A Gun & a ring திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர்வினை

www.nortamil.no  இணையத்தளத்தில் வெளியாகிய ” நண்பர்” என்பவரது ”A Gun & a ring” திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர்வினை.
------------------------------------------------------------------------------------------



நண்பன் என்ற பெயரில் முகம்காட்ட விரும்பாது விமர்சனம்வைக்கும் நண்பருக்கு!

சமூகம், கலைகள் மீதான விமர்சனங்கள்பற்றி பேசுபவர்கள் உண்மையான முகத்தை காட்டமறுப்பதில் எனக்கு ஏற்பில்லை.

அதுவும் ஒரு திரைப்படத்திற்கான விமர்சனத்திற்கே முகத்திரை தேவைப்படுகிறது என்பதும், விமர்சனம் எழுதப்பட்டிருக்கும் விதமும் விமர்சனத்தின் மீதான உள்நோக்கத்தை சந்தேகத்துக்குட்படுத்துகிறது. கருத்துக்கூற விழைபவர்களும், படைப்பாளிகள் பொதுவெளியில் முகம் காட்டி பேசவும் தயங்குவதும் ஒருவித அகமுரணுடைய கோழைத்தனம். இருப்பினும் அது அவரவர்களின் விருத்திநிலைகளின் வெளிப்பாடு என்பதையும், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்பதையும் நான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.


எமது சமுதாயத்தில் சில படைப்பாளிகளின் படைப்புக்கள்  பொதுவெளியில் அங்கிகரிக்கப்படாத /  கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் அப் படைப்பாளிகள் மற்றைய படைப்புக்களை ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கும் நிலையுள்ளது என்பதையும்  மறைப்பதற்கில்லை. இதுவும் ஒருவிதத்தில் சுயவிமர்சன மறுப்புச்சிந்தனையே.


புலம்பெயர் ஈழத்தமிழர்களின் குறுகிய திரைப்படத்துறை வரலாற்றில் ”மோதிரமும் துவக்கும்” முக்கிய இடத்தைப்பெற்றிருக்கிறது என்பது எனது கருத்து. காரணம் படத்தின் காட்டப்பட்டிருக்கும் கதை நகர்த்தும் உத்தி. 

5 குறும்படங்களின் கதை என்றிருந்தீர்கள். அந்த 5 குறும்படங்களையும் இணைத்து கதையை நகர்த்திய உத்தியை தென்னிந்தியப்படங்களிலோ அல்லது இலங்கைப்படங்களியோ நான் கண்டதில்லை. மம்முட்டி நடித்த பாலேறி மாணிக்கம் என்னும் மலையாளப்படத்திலும் கதை நகர்த்தும் உத்தி சிறப்பாக இருக்கும். அப் படத்தில், கடந்துபோன காலத்தினுள் ஒருவர் செல்வதுபோலவும், இறந்தகாலமும், நிகழ்காலமும் ஒரேகாட்சியில் அமையப்பெயற்றிருப்பதுபோலவும் காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால்  துவக்கும் மோதிரத்திலும் படத்தில் உள்ள லாவகம் மற்றும் உள்ளக விறுவிறுப்பும் பாலேறி மாணிக்கத்தில் இல்லை. எனவேதான் எனக்கு துவக்கும் மோதிரமும் பிடித்திருக்கிறது.


இத்திரைப்படம் முழுமையானது என்று நான் கூறவில்லை. படத்தில் பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் குறுகிய ‌திரைப்பட வரலாற்றில்  எம்மவர்கள் இப்படியான தரமான படங்களை இயக்குவது எம்மிடமும் அசாத்திய திறமை உண்டு என்பதை காட்டுகிறது. அது பாராட்டப்படவேண்டியது. 

படத்தின் கதையில் உள்ள யதார்த்தநிலைமீது கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். உண்மைதான் சில யதார்த்தநிலைத்தவறுகள் உண்டுதான். ஆனால் நீங்கள் கொண்டாட விரும்பும் வியாபாரத்தில் வெற்றியளித்த தென்னிந்தியப்படங்களில் உள்ள யதார்த்தநிலைத் தவறுகளில் ஒரு 5 - 10 வீதமே இப்படத்தில் உண்டு. ஒரு கிளைக்கதையின் சில காட்சிகளைமட்டுமே அடிப்படையாகவைத்து முழுப்படத்தையும் கேள்விக்குறியாக்குவது ஆச்சர்யமாக இருக்கிறது.


தவிர இப்படத்தில், நடிகர்களின் தொழில்சார் திறமை (நடிப்பையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்லர்), படத்தின் பட்ஜெட்,  படத்தின் செயற்பாடடுகளை நெறிப்படுத்தியோரின் அனுபவம், படம் தயாரிக்கப்பட்ட காலம் (இரண்டு மூன்று வாரங்கள்) என்று நாம் பலதையும்நோக்குவோம் எனின் இப்படம் கொண்டாடப்படவேண்டியபடம் என்பது புரியும்.

