காட்டுக் கத்து கத்தினேன். மற்றையவருடன் உரையாடுவதே அசிங்கமானது என்ற மனநிலையும் வாய்த்திருந்தது. இன்றும் அப்படியே! கண்ணில் எரிக்கும் வெறுப்பை உமிழ்ந்துகொண்டு திரிந்தேன். எங்கெல்லாம் மற்றையவரை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தமுடியுமோ அங்கெல்லாம் அதை மிகச் சிறப்பாக செய்து குரூரத்தின் ருசியை பருகிக்கொண்டேன்.

யார் உதவி கேட்டாலும் உடனே போய்ச் செய்வதே எனது வழக்கம். ஆனால் வீட்டிலோ என்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்ட மற்றையவர் ஏதும் உதவிகேட்ட நேரங்களில் 'இவ்வளவு செய்யும் உனக்கு இதைச் செய்யத்தெரியாதா” என்று இகழ்ச்சியுடன் குரூரம் காட்டியிருக்கிறேன். மற்றையவரின் அமைதியைக் குலைப்பதில் முனைப்பையையும்  மகிழ்ச்சியையும் கண்டிருக்கிறேன். மற்றையவரைக் காணும் நேரமெல்லாம் புறுபுறுத்தபடியோ, திட்டியபடியோ அல்லது பற்களை நெருமி கண்களில் நெருப்பினைக் குழைத்துக் காண்பித்தபடியே கடந்துபோயிருக்கிறேன்.  சாதாரண மனிதனுக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச அன்பை, அக்கறையை, கவனத்தை நான் ஒருபோதும் அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை. மாறாகக் கேலியும் அசிங்கமும் படுத்தினேன். இவையெல்லாம் பிரச்சனைகள் தொடங்கி சில ஆண்டுகளுக்குள் என! மற்றையவர் துன்பப்படும்போது, வேதனைப்படும்போது, கண்ணீர் சிந்தும்போது எனது கர்வம் மேலோங்கி, குரூரமாய் மகிழ்ந்திருந்திருந்தேன்.

குழந்தைகளுடனான நேரங்களைத் தவிர்த்து ஏனைய நேரங்களில், வேலையே கதி என்று இருந்திருக்கிறேன். வீடுசென்றால் பிரச்சனைகள் வரும் என்பதால் வாகனத்தில் உறங்கிக் கிடந்த நாட்களும் உண்டு.

நாடுவிட்டு நாடுவந்த குடும்ப நீதிமன்றங்கள், நண்பர்களின் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும், கறுவிக்கொட்டியபடியே வரட்டுக் கௌரவம் பேசி, முன்வைக்கப்படும் தீர்வினை ஏனோதானோ என்று முழு மனதுடனான சமாதான பிரக்ஞை இன்றி, செயற்படுத்திய நாட்கள்,  ஒரு குடும்ப நிறுவனத்தின் இறுதிக்காலம்  என்றதையும் நான்  புரிந்துகொள்ளவில்லை.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்க எது காரணியாய் இருக்கிறது? ஆதிக்கத்தன்மையா? அன்பின்மையா? மற்றைவர் மீதான மரியாதையை மதிக்காமையா? யதார்த்தத்தை உணராத்தன்மையா?  எனக்கேதோ இவையனைத்துமே மனப்பிறள்வுகளுக்குக் காரணம் என்று படுகிறது..

காதலின் பின்பு, திருமணத்தின் பின்னான ஆரம்ப நாட்கள் கடந்து முடிந்த பின்புதான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. ஆரம்பகால வாழ்க்கையானது ஒரு கற்பனை விளம்பரம் போன்றது. எல்லாமே மகிழ்ச்சியாயும், சிறப்பானதாயும் இருக்கும். எதையும் விட்டுக்கொடுப்போம். இசைந்துபோவோம். கலந்தும் போவோம். கற்பனையில் பினாத்தும் காலமும் இதுவே
ஆனால் அதன் பின்னான காலம்தான் வாழக்கையின் பிற்காலங்களை முடிவுசெய்கிறது என்று நான் புரிந்துகொண்டபோது  திருமணமாகி இருபது வருடங்களாயும், விவாவகரத்தாகி நான்கு வருடங்களாகியும் இருந்தது.

ஆரம்பகாலங்களில் ஒருவர் மீதான ஈர்ப்பு அதிகமாய் இருக்கும். அவருடனேயே இருக்கவேண்டும், பேசவேண்டும் என்று நிலை சற்று சற்றாக மாறத்தொடங்குவது இயற்கையே. இந்த யதார்த்தத்தை பலரும் புரிந்துகொள்வதில்லை. எந்த மனிதனுக்கும் சுயம் என்று ஒன்று உண்டு. அதன் இருப்பு, விருப்பு, வெறுப்பு என்பன மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். அதேபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். இவற்றை உன்னிப்பாக அவதானித்து மற்றையவர் மீதான சுதந்திரத்தை மதித்து, அதே போல் எனது சுதந்திரமும் மதிக்கப்படும்போதுதான் வாழ்க்கை மீதான பலமானதொரு அத்திவாரத்தை கட்டியெழுப்ப முடிகிறது.

எனது தவறுகளில் முக்கியமானது நான் மற்றையவரின் சுயம், தன்மை, எதிர்பார்ப்பு,  குணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமையே என்பது எனது கணிப்பு.

எனது சுயம், தன்மை, விருப்பு வெறுப்புக்களை நான் முன்னிறுத்தியபோது என்னையறியாமலே ஒருவித ஆதிக்கத்தன்மை உருவாகும் சந்தர்ப்பம் இருக்கிறதல்லவா?  இப்படியான சந்தர்ப்பங்கள்  இரு பகுதியினருக்கும் பொருந்தக்கூடியவை.
நான் மற்றையவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று பேசுவது நாகரீகமற்றது என்று உணர்வதால் மற்றையவரின் சரி பிழைகள் இங்கு பேசப்படமாட்டாது. அதே வேளை நான் செய்தவை அனைத்தும் பிழை என்றோ அல்லது சரி என்றோ நான் கூறவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சேர்ந்து வாழும் ஆரம்பகாலங்களின் கவர்ச்சி வடியும்போது ஒருவர் மீதான கவர்ச்சியும், ஈர்ப்பும் குறையும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை. அது இயற்கையே. இக்காலத்தில் மற்றையவர் மீதான மரியாதையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். என்னைப்போல் மற்றையவரையும் மதிப்பதே சுதந்திரம் என்பார்கள். ஆனால் பல குடும்பங்களில் இது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. மற்றையவரின் சுயம், விருப்பு, வெறுப்புக்கள், குணாதியங்கள், பலம், பலவீனம் ஆகியவற்றை நாம் நன்கு விளங்கி உள்வாங்கிக்கொண்டாலே அன்றி எம்மால் வளமானதொரு உறவை வளர்த்துவிடமுடியாது. நான் தலைகீழாக விழுந்து அடிபட்ட இடமும் இதுவே.

இருமனிதர்கள் சேர்ந்து வாழுதல் என்பது ஒருவித ஒப்பந்தமே. எம்மில் பலருக்கு அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கிளை ஒப்பந்தங்கள் புரிவதில்லை.  என்னைப் பொறுத்தவரையில் நிறுவனமயப்படுத்தப்படும் குடும்ப உறவுகளில் கிளை ஒப்பந்தங்களே முக்கியமானவை.

கிளை ஒப்பந்தங்கள் மற்றையவரின் மீது மரியாதை வளரும்போது தானாவே உருவாகிவிடுகின்றன. கோயிலுக்குச் செல்வது ஒருவருக்கு மிக அவசியமானதாயும். மற்றையவர் நாத்திகராகவும் இருக்கும்  சந்தர்ப்பத்தில், நாஸ்திகர் அவ்விடத்தில் தனது நாஸ்திகத்தை நிறுவாது, தனது துணைவரைக் கோயிலுக்குச் சென்று வர அனுமதிக்கும்போதுதான் ஒரு கிளைஒப்பந்தம் உருவாகிறது. காலப்போக்கில் இருவருக்கும் இதுபற்றிய பிரக்ஞை ஏற்படுவதும் சாத்தியமாகிறது. இது மேலோட்டமான ஒரு உதாரணமே.

உரையாடலுக்கும் விவாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றி நான் அறிந்துகொண்ட போது எனது வாழ்வில் உரையாடல்களை விட அதிகமாக விவாதங்களே நடந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். உரையாடலுக்கும் விவாதத்திற்குமான இடைவெளி என்ன? மிக இலகுவாகக் கூறினால் உரையாடலில் இருவரும் வெற்றிபெறுவார்கள். ஆனால் விவாதத்தில் ஒருவரே வெற்றி பெறுவார். குடும்பம் இருவரை அடிப்படையாகக் கொண்டது எனவே உரையாடலே அவசியமாகிறது அங்கு. வாழ்க்கை நாம் கேட்பதை, வரும்புவதைத் தருவதற்கு அது நமது நண்பன் இல்லை என்ற தொனியில் ஒரு பாட்டு 'தங்கமீன்கள்" படத்தில் வருகிறது. அவ் வார்த்தைகள்  உண்மையானவை என்பதை நான் வாழ்ந்து அனுபவித்துக் கடந்திருக்கிறேன்.

வாழ்வு என்பது என்னுடையது. அதன் தரம் (Quality of life), விழுமியங்கள், சுயம், விருப்பு, வெறுப்பு பற்றிய பிரக்ஞையுடன் வாழ்வது அவசியம் என்று கருதுபவன் நான். மற்றையவருடனான எனது  கிளை ஒப்பந்தங்கள், மனங்களுக்கிடையிலான மென்மையான உணர்வுகள், அன்பு ஆகியவை பெரும்சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது பல வருடங்கள் நான் அவற்றுடன் இழுபட்டுக்கொண்டே வாழும் வழிமுறையைக் தெரிவு செய்தேன். அதுவே எனது பாரிய முட்டடாள்தனங்களில் முதன்மையானது. என் ஆழ்மனதை நான் அறிந்திருந்தும் அதன் கோரிக்கைகளுக்கு நான் செவிமடுக்கவில்லை. அதன் பயனாகத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் மனச்சோர்வு என்றும் நோயுடன் வாழ வேண்டியதாயிற்று. அதன் பாதிப்பு இப்போதும்   உண்டு. அதுமட்டுமல்ல எனது குழந்தைகளுக்குத் தினமும் குடும்பச்சண்டைகள் வேதனையைக் கொடுத்தன, இன்னொரு மனிதருக்கு என்னால் முடிந்தளவு வலியைக் கொடுத்தேன். நான் மனதில் வேதனையுடன், மகிழ்ச்சியற்றும்,  நடைப்பிணம்போலவும், ஏனோதானோ என்று வாழ்ந்து தீர்த்தேன்.

குடும்பம், சகோதரர்கள், பெற்றோர், ஊரார், சமூகத்தில் எனது கௌரவம், பெரியமனுசத்தன்மை என்று பலவிடயங்கள் என்னை ஒரு முடிவு எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளியிருந்தன.

உண்மையில் இப்போது நினைத்துப் பார்க்கும் போது எமது சமூகக் கட்டமைப்பு மீது கடும் வெறுப்பு ஏற்படுகிறது.

என்னால் தொடர்ந்தும் சேர்ந்து வாழ முடியாதிருக்கிறது நான் இந்த உறவில் இருந்து விலகிக் கொள்ளப்போகிறேன் என்று உதவி கேட்டபோது 'சமாளித்துப் போ” என்னும் பதிலே கிடைத்தது. இந்தப் பதிலை சற்று ஆராய்வோமேயானால் என்னால் உண்மையில் 'மூச்சு எடுக்க முடியாதிருக்கிறது, உதவுங்கள் என்று நான் உதவிகோரும்போது, 'சற்று சமாளித்துக்கொள், மூச்சைக் குறைவாக எடு” என்பது போலவே சமூகத்தின் பதில் இருந்ததாக நான் உணர்கிறேன்.

என்னிடம் யாரும் திருமணம் பற்றிக் கேட்டால் 'முடிந்த வரையில் தள்ளிப்போடு” என்றே கூறுகிறேன். வாழ்க்கையில் பிரச்சினை! என்ன செய்யலாம் என்றால்  முழுமனதுடன் சேர்ந்து வாழ்வதற்கான காரியங்களில் ஈடுபடு, அது வெற்றியளிக்கவில்லை என்றால் நண்பர்களாய் பிரிந்து மகிழ்ச்சியாய் வாழுங்கள் என்பேன்.

நான், எனது வாழ்வில் பிரிவு என்பதே தீர்வு என்று உணர்ந்தவுடனேயே அதை நட்புணர்வுடன் எடுத்துக்கூறி விளக்கி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று நாம் கடும் எதிரிகளைப்போல் வாழவேண்டியதில்லை. அதனால் ஏற்படும் வேதனைகளையும் தவிரத்;திருக்கலாம். குழந்தைகளும் பல வேதனையான நாட்களை அனுபவித்திருக்கமாட்டார்கள், நான் கடந்து வந்து பாதை கரடுமுரடு குறைவானதாக இருந்திருக்கும்.

நான் தனியே பிரிந்து செல்வதாக முடிவு செய்தபோது பின்வரும் கேள்விகளே எனக்குப் பெரும் உறுதுணையாய் இருந்தன.
  • மற்றையவரில் எனக்கு அன்பு, காதல் இருக்கிறதா?
  • எனது வாழ்வில் அமைதி இருக்கிறதா?
  • நான் மனதளவில் மகிழ்ச்சியாய் இருக்கிறேனா?
  • இன்றிருக்கும் நிலை மேம்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறதா? அவ்வாறு மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதா? அதை நான் விரும்புகிறேனா?
  • குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா?
  • நான் இல்லாது போனால் குழந்தைகளின் நாளாந்த வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படும் ?
நான் இல்லாவிட்டால் தினம் தினம் சண்டைகளைக் கண்டு களைத்தவர்களுக்கு சிறிதளவாவது அமைதி கிடைக்குமல்லவா?
இப்படிப் பல கேள்விகள் எழுந்தன.

என் குழந்தைகளுக்கு நான் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள் என்பதைக் கற்றுக்கொடுக்காது சமாளித்தபடியே தினம் தினம் சண்டைகளுக்கு மத்தியில் வாழுங்கள் என்றல்லவா கற்றுக்கொடுக்கிறேன் என்ற சிந்தனை என்னை பெரிதாய் பற்றிக்கொண்டு அழுத்தத்தொடங்கியபோதே நான் விழித்துக்கொண்டேன். என் குழந்தைகளும் இப்படியானதொரு நிலைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டால், அவர்கள் என்னையே பின்பற்றினால், எத்தகைய வேதனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என்ற எண்ணம் எனது முடிவுகைள விரைந்து செயற்படுத்தத் தூண்டியது!

ஒரு முடிவினை எடுப்பது மிக மிக இலகு அதை செயற்படுத்துவதுடன் ஒப்பிடும்போது. எனது முடிவினை குழந்தைகளுக்கு அவர்கள் மொழியில் எடுத்துகூறவேண்டும். அவர்களை தேவைக்கு அதிகமாய் கலரப்படுத்தக்கூடாது. இருவரையும் கடற்கரைக்கு அழைத்துப்போய் அமைதியான சூழ்நிலையில் மெதுவாய் விளக்கிக் கூறியபோது, அவர்கள் இதனை எதிர்பார்த்திருந்தவர்கள் போலவே உணர்ந்தேன்.

பிரிந்துபோகும் மனிதர்கள் நண்பர்களாக பிரிந்துசெல்லாவிட்டால் வாழ்வு எத்தனை வலியானதாய் மாறிப்போகும் என்பதை அதன் பின்னான காலங்களில் இருந்து உணர்ந்துகொண்டிருக்கிறேன். ஒருவரின் பலவீனமான இடத்தை குறிபார்த்துத்தாக்குவதும், அதுவே போட்டியாய்மாறிப்போவதும் வாழ்க்கை விவாகரத்தின் பின்பும் நிம்மதியாய் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். இருவரும் நமக்குள் உறவு எதுவுமில்லை, நாம் வெவ்வேறு மனிதர்கள் என்று உணர்ந்துகொண்டு நண்பர்களாய் வாழாவிட்டாலும் எதிரிகளாய் மாறிக்கொள்ளாது வாழ்ந்தாலே குழந்தைகளுக்காவது அது ஆறுதலாயிருக்கும்.

