நேற்று (10.10.14) நோர்வே கலைஞர்கள் தயாரித்து, இயக்கி,
இசையமைத்து, நடித்து, விநயோகித்த ”9c Oslo” திரைப்படத்தை
பார்க்கக்கிடைத்தது. அது பற்றிய எனது பார்வை இது.
ஒரு துறைசார்அனுபவமில்லாத ஒரு சிறு சமூகத்தில் இருந்து ஒரு
படைப்பு வருகிறது என்றால் அதனை திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு அப்பால்
அதனை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வரவேற்பது சமுகத்தின் கடமை. அது ஏன்
என்பதற்கான காரணத்தை கூறவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதையே ஒஸ்லோ
தமிழ்மக்கள் செய்திருக்கிறார்கள். ஆம், நேற்றும் இன்றும் அரங்கம் நிறைந்த
காட்சிகளாக இத்திரைப்படம் காண்பிக்கப்படுகிறது.
இப்படியான ஆதரவை இனிமேலாவது
எமது சமூகம் எம்மவர்களின் திரைப்படங்களுக்கு வழங்கவேண்டும்.
உலகத்தரம்மிக்க எம்மவரின் திரைப்படங்கள் மிக மிக சொற்பமானவர்களுடன்
காண்பிக்கப்பட்டது மனதை நெருடியதாலேயே இதைக்கூறுகிறேன்.
உலகின் தமிழ்த் திரைப்படச் சூழலில் பேய்ப்படம் என்று
அழைக்கப்படும் Horror film எடுப்பது என்பது படு ஆபத்தான ப்ராஜெக்ட் என்பதை
அனைவரும் அறிவோம். அதையே நோர்வே தமிழ்ச் சூழலில் எடுத்தது,
இயக்குனருக்கு தேவைக்கு அதிகமான ”தில்” இருப்பதையே
காட்டுகிறது. சோபாசக்தியின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராக
சிறுகதைகளைப்போன்று, சமூகத்தின் விருப்புக்களுக்கு எதிராக தன் படைப்பை
நம்புபவர்களால் மட்டுமே இவறைறை சாதிக்கமுடிகிறது. இவர்களை ஏனோ எனக்கு
பிடித்தும்போகிறது. படத்தின் முதலாவது வெற்றி இது.
எங்கள் சமூகத்து திரைப்பட ரசிகர்களை இரண்டு அல்லது முன்று வகைகளாகப்
பிரிக்கலாம். முதலாவது; சாதாரண ரசிகன். இவர்கள் நுணுக்கமாக படத்தினை
ஆராயாதவர்கள். படம் பிடித்திருந்தால் விசிலடிக்கும் ரகம் அல்லது
திட்டுவார்கள். இரண்டாவது, முன்றாவது ரகமானவர்கள் படத்தின் நுணுக்கங்களை
ஆராய்ந்து, ஒவ்வொறு Frame ஐயும் ரசிக்கும் கூட்டம், அது மட்டுமல்ல
படத்தைப்பற்றி, தொழில்நுட்பங்களைப்பற்றி, கதையை, இசையை, ஒளிப்பதிவை, எடிடிங்ஐ உரையாடும், விவாதிக்கும் கூட்டம்.
முதலாவது ரகத்தினர் எமது சமூகத்தில் பெரும்பான்மை. இரண்டாவது,
முன்றாவது ரகம் சிறுபான்மை. இப்படத்தை பார்த்தபின் மேற்கூறிய
இருபகுதியினருடனும் உரையாடக்கிடைத்தது. முதலாவது ரகத்தினர் படத்தை
ரசித்திருந்தனர். எனவே இதுவும் திரைப்படத்தின் வெற்றியே.
இரண்டாவது மூன்றாவது ரகத்தினர் பின்வருபவற்றினை பாராட்டினார்கள்.
- நோர்வேயின் இளம் கலைஞர்களை முதன்மைப்படுத்தியது.
- ஆற்றலுள்ள கலைஞர்களை அடையாளம் கண்டது.
- கலைஞர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்தது.
- பலரும் படம் எடுக்கத்துணியாத கருவை துணிந்து தொட்டது.
- NT pictures நிறுவனத்தின் ஏனைய படங்களைவிட இப்படத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் உண்டு.
- திரைப்படத்தில் காணப்படும் வசனங்கள்.