 
எம்மவர்களில் பலர் முக்கியமான இளைஞர்கள் புலம்பெயர்  ஈழத்தமிழ் சினிமாவின் ஆரம்பகால பாதையை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்
கள். அவர்களில் லெனின், அவதாரம் இளைஞர்கள் என்று குறிப்பிட்டு கூறக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஏன் நோர்வேயிலும் வித்தியாசமான குறும்படங்களை இயக்கி உலகளவில் பேசப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இப்படியான வித்தியாசமான சிந்தனைகளே வளமானதோர் பாதையை எமக்குத்தரும் என்பது எனது கருத்து. வளமான, விருத்திநிைலையைக்கு இட்டுச்செல்லும் கதைகளும், உத்திகளும், தொழில்நுட்பங்களும் உள்ளடங்கிய பாதையில் பயணிக்கும்போது மட்டுமே எம்மாலும் தரமான திரைப்படங்களை தரமுடியும்.


வித்தியாசமாய் சிந்திக்கும், மேற்கூறப்பட்ட இளையோர்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய சினிமாவின் பாதிப்பில் கதாநாயகியின் மார்பையும், குட்டைப்பாடையையும், அவற்றிற்குள்ளால் கமராவை அலையவிடுவதை ‌யே ”கலை” என நினைப்பதும், காலத்திற்கு ஒவ்வாத கதைகளை, உத்திகளை, உரைநடைகளை, நகைச்சுவையின் அடிப்படை வடிவங்களை அறியாத நகைச்சுவைகளை படமாக்குவதும், புதிய சிந்தனையற்ற முயற்சிகளை அடிப்படையாகக்கொள்வதும், புலம்பெயர் தேசங்களில் தமக்கு மட்டும்தான் கலைவசப்பட்டிருக்கிறது என்று எண்ணும் அதீத புத்திஜீவிகளால் வளமானதோர் பாதையை ஒருபோதும் எம் சமுகத்திற்கு தரமுடியாது என்பதும் எனது  கருத்து. இப்படியானவர்களால் இன்றைய இளைஞர்களின் படைப்புக்களுக்கு போட்டியாக அல்லது உலக புலம்பெயர் அரங்கில் ஒரு சிறுபடைப்பையும் இன்றுவரை முன்வைக்கமுடியவில்லை என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுக்குள் நோர்வேயில் வெளியிடப்பட்ட சில புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட முயற்சிகளையும் மேற்கூறிய எனது கருத்துக்கு உதாரணமாகக் கூறலாம். அவற்றுடன் ”துவக்கம் மோதிரமும்” திரைப்படத்தை ஒப்பிடவே முடியாது. மலையும் மடுவையும் ஒப்பிடமுடியுமா என்ன?


நோர்வேயில் காண்பிக்கப்பட்ட ஒரு காட்சியில் மிகச் சிலரே உட்கார்ந்திருந்ததை அடிப்படையாகவைத்து உலகெங்கும் அப்படியே என்று நினைப்பதும், இப் படத்தினைப்பற்றி ஊடகங்கள்  ஏனைய விமர்சகர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்க முயலவில்லை அல்லது விரும்பவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.


இத்துடன் ”துவக்கும் மோதிரமும்”  பற்றிய சில விமர்சனங்களை / தகவல்களை கீழே இணைத்துள்ளேன்.  கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அரங்கம் நிறைந்து பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன என்பதை இணையச் செய்திகள் கூறுகின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


இறுதியாக:


அண்மையில் அ. யேசுராசா எழுதியுள்ள சினிமா சம்பந்தமான கட்டுரைகள் வாசிக்கக் கிடைத்தன.

அதிலிருந்து ஒரே ஒரு வரி...

இந்த நூற்றாண்டின் மாபெரும் கலாசாரப்படுகொலையே தமிழ்த் திரைப்படங்கள்தாம்
- லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்


இப்படியானதொரு அவப்பெயர் புலம்பெயர் தமிழ்ச் சினிமாக்களுக்கு கிடைக்காதிருக்கவேண்டுமாயின் நாம் சற்றாவது வித்தியாசமாக சிந்திக்கவேண்டும். அவ்வாறு சிந்திப்பவர்களை கொண்டாடவேண்டும்.

இணைப்புக்கள்:

சோபா சக்தியின் விமர்சனம்:  http://www.shobasakthi.com/shobasakthi/?p=1115

 

யமுனா ராஜேந்திரனின் விமர்சனம்: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2003%3A2014-03-06-23-45-11&catid=55%3A2013-08-30-03-06-41
 

ரயாகரனின் விமர்சனம்: http://ndpfront.com/tamil/index.php/articles/articles/rayakaran/2227-gun-ring?fb_action_ids=10152148996292661&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=288381481237582
 

ரமணணின் விமர்சனம்: http://www.ramanansblog.com/2013/09/gun-and-ring.html

அவுஸ்திரேலிய தமிழரும் பிரபல பதிவருமான கானா பிரபாவின் 01.12.2013 அன்றான முகப்பத்தக நிலைத்தகவலை பார்ப்பீர்களாயின் அவரது விமர்சனத்தைக் காணலாம்

ஏனைய இணைப்புக்கள்.
http://www.tamilguardian.com/article.asp?articleid=10062&utm_source=twitterfeed&utm_medium=twitter
http://www.vanakkamlondon.com/mn-230214/


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்