ஒரு குடும்ப வாழ்வில் இருந்து விலகிக்கொள்வது என்பது இலகுவானதல்ல. அதுவும் எமது சமுதாயத்தில். பெண்களின் பக்கம் ஏராளமான பிரச்சனைகளும், சவால்களும் இருப்பது போல எனக்கும் சவால்கள் இருந்தன, இருக்கின்றன. குடும்பத்தை பிரிந்தவன் என்னும் ஏளனமும், குத்தல் கதைகளும், பெண் பொறுக்கி என்றும், காமுகன், பொறுப்புற்றவன் என்றும் முதுகுக்குப்பின்னே பேசக்கேட்டிருக்கிறேன். எதையும் நேரடியாக பேசிப்பழக்கமில்லா சமூகம் எம்முடையது. என்னுடன் பழகும் பெண்களையும் வாய்கூசாது என்னுடன் இணைத்துப்பேசும் பெரியமனிதர்களும் இருக்கிறார்கள்.

விவாகரத்தானவன் ஒரு மோசமான மனிதன் என்றும், விவாகரத்தாகதவர்கள் தாம் ஏதோ சிறந்த மானிடப்பிறவிகள்போலவும் நினைத்துக்கொள்ளும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இப்படியான மனிதர்களின் வார்த்தைகள் சில நேரங்களில் எனக்குள் மிஞ்சியிருக்கும் சக்தியையும் உறுஞ்சிவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் கருத்தாடல்களின் போது கருத்தை கருத்தால் வெற்றிகொள்ளமுடியாத மனிதர்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கையில் எடுக்கும் கோமாளித்தனங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

இருப்பினும் விவாரத்தானவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் எம்மைப்போன்றவர்களே என்று எண்ணும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனதுக்கு ஆறுதலான விடயம் இது.

வாழ்க்கை ஒன்றை வாழந்துகொண்டிருக்கிறோம். அதன் நன்மை தீமைகள் எம்மை பாதிக்கின்றன. எது எப்படியாயினும் பிறப்பில் தொடங்கப்பட்ட இந்த வாழ்க்கையினை நாம் வாழ்ந்து முடிக்கவேண்டும். எமது வாழ்வினை முடிவெடுப்பதும் நாம்தான். அதை வாழ்வதும் நாம்தான்.

விவாகரத்தானவனும் மனிதனே. அவனொன்றும் வானத்தில் இருந்து விழுந்தவனில்லை.




சனிப்பெயர்ச்சி படு அமோகம்

இன்று ”தர்ம அடியில்” இருந்து மயிரிழையில் தப்பினேன்.
மேட்டர் இதுதான்.

நான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதோ, இடம்பெயர்வதோ, அரச போக்குவரத்துச் சாதனங்களை நம்பித்தான்.
 
எனது அருமை நண்பரொருவர் வீதியில் வழுக்கிவிழுந்து, காலை படுபயங்கரமாக முறித்துக்கொண்டதால், அவருக்கு உதவுவதற்காக, அவர் தனது பச்சை நிறமான வாகனத்தை (கார்) என்னிடம் தந்திருக்கிறார்.

இப்போது என்னைக் கடந்துபோகும் அரச போக்குவரத்துச் சாதனங்களை நான் ஒரு நக்கல் பார்வையுடன், நண்பரின் பச்சைநிற காரில் கடந்துகொள்கிறேன்.

இன்று மாலை ஒரு இடத்தில், நண்பரின் பச்சைநிறக் காரை ஒரு வீதியில் நிறுத்திவிட்டு, எனது வேலைகளை முடித்தபின், ஏறத்தாள 3 மணிநேரத்தின் பின் மீண்டும் காரை நிறுத்திய இடத்திற்கு வருகிறேன்.

கார் வெள்ளையாய் பனிபடிந்துபோய் இருக்கிறது. என்னடா இது, இப்படி பனி படிந்திருக்கிறதே என்று நினைத்தபடியே காரின் கதவினுள் திறப்பைபோட்டு திறக்கமுயற்சித்தேன். குளிரின் காரணமாக திறப்பு உள்ளே செல்லவில்லை.

இது நண்பரின் கார்தானா என்ற சந்தேகம் வந்தது. அதற்குள் இப்படி பனி டிந்துவிட்டதா எனறு சந்தேகமும் வந்தது. கோயிலை சுற்றிவருவதுபோன்று காரை மூன்றுமுறை சுற்றிவந்தேன்
.
கார் பச்சைநிறம்தான். அதே வடிவம், அதே இனம், அதே மொடல்.

சற்றுநேரம் திறப்புடன் போராடுகிறேன். அருகில் இருந்த தொடர்மாடி வீட்டில் இருந்து ஒருவர் என்னை பார்த்தபடியே இருக்கிறார்.

அவரைப் பார்த்து சரியான குளிர். கார் திறப்பு உள்ளே செல்லவில்லை என்றேன்.

அதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேனே என்றார் அவர்.

சற்று யோசித்தவர்... என்னைப் பார்த்து இப்படிக் கூறினார்.
”திறப்பு உள்ளே போகாது”

நான் ஙே என்று முழுசியவாறு ”ஏன்” என்றேன்.

”அது எனது கார், உனது கார் இன்னும் சற்று முன்னே 3 கார்களுக்கு அப்பால் நிற்கிறது பார், உனது திறப்பை அங்கே போடு, கார் தன்பாட்டில் திறக்கும்” என்றார்.

அண்ணலும் நோக்கினேன், நண்பரின் ராசாத்தி, பனி படியாமல், செக்சியாக என்னை நோக்கினாள்.

சனிப்பெயர்ச்சி படு அமோகம்...

சுபநேரத்தில் வருகைதந்த போலீஸ்

இன்று  ஒஸ்லோ நகரத்து ட்ராம்ப் வண்டியின் பின்பகுதியில் குந்தியிருந்தேன். எனக்குப் பின்னால் கதவுகள் இருக்கவில்லை. வண்டியும் மனிதர்களால் நிரம்பிவழியவில்லை.

எனது இருக்கைக்கு சமாந்தரமான இருக்கையில் நான்கு இளையோர் இருந்தனர். பார்த்தால் 17 - 18 வயதிருக்கும்.

ஒருவன் என்னிலும் அதிகமான, இருட்டின் நிறத்தை கொண்டிருந்தான். பார்த்தால் எனது ஆபிரிக்க உடன்பிறப்புக்களின் நாடுபோல் இருந்தது. அதாவது சோமாலி லான்ட். மற்றையவன் பாக்கிஸ்தான். மூன்றாமவன் நோர்வே நாட்டவன். நான்காமவன் அவுஸ்திரேலிய கறுப்பினத்தவர்களைப்போல இருந்தான். நால்வரும் உலகத்தின் நான்கு கண்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். வட, தென் அமெரிக்கர்களை அங்கு காணவில்லை. 

இளசுகளல்லவா, மிகவும் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடிபடியே இருந்தார்கள். நானும் ரசித்துக்கொண்டிருந்தேன், முன்னாலிருந்த ஒரு குழந்தையை.

திடீர் என்று நான்கு கண்டங்களும் போர் அற்ற ஆப்கானிஸ்தான்போன்று அமைதியாயின.

என்ன விடயம் என்று ஆராயுமுன் என் முன்னே டிக்கட் பரிசோதகர் நின்றிருந்தார். எனது டிக்கட்ஐ கேட்டார். கொடுத்தேன். நன்றி கூறி திருப்பித்தந்தார்.

பின்பு கண்டங்களை நோக்கித் திரும்பினார். நால்வரும் சன்னலுக்கு வெளியே புதினம் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். டிக்கட் பரிசோதகரை கவனிக்கவில்லையாம்.

டிக்கட் பரிசோதகர் சற்று செருமினார். கண்டங்களுக்கு கண்டம் ஆரம்பித்தது.
பசங்கள் திரும்பியே பார்க்கவில்லை.

பரிசோதகர் ஒரு கறுப்பினத்தவர். சாதாரண உடையிலேயே வந்திருந்தார்.
பசங்களைப் பார்த்து நான் டிக்கட் பரிசோதகன். இதோ எனது அடையாள அட்டை. உங்கள் டிக்கட்டுக்களை காட்டுங்கள் என்றார்.

அவர்களில் மூவர் நாங்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றார்கள்.
ஒருவன் மட்டும் டிக்கட்ஐ கொடுத்தான்.

பரிசோதகர் அந்த டிக்கட்டை பரிசோதிப்பது போன்று நடித்தபடியே நீங்கள் எங்கே படிக்கிறீர்கள் என்றார்.

பாடசாலையின் பெயரைக் கேட்டார்

பாடசாலையின் பெயர் வந்தது.

ஒரே வகுப்பு நண்பர்கள் என்றால் ஒன்றாய் திரிவது மகிழ்ச்சிதானே என்றார் பரிசோதகர்.

"ஆமா ஆமா" என்பதுபோல ஆமோதித்தார்கள்.

அவர்களைவிட்டு விலகிச் சென்ற பரிசோதகர். வேறு சிலரை பரிசோதித்தார்.
இப்போ இளசுகள் மீண்டும் மகிழ்ச்சியாய் தங்களை மறந்து இருந்தார்கள்.
பரிசோதகர் திடீர் என்று கண்டங்களை நோக்கி வந்து மிகக் கடுமையான குரலில் நீங்கள் எத்தனையாம் ஆண்டு பிறந்தீர்கள் என்றார்.

1997 என்று ஒரு கண்டம் தடுமாறிக் கூற
(நோர்வேயில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கட் எடுக்கவேண்டும்)

ஒருவன் முன்பு டிக்கட் வைத்திருந்தவனின் டிக்கட்டை வாங்கி நீட்ட..

மற்யைவர்கள் நாங்கள் 2000ம் ஆண்டு என்று கதை விட...

பரிசோதகர் கடுமையாகியபோது

கண்டங்கள் அவரை மரியாதைகுறைவாக பேச..

பரிசோதகர் வழியை அனுமார்போன்று அடைத்து, வாக்கி டாக்கியில் ஏதோ மந்திரம் சொல்ல..

அடுத்த தரிப்பில், சுபநேரத்தில் போலீஸ் ட்ராம்ப்க்குள் ஏறியது.
அப்புறமென்ன மூவருக்கு டிக்கட் இல்லாது பயணித்ததற்கான அபராதம் 800 குறோணர்கள் (120 டாலர்கள்). அரச ஊழியரை நால்வரும் அவமதித்ததால் போலீஸ் வழக்கு.

நமக்கு, எழுத ஒரு கதை. உங்களுக்கு வாசிக்க ஒரு கதை

கேள்வி கேட்பவன் தேசியத்தின் எதிரியா?



உண்மையில், இன்றுவரை என் எழுத்தில் நான் பெருமைகொண்டது கிடையாது. அதன் வீச்சை, அதன் தாக்கத்தை, ஒரு ”பகுதியினருக்கு” அது கொடுக்கும் "கிலி"யை நான் இன்றுவரை அறிந்திருக்கவில்லை.

எனது எழுத்தும், விமர்சனங்களும், நோர்வேயில் 2009க்குப்பின் மக்களை ஏமாற்றும் ஒரு பகுதியினருக்கும், அதன் விசுவாசிகளுக்கும் பெரும் பிரச்சனையாய் இருக்கிறது என்பதை பல மக்கள் மத்தியில் ”அக் கும்பலாலும், விசுவாசிகளாலும்” ஒப்புக்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல ”எழுதாதே” என்னும் தொனியில் உத்தரவும் வந்தது.

இதையும் மீறி, மக்களின் அதரவு எனக்கு இருந்தது என்பதானது எனது செயற்பாடுகளின் உண்மைத்தன்மையையும், உழைப்பையும், எனது எழுத்துக்கள் நியாயமானவை என்பதையும் ”அவர்களுக்கு” எடுத்துக்கூறியிருக்கும். 

”அவர்களுக்கு” அது புரிந்திருக்குமா என்பது வேறு கதை.
நான் தொடர்ந்தும் இப்படியே எழுதுவேன் என்ற பின்பும் ”கும்பலின்” நரித்தனமான, ஜனநாயகவிரோத விளையாட்டுக்களையும் மீறி எனது செயற்பாட்டில், எழுத்தில் நம்பிக்கைவைத்து, குறிப்பிட்ட ஒரு பதவியை தந்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அப்பதவியை, ஒரு நிறுவனத்தின் நன்மைகருதி ஏற்க மறுத்தமைக்காக மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கேள்விகேட்பவன் தேசியத்துக்கு எதிராவன் என்னும் நிலையில் இருந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எப்போது விளித்துக்கொள்ளப்போகிறோம்? கருத்து முரண்பாடுடையவனோடு எப்போது உரையாடப்போகிறோம்?

நான் எங்கே தேசியத்துக்கு எதிராக எழுதினேன்? என்ற கேள்விக்கும், எங்கே சிங்களவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினேன்? என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்களுககான எனது கேள்விகளுக்கு ”குத்தகைக்காரர்களிடம்” இருந்து பதிலே இல்லை. இருந்தால்தானே பதில் வருவதற்கு.
.
புனைவு, எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும் இல்லை.”எடுபிடிகளிடமும்” அதிகமாக இருக்கிறது என்பதற்கு மேலுள்ள பந்தி சாட்சி.
குத்தகைக்காரர்கள் மன்னிக்கவேண்டும். சஞ்சயனோ அவனது எழுத்துக்களே என்றும் விற்பனைக்கில்லை.
So I am very sorry guys

சனிமாற்றம் -- படு அமோகமாய் இருக்கிறது

நேற்று முன்மதியம் கடைக்குப்போயிருந்தேன். பெரீய கடை. சூப்பர் மார்கட் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடையின் ஆரம்பத்தில் இருந்து முடிவுரை சுற்றியபோது கால் வலித்தது. அந்தளவு  ‌பெரிய கடை.

எனக்கு பாணுடன்  சேர்த்து உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி தேவைப்பட்டது. அதைத் தேடி எடுத்துக்கொண்டு ஒஸ்லோ முருகனை நினைத்தபடியே பணம் செலுத்தும் இடத்திற்கு நடந்துகொண்டிருந்தேன்.

“ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல நோர்வேஜிய மொழியில் ஒருவர் எனக்குப்பின்னால் இருந்து அழைப்பது கேட்டது.

திரும்பிப்பார்த்தேன். ஒருவர் பெரும் புன்னகையை வாயில் நிறுத்தி நின்றிருந்தார்.

புருவத்தை உயர்த்தி என்ன பிரச்சனை என்றபோது…
“எனது பெயர் பவுல். நீங்கள் எங்கள் கம்பனியின் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி” என்றவாறு தனது அடையாள அட்டையைக் காட்டினார். அதில் நான் வாங்கியிருந்த இறைச்சி தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருந்தது.


“ம்”

“உங்களுக்கு நேரம் இருந்தால் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கலாமா”


நமக்குத்தான் இப்படியான கேரக்டர்கள் என்றால் கருவாடு சாப்பிடுவதுபோல இன்பம் என்பதால் “ ஆம். அதற்கென்ன கேளுங்கள்” என்று தருமியிடம் கேளும் கேளும் கேட்டுப்பாரும் என்ற சிவாஜி போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றேன்.

“அய்யா, நீங்கள் பாதையின் நடுவில் நிற்கிறீர்கள். இப்படி ஓரத்துக்கு வாருங்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாது நிற்போம்” என்று எடுத்த எடுப்பிலேயே என்னைக் கவிட்டார், சேல்ஸ்மேன். இனி அவரை சேல்ஸ்மேன் என்றே அழைப்போம்.


ஒதுங்கி நின்றுகொண்டேன்.. அவர் குனிந்த தனது பையினுள் இருந்து ஒரு ஐபாட் எடுத்தார். எனக்காக இருக்குமோ என்று நான் ஆசைப்பட்டது உண்மைதான்.

அவர் ஐபாட்ஐ தொட்டார். தொட்டால் பூ மலரும் பாடலைப் போன்று அது மலர்ந்தது. காதலியை தூக்கிவைத்திருப்பது போன்று அதை கவனமாக பிடித்திருந்தார்.  என்னிடம் ஒரு புத்தகம் போன்றதொன்றைத் தந்தார். வாங்கிக்கொண்டேன்.