ஆனால் விமர்சனங்களை நாம் ஒருவித filter கண்களுடனேயே
பார்க்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஒரு துறைசார் அனுபவற்ற
சமுகத்தில் இருந்து வெளிவரும் படைப்பு இது. இதை ஹாலிவூட், கோலிவுட்
படங்களுடன் ஒப்பிட்டுப் பேசமுடியாது, பேசவும் கூடாது. அவர்களிடம் உள்ள
வளங்களை எம்மவரின் வளங்களுடன் ஒப்பிடவும்முடியாது. தவிர இப்படத்தில்
பணியாற்றிய மனிதர்களின் உழைப்பையும், ஆர்வத்தையும் நாம் கடுமையாக
கவனத்தில்கொள்ளவேண்டும். தவிர குடும்பங்கள் அனுபவித்த சிரமங்களையும் நாம்
இலகுவாக மதிப்பிடலாகாது. படைப்பாளியின் குடும்பச்சுமை பற்றி நான்
கூறத்தேவையில்லை. எத்தனை சமரசங்களை அவன் சந்திக்கவேண்டும் என்பதை படைப்பாளி
மட்டுமே அறிவான்.
எனவே விமர்சனங்களை மேற்கூறியவற்றினை கருத்தில்கொண்டே
முன்வைப்பதே நியாயமானது. அதேவேளை அனைத்து கலைப்படைப்புக்களும்
விமர்சனங்களுக்கு உட்படுவதும், உரையாடவும், விவாதிக்கப்படுவதும் அவசியம்.
அப்போதுதான் அது கலைப்படைப்பாகிறது. நான் இத்திரைப்படத்தை இவற்றை
அடிப்படையாகக்கொண்டே நோக்குகிறேன். எனவே இத்திரைப்படம் பற்றிய
நுணுக்கங்களைப்பேசும் ஒரு உரையாடல் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது எனது அவா.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழர்களுக்கு என்று ஒரு
திரைப்பட உரையாடற் சமூகம் இருக்கிறது. அங்கு வளமான உரையாடல்கள்
நடைபெறுகின்றன. அப்படியான நிகழ்வுகள் ஒஸ்லோவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் இதுபற்றி உரையாடிய
சந்தர்ப்பங்களில், திரைப்படத்துறையில் உள்ள சில நண்பர்கள் அப்படியானதோர்
உரையாடற் சமூகத்தினை ஒஸ்லோவில் ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆயினும் பல
ஆண்டுகளான பின்பும் அவை இன்றுவரை சாத்தியப்படவில்லை என்பதே உண்மை.
ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் மகிழ்வேன். எனது ஆதரவு நிட்சயம் உண்டு.
ஒஸ்லோவில் உள்ள துறைசார் நண்பர்கள் இதனை கவனத்தில் எடுக்கவும்.
இனி படத்தில் எனக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்?
- நடிகர்களின் தேர்வு.
- அனுபவமற்ற நடிகர்களை நெறிப்படுத்திய விதம்.
- இளையோரின் அசாத்திய நடிப்புத் திறமை. (சிரம்தாழ்த்திய வாழ்த்துக்கள்)
- கதையின் கருத் தெரிவும், அதுபற்றிய துணிவும்.
- ஆங்காங்கே மிளிரும் உரையாடல்கள்.
- படத்தின் டைட்டில் காட்சிகள்.
- ஆங்காங்கே மிளிர்ந்த இசை.
- திரைப்படத்தின் முடிவு. (கண்ணடிக்கும் காட்சி தவிர்த்து).
- முற்றிலும் நோர்வே கலைஞர்களையும், விநயோகஸ்தர்களையும் நம்பியமை.
- திரைப்படக்குழுவினரின் ஆர்வமும், அர்பணிப்பும்.
- அரங்கத்தை நிரப்பிய எம்மவர்கள்.
நோர்வே தமிழ்பேசும் சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க ஒரு
இடத்தை மேற்கூறிய காரணங்களினால் இத்திரைப்படம் பிடித்துக்கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்குள் வளர
ஆம்பிக்கிறது.
இத்திரைப்படம் பல பெரும்
கருத்துமுரண்பாடுடைய பல மனிதர்களையும் அவர்களின் கலையார்வம் என்னும் ஒரே
நோக்கத்தினூடாக சேர்ந்தியங்கவைத்திருக்கிறது. இது மிகவும் வளமான
சிந்தனையும், செய்கையும் ஆகும்.
கருத்துவேறுபாட்டையும் கடந்து, பொதுவெளியில் இருபகுதினருக்கும் பொதுவான ஒரு
நோக்கத்திற்காக சேர்ந்தியங்கும் பண்பு எம்மவர்களிடத்தில் இல்லை. இதை
செய்கையில் காட்டியதற்காகவும் நாம் இவர்களை பாராட்டவேண்டும். இந்தப் பண்பினை
எங்கள் மக்களமைப்புக்களை நடாத்துபவர்கள் கற்றுக்கொண்டால் எமது
சமூகத்திற்கு அது பெரும் பயனளிக்கும்.
அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்