
தொடரூந்து வந்ததும் ஏறியமர்ந்துகொண்டேன். தொலைபேசியில் இணையத்துடன் தொடர்பு எடுத்து செய்திகளை வாசித்தபோது ”நுவரெலியாவில் கடும் பனி, கடும் குளிர் என்றிருந்தது. மலையில் பனிகொட்டியிருக்கும் படத்தையும் போட்டிருந்தார்கள். குளிர் 5 - 6 பாகையாக இருப்பதால் கடுமையான குளிர் நிலவுகிறது என்றும் செய்தி கூறியது. குளிரின் தார்ப்பர்யத்தை கடந்த 27வருடங்களாக நான் அனுபவித்திருப்பதால் அங்கிருப்பவர்களின் நிலை எப்படியிருக்கும் என்பதை புரியக்கூடியதாக இருந்தது.
அந் நினைவுகளில் இருந்து விடுபடுவதற்காய் தமிழ்மகன் எழுதிய ”வெட்டுப்புலி” நாவலை எடுத்து வாசிக்கலானேன். அதில் வெள்ளைக்காரனின் குதிரையின் அழகில் மயங்கிய லட்சுமணன் அதை திருடுவதற்காக ஜமீன்தாரின் வீட்டு மரத்தில் ஏறி, திருடும் சந்தர்ப்பத்துக்காய் காத்துக்கொண்டிருந்தான். எனது மனம் முழுவதும் கதையின் விறுவிறுப்பில் லயித்திருந்தது. லட்சுமணணும் குதிரையை ஜமீன்தாரின் வீட்டில் இருந்து திருடி எடுத்துக்கொண்டு அதில் ஏறுவதற்கு முயற்சிக்க, குதிரை தறிகெட்டு ஓடும். இவனும் அதில் விடாக்கண்டனாய் தொங்கிக்கொண்டிருப்பான்.
அந்நேரம் தொடரூந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றிருந்தது. ஒரு அழகியவள் எனக்கு முன்னிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள். அவளுடன் இன்னுமொரு பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் தமிழர்கள்.
முதலாமவள் எனக்கு எதிரே உட்கார்ந்துகொண்டாள். என்னை நிமிர்ந்து பார்த்தபோது நான் சிநேகமாய் புன்னகைத்தேன். அவள் கண்கள் மருண்டன. என்னை ஒரு மாதியாகப்பார்த்து பின்பு அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தாள். அப் பெண் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பதை அவதானித்த அவள் முகத்தில் சிநேகமான ஒரு புன்னனை அரும்பி மறைந்தது. அருகில் இருந்து பெண்ணைப் பார்த்தேன். அவர் வேறு உலகில் சஞ்சரிந்திருந்தார்.
எனக்கு எதிரே இருந்த பெண் என்னை பார்ப்பதும், நான் அவளை நிமிர்ந்து பார்ப்பதை கண்டதும் தலையைக் குனிவதுமாக இருந்தாள். என்னால் புத்தகத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை. மனம் முழுவதும் ஒரு பரவசம் பரவியது. ஒருவித மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
இப்போ அவள் என்னைப் பார்க்கிறாளா என்பதை புத்தகம் வாசிப்பதுபோன்று பாசாங்கு செய்தபடியே கடைக்கண்ணால் பார்த்தேன். அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். நான் திடீர் என்று அவளைப் பார்த்தேன். வெட்கத்துடன் தலையைக்குனிந்துகொண்டாள். பின்பு தனது பனிக்கால தொப்பியினால் கண்களை முடியபடியே தூங்குவதுபோல் பாசாங்குசெய்தாள். நான் வாசிப்பதுபோன்று பாசாங்குசெய்தேன்.
இப்போ அவள் தலையை பின்புறமாய் சரித்து தொப்பினூடாக என்னைப் பார்ப்பது தெரிந்தது. நான் மந்தகாசமான ஒரு புன்னகையை எனது அழகிய முகத்தில் படரவிட்டேன். அதைக் கண்ட அவளின் முகத்தில் புன்னகை தெரிந்தது. மீண்டும் அவள் அருகில் இருந்து பெண்ணை கடைக்கண்ணால் பார்த்தாள். அவர் அப்போது தூங்கி வழிந்துகொண்டிருந்தார்.
எனக்கு குஷி பிடிபடவில்லை. புத்தகத்தை வாசிப்பது போன்று இடையிடையே அவளைப் பார்த்து புன்னகைத்தேன். அவள் முகத்தில் வெட்கம் கலந்த மகிழ்ச்சி தெரிந்தது. என்னை அவளுக்கு பிடித்திருந்தது என்பதை உணர்ந்துகொண்டேன்.
இப்போது நான் புன்னகையில் இருந்து இரு அழகான சிரிப்புக்கு முன்னேறியிருந்தேன். அவளும் அப்படியே. எனக்கு என்னைச்சுற்றியிருந்த உலகம் மறந்துபோனது. மகிழ்ச்சியான மனநிலைவாய்த்திருந்தது.
என்னைப் பார்த்து சிரித்தவள் திடீர் என்று நாக்கைக் காட்டினாள். நான் சுதாரித்துக்கொள்வதற்கு சற்று நேரமாகியது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எவரும் என்னைப்பார்க்கவில்லை என்பதை நிட்சயப்படுத்தியதன் பின்பு அவளுக்கு நாக்கைக் காட்டினேன். பதிலுக்கு அவள் நாக்கைக் காட்டிவிட்டு அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தார் அவர் இப்போதும் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.
அடுத்த தரிப்பிடத்தில் நான் இறங்கவேண்டும் என்பதால் புத்தகத்தை எனது முதுகுப்பையினுள் வைத்துக்கொண்டிருக்கும்போது எனது காலினை ஒரு கால் தட்டியது. நிமிர்ந்துபார்த்தேன் அவள் சிரித்தாள். நானும் புன்னகைத்தேன்.
தொடருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது அவர்களும் அதே தரிப்பிடத்தில் இறங்குவது தெரிந்தது. அவர்களுக்குப் பின்னாலேயே நடந்தபடியே அவளின் தலையில் ஒரு தட்டு தட்டியதை அவளுடன் வந்தவர் கண்டுவிட்டார். அவர் குனிந்து அந்த 3 - 4 வயதுக் குழந்தையையும் என்னையும் பார்த்தார். அவளை நோக்கி கையசைத்தேன். அவளும் மயக்கும் புன்னகையுடன் கையசைத்தாள். அந்த புன்னகையில் இன்றைய நாள் அற்புதமாகியது.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்