“அதை சற்று வாசியுங்கள். நான் எனது கேள்விகளை தயார்படுத்துகிறேன்” என்றார்

ஏற்கனவே 2 – 3 நிமிடங்கள் கழிந்திருந்தன. எனக்குள் எரிச்சல்வரும் சமிக்ஞை சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்தது.

நான் வாசித்தேன். அதற்குள் சேல்ஸ்மேன் தனது கணைகளை என்னை நொக்கி ஏவத்தொடங்கினார்.


“வயது”
“49?”
”ஆணா, பெண்ணா?”
“என்ன நக்கலா?”
“இல்லை.. கணிணி அப்படி கேட்கிறது”
“ஆண் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறேன்”
“ம்”
”ஏன் இந்த இறைச்சியை வாங்கினீர்கள்?”
“பசித்தது”
சிரித்துவிட்டு “ஏன் வேறு கம்பனிகளின் இறைச்சியை வாங்கவில்லை?”


சரி.. இதை வைத்துவிட்டு மற்றைய கம்பனியுடையதை எடுக்கவா என்று கேட்க நினைத்தேன். என்றாலும் அடக்கிக்கொண்டேன்.


“எனக்கு இந்த கம்பனியின் இறைச்சி பிடிக்கும்”
“ஏன்?”
“தெரியாது, ஆனால் பிடிக்கும் - உனது மனைவியை உனக்கு பிடிப்பதுபோல” என்றேன். மனிதர் நகைச்சுவையை ரசிப்பார் என்று நினைத்தேன். அவர் கேள்வியில் குறியாய் இருந்தார்.


“சுவை, தரம், இறைச்சி அடைக்கப்பட்டிருக்கும் விதம், விளம்பரம்… இவற்றில் ஒன்றறை நீங்கள் தெரிவு செய்யலாம்.
“சுவை”
”இது மட்டும்தானா?”  குரலில் ஏமாற்றம் தெரிகிறது
“சர்வ நிட்சயமாக அது மட்டும்தான்”
”ஏன் உங்களுக்கு தரம், இறைச்சி அடைக்கப்பட்டிருக்கும் விதம், விளம்பரம் போன்றவை எங்களுடைய தயாரிப்பை வாங்கத்தூண்டவில்லை?”

எனக்கு வடிவேலு ஒரு படத்தில் இசை எங்கிருந்து வருகிறது என்று ஒரு பைத்தியத்தை கேட்டு அதன்பின் அவர் பட்ட அல்லல் நினைவுக்கு வந்தது.

”தெரியாது”
”தரத்தில் நம்பிக்கையில்லையா?”
”நான் அப்படிச் சொல்லவில்லை”
”விளம்பரம் பிடிக்கவில்லையா?”
”என்னிடம் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை”
”சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கழிவுகள் குறைந்த எங்கள் பொலித்தீன் பை பிடிக்கவில்லையா?”

எனக்குள் எரிச்சல்வரும் சமிக்ஞை சற்றுத் தொலைவில இருந்து இப்பொது சற்று அண்மையில் வந்திருந்தது.

” உங்களிடம் உள்ள புத்தகத்தில் உள்ள எங்கள் தயாரிப்புக்களில் எதை வாங்குவீர்கள்?”

”இப்படியே நீ கேட்டுக்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ஒன்றையும் வாங்கமாட்டேன்” என்று சொல்ல நினைத்தாலும் மனம் இடம் கொடுக்கவில்லை.

சேல்ஸ்மேன்ஐ மகிழ்விப்பதற்காக அதில் இருந்த பொருட்களில் 6 – 7 பொருட்களைக் காட்டினேன். அதன் பின்தான் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிந்தது. மனிதர் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல கேள்விகளை வைத்திருந்தார்.

”இந்தக் கடைக்கு ஒரு மாதத்தில் எத்தனை தடவை வருகிறீர்கள்?”
”நான் இந்தக் கடைக்கு வருவதே இல்லை. இன்று இந்த ஊருக்கு வந்திருப்பதால் இந்தக் ககை;கு வந்தேன். எனது வீட்டுக்கும் இந்தக் கடைக்கும் இடையில் ஏறத்தாள 35 கி.மீ”

”ம் ..  உனது விலாசம் என்ன?”
”கூறினேன்”
கணிணியில் தட்டினார். ”உனது வீட்டில் இருந்து மேற்கே 1 கி.மீ தூரத்தில் எங்கள் பொருட்களை விற்கும் கடை இருக்கிறது. அங்கு வாகனம் நிறுத்துமிடம் இலவசம். இப்போது அங்க காலநிலை 5 பாகை.” என்றார்

”கேள்விகள் முடிந்துவிட்டதா”
”இல்லை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது”
விதி எப்படியெல்லாம் சதி செய்கிறது என்பதை நான் நினைத்துக்கொண்டேன் திடீர் என்று சனிமாற்றம் நினைவுக்கு வந்தது. பழியை அதன்மேல் போட்டுவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.

”இந்த  இறைச்சி கொள்கலனை கண்டிருக்கிறாயா” என்று கேட்டபடியே ஒரு வட்டமாக கொள்கலனைக் காட்டினார். அது என்னைப்போலவே அடக்கமானவும், அழகாகவும் இருந்தது.

”இல்லையே, இது அழகாகவும் செக்சியாகவும் இருக்கிறது”
மனிதர் மர்மான புன்னகைபுரிந்தார்.

”இது எங்கள் புதிய வெளியீடு”
”அப்படியா, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்”
”நன்றி,  இனிமேல் நீ இந்த கொள்கலனை வாங்குவாயா நீ வாங்கியதை வாங்குவாயா?”
”புதியதைத்தான் வாங்குவேன்”
”ஏன்”
”அழகானதாகவும், செக்சியானதாகவும் இருக்கிறது”
சிரித்தார்

”இது குறைந்தளவு சூழல்மாசுபடும் கழிவுப்பொருட்களை கொண்டது”
”ம்”
“இது விலை குறைவு”
”ம்”
“உள்ளடக்கத்தின் நிறையும் அதிகம்
“ம்”

எனக்கு எரிச்சல் வாசல்கதவுவரை வந்திருந்தது. எனது மிகப்பெரிய பலவீனங்களில் முக்கியமானது மனதர்களுடனான உரையாடலகளை முறிப்பது. அது இங்கும் சிக்கலைத்தந்தது. எனவே சிரத்தையில்லாது பதில் சொல்வது போல “ம்.. ம்.. ம்.. “ என்று பதிலளித்தேன். மனிதர் அதற்கொல்லாம் அசைபவராகத்தெரியவில்லை.

கேள்விகள் தொடர்ந்தது

“எங்கள் கம்பனியைப்பற்றி உங்களுககு என்ன தெரியும்?”

கடுப்பு ஏறி தலையில் உச்சியில் நின்று ஆடிக்கொண்டிருந்தது.

“கேள்வி கேட்டே நுகர்வோரை கம்பனியின் பொருட்களை வாங்காது பண்ணும் ஒரே கம்பனி” என்று சொல்வோம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

“உலகப் புகழ்பெற்றது” என்று அள்ளிவிட்டேன்.
“எங்களின் பங்கு தாரராக சேர்ந்துகொள்ள விருப்பமா?”
“விருப்பம். பங்குகளை இலவசமாகத் தருவீர்களா”?
”....:”
“நண்பரே! உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக செலவிட்டதற்கு நன்றி. உங்கள் தொலைபேசி இலக்கத்தை இந்த இடத்தில் எழுதுங்கள் என்று ஒரு கொப்பியை நீட்டினார்.

அதில் இன்றைய திகதிக்கு கீழ், எனக்கு முன்; ஒரே ஒருவர் பதிலளித்திருந்தார் என்பதற்கு சாட்சியாக அவரது கையெழுத்து இருந்து.  என்னைப்போல  ஒருவன் என்று நினைத்தபடியே தொலைபேசி எண்ணை எழுதினேன்.

ஏறத்தாள 30 நிமிடங்களை தின்றிருந்தார் சேல்ஸ்மேன்.

நன்றி என்று கூறிப்புறப்பட்டேன்.
சற்றுத் தூரம் நடந்திருப்பேன்..

“ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல ஒரு குரல் கேட்டது. கேட்காததுபோன்று விரைவாக நடந்தேன். மீண்டும் அருகில் “ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல கேட்டது. கேட்காதது போல நடந்தேன்.
எனது தோளில் யாரோ தட்டினார்கள். பயத்துடன் திரும்பிப்பார்த்தேன். சாட்சாத் சேல்மேன்னேதான் நின்றருந்தார்.

”நண்பரே.. உங்களுடைய நேரத்தை செலவளித்ததற்காக எமது கம்பனி உங்களுக்கு 100 குறோணர்களை தந்திருக்கிறது. இந்த அட்டையை பாவித்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
20 நிமிடங்களுக்கு 100 குறோணர்கள் மிக மிக சிறந்த சம்பளம்.
சனிமாற்றம் நன்றாகத்தான் இருக்கிறது.

இலக்கியத்தில் வாழ்பவர்

அவர் 1970 களின் நடுப்பகுதியில் எங்கள் மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்பித்தவர் என்பதைக்கூட நான் பின்னாளிலேயே அறிந்துகொண்டேன். அவரின் மகன் எனது வகுப்புத்தோழன். அவன், இவரின் மகன் என்பதும் பின்னால் வந்த ஓரு நாளிலேயே அறியக்கிடைத்தது.

இவ்வருடம் ஊருக்குச் சென்று எனது பாடசாலையின் முன்னைநாள் அதிபருடன் உரையாடியபோது பலரையும் நினைவூட்டி உரையாடிக்கொண்டிருந்தோம். அதிபர், தானாகவே இவரை நினைவூட்டி ”மிக முக்கிய மனிதர்” என்று அடையாம்காட்டியதும் இவரையே.

அவர் எனக்கு 6ம் 7ம் வகுப்புக்களில் தமிழ் கற்பித்திருக்கலாம்.அது என் நினைவில் இல்லை. எனது தமிழாசான்கள் லீவு எடுத்த ஒரு நன்னாளில் அவர் எனக்கு தமிழ் கற்பித்திருக்கலாம்.அதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.ஆனால் இதுவும் என் நினைவில் இலலை.

சில ஆண்டுகளுக்கு முன்னான அழகியதொரு நாளில் ஓருதடவை அவருடன் ஒருமுக்கிய விடயம் காரணமாக உரையாடியிருக்கிறேன். கிழன்ற சிங்கத்தின் குரல். அனுபவமான வார்த்தைகள், அழகு தமிழ், இதுவே அவர். அவருடனான எனது உறவு ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் மட்டுமே.

மித்ரவை உனக்கு தெரியுமா? என்றார். ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் பெயரில் புத்தரசோகம் இழையோடிக்கிடந்தது. பெயர் நினைவில் இருக்கிறது. முகம் நினைவில் இல்லை என்றேன். மறுபுறம் அமைதியாய் இருந்தது சில கணங்கள்.

இவ்வளவுதான் அப்பெரும் மேதையுடனான எனது உறவு.. இருப்பினும் அவரைப்பற்றி பலர் கூறக்கேட்டிருக்கிறேன். பலர் எழுதி வாசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து செயற்பட்டவர்கள் அவரைப்பற்றி கூறக்கேட்டிருக்கிறேன். பழகும் பாக்கியம் கிடைக்கவில்லை
கட்டாயம் சந்திக்கவேண்டும் என்ற இலக்கிய ஆளுமைகளில் இவரும் ஒருவர்.

இனி எங்கள் எஸ். போ அய்யா இல்லை.

வாழ்க்கை என்னிடம், நான் உன்னிஸ்டப்படி நடப்பவனல்ல என்று கூறியபடியே நடந்துகொண்டிருக்கிறது. நான், அதன் பின்னே நடந்துகொண்டிருக்கிறேன்.

எஸ். போ அய்யாவுக்கு எனது அஞ்சலிகள்.

Putin அடித்த அமெரிக்க அசைலம்,


இரவு ஒரு அற்புதமான நண்பரைச் சந்தித்தேன். மிகவும் கலகலப்பானவன். அவனுடன் இணைந்தாவே காலம் மகிழ்ச்சியாக கரைந்துவிடும். எமக்கிடையிலான அறிமுகம் கிடைத்து ஒரு 4 - 5 வருடங்கள்தான் இருக்கும்.அடிக்கடி பறந்து திரிபவன் அவன். விமானி போன்றவன்.

ஒஸ்லோவிலதான் அறிமுகமானோம். வாய்க்குள் நூளையாத பெயரைக்கொண்டவன் அவன். பெயர் ஜக். ஆங்கிலத்தில் Jack என்று எழுதுவான்.

இவனுடைய பெயரில் எனக்கு அறிமுகமான ஒரு தம்பி இருந்தான். அவன் நோர்வேக்கு வருவதற்கு அவனது உறவினர்கள் ஒரு நோர்வேஜியப்பெண்ணுக்கு அவனை திருமணம் செய்வதுபோன்று ஒரு திருவிளையாடலை நடத்தியே அழைத்துவந்தனர்.  தம்பிக்கு அந்தப் பெண்ணைக் கண்டால்  கறுத்த முகமும் சிவந்துவிடுமளவுக்கு வெட்கம் வரும். அவள்  அவனிடம் இருந்து லட்சங்களை கறந்துகொண்டே இருந்தாள் இவனுக்கு வீசா கிடைக்கும்.வரையில்.

வீசா கிடைத்ததும் தம்பி பேசாமல் இருந்திருககலாம். உறவினர்களுடன் ஏதோ மனஸ்தாபமாகிவிட்டது.  நடந்தது பொய்க்கல்யாணம் என்று  போலீசுக்கு உறவினர்கள் அறிவிக்க, தம்பி இப்போது இலங்கையில்.

ஆனால் அங்கு அவன் சென்று 4 ஆண்டுகளுக்குள் வக்கீலாக கற்றுத்தேறிவிட்டான். கல்யாணமாகி ஒரு குட்டியும் போட்டிருக்கிறான். இங்கிருந்து  ஊர்க்கு செல்லும் உறவினர்கள் அடக்கியயே வாசிப்பதாகவும் கதையுண்டு. எல்லாம் விதி.

கூற வந்ததை மறந்துவிட்டு தம்பியின் கதையை கூறிக்கொண்டிருக்கிறேன். மன்னியுங்கள்.

பல காலங்களின் பின் சந்தித்ததால்  நண்பரை  எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். எனது வசந்தமாளிகையில் சொகுசு இருக்கை  ஒன்று கூட இல்லை. இருப்பது ஒரே ஒரு கட்டில். ஆனால் அதை சொகுசு இருக்கையாக மாற்றலாம். மாற்றினேன்.

எனக்கு உணவுதயாரிப்பது என்பது நேரத்தை வீணாக்குவது போன்றது. அந்த நேரத்தை மிச்சப்படுத்தி தூங்கலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே அவ்வப்போது கடையில்  உணவு வாங்குவேன். அல்லது டின் மீன்னையும் பாணையும் சாப்பிட்டுவிட்டு சரிந்துவிடும் மனிதன் நான். இன்று அதிஸ்டவசமாக நண்பரை சந்திப்பதற்கு முன் உணவு வாங்கியிருந்தேன். இறால் நூடில்ஸ். இருவருக்கும் அது காணுமாய் இருக்கலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. .

பலதையும் பேசி,  மிக்சரை கொறித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.மிக மிக கடுப்பேத்தும் செய்தி. அதற்குப்பின் 100க்கு அதிகமான குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டன. அனைத்தும் எறிகணைத்தாக்குதல் போன்றதே. உயிரிழப்பு இல்லாவிட்டாலும்  இருபக்கத்திலும் மனச்சேதம். இதையும் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பன்.

எனது கோபத்தை அவன் நன்கு அறிந்தவன் என்பதால் அவன் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.இடையிடையே என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு அவனைப்பார்த்து சிரிப்பதா,  கோபமாகவே இருப்பதா என்று தெரியவில்லை. மரியாதைக்காக தலையை மட்டும் ஆட்டினேன்.

தூக்கம் வருவதுபோலருந்தது. அதற்குப்பின் இன்று மதியம் 13:25வரை இந்த பூலோகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ”நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்”  படத்தைப் போன்று.

இடையில் ஒரு முறை எழும்பியதாய் நினைவிருக்கிறது. அதன் பின்பும் தூங்கிவிட்டேன்.

இதன் பின்புதான் அந்த உலக அரசியலையே உலுக்கிப்போடும் அந்த மிக முக்கியமான கனவு எனக்கு வந்தது.

நோர்வே www.vg.no என்னும் பத்திரிகை சுவிஸ் நாட்டை ரஸ்யப்படைகள் கைப்பற்றி அங்கிருந்து ஏனைய நாடுகளையும் கைப்பற்றிவருகிறார்கள் என்று செய்தி போட்டிருந்தது.

நான் எனது  சுவிஸ் நண்பர்களை நினைத்துக்கொண்டேன்.  இருவரில் பரிதாபமே வரவில்லை. ஒருவர் கவிஞி மற்றையவர் கடலில் கப்பல் என்று கதை எழுதியவர்.

ஒரிரு நாட்களில் அமெரிக்கப்படைகள் நேட்டோ படைகளுடன்  சேர்ந்து சுவிசை மீட்டு எடுக்கின்றன. எனது நண்பர்களான கவிஞியையும், இத்தாலிக்கு கப்பல் விட்டவனும் தப்பிவிடுறார்கள்.

Putinஐ காணவில்லை என்று  பத்திரிகைள் எழுதுகின்றன. இணையத்தளங்கள் எங்கே இருக்கலாம் என்று ஊகித்து எழுதுகின்றன. தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கையில் என்று எழுதுகின்றன.

பூட்டினைக் காணவில்லை.  சத்தியமாகக் காணவில்லை. சதாம் உலகத்தைக் கலக்கியது போன்று பூட்டினும் மாயமாய் மறைந்துவிட்டார். அமெரிக்கப் படைகள்  அரிசியில் கல்லெடுப்பதுபோன்று தேடிவருகிறார்கள்.

நானும் சண்டை இல்லை என்று நிம்மதியாக தூங்கி எழும்பி வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

ஒரு நாள் காலை எனது குளியலறைக்குள் நின்று சவரம்செய்கிறேன். எனது குளியலறை திரைக்குப் பின்னால் ஒருவர் ஒளிந்திருப்பது தெரிந்தது ”யார் நீ” என்று கேட்கிறேன்.

”தோழர்.. நான் தான் Putin. நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று காலில் விழுகிறார்.விளடிமீர் பூட்டின்.

அவரே தொடர்ந்தார். நான் அமெரிக்காவில் அசைலம் அடிக்கப்போகிறேன். எனக்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஒரு பாஸ்போர்ட் தேவை. அதை செய்து  தந்தால் நீங்கள் என்ன கேட்டாலும் தருவேன்” என்கிறார்.

அவர் குரல் நடுங்குகிறது.  என்னிடம் இருந்த வெட்காவை எடுத்துக் கொடுத்ததேன். மனிதரின் நடுக்கம் குறைந்து சற்றுநேரத்தில் நின்றுபோகிறது.

நான் அவர் உண்மை பேசியதாக நம்புகிறேன். அவர்மேல் பரிதாபம் வருகிறது.

”பாஸ்போட் செய்து தந்தால் என்ன தருவாய் என்று சொல்” என்கிறேன்.

”ஒரு அணுகுண்டும் அதை போடுவதற்கு ஒரு விமானமும் தருகிறேன்” என்கிறார்.

செத்தான்...  கோத்தா என்று நினைத்துக்கொள்கிறேன்.

சரி என்று கூறி, எனது பாஸ்போட்டுக்கு தலையை மாற்றிக்கொடுக்கிறேன்.
மாற்றி எடுப்பதற்கு சில வாரங்கள் ஆகின்றன. அதற்குள் பூட்டின் தமிழ்ச் சாப்பாடுகளை சாப்பிடவும் சமைக்கவும் கற்றுக்கொள்கிறார்.  கொத்துரொட்டி போடவும் முடிகிறது அவரால். எனக்கு சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்துபோகிறது.

புட்டினை  உருமாற்றி ஒஸ்லோ விமனநிலையத்தினூடாக  வாஷிங்கடன் அனுப்பியாவிட்டது.

பூட்டின்க்கு சஞ்சயன் செல்வமாணிக்கம் என்ற பெயரில்  அமெரிக்காவில் அசைலம் கிடைத்துவிட்டது. அவர் அங்கு ஒரு  தமிழ்க்கடையில் கொத்துரொட்டி போடுகிறார். அவரின் ரொட்டி வீசும் அழகில் மயங்கி வாஷிங்டன் நகரத்து மக்கள் தமிழக்கடைக்கு வெளியே காத்துக்கிடக்கிக்கிறாாகள். "பூட்டின் ரொட்டீ" அங்கு மிகப் பரபலமாகிறது.

பூட்டின் எனக்குக் கொடுத்த வாக்கினை காப்பாற்றிவிட்டார். இப்போது  என்னிடம் ஒரு அணுகுண்டும் ஒரு விமானமும் உணடு. ஆனால் விமானி இல்லை.

அணுகுண்டை ராஜபக்சேயின் கட்டிலுக்கு நேரே போடுவது என்று முடிவெடுக்கிறேன். நேற்று என்னைச் சந்தித்த நண்பரை விமானியாக அழைப்போம் என்று நினைத்தபடியே அவனுக்கு தொலைபேசுகிறேன்.

ரிங் போகிறது.

”யெஸ் ...  Danielsஇன் மகன் Jackபேசுகிறேன்” என்றார் நண்பர்....

கனவு கலைந்துவிட்டது.

கனவு உண்மை.  சாமி சத்தியமாக உண்மை

சற்று வெங்காயம் தாளித்து போட்டிருக்கிறேன் வாசனைக்காக.. அவ்வளவுதான்
கோவிக்காதீர்கள்.

காலத்தைக் காயும் மனசு

இன்று (29.06.2014) எங்கள் பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆண்டு சேவை நிறைவுநாள். மட்டக்களப்பில் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு நின்றிருந்து தோழமைகளின் தோளில் கைபோட்டு, பால்யத்து நினைவுகளில் நனைந்தெழும்பவும், என் ஆசிரியர்களை சந்தித்து பேசி மகிழவும் நினைத்திருந்தேன். நினைப்பது எல்லாம் நடப்பதில்லை என்ப‌தை வாழ்க்கை மீண்டும் நிறுவிப்போயிருக்கிறது.

இன்று காலை முகப்புத்தகத்தினுள் நுழைந்தபோது விறைத்து நிற்கும் சாரணீயர்கள், பெரும் புன்னகையுடன் பாடசாலைச் சீருடையுடன் வீதியெங்கும் வரிசையாய் நிற்கும் மாணவர்கள், பாடசாலையின் முன்னாலிருக்கும் அழகிய பந்தல், விழா மண்டபத்தின் அழகு, விழா நடைபெறும்போதான படங்கள், மகிழ்ச்சியாய் கைகோர்த்திருக்கும் பழைய மாணவர்கள், எனது பேராசான் பிரின்ஸ் Sir பாடசாலையின் விழாவில் உரையாற்றும் புகைப்படம் என்று பல பல புகைப்படங்களைப் பார்க்கக் கிடைத்தது. அந்நிமிடத்தில் இருந்து  வாழ்நாளில் இனி‌யொருபோதும் கிடைக்கமாட்டாத ஒரு அற்புதமான நாளை இழந்திருக்கிறேன் என்னும் எண்ணம் என்னை பற்றிக்கொண்டிருக்கிறது. மனம் நீர் நிரம்பிய மண்ணைப்போல் கனத்திருக்கிறது. என் நினைவுகள் அனைத்தும் வெய்யில் நிறைந்த மட்டக்களப்பின், வெபர் விளையாட்டரங்கிற்கு முன்னாலிருக்கும் சீனிப் பனையின் அருகில் உள்ள Cartman மண்டபத்தையும், அதைச் சூளவுள்ள உயிரோட்டமான கட்டடங்களிலும் நின்றலைகிறது.

ஆண்டு 1976, மாதம் தை. இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் இருந்து மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டு, நான் ஆறாம் வகுப்பிலும், தம்பி 2ம் வகுப்பிலும் சேர்க்கப்படுறோம். அதே நாள் பாடசாலையின் விடுதியிலும் சேர்க்கப்படுகிறேன். அம்மா மட்டுமே எங்களை பிபிலையில் இருந்து அழைத்து வந்திருந்தார். ஒரு நாள் எங்களுடன் விடுதியில் தங்கியுமிருந்தார். அந்த நாளின் எனது மனநிலையை இன்றும் உணரக்கூடியதாய் இருக்கிறது. புதிய மனிதர்களைக் கண்ட பயமும் வெருட்சியும் கலந்த உணர்வு. புதிய பாடசாலை என்றும் பயமும் சற்று மகிழ்ச்சியும் கலந்த மனநிலை, புதிய சூட்கேஸ் (புத்தகப்பை) எதனையும் ஆச்சர்யமாய் பார்த்த மனம், நாட்டு ஓட்டினால் வேயப்பட்டிருந்த ஒற்றைமாடிக் கட்டடம், வெள்ளையுடுப்புடன் நின்றிருந்த மாணவர்கள், அவர்களை தன் கண்ணிணால் மட்டும் ஒரு மந்திரவாதியைப்போல் கட்டடிப்போட்ட ஒரு வெள்ளைக்காரனைப்போன்ற ஒரு மனிதர் என்று அன்றைய நாள் அப்படியே மனதுக்குள் படிந்துபோயிருக்கிறது.

அன்றைய நாளில் இருந்து இன்றுவரை எனது நிழலைப்போன்று என் வாழ்க்கை முழுவதும் என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது எனதருமைக் கல்லூரி. இந்த நிழல் நான் வாழும்வரை என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதை நான் உணர்ந்தகொண்டிருக்கிறன். தகிக்கும் வெம்மையின் நடுவே நிழலில் அடைக்கலமாவது எத்தகையதோ, அத்தகையது வாழ்வின் வெம்மையில் என் கல்லூரியின் நினைவுகள்.

1960 - 1970வதுகளின் மத்தியில் கிறீஸ்தவ பாடசாலையாக இருந்தாலும் ஏனைய மதங்களுக்கு சம உரிமை அல்லது அதிக உரிமையளித்து மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்திய பெருமை எனது கல்லூரிக்கும், பிரின்ஸ் Sir க்குமே உரித்தானது. எமது சமூகக் கட்டமைப்பில் இதை செயற்படுத்துவது என்பது இலகுவானதல்ல. இருப்பினும் செயற்படுத்தி காட்டிய பெருமையும் எனது கல்லூரிக்குண்டு. எனது புனிதப் பூமியில், நான்கு மதங்களுக்கும் தனித்தனியே வழிபாடுசெய்வற்கு ஒழுங்குகளும், இஸ்லாமிய மாணவர்கள் 5 முறை தொழுவதற்கு மசூதிக்கு சென்றுவரவும் அனுமதியிருந்தது.

இன்றும் மூதூர், வாகரை பகுதியில் இருந்து அம்பாரை வரையிலான தென்கிழக்குப் பகுதிவரை எமது கல்லூரிக்கு இருக்கும் பெரும் மரியாதையே மேற்கூறியதற்குச் சாட்சி. தென்கிழக்கு மாகாணத்தில் பெருங் கல்லூரிகள் அற்ற அக்காலத்தில் விழுதுவிட்ட பெரு விருட்சம்போல் இன மத பேதமின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்டது எனது கல்லூரியும் அதன் விடுதியும்.

எந்த ஆசிரியரைக் குறிப்பிடுவேன்? அத்தனை அத்தனை அற்புதமான ஆசிரியர்கள். 33 - 35 வருடங்கள் தொடர்ந்து ஒரே கல்லூரியில் கற்பித்த என் தமிழாசான் சர்மா ‌Sir, பாடசாலையே வாழ்வு என்று வாழ்ந்த புண்ணியமூர்த்தி ஆசிரியர், கிருஸ்ணபிள்ளை, ருத்திரமூர்த்தி, இந்திரானி ஆசிரிகைகள், சங்கீத ஆசிரியர் மகாலிங்கம், பாடசாலக்கு மிக அருகிலேயே குடியிருந்த (இன்றும்  அங்கேயே குடியிருக்கும்) சிங்கள  ஆசிரியை, உப அதிபர்கள் ஆனல்ட் Sir, அருளன்னராஜா, அருளானந்தம் ஆகியோர், விளையாட்டு ஆசிரியர்களாய் பாடசாலையை தேசிய ரீதியில் நிமிரவைத்த சௌந்தராஜன், கமல்ராஜ் ஆசியர்கள், ஆங்கில ஆசிரியை பாலசிங்கம், தமிழாசான் விஜரட்ணம், விவசாய ஆசிரியர்கள் தேவராஜன், குணரட்ணம் ஆகியோர், விடுதி பெறுப்பாளர் சுந்தரலிங்கம் அண்ணண், கிளாக்கர் செல்வராஜா அண்ணண், ஆசிரியராயும், விடுதிப்பொறுப்பாளராயும், எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்து இன்று இல்லை என்றாகிவிட்ட காத்தான்குடி கபூர் மாஸ்டர், பாடசாலையின் மௌலவி, பாடசாலை தொட்டுவிடக்கூடிய தூரத்தில் வாழ்ந்திருந்த பீடில்ஸ் டீச்சர் இப்படி நினைவுக்குள் முத்துக்குளிக்கும் போது பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பெயர் எழுதாவிட்டாலும் அல்லது மறந்துவிட்‌டிருந்தாலும் எங்களை செதுக்கிய எத்தனையோ பெருந்தகைகள் பாதம்பட்ட புனிதப்‌பூமி அது.

சாரணீயம், சிரமதானம், வழிகாட்டிகள் சங்கம் (pathfinders), Rotaract, Leo கழகங்கள், கையெழுத்துப்பத்திரிகைகள், தாளலய நாடகம், நாடகங்கள், வாசிகசாலை, பன்றிப் பண்ணை, கால்பந்து, கிறிக்கட், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், இல்ல விளையாட்டுப்போட்டிகள், சுற்றுலாக்கள், அணிவகுப்புக்கள், பாடசாலை பரிசளிப்பு விழாக்கள், மதம்சார்ந்த விழாக்கள் என்று எத்தனை எத்தனை நினைவுகளையும், வாழ்வுக்கு அவசியமான நெறிகளையும், விழுமியங்களையும் கற்றுத்தந்த இடம் எனது பாடசாலை.

திங்கள்தோறும் நடைபெறும் அசெம்பிளி கூட்டங்களில் கூறப்பட்ட அறநெறி மற்றும் விழுமியம் சார்ந்த கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. ”கப்பல் மூழ்கும் வேளையிலும் தலைமைமாலுமியின் கட்டளைக்காக காத்திருந்த மாலுமியின் விசுவாசம்பற்றிய” கதை, ஒற்றுமையை விளக்குவதற்கு கூறப்பட்ட ”ஒற்றைக் கம்பின் பலவீனமும், பலகம்புகளின் பலமும் கதை, பகலில் லாம்புடன் மனிதர்களைத்தேடிய ஞானியின் கதை,  ஆப்ரஹாம் லிங்கனின் கதை, எடிசனின் கதை, சீசரை கத்தியால் குத்திய புரூட்டஸ் கதை, சாமாரியன் கதை என்று 8 வருடங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கேட்ட கதைகள் ஏராளம். அவற்றில் இருந்து கற்றுக்கொண்ட அறநெறிகள், வாழ்வியற் கருத்துக்கள் என்று எத்தனை எத்தனை நினைவுகளை பாடசாலை எனக்குத் தந்திருக்கிறது.

விடுதியில் வாழ்ந்திருந்த காலங்களில் வீட்டில் இருந்து எனக்கு சிறிய சுருள் ஒன்றில் சீனி கொண்டுவந்துதரும் தோழமை,  பசித்திருக்கும்போது பள்ளிவாசலில் இருந்து கொணர்ந்து தரப்படும் இஸ்லாமிய நண்பனின் கஞ்சி, பொழுதுவிடியுமுன்னான காலைப்பொழுதில் கிறீஸ்தவ, இந்து மாணவர்களுக்கிடையில் நடக்கும்  பூப்பறித்து மாலைகட்டும்போட்டி, விடுதியில் முழுநிலவின்று இரவுப்பொழுதில் நடக்கும் விளையாட்டுக்கள், முட்டைப்பூச்சிகளுடனான யுத்தம், இரண்டு இறைச்சித்துண்டுகளுடன் உணவுண்ட இனிமையான காலங்கள், மூன்றிலெரு துண்டுப் பாண்,  சிற்றூண்டிச்சாலையில் வைத்த கடன், சிற்றூண்டிச் சாலையை நடாத்திய மனிதர், வெற்றீயீட்டிய கால்ப்பந்துபோட்டிகளின் பின்னான Cap collection நிகழ்வு, விளையாட்டு ஆசிரியரையும், அதிபரையும் தோளில் தூக்கி நகரமெங்கும் சுற்றியது இப்படி எத்தனையோ  நிகழ்வுகள் பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் அறையப்பட்டிருக்கிறது. மூச்சு நின்றுபோகும்போது மட்டுமே மறையக்கூடிய நிகழ்வுகள் அவை.

விடுதியில் சித்திரக்கதைப்புத்தகங்களுக்கு பலத்த கிராக்கி இருந்தது. இதை அவதானித்த ராஜேந்திரன் (ஞானம்) அதையே வியாபார உத்தியாக்கி, சித்திரக் கதைப்புத்தகங்களை வாடகைக்குவிட்டான். சில நாட்களின் பின் பலரும் அதே தொழிலை ஆரம்பித்ததனால் அனைவரின் வியாபாரமும் படுத்துப்போனது. பாடசாலையில் நடக்கும் பிஸ்கட் சீட்டு, இடைவேளை நேரங்களில் விற்பனையாகும் பாலைப்பழம், கஜூப்பழம், மிளகாய், உப்பு தூவிய மாங்காய், இரால்வடை, ஜஸ்பழம் இவையெல்லாம் பால்யத்தின் பசுமையான நினைவுகள்.

விடுதியில் வாழ்ந்திருந்தபோது சிறுநீர் கழிக்க நடுச்சாமத்தில் எழுப்பும் பேய்க்கு பயந்த தோழன். அவன் சிறுநீர் கழிக்கும்பொது அம்போ என்று விட்டு விட்டு ஓடும் நாம். நனைந்த சாரத்துடன் பயத்தில் கத்தியபடியே ஓடிவரும் அவன். சனி மதியம் தண்ணீர்த் தொட்டியருகே உடுப்புத்தோய்த்து குளிக்கும் திருவிழா, வைகாசி வெய்யிலுக்கு வரண்டுபோகும் கிணறு, மாநகரசபையின் வாசல் உள்ள தண்ணீர் பைப். Life boy  தேய்த்து நுரை தள்ளி குளிக்கும் நாம், அவ்வப்போது பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்கள், ஞாயிறு மாலை விடுதிக்கு வரும் தும்புமிட்டாய் விற்பனையாளன், விடுதிக்கு அருகிலிருக்கும் வீட்டில் இருந்து களவெடுத்த கோழி, அன்றைய கோழிக்கறி, விடுதியைவிட்டு ஓடுபவர்களை பிடித்துவரும்போது இருக்கும் பெருமிதம் இப்படி ஆயிரம் இருக்கிறது பட்டியலிட.

எனது பால்யத்தை நான் நன்கு அறிவேன். பதுளையில் இருந்த காலத்தில் நான் தேவைக்கு அதிகமாகவே பிஞ்சிலே பழுத்திருந்தேன். பீடி பிடிக்கும் பழக்கம் இருந்தது, காவாலித்தனமான பேச்சு, பாடசாலைக்கு கட் அடிப்பது, சிறு சண்டித்தனம், எதிலும் கவனமற்ற தன்மை, கடைசி வாங்கில் முதல் மாணவன் என்ற பல பெருமைகளுடனேயே இப்பாடசாலைக்கு வந்துசேர்ந்தேன்.

 பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாளே எனது ஆங்கில புலமையை பரிசோதித்தார் எனது அதிபர் Prince Sir. அவர் வாயில் தமிழ் பெரும்பாடுபட்டது, படுகிறது இப்போதும். ஆங்கிலமே அவர். எனது தாயார் வைத்தியர் என்பதால் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று அவர் நினைத்தது மகா தவறு என்பதை அவர் அன்று உணர்ந்திருக்கவேண்டும். அவர் எதைக்கேட்டாலும் நான் yes அல்லது no  என்னும் இரண்டு சொற்களைவைத்து சாமாளித்துக்கொண்டேன். அதன் பின் அவர் பல ஆண்டுகள் என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவே இல்லை.

இருப்பினும் என்னைக் கண்ட முதலாவது நாளேஅவர் என்னை மிக நன்றாக எடைபோட்டிருக்கவேண்டும் என்றே இப்போது எண்ணத்தோன்றுகிறது. கொல்லன் பட்டறையில் இரும்பை சூடாக்கி, சுற்றியலால் அடித்து, நெளித்து, சீர்செய்து, மீண்டும் குளிர்நீரில் இட்டு, அதன்பின் மீண்டும் சுடுகாட்டி வாட்டி எடுத்து நிமிர்த்துவதுபோல் என்னை ஒரளவு நிமிர்த்தியெடுக்க அவர்க்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டன. அந்தக்காலத்தில் திருடன், கையெழுத்து மாத்துபவன், கடைசிவாங்குத் தளபதி, சிங்கள ஆசிரியைக்கு ” நான் முட்டாள்” என்று ஏப்ரல் முதலாம் திகதி ஒட்டியவன் என்று பெரும் பெருமைகளுடன் அவரின் கந்தோருக்கு அடிக்கடி சென்று ”முகம்வீங்கி” அங்கிருந்து வந்திருக்கிறேன்.

கள்ளனை போலீசாக்கினால் திருட்டு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ என்னை மாணவர் தலைவன், தலைமை மாணவர் தலைவன், விடுதியின் தலைமை மாணவ தலைவன் என்று பதவிகளைத் தந்து பண்படுத்தினார். பாடசாலையின் முதலாவது Rotaract  கழகத்தின் தலைவராகவும் வலம் வந்திருக்கிறேன்.

இந்தப் பதவிகளின் மோகம் என் கண்களை மறைத்தபோது ஒரு நாள் ஒரு சிறிய மாணவனிடம் ”உனது அக்கா வடிவானவள்(அழகானவள்), கடிதம் தருகிறேன் கொண்டுபோய் கொடு” என்றேன். அது அவரின் காதுக்கு போனபோது என்னை அழைத்து கன்னத்தில் அறைந்து ” பாடசாலையால் கலைத்துவிடுவேன்”  என்று கூறியனுப்பினார்.

இதேபோல் கணிதப்பாடத்து புள்ளிகள் 17 என்றிருந்ததை 77 என்று மாற்றியதை அனைத்து பாடங்களின் கூட்டுத்தொகையையும் கூட்டிப்பார்த்து கண்டுபிடித்தார். அன்றுதான் குற்றவாளியை தண்டிக்காது அவனின் மனச்சாட்சியுடன் பேசவைத்தால் அவன் திருந்துவான் என்னும் இரகசியத்தையும் எனக்கு கற்பித்தார். அன்று அவர் அடிக்காமல் ஒரு மணிநேரம் பேசினார். நான் தலைகுனிந்தபடியே அழுதுகொண்டிருந்தேன்.

 பிற்காலத்தில் இராணுவம் என்னை தேடியகாலங்கலில் நான் பாடசாலையில் நின்றிருந்தேன் என்று பொய்கூறி என்னைக் காப்பாற்றிய ஒரு சம்பவமும் உண்டு.

ஒரு பாடசாலையானது ஒரு மாணவனை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கையே அதற்கு உதாரணம். பாடசாலைகளே மாணவர்களின் அறநெறிகள், விழுமியங்களுக்கான அளகோல் என்பது எனது கருத்து.

எனது பால்யத்தை நான் நன்கு அறிவேன். இவன் உருப்படுவானா என்று ஊருக்குள் பலருக்கும் சந்தேகமிருந்தது, பெற்றோர் உட்பட. இருப்பினும் எனக்கு அதிஸ்டம் என் பாடசாலையினூடும், எனக்குக்கிடைத்த ஆசிரியர்களூடாகவும் வந்தது.

இன்று எனக்குள் இருக்கும் அறநெறிசார் விழுமியங்களின் அத்திவாரம் எனது பாடசாலையே இட்டதே. ”நீ ஒரு சமூகப் பிராணி, எனவே என்றும் சமூகத்திற்கு பிரதியுகாரமாய் இரு” என்னும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே எங்கள் பாடசாலையின் வழிகாட்டிகள் சங்கம் (Pathfinders), சாரணியம், சிரமதான‌ம், Rotaract, Leo கழகங்கள் என்பன இயங்கின.


வாழ்க்கையின் அயர்ச்சியில் மயங்கிப்போயிருந்தாலும், 49 வயதிலும், பாடசாலையுடனான மிக நெருக்கமான, ஆத்மார்த்தமான தொடர்பு பேணப்பட்டுக்கொண்டே வருகிறது. ஊருக்குச் செல்லும் காலமெல்லாம் எங்கு செல்ல மறந்தாலும் பாடச‌ாலைக்கும், அதிபரின் வீட்டுக்கும் செல்வதை மட்டும் மறந்ததில்லை. காலமானது ஆசான் (அதிபர்) மாணவன் என்னும் உறவை மெதுவாக மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது, ஆசானிடத்தில் முன்பிருந்த பயம் கலைந்து, பக்தியும் ஆத்மார்த்தமான நட்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும், ஆசான் மாணவன் என்னும் உறவைக்கடந்துவர முடிந்திருக்கிறது. அதன் காரணமாக பாடசாலை, சமூகம், காலக்காற்றாடி சுளற்றிவிட்ட நாட்களின் நினைவுகள், தனது கனவுகள், நி‌ராசைகள், ஆதங்கங்கள், சரி பிழைகள், கடந்துவிட்ட வாழ்க்கை, நோய்மை, தனிமை என்று ஒரு நண்பனைப்போன்று என்னுடன் உரையாட முடிகிறது,  எனக்கும் தயக்கங்கள் இன்றி எதையும் பேசிப் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.

இன்று மதியம், நண்பரொருவருக்கு தொலைபேசினேன். நிகழ்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்ததாயும், அனைவருக்கும் மகிழ்ச்சி என்றும் அறியக்கிடைத்தது. என் மனதுக்குள் ஏதோவொன்று அடைத்த, இழக்கக்கூடாத‌ ஒரு நாளை இழந்துவிட்டதுபோன்று உணர்ந்தேன். நண்பர் தொடர்ந்தார் ” சஞ்சயன் வருவானா” என்று எனது அதிபரான Prince Sir நேற்று விசாரித்தாக அவர் சொன்னபோது என் கண்கள் கலங்கி, தொண்டை அடைத்து குரல் தளும்பினாலும், மனது, காற்றில் சருகாய்மாறி பறந்துகொண்டிருந்தது.
மாதா பிதா குரு தெய்வம்  என்பவற்றில் நான்காவதில் நம்பிக்கை இல்லை எனக்கு. ஆனால் மூன்றாவதில் அதீத நம்பிக்கை இருக்கிறது.

வாழ்க்கை அற்புதமானது.

முதற் பனியின் அழகும் குளிரும்

வழியில் என்னை நிறுத்தி எதைவிற்றாலும் நான் வாங்குவதில்லை. தலையிடியைத் தவிர.

இன்று, முதற்பனியின் குளிரில் விறைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.  திடீர் என்று உடைகள் தோய்ப்பதற்கான சவர்க்காரம் தேவை என்ற நினைவுவரவே அருகில் இருந்த கடைக்குள் புகுந்துகொண்டேன்.

வாசலில் இரு அழகிகள் எதையோ விற்றுக்கொண்டிருந்ததை கடைக்கண்ணால் கவனித்தபடியே உள்ளே புகுந்து, வெளியே வருகிறேன் என்னை நோக்கி தேவலோகத்துக் குரல்லொன்று மிதந்து வந்தது. நிமிர்ந்துபார்த்தேன்.

வாவ்.. அத்தனை அழகு அவள்கள். ஒருத்தி இந்நாடு. மற்றையவள்  பாரசீகத்து பேரளகி.  முகத்தில் இருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.

நாம் விற்கும் அதிஸ்டலாபச்சீட்டினை வாங்கினால் உனக்கு   ஐபோன் கிடைக்கலாம் என்றாள், ஒருத்தி.

எனது மைன்ட்வாய்ஸ், அழகிகளே நீங்கள் நஞ்சதைத் தந்தாலும்  நான் வாங்கி உண்பேனே..

அவள்களுடன் பேச்சை தொடர்வதற்காய் ”ஐபோன் என்றால் என்ன?”  என்றேன்.

” தெரியாதா, அது ஒரு வித தொலைபேசி” என்றாள் ஒருத்தி

மற்றையவள் புத்திசாலி.”உனது  கையில் இருப்பதைப்போன்ற தொலைபேசி” அது என்று மடக்கினாள்.

”ஹி ஹி..”

இருவரிடமும் இருந்து ஒவ்வொரு அதிஸ்டலாபச் சீட்டை வாங்கிக்கொண்டேன்.

நன்றி, நன்றி என்றாள்கள்.  கண்களைச் சுருக்கிச் சிரித்தாள்கள். அவள்களின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. எனது மனம் துள்ளியது.

கடலைபோடத்தொடங்கினேன். கடலையில்  பெரும் கில்லாடிகளாய் இருந்தாள்கள் அவள்கள்.

பெயர், ஊர், பொழுதுபோக்கு என்று பேச்சு ஓடியது. என்ன சாம்பூ வைக்கிறாய் என்று அவள்கள் கேட்கமுதல் புறப்படுவோம் என்று நினைத்தபடியே.” சென்று வருகிறேன்” என்றேன். சரி சென்று வாருங்கள் என்றாள்கள்.

எனக்கு மனதுக்குள் ஒரு கேள்வி குறுகுறுத்துக்கொண்டே இருந்தது. பெண்களிடம் வயதை கேட்பது அழகல்ல. எனவே கேள்வியை மாற்றிக்கேட்டேன்.

நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?

நான் 2ம் வகுப்பு, இவள்  முதலாம்வகுப்பு.

ஒருத்தியின் தலையைக் கோதிவிட்டேன். மற்றையவளின் கன்னத்தை தடவிட்டேன்.

சிரித்தாள்கள்.

அந்த நான்கு கண்களினூடே ஒரு அற்புதமான காலத்தின் வாசனையை நுகரத்தொடங்கினேன்.

கண்கள் கலங்கிவிட, கைகையைக் காண்பித்தபடியே புறப்பட்டேன். வெளியே குளிர் காத்துக்கிடந்தது.


9c Oslo திரைப்படம் பற்றிய எனது பார்வை

நேற்று (10.10.14) நோர்வே கலைஞர்கள் தயாரித்து, இயக்கி, இசையமைத்து, நடித்து, விநயோகித்த ”9c Oslo” திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது. அது பற்றிய எனது பார்வை இது.

ஒரு துறைசார்அனுபவமில்லாத ஒரு சிறு சமூகத்தில் இருந்து ஒரு படைப்பு வருகிறது என்றால் அதனை திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு அப்பால் அதனை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வரவேற்பது சமுகத்தின் கடமை. அது ஏன் என்பதற்கான காரணத்தை கூறவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதையே  ஒஸ்லோ தமிழ்மக்கள் செய்திருக்கிறார்கள். ஆம், நேற்றும் இன்றும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக இத்திரைப்படம் காண்பிக்கப்படுகிறது. 

இப்படியான ஆதரவை இனிமேலாவது எமது சமூகம் எம்மவர்களின் திரைப்படங்களுக்கு வழங்கவேண்டும். உலகத்தரம்மிக்க எம்மவரின் திரைப்படங்கள் மிக மிக சொற்பமானவர்களுடன் காண்பிக்கப்பட்டது மனதை நெருடியதாலேயே இதைக்கூறுகிறேன்.

உலகின் தமிழ்த் திரைப்படச் சூழலில் பேய்ப்படம் என்று அழைக்கப்படும் Horror film எடுப்பது என்பது படு ஆபத்தான ப்ராஜெக்ட் என்பதை அனைவரும் அறிவோம். அதையே நோர்வே தமிழ்ச் சூழலில் எடுத்தது, இயக்குனருக்கு தேவைக்கு  அதிகமான ”தில்” இருப்பதையே காட்டுகிறது. சோபாசக்தியின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராக சிறுகதைக‌ளைப்போன்று, சமூகத்தின் விருப்புக்களுக்கு எதிராக தன் படைப்பை நம்புபவர்களால் மட்டுமே இவறைறை சாதிக்கமுடிகிறது. இவர்களை ஏனோ எனக்கு பிடித்தும்போகிறது. படத்தின் முதலாவது வெற்றி இது.

எங்கள் சமூகத்து திரைப்பட ரசிகர்களை இரண்டு அல்லது முன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது; சாதாரண ரசிகன். இவர்கள் நுணுக்கமாக படத்தினை ஆராயாதவர்கள். படம் பிடித்திருந்தால் விசிலடிக்கும் ரகம் அல்லது திட்டுவார்கள். இரண்டாவது, முன்றாவது ரகமானவர்கள் படத்தின் நுணுக்கங்களை ஆராய்ந்து, ஒவ்வொறு Frame ஐயும் ரசிக்கும் கூட்டம், அது மட்டுமல்ல படத்தைப்பற்றி, தொழில்நுட்பங்களைப்பற்றி, கதையை, இசையை, ஒளிப்பதிவை, எடிடிங்ஐ உரையாடும், விவாதிக்கும் கூட்டம். 

முதலாவது ரகத்தினர் எமது சமூகத்தில் பெரும்பான்மை. இரண்டாவது, முன்றாவது ரகம் சிறுபான்மை. இப்படத்தை பார்த்தபின் மேற்கூறிய இருபகுதியினருடனும் உரையாடக்கிடைத்தது. முதலாவது ரகத்தினர் படத்‌தை ரசித்திருந்தனர். எனவே இதுவும் திரைப்படத்தின் வெற்றியே.
இரண்டாவது மூன்றாவது ரகத்தினர் பின்வருபவற்றினை பாராட்டினார்கள்.
  • நோர்வேயின் இளம் கலைஞர்கள‌ை முதன்மைப்படுத்தியது.
  • ஆற்றலுள்ள கலைஞர்களை அடையாளம் கண்டது.
  • கலைஞர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்தது.
  • பலரும் படம் எடுக்கத்துணியாத கருவை துணிந்து தொட்டது.
  • NT pictures நிறுவனத்தின் ஏனைய படங்களைவிட  இப்படத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் உண்டு.
  • திரைப்படத்தில் காணப்படும் வசனங்கள்.
இங்கும் பல வெற்றிகள் காணப்படுகின்றன. அதற்காக விமர்சனங்கள் இல்லை என்று இல்லை.


ஆனால் விமர்சனங்களை நாம் ஒருவித filter கண்களுடனேயே பார்க்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஒரு துறைசார் அனுபவற்ற சமுகத்தில் இருந்து வெளிவரும் படைப்பு இது. இதை ஹாலிவூட், கோலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுப் பேசமுடியாது, பேசவும் கூடாது. அவர்களிடம் உள்ள வளங்களை எம்மவரின் வளங்களுடன் ஒப்பிடவும்முடியாது. தவிர இப்படத்தில் பணியாற்றிய மனிதர்களின் உழைப்பையும், ஆர்வத்தையும் நாம் கடுமையாக கவனத்தில்கொள்ளவேண்டும். தவிர குடும்பங்கள் அனுபவித்த சிரமங்களையும் நாம் இலகுவாக மதிப்பிடலாகாது. படைப்பாளியின் குடும்பச்சுமை பற்றி நான் கூறத்தேவையில்லை. எத்தனை சமரசங்களை அவன் சந்திக்கவேண்டும் என்பதை படைப்பாளி மட்டுமே அறிவான்.

எனவே விமர்சனங்களை மேற்கூறியவற்றினை கருத்தில்கொண்டே முன்வைப்பதே நியாயமானது. அதேவேளை அனைத்து கலைப்படைப்புக்களும் விமர்சனங்களுக்கு உட்படுவதும், உரையாடவும், விவாதிக்கப்படுவதும் அவசியம். அப்போதுதான் அது கலைப்படைப்பாகிறது. நான் இத்திரைப்படத்தை இவற்றை அடிப்படையாகக்கொண்டே நோக்குகிறேன். எனவே இத்திரைப்படம் பற்றிய நுணுக்கங்களைப்பேசும் ஒரு உரையாடல் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எனது அவா.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்களுக்கு என்று ஒரு திரைப்பட உரையாடற் சமூகம்  இருக்கிறது. அங்கு வளமான உரையாடல்கள் நடைபெறுகின்றன. அப்படியான நிகழ்வுகள் ஒஸ்லோவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் இதுபற்றி உரையாடிய சந்தர்ப்பங்களில், திரைப்படத்துறையில் உள்ள சில நண்பர்கள் அப்படியானதோர் உரையாடற் சமூகத்தினை ஒஸ்லோவில் ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆயினும் பல ஆண்டுகளான பின்பும் அவை இன்றுவரை சாத்தியப்படவில்லை என்பதே உண்மை. ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் மகிழ்வேன். எனது ஆதரவு நிட்சயம் உண்டு. ஒஸ்லோவில் உள்ள துறைசார் நண்பர்கள் இதனை கவனத்தில் எடுக்கவும்.

இனி படத்தில் எனக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்?
  • நடிகர்களின் தேர்வு.
  • அனுபவமற்ற நடிகர்களை நெறிப்படுத்திய விதம்.
  • இளையோரின் அசாத்திய நடிப்புத் திறமை. (சிரம்தாழ்த்திய வாழ்த்துக்கள்)
  • கதையின் கருத் தெரிவும், அதுபற்றிய துணிவும்.
  • ஆங்காங்கே மிளிரும் உரையாடல்கள்.
  • படத்தின் டைட்டில் காட்சிகள்.
  • ஆங்காங்கே மிளிர்ந்த இசை.
  • திரைப்படத்தின் முடிவு. (கண்ணடிக்கும் காட்சி தவிர்த்து).
  • ‌முற்றிலும் நோர்வே கலைஞர்களையும், விநயோகஸ்தர்களையும் நம்பியமை.
  • திரைப்படக்குழுவினரின் ஆர்வமும், அர்பணிப்பும்.
  • அரங்கத்தை நிரப்பிய எம்மவர்கள்.
நோர்வே தமிழ்பேசும் சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க ஒரு இடத்தை மேற்கூறிய காரணங்களினால் இத்திரைப்படம் பிடித்துக்கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்குள் வளர ஆம்பிக்கிறது.

இத்திரைப்படம் பல பெரும் கருத்துமுரண்பாடுடைய பல மனிதர்களையும் அவர்களின் கலையார்வம் என்னும் ஒரே நோக்கத்தினூடாக சேர்ந்தியங்கவைத்திருக்கிறது. இது மிகவும் வளமான சிந்தனையும், செய்கையும் ஆகும்.

கருத்துவேறுபாட்டையும் கடந்து, பொதுவெளியில் இருபகுதினருக்கும் பொதுவான ஒரு ‌நோக்கத்திற்காக சேர்ந்தியங்கும் பண்பு எம்மவர்களிடத்தில் இல்லை. இதை செய்கையில் காட்டியதற்காகவும் நாம் இவர்களை பாராட்டவேண்டும். இந்தப் பண்பினை எங்கள் மக்களமைப்புக்களை நடாத்துபவர்கள் கற்றுக்கொண்டால் எமது சமூகத்திற்கு அது பெரும் பயனளிக்கும்.

மிகுதியுள்ள நாட்களிலும் அரங்கத்தை நிரப்பி ஆதரவைத்தெரிவியுங்கள் நண்பர்களே. எங்கள் கலைஞர்கள். ஆதரவளிப்பது எமது கடமை.

அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .

நாட்டாமை தீர்ப்பை மாற்று


 நேற்று முன்தினம் எனது மூத்தமகள் என்னுடன் நிலத்தில் தூங்குவதாகவும், சின்னச் சிறுக்கி கட்டிலில் தூங்குவதாகவும் ஒப்பந்தமாயிற்று.

நான் தூங்கியும் போனேன். சாமம் எழும்பியபோது மகளைக் காணவில்லை. தங்கையின் கட்டிலில் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அன்பாக அக்காளையும் தன்னுடன் தூங்க அனுமதித்திருக்கிறாளே என்று மனது பெருமைப்பட்டது.

மீண்டும் தூங்கியும்போனேன்.

காலை பெருஞ் சத்தம் ஒன்று கேட்டது. என்னடா விடயம் என்று விசாரித்தால், தங்கை ஒரு உதை விட்டிருக்கிறாள். அக்காள் கட்டிலால் கீழே விழுந்துவிட்டாள்.

வழக்காடு மன்றத்திற்கு தலைவன் நானல்லவா. வழக்கு விசாரிக்கப்பட்டது.

இன்று கட்டிலில் தூங்குவது எனது முறை. இவ ஏன் இங்க வரணும் என்று செல்லத்தமிழில் வழக்காடிய அழகில் மயங்கிப்போனேன். தீர்ப்பு தங்கைக்கு சார்ப்பாக இருந்ததனால் அக்காள் இப்படிச் சொன்னாள்.

”அப்பா! உங்களாலதான் இவ்வளவு பிரச்சனையும்” என்றாள்

ஙே.... என்று முழுசியபடியே ...”எப்படியம்மா” ... என்று கேட்டேன்.

”நேற்றிரவு நான் படுத்திருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு ”குருவி” வந்து எனது கையில் நின்றது. என்றாள்.

”என்னது குருவியா” என்று கேட்டேன்.

”You know Appa, அது like a big butterfly so உங்களை எழுப்பினேன் நீங்க a dead man மாதிரி படுத்திருந்தீங்க, எழும்பல, அதுதான் அவட கட்டிலில் படுத்தேன்”, என்றபடியே நாட்டாமை தீர்ப்பை மாற்று என்பதுபோல கடுமையாய் என்னைப் பார்த்தாள்.

சரி சரி .. இப்ப அப்பம்மாட கட்டில்ல படுங்க என்று சமாளித்தபடியே வந்து அந்த "like a big butterfly"ஐ தேடினேன்.

மகளின் பாயின் அருகே ஒரு சற்று பெரிய ஈசல் கிடந்தது. அதுதான் அந்த "like a big butterfly".

பயமின்றி பாம்பைத் தூக்கி படம் எடுக்கிறாள். நேற்று ஒரு முதலைக்குட்டியை கையில் வைத்தும் படம் எடுத்தாள். 100மைல் வேகத்திலும் அதிகமாக தண்ணீரில் விரைவு ஸ்கூட்டர் ஓடுகிறாள். யாரும் ஒருமாதிரி பார்த்தால் ஆங்கிலத்தில் படுதூஷணத்தில் திட்டி சண்டைக்கு போகிறாள்....
பெருமையாயும், மகிழ்ச்சியாயும் இருக்கிறது.

ஆனால், எறும்புக்கும், ஈசலுக்கும் பயப்படுவதைதான் ஒரு அப்பனாக தாங்கமுடியாதிருக்கிறது.

----------------------------------
இவ்வருட விடுமுறையின்பொது நடந்த கதை

எனது சிறுக்கிகளின் ஒரு கூத்து

சிவனே என்று நிம்மதியாக சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே படுத்திருந்தேன். ஏகாந்தமான மனநிலை வாய்த்திருந்தது.

அப்போது Ohhh noooooooooo என்று இளையமகள் கத்துவது கேட்டது. சரி, அக்காவுக்கும் தங்கைக்கும் இடையில் போர் தொடங்கிவிட்டது என்று நினைத்தபடியே கண்ணைமூடித் தூங்க முனைந்தேன்.

Appamma, Do have ice cubes?என்பது கேட்டது. சரி, வெக்கை என்பதால் எதையோ குடிக்கப்போகிறாள் என்று நினைத்தேன்.

அப்போது Ohhh noooooooooo என்று மூத்தமகளும் கத்துவது கேட்டது.

அடியேய் சண்டைபிடிக்காதிங்கோ என்று சொன்னபோது ..
Appa, don't be silly என்று எரிச்சல்பட்டபடியே உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள் பெரியவள். அடங்கிப்போனேன்.

யாரோ நண்பிகள் தங்களை bucket challengeக்கு அழைத்ததனால்தான் இவர்கள் Ohhh noooooooooo என்று கத்தினார்கள் என்றும் கூறினார்கள்.

அதன்பின் தொடங்கியது கூத்து
அப்பா எழும்பு

அப்பம்மாவிடம் video camera இருக்கா?

I need a big towel

அப்பா, wakeup

என்று ஆரம்பித்து வீட்டை இரண்டாக்கிக்கொண்டிருந்தாள்கள்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஙே .. என்று முழுசிக்கொண்டிருந்தேன்.
அப்பம்மா பேத்திகளின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்தார். 3ம் மாடி வீட்டுக்குவெளியே இரண்டு வாளிகள் நிறைய தண்ணீர் இருந்தது. இன்னுமொரு வாளிக்குள் அம்மாவிடம் குளிரூட்டியில் இருந்த அனைத்து ice cubes மற்றும் கொதித்து ஆறி நன்கு குளிரூட்டப்பட்ட நீர் 4 லீட்டர் என்று இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

”அப்பா! இதுகலை கீல கொண்றுபோங்கோ” என்று சுந்தரத் தமிழில் இளையவள் கட்டளையிட்டாள். நான் படுத்திருந்தேன். If you don't wakeup, I will punch you என்றாள். அவள் சொன்னதைச் செய்யக்கூடியவள். எனவே எழும்பினேன்.

வீதி வெளிச்சத்திலும், டோர்ச் லைட் வெளிச்சத்திலும் ஒருத்தியின் தலையில் இன்னொருத்தி ice cubes கலந்து குளிர்நீர் கலந்து தண்ணீரைக் கொட்டினார்கள். நான் வீடியோ எடுக்கப் பணிக்கப்பட்டேன்.

முதலில் அக்கா. குளிர் தண்ணீர் உடலில் பட்டதும் அவள் கத்திய கத்தலில் அனைத்துவீட்டு ஜன்னல்களிலும் தலை தெரிந்தது. நண்பர்களின் பெயர்களை கூறி ஏதோ challenge என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அதன் பின் தங்கையின் தலையில் அக்காள் ice cubes கலந்து குளிர்நீர் ஊற்ற அவளும் கத்தினாள். இவளும் நண்பர்களின் பெயர்களைக் கூறி ஏதோ challenge என்றாள்.

குளிருது என்று கத்தியபடியே மேலே ஓடினார்கள்.

நான் வாளிகள், டோர்ச் லைட், கமரா சகிதமாக 3 மாடி ஏறிவந்து வீட்டுக்குள் வருவதற்கு முன்பே

Appa, where is the laptop என்று கத்துவது கேட்டது. நான் களைத்துப்போயிருந்தேன். சாய்மனைக்கதிரையில் சாய்ந்துகொண்டேன்.
I am first, no no, I am first என்று சண்டை நடந்து அக்காள் முதலாவது என்று சமாதானமாகினர்.

அவர்கள் தலையில் தண்ணீரைக் கொட்டிய video வீடியோவை பதிவேற்றினார்கள். அதற்கு நான் video edit செய்து கொடுத்தேன்.
இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருந்தார்கள்.

மூத்தவள் அருகில் வந்து You are a cool Appa என்றாள். அதைக் கேட்ட கிழவி நான் கேட்டால் ஒன்றும் செய்யமாட்டான். பிள்ளைகள் கேட்டால் தலைகீழாக நிற்கிறான் என்றார்.

அதைக் கேட்ட இளையவள் அப்பம்மா நீங்க உங்கட அப்பாட்ட கேளுங்க அவர் செய்வார் என்றார். கிழவி சிரித்தாள். நான் சிரித்தேன். வீட்டில் இருந்த அனைவரும் சிரித்தோம்.

யாரிந்த bucket challengeஐ ஆரம்பித்தது? ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தைத் தந்த அந்த மனிதருக்கு பெரு நன்றி.

------------------------------------
இந்த வருட விடுமுறையின்போது நடந்த கதை

வாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.

மகள்கள் இருவரும் மீண்டும் என்னுடன் தங்கியிருக்கிறார்கள். இளையமகள் வரும்போதே ”அப்பா எனது தலைமயிரைப் பாருங்கள்” என்றபடியே வந்தாள்.
சரி, ஏதோ நிறம் அடித்திருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளின் தலைமயிர் இடியப்பத்தைப்போல் சிக்கலாய் இருந்தது.

”என்னடி, இப்படி இடியப்ப சிக்கலாய் இருக்கிறதே” என்றேன்.

முகத்தை சுளித்தபடியே ”நீங்க சிக்கு எடுக்கணும். But நோகக்கூடாது” என்று கட்டளையிட்டாள்.


ஒரு கதிரையில் இருத்தி சிக்கு எடுக்க ஆரம்பித்தேன்.

”நீ விடு, உனக்கு ஒன்றும் தெரியாது” என்றபடியே வந்தாள், கிழவி.

எனக்கு கடுப்பாகிவிட்டது. ” அம்மா, அங்கால போங்கோ” என்றேன்.

கிழவி புதிதாய் ஒரு சீப்புடன் வந்து எனக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்து சிக்கெடுக்க ஆரம்பித்தாள்.

ஒரு முறாய்ப்பு முறைத்தேன்.

”சரி, நீ சிக்கு எடு, நான் பின்னிவிடுகிறேன்” என்று சமாதானத்திற்கு வந்தார்.

”நீங்கள் ஒரு பின்னல், நான் ஒரு பின்னல். யார் வடிவா பின்னுறது என்று பார்ப்போம்” என்றேன்.

”மொட்டையரின்ட பந்தயத்தை பாரன்” என்பதுபோல் என்னை ஏளனமாகப் பார்த்தபடிய, சரி என்றாா்.

அரைமணிநேர சிக்கெடுப்பின் பின்பு அம்மா அழகாகப் பின்னி ரிப்பனும் கட்டிவிட்டார்.

அம்மா பின்னிய பின்னலை கண்டதும் எனக்கு உள்ளூற உதறலெடுத்தது.

முன்பெல்லாம் தினமும் நான்தான் இரண்டு மகள்களுக்கும் பின்னுவேன். அது ஆறு வருடங்களுக்கு முன். அப்பா நோகாமல் தலை இழுத்து பின்னுவார் என்ற பெருமை எனக்கிருந்தது.

இளையவளின், தலைமயிரை முறுக்கி முறுக்கி இறுக்கமாகப் பின்னினேன். மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வந்தது.

”எங்க பார்ப்பம்” என்று வந்தாள் கிழவி.

வந்தவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

”எப்படியடா இவ்வளவு வடிவா பின்னுகிறாய்”என்று பாராட்டினார்.

சற்று நேரத்தின்பின் அக்காவிடம் தங்கை ”அப்பா இப்பவும் வடிவா பின்னுறான்” என்றாள் செல்லத் தமிழில்.

இந்த இரண்டு பாராட்டுக்களும் என்றை காற்றில் தூக்கிப்போகின்றன.

வாழ்க்கையை அழகாக்க ஒரு பின்னல் போதுமானது.
------------------------------------------

இந்த வருட விடுமுறையின்போது நடந்த கதை

ஒரு புடவையால் நான் பட்டபாடு

அம்மா வீட்டை கழுவித் துடைத்தபோது, வீட்டில் ஒரு புதிய புடவை இருந்திருக்கிறது.அதன் காரணமாக என்னைச் சுற்றி பெரும்புயல் அடிக்கிறது. புயல் மையம் கொண்ட இடம் அம்மா.

”இதை யாருக்கு குடுக்க வாங்கினாய்” என்று கேட்டபடியே என்னை வீடு முழுக்க கலைத்துக்கொண்டிருக்கிறார் அம்மா.

”ஓம்... அம்மா கேட்டபது சரிதானே, யாருக்கு வாங்கினீங்க அண்ணா” என்கிறாள் தங்கை.

அம்மாவிடம் உங்களுக்கு புது மருமகள் வரப்போகிறாள் என்கிறார், மச்சான்.
”டேய் மருமகன் சொல்லுறது உண்மையா?” என்று பயந்துபோய்க்கேட்கிறார், அம்மா.

”இல்லை அம்மா, அப்படி ஒரு நாசமறுப்பும் இல்‌லை” என்று தலையடித்து சத்தியம் பண்ணியிருக்கிறேன்.

என் ஒஸ்லோ முருகன் சத்தியமாக நான் அந்த புடவையை வாங்கவில்லை. அப்படி புடைவை வாங்கிக்கொடுக்குமளவுக்கு எனக்கு யாரும் இல்லை.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்னும் தீவீரவாதி நான். தவிர, புடவைக்கடை என்றாலே எனக்கு அலர்ஜி இருக்கிறது. அங்கு சென்றாலே இரத்தக்கொதிப்பும், தலைசுற்றும், வாந்திபேதியும் வரும்.

இரண்டு நாட்களாக அம்மாவின் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் எல்லா சாமிப்படங்களின் முன்பும் சத்தியம் பண்ணிவிட்டேன். அம்மா ஓய்ந்ததாய் இல்லை.

தங்கையிடம் நீ வாங்கினாயா என்றேன். இல்லை என்கிறாள்.

மச்சானும் அப்படியே.

அம்மா கடைக்கே போகவில்லை.

நானும் வாங்கவில்லை.

அப்ப எப்படி இந்த புடவை வீட்டுக்கு வந்தது என்று‌ யோசித்தபடியே நேற்று தூங்கினேன்.

சாமம்போல் பொறிதட்டியது ....

அம்மாவின பிறந்த நாளுக்கு வந்தவர்கள் அம்மாவுக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு அது.

இப்போதெல்லாம் அம்மாவின் மறதி உலகப்பிரசித்தமானது.
”இருடி... விடியட்டும்” என்று கறுவிக்கொண்டிருக்கிறேன்.


இந்த வருடம் விடுமுறையின்போது நடந்த கதை இது

Watchtower திரைப்படம் - எனது பார்வை

அவ்வப்போது எதிர்பாராமல் சிறந்த படங்களைக் காணக்கிடைக்கும். அப்படித்தான் Watchtower என்னும் படமும். இது துருக்கிய நாட்டுப் படம்.

சமூகத்தின் பேசாப்பொருளாய் இருக்கும் கருக்களில் ஒன்றை மிக அழகாக ஆர்ப்பாட்டம் இன்றி படமாக்கியிருக்கிறார் இயக்குனரான Pelin Esmer.

படத்தின் வெற்றியே அதன் யதார்த்தம் நிறைந்த எளிமை, மிகைப்படுத்தப்படாத நடிப்பு முக்கியமாக கதையின் கரு.

வாழ்க்கை தந்த கசப்புக்களால் சுற்றாடலில் இருந்து விலகி வாழ்க்கையைத்தேடும் இரு மனிதர்களின் கதையே இந்தப் படம். விறுவிறுப்பு இல்லை. ஆனால் படத்தின் யதார்த்தம் எம்மைக் கௌவிக்கொள்கிறது.
திருமணமாக முன் கர்ப்பமுற்ற ஒரு பெண் பேருந்து ஒன்றில் கடமையாற்றுகிறாள். பெற்றோர் அவள் பாடசாலை விடுதியில் வாழ்கிறாள் என்றே நம்புகிறார்கள்.

அதே ஊருக்கு விபத்தில் தன் மனைவியையும் குழந்தையையும் பறிகொடுத்த ஒருவர் காட்டுஇலாகா அதிகாரியாக வருகிறார்.

அந்தப்பெண் தனது தாயிடம் சென்ற ஒருநாள் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கூற தாய் மௌனத்தையே பதிலாகக்கொடுக்கிறார். அப்பெண் சீற்றத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

அவள் பேருந்தில் இருந்து வேலையைமாறி அதே நகரத்தில் ஒரு சிற்று+ண்டிச்சாலையில் வேலைசெய்யும் ஒருநாள் அவளுக்கு பிரசவ வலி எடுக்கிறது. காட்டுஇலாகா அதிகாரி இப்பெண் வலியுடன் சிற்றூண்டிச்சாலையில் இருந்து வெளியேறுவதை அவதானிக்கிறார். சற்று நேரத்தில் அவள் குழந்தை ஒன்றை பிரசவிக்கிறாள்.

குழந்தையை ஓரிடத்தில் மறைத்துவைத்த பின் அவள் அவ்வூரைவிட்டு வெளியேறுவதை அவதானிக்கும் காட்டிலாகா அதிகாரி அவளைப் பின்தொடர்ந்து செல்லும்போது அவள் பிரசவித்திருக்கிறாள் என்பதை கண்டுகொள்கிறார். அவள் மிகவும் சோர்வாக இருப்பதனால் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று அவளுக்கு சிகிச்சையளித்தபின் குழந்தையையும் கண்டுபிடித்து அப்பெண்ணிடம் ஒப்படைக்கிறார்.

குழந்தையைப் பராமரிப்பதிலும் அப் பெண்ணைப் பராமரிப்பதிலும் அவர் உதவுகிறார். ஒருநாள் குழந்தையை விட்டுவிட்டு அப்பெண் தப்பிஓட, முயலும்போது அவர் அப்பெண்ணை தேடிப்பிடிக்கும்போது நடக்கும் உரையாடலில் தனது தாயாரின் அண்ணணால் பாலியல்துஸ்பிரயோகம்செய்யப்பட்டதால் உருவான குழந்தைஇது என்று அவள் கூறுகிறாள். காலப்போக்கில் அவர்களுக்கிடையில் ஒரு உறவு மலர்வதாய் படம் முடிவுறுகிறது.

சமூகத்தின் இருண்டதொரு பக்கத்தை மிகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

இப்படம் பல திரைப்படவிழாக்களில் பங்குபற்றியிருக்கிறது என்பது இப்படத்தின் தரத்தையும் சிறப்பையும் கூறுகிறது.

Raspberry Flavoredன் திருவிளையாடல்


நேற்றிரவு, அம்மாவுக்குத் தெரியாமல் Raspberry Flavored அருந்திவிட்டு, மோகன், நதியாவை நோக்கி ”மலையோரம் வீசும் காற்று” என்று பாடுவதை கேட்டபடியே, காற்றில் நடந்துகொண்டிருந்தேன்.

கணிணி சிணுங்கியது..

”அண்ணை ஸ்கைப்புக்கு வாங்கோ”, என்றான்” பேரன்புக்குரிய தம்பியொருவன்.

”இல்லையப்பு, அண்ணை கன நாளைக்கு பிறகு மந்தகாரமான மூட்ல இருக்கிறன்” என்றேன்

”அண்ணை விளையாடாதீங்க, முக்கியமான விடயம் கதைக்கணும், உடனவாங்க” என்றான்.

”நதியா பாடுறாள் பார்க்கவிடுடா” என்றேன்.

”You tube எங்கயும் போகாது, அது அங்கதான் இருக்கும். அதைவிட நீங்க நதியாவ பார்த்து உங்கட நெஞ்சு நிண்டுபோனால்... ” என்று பயமுறுத்தினான்.
ஸ்கைப்ல வந்தான்.

கதைத்தான்.

நானும் கதைத்தேன். என் முகத்தில் சற்று காற்று படப் பட நான் என்ன கதைத்தேன் என்பதோ, அன்புத் தம்பி என்ன கதைத்தான் என்பதோ, நதியாவுக்கு என்ன நடந்தது என்பதோ எல்லாமே காற்றில் எழுதியதுபோலாகியது.

Raspberry Flavoredஉம், கருவாட்டுப்பொரியலும் முடிந்து, வதக்கிய வெங்கயமும் முடிந்தபோது, நான், மேகங்களுக்குள் நடக்கும் ஆற்றலையும், ஒரு பொருள் இரண்டு, முன்றாகத் தெரியும் ஆற்றலையும் பெற்றிருந்தேன்.

தம்பியானவன், புத்தகம் சமுகம் வாசிப்புபற்றி எதையோ படு சீரியசாக சொன்னான் என்றே நினைக்கிறேன். நானும் அவன் பாடுகிறான் என்று நினைத்தபடியே அப்படியே அயர்ந்துவிட்டேன்.

தம்பி அயரவில்லை. அவன் அயரக்கூடிய ஆளுமில்லை.
இடையிடைய அண்ணை, அண்ணை என்று 10 முறை அழைப்பான். நான் 10வது முறை சற்று நனைவுதிரும்பி ” ம்... ம்” என்பேன்.

 ”அண்ணை முக்கியமாக விசயமண்ணை, கேளுங்கோண்ணை, வடிவாகக் கேளுங்கோ அண்ணை” தம்பி என்பான்.

நான் ம்..ம் என்றுவிட்டு என்னையறியாமலே தூங்கிவிடுவேன்.

இரவு 2 மணிபோல், திடீர் என்று நினைவுதிரும்பியபோது, என்னடா கணிணி குறட்டை விடுகிறதே என்று பார்த்தேன்.
 
ஸ்கைப் இயங்கிக்கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தம்பி களைத்து தூங்கியிந்தான்  இருந்தான்.


மன்னித்துக்கொள் ராசா!

எல்லாம் Raspberry Flavored திருவிளையாடல்..
யாவும் கற்பனையல்ல.

நாலாம் பிறையும் நாயலைச்சலும்

பல மாதங்களின் பின் நேற்று நிலக்கீழ் தொடரூந்தில் ஏறினேன். வெளியே இலையுதிர்காலத்தின் இருளும், குளிரும் குடிவந்திருந்தது.
நான் உட்கார்ர்ந்திருந்த ஆசனத்திற்கு பின்புறமான ஆசனத்தில் இரு ஆன்டிகள். ஆம் இலங்கைத் தமிழ்ப்பெண்கள். சற்றே வயது முதிர்ந்தவர்கள். நாற்பதுகளின் இறுதியில் இருக்கலாம் அவர்களின் வயது. மெதுவாய் பேசுவதை விரும்பாதவர்களாய் இருக்கவேண்டும்.

அவர்களின் உரையாடல் எனக்கு மிக நன்றாகக் கேட்கிறது.
ஊர்க் கதைகள், சரஸ்வதிப் பூசை, சுகயீனங்கள், சீட்டு என்று கதை சென்றுகொண்டிருந்தது.

வெளியே வானத்தில் பிறை மிக அழகாக இருப்பதைக் கண்ட ஒரு ஆன்டி மற்றவரிடம்:

”அங்க பாருங்க பிறை எவ்வளவு வடிவா இருக்குது”

மற்றையவர் பிறையைப் பார்க்காமலே ” நாசமாப் போச்சு, நாலாம் பிறை என்றால் நாயலைச்சல், அத பார்க்காதீங்கோ”

மற்றையவர் பலமாய் சிந்தித்தபின் தொடர்ந்தார்..
.
”எங்கட வீட்டிலயும் ஒரு நாலாம்பிறை இருக்கு”

”யாரைச் சொல்கிறீங்க”

”வேற யார்? என்ட மனிசன்தான்

அப்பிடியென்றால் என்ட வீட்டிலயும் நாலாம்பிறை இருக்கு... அது வெளியிலபோனா லேசில வீட்ட வராது. அலை அலையென்று அலைஞ்சு போட்டுதான் வரும்.

இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாகள்.
..
..
எனது காதுக்குள் வடிவேலுவின் ”ஆஹா” கேட்டது.

அபிநயாஞ்சலி 2014 - எனது பார்வை

இன்று அபிநயாஞ்சலி 2014 நிகழ்ச்சியை காணக்கிடைத்தது. மிகவும் ரசித்தேன். நோர்வே மாணவர்களின் திறமை மெருகேறியபடியே இருக்கிறது. ஒஸ்லோ இளையோருக்கும், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் ஒஸ்லோவில் பல அழகிய கலைநிகழ்வுகளைக் காணக்கிடைக்கிறது. மகிழ்ச்சி.

இது அபிநயாஞ்சலி 2014 பற்றிய எனது பார்வை. இது நடனம்பற்றிய துறைசார் நிபுணத்துவம் அற்ற ஒரு மனிதனின் பார்வை. எனவே நடனங்களின் சரி பிழைகளோ, சாஸ்திரநுணுக்கங்களோ இங்கு உரையாடப்படப்போவதில்லை. மாறாக என் மனதை கவர்ந்த, சிந்திக்கத்தூண்டிய, எழுதத்தூண்டிய விடயங்களை பகிரவே நினைத்திருக்கிறேன். உரையாடவிரும்புவோர் உரையாடற் விழுமியங்களுக்கு உட்பட்டு உரையாடலாம்.

தரமான மேடை, துறைசார் நிபுணர்களினால் (டெக்னீஷீயன்கள்) நிர்வகிக்கப்பட்ட ஒலி, ஒளியமைப்புக்கள் ஒரு நிகழ்வின் வெற்றிக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்று இன்றைய நிகழ்வு ஒரு உதாரணம். நேர்த்தியான, ஆர்ப்பாட்டமில்லாத மேடையமைப்பும் நிகழ்விற்கு சிறப்புசேர்த்தன. இருப்பினும் இதே மேடையலங்காரத்தை பலதடவைகள் கண்ணுற்றிருக்கிறேன் என்பதை மறைப்பதற்கில்லை.

ஒலிபரப்பாளர்களின் நேர்த்தியான தமிழும், நோர்வேமொழியும் கேட்பதற்கு இதமாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தது. கேதீஸ்வரனின் குரல் கம்பீர வசீகரமானது. அவரது நிகழ்ச்சித்தொகுப்பினை நான் காண்பது இதுவே முதற்தடவை. பரதநாட்டிய நிகழ்வுகளுக்கு என்று ஒஸ்லோவில் சில ஜாம்பவான்கள் உண்டு. கேதீஸ்வரனும் காலப்போக்கில் அவர்களுடன் சேர்ந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். போட்டி நிகழ்வினை நெறிப்படுத்திய நிதுலாவின் தமிழும் அழகு. நோர்வே குழந்தைகளின் தமிழக்கு நான் அடிமை. மெளனிஷாவின் நோர்வேமொழியானது மீனுக்கு நீந்த கற்றுக்கொடுக்கவேண்டுமா ரகம்.

சம்பிரதாயமான வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. மாணவியரின் பயிற்சியின் பலனை மேடையில் காணக்கூடியதாய் இருந்தது.‌ தாண்டவ நடனமானது பரதம், மோகினியாட்டம், கதக் என்ற நடனவகைகளை உள்ளடக்கி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. பலரும் இந் நடனத்தை ரசித்தார்கள் என்றே கருதுகிறேன். கரகோஷம் அதையே கூறியது. ஆடையலங்காரங்களும் நேர்த்தியாக இருந்தன. குழந்தைகளின் அசைவுகளும், நகர்வுகளும் சமச்சீராகவும் ரசிக்கத்தக்கனவாகவும் இருந்தன. சாதாரண ரசிகர்களின் மனதைக்கவர்ந்த நடனம் இது.

கண்ணண் வருகை“இன் குட்டிக் கண்ணண்கள் நிகழ்வினை அழகாக்கினார்கள் என்றே கூறவேண்டும். அத்துடன் கண்ணண் நின்றிருந்த தேர் நகர்ந்த காட்சியமைப்பும் அழகு. உடை மற்றும் உருவ அலங்காரங்கள் ஒரு நிகழ்வின் தரத்தை மேற் தளத்திற்கு நகர்த்துவதற்கு முக்கியமானவை. இப்போதெல்லாம் நாம் இப்படியான நுணுக்கங்களில் அதிக கவனத்தையும், நேர்த்தியையும் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறோம். அது மகிழ்ச்சிக்குரியது.

பிரிவுத்துயரை கூறும் ஒரு பாரதியின் பாட்டிற்கு தாலாட்டு அபிநயம் ஏன்? அவற்றிற்கான தொடர்பு என்ன? நான்தான் அதை பிழையாக விளங்கிக்கொண்டேனோ நானறியேன். தவறு எனின் மன்னித்துக்கொள்ளுங்கள்.

போட்டி நிகழ்வுகளில் முடிவுகனளப் பற்றிய சர்ச்சைகள் வராதிருந்தாரல்தான் ஆச்சர்யம். வெற்றி தோல்வியை அனைவராலும் ஒரேவிதமாக ஏற்றுக்கொள்ளமுடிவதில்லையே. முக்கியமாக பெற்றோருக்கு.

கடந்த ஆண்டின் போட்டிகளின்போது தோல்வியுற்ற மாணவியின் அழுகை இந்த ஆண்டு வெற்றியின் அழுகையாக மாறியிருந்தது. தோல்விகளையும் வெற்றிகளாக மாற்றலாம் என்பதை நினைவூட்டியது இச்சம்பவம்.

நாட்டிய நாடகத்தின் ஆரம்ப காட்சியமைப்புகள் அழகாக இருந்ததை நான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். கல்யாணத்தின்போது ஒரு பெண் மணமக்கள், நண்பர்களுடன் Selfie எடுப்பது போன்ற காட்சியை மிகவும் ரசித்தேன். இன்றைய யதார்த்தம் அது.

நாட்டிய நாடகம் என்று அறிந்ததும் நான் மகிழ்ந்ததென்னவோ உண்மைதான். நாட்டிய நாடகம் நான் எதைக் கருதினேன் என்று கூறியபின் தொடர்வதே சிறந்தது என்று நினைக்கிறேன். அதற்கு முன், இன்றைய நாட்டிய நாடகத்தின் கருவைக்கொண்ட Theme dans  ஒன்றினை நடன ஆசிரியை மேரி ஒளிவிழா ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் செய்திருந்தார் பதிவுசெய்கிறேன். ஒரு கருத்தை பலவிதங்களில் செய்வதொன்றும் தவறில்லை. மூலக்கதை ஒன்றாக இருப்பதாலேயே இதை இங்கு குறிப்பிடுகிறேன்.

பரதநாட்டிய அசைவுகள், அபிநயங்கள், வசனங்களின் அடிப்படையிலான ஒரு நடன நாடக நிகழ்வு என்றே நினைத்தேன். அதனாலோ என்னவோ என்னால் நாட்டிய நாடகத்துடன் ஒன்ற முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னைப்பொறுத்தவரையில் நாட்டிய நாடகத்தின் கதை நகரும் பாகங்களின் முக்கியதுவத்தை அறிந்து அதற்கேற்ப காட்சிகளை, நடனங்களை, கதையின் கனத்தை காண்பிக்கவேண்டும் எனக் கருதுபவன் நான். இந்த நடனத்தை போன்ற நடனவகைகளை நாட்டிய நாடகம் என்று கூறாமல் Theme dans என்றால் அது பொறுத்தமாயிருக்கும் என்றே நினைக்கிறேன். உதாரணமாக மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவ்வாறான Theme dans நடைபெறுவதைக் கூறலாம்.

இன்றைய நாட்டிய நாடகத்தின் கரு ”பெற்றோர்களின் பிரிவினால் குழந்தைகள் படும் அவலம்”. சிறந்ததொரு கரு. இது புலம்பெயர் சமூகத்தின் சாபங்களில் ஒன்று. நாட்டிய நாடகம் பற்றி, நிகழ்வின்பின், நண்பர்களுடன் உரையாடிபோது பிரச்சனைக்கான தீர்வு முன்வைக்கப்படவேண்டும் என்று வாதம் வந்தது. எனனைப்பொறுத்தவரையில் பிரச்சனையை சமூகத்திடம் கொண்டுசெல்வதும் முக்கியமானதென்பேன். அதைத்தான் மாணவியரும் செய்திருந்தார்கள்.

ஆனால் நாட்டிய நாடகத்தின் ஆரம்பகாட்சிகளான காதல், அதன் பின்னான திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறத்தல், வளர்தல்பற்றிய காட்சிகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும், சினிமா பாணியும், நேரமும், மிகச் சிறப்பாக இருந்தாலும் கதையின் அதி முக்கிய கருவான ”பாதிப்புறும் குழந்தையின் மனநிலை”க்கு என்னும் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஆரம்பக்காட்சிகள் கதையின் கரு அல்லவே. கதையின் கரு முக்கியத்துவம் பெறும் இடம் நாட்டிய நாடகத்தின் இறுதிப்பாகமே.

எனவே அப்பகுதி அதிக கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இந் நாட்டிய நாடகத்தை ஒரு தராசில் இடுப்பார்த்தால் கதையின் கரு இருக்கும் பாகம் கனம் குறைந்திருப்பதாகவே தோன்றும். இதனாலே என்வோ எனக்கு நாட்டிய நாடகத்துடன் ஒன்றிப்போக முடியவில்லை. தாலியைக் களற்றி கணவனின் முகத்தில் எறிந்ததை பலரும் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள் என்பது முரண்நகை.

நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய ராதா சர்மாவின் உரையானது இடம், பொருள், ஏவல் உணர்ந்த மிகவும் பண்பட்ட, இளையோராலும் புரிந்துகொள்ளக்கூடிய ‌மொழியிலான உரை. அவர் ஒரு தலைசிறந்த நடன ஆசிரியர் என்பதை அவரது உரை காட்டிற்று.

சுயம்பு ஹரிகரனின் வாய்பாட்டு அருமை. ஒஸ்லோவில் அவர் இருப்பது எமக்குப்‌ பெருமை. இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் முக்கிய கவனத்தைப்பெற்றவர்கள் இசையை வழங்கிய எமது இளையோர்கள். இவர்களில் பலருடன் திறமையை இவ்வருடம் நோர்வே தமிழ்ச் சங்கம் நடாத்திய கர்நாடக இசைக்கச்சேரியில் கண்டிருந்தேன். சிறப்பாகவும், விரைவாகவும் வளரும் கலைஞர்கள் இவர்கள். இவர்களுக்கு பெரியதொரு பாராட்டு என் சார்பில். இவர்களுள் மெய்சிலிர்க்வைக்கும் பிறவிக் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

ஒரு சிறு குசும்பு:   :)
குத்துவிளக்கேற்றல் நிகழ்வில், பலவருடங்களின் பின் ஒஸ்லோவின் முக்கிய தமிழ்பிரமுகர்கள் ஒரே மேடையில் தோன்றியதை காணக்கிடைத்தது. அரசியல், கால, சூழ்நிலை மாற்றங்களின் அறிகுறியா இது? அதுவும் மகிழ்ச்சியானதே. காலம் பதில்கூறட்டும்.

பிரதமவிருந்தினர் ஒருவரின உரை என்பது ஒரு நிகழ்வின் முக்கிய உரையாகக் கருதப்படும். ஆனால் நேற்றைய நிகழ்விற்கு திருஸ்டி கழிப்பதற்காகவே பிரதமவிருந்தினரும், கொளரவ விருந்தினரான லண்டன் ஆசிரியையும் உரையாற்றினார்கள் என்றே நினைக்கிறேன். இதைவிட மிச்சிறப்பாக சமூகம் சார்ந்த கலை, சார்ந்த பிரக்ஞையுடன் உரையாற்றக்கூடியவர்கள் இங்கு இருக்கிறார்களே. இவ்வளவு அழகான நிகழ்வில் இவ்வளவு மோசமான, தவறான உள்ளடக்கமுள்ள உரைகள் தேவைதானா?

ஒருகேள்வி: ஏன் அனைத்துக் கலைக்கூடங்களும் அதிகமாக இந்துமதத்தின் புராணக்கதைகளை மட்டுமே  நடனங்களாக மாற்றுகிறார்கள்? இது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் பொருந்தும். நடனமாட வேறு கருக்களே இல்லையா? அல்லது இது எமது கற்பனை வறட்சியைக் சுட்டிக் காட்டுகிறதா?

இனி எழுதப்போகும் விடயம் சர்ச்யைத் தரலாம். அச்சர்ச்சை ஒரு வளமான உரையாடலாக மாறும் எனின் மகிழ்வேன்.

இலண்டன் நகரத்தில் இருந்து வந்திருந்த சிறப்புவிருந்தினர் உரையாற்றியபோது ”இந்த பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவுக்கு சமனானது என்ற தொனியில் கூறினார். இக்கூற்று எந்தவிதமான சமிக்ஞைகளை குழந்தைகளுக்கும், சமூகத்துக்கும் கொடுக்கும் என்பதை அவர் அறியாமலா அவ்வாறு உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் ”இல்லை, எமது பட்டமளிப்பினை  பல்கலைகழக பட்டமளிப்புடன் ஒப்பிடுவது தவறு என்று கூறியிருந்தாலாவது அவ்வுரையின் தவறும் அதன் தாக்கமும் குறைந்திருக்கும். ஆனால் எவரும் மறுத்துரைக்காதது இப்போது நிகழ்சியின் பொறுப்பாளர்களும் அதே கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையல்லவா தருகிறது?

இந்தக் குழந்தைகளின் நடனம்பற்றிய கல்வியை நாம் ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழாவுடன் ஒப்பிடலாமா? மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி அங்கு இருக்கிறதே. பல்கலைக்கழக்கல்வி என்பது  எத்தனை ஆழமானது, விரிவானது. ஏறத்தாள 3 - 4 ஆண்டுகள் முழுநேரமாக, ஆய்வுகள், விரிவுரைகள், பெரும் பரீட்சைகளின் பின் கிடைப்பதே பல்கலைக்கழகப் பட்டமும், பட்டமளிப்பும். அதிலும் முதுமானிப் பட்டம், கலாநிதிப் பட்டம் என்றால் அவற்றின் கனம் வேறு.

அப்படிப்பட்ட பட்டமளிப்புடன் இக்குழந்தைகளின் பட்டமளிப்பை ஒப்பிடுவதும், அவை இரண்டும் ஒரே தகுதியுடையவை என்னும் தொனியில் உரையாற்றுவ‌தும் குழந்தைகளின் மனதிலும், பெற்றோர்கள் மனதிலும்  தேவைக்கு அதிகமான எண்ணங்களை வளர்க்காதா? நான் கற்றுத்தேர்ந்துவிட்டேன் என்ற எண்ணத்தையும் துளிர்க்கவைக்காதா? ஆங்காங்கே தலைக்கனத்தையும் தராதா? இது வளமானதா? இவற்றிற்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

புலம்பெயர் நாடுகளில் பரதக்கலையை கற்பது இலகுவல்லை. கற்பதை பாராட்டுவது அவசியம். ஆனால் இப்படியான போலியான புகழ்ச்சிகளும், பேச்சுக்களும், செயல்களும் எமது கலையின் தரத்தினை உயர்த்துமா? கலையின் தரம் என்பதில் எப்பொழுதும் சமரசம் இருத்தலாகாது. அவ்வாறு செய்யப்படும் சமரசங்கள் கலையின் வளர்ச்சிக்கு தடங்கலாகவே இருக்கும் என்பதை நாம்எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்.

குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக பட்டங்கள் வளங்கப்படுகின்றன என்றே நான் எண்ணுகிறேன். எனவே அப்பட்டங்களை பல்கலைக்கழப்பட்டங்களுடன் இணைத்து சிந்திப்பதும், உரையாற்றுவதும், எம்மை நாமே குழப்பிக்கொள்ளுவதும் எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளவதற்குச் சமம்.

இவரது உரையானது மிகவும் மலிமானதாகவே இருந்தது. அவரது பல கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. உரையில் போலித்தன்மை அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது.
பிரபல மற்றும் பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர், லண்டன் ஓரின்டல் பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர் இவ்வாறு உரையாற்றியது ஆச்சயர்மாகவும், வேதனையாகவும், துக்கமாகவும் இருக்கிறது.

சில சந்தர்ப்பங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால் எனது அனுபவத்தின்படி முகஸ்துதி செய்பவர்கள் நண்பர்களாகவும், விமர்சனத்தை முன்வைப்பவர்கள் எதிரிகளாகவும் நினைக்கும் சமூகம் எம்முடையது. போலியான முகஸ்துதியில் எனக்கு ஏற்பில்லை. அது வளமற்றது என்பதில் அதீத நம்பிக்கையுடையவன் நான்.

ஆனால் உரையாடலில் நம்பிக்கையுள்ளவன்.

தோழமையுடன்
சஞ்சயன்