வாழும் மரணம்

மரணம் என்பது ஒரு தத்துவம். மரணத்தின் வாசனைகளை நுகர்ந்தும், வேதனைகளை உணர்ந்தும், பகிர்ந்தும், கற்றும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்போதுதான் மரணத்தின் வீரியத்தை நாம் கடந்துகொள்ளலாம்.

மரணமானது நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்று என்பதை எவராலும் ஊகிக்கமுடிவதில்லை என்பதனால் மரணம்பற்றிய பிரக்ஞை இன்றி காற்றில் நடந்துகொண்டிருக்கிறோம். அவ்வப்போது மரணம் எனது கையைப்பிடித்து நிறுத்தி, எனது காதுக்குள் ”நான் இருக்கிறேன், மறந்துவிடாதே” என்று தன் இருப்பை குசுகுசுத்துவிட்டு நகர்ந்துகொள்கிறது.
இன்றைய நாளும் அப்படியே.

இன்று ஒரு சிறு குழந்தையின் இறுதிப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தேன். அந்தக் குழந்தையை நான் அறியேன். கண்டிருப்பதாயும் நினைவில் இல்லை. பெற்றோரை ஓரளவு அறிவேன். அவ்வளவுதான். ஆனால் மரணச்சடங்கில் கலந்துகொளவதற்காய் வாகனத்தில் உட்காந்துகொண்ட கணம் தொடக்கம் மனம் முழுவதும் மரணத்தின் அசௌகரீயமான வாசனையை உணரத்தொடங்கியிருந்தது.

இறுதி நிகழ்வு நடைபெற்ற இடத்தில் பலர் நின்றிருந்தனர். குழந்தை பேரமைதியான, தெய்வீகத் தூக்கத்தில் இருப்பதுபோன்றிருக்க, அருகே உட்கார்ந்திருந்தபடியே தாயார் குழந்தையின் கையைப்பற்றியபடியே அழுதுகொண்டிருந்தார். தந்தை அருகே நின்றபடியே அஞ்சலிசெய்தபடியே கடந்துசென்றுகொண்டிருந்தவர்களின் இரங்கலை ஏற்றுக்கொண்டிருந்தார்.

பின்னணியில் தேவாரம் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நான்கு சுவற்றுக்குள்ளும் புகைபோல மரணம் பரவிக்கிடந்தது. நிட்சயமாய் பலரின் மனங்களிலும் மரணம் தனது வீரியத்தை செலுத்தியிருக்கும். சிந்தனையைத் தூண்டியிருக்கும்.

நீண்ட வரிசையில் சென்று குந்தைக்கு அஞ்சலிசெலுத்திக்கொண்டிருந்தனர். நான் குழந்தையின் அருகே செல்லச் செல்ல மனம் பெரும்பாரத்தை உணர்ந்துகொண்டிருந்தது. தந்தையை தோளுடன் அணைத்து ஆறுதல்கூறியபோது அவரது வேதனையைப் புரிந்துகொண்டேன். உடல்; மெதுவாய் நடுங்கிக்கொண்டிருந்தது. அடக்கமுடியாது அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார். இழக்கக்கூடாததை இழந்து தவிக்கும் ஒரு தந்தைக்கு வார்த்தைகளால் என்ன ஆறுதலை என்னால் கூறமுடியும்? அவரது தோளினை இறுக அழுத்தி நகர்ந்துகொண்டேன்.

இறுதி நிகழ்வு நடைபெற்ற தேவாலத்தினுள் வருமுன்பு வெளியே பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஒரு நண்பரைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் ஏறத்தாள 15 ஆண்டுகளுக்கு முன் 10 வயதான தனது மகனை ஒரு விபத்தில் இழந்தவர். விளையாடச்சென்ற மகன் நீரில் மூழ்கி இறந்திருந்தான். அவருடன் உரையாடும்போது, புத்திர சோகம் கொடியது என்றும், ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டணை அதுதான் என்றார். மகனின் இழப்பானது 15 வருடங்களின் பின்பும் அவரிடத்தில் வாழ்ந்துகொண்டிருந்தது. புத்திரசோகம் ஓடும் ஆற்றுநீர் மண்ணை அரிப்பதுபோன்றது காலம் செல்ல செல்ல அது மனிதர்களை அரித்துக்கொண்டே இருக்கிறது என்று உணர்ந்துகொண்டேன்.

எனக்கு என்னிலும் சற்று வயதான ஒரு மச்சாள் இருக்கிறார். மிகவும் ஆளுமையுள்ளவர். தீர்க்கமான சிந்தனை, பேச்சு, ஆற்றல், மனிதநேயம் கொண்டவர். அவருக்கு 1983ம் ஆண்டு ஜுலைமாதம் 23ம் திகதி கொழும்பில் இனக்கலவரம் உச்சத்தில் இருந்தபோது இரட்டைக்குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஏறாவூருக்கு வந்து எம்முடன் சில மாதங்கள் வசித்துவந்தார். பின்பு கனடா சென்று குடியேறினார். குழந்தைகளும் வளர்ந்து பெரியவரானார்கள்.

2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன், நான் இரு குழந்தைகளின் தந்தையாகியிருந்தேன். குழந்தைகளின் உலகமே எனது உலகமாய் இருந்தது. மச்சாளின் 21வயது மகன் திடீர் சுகயீனத்தால் இறந்துவிட்டதாக தகவல் கிடைக்க உடனடியாக கனடா சென்று மச்சாளைத்தேடிப்போனேன். மூன்று நாட்களுக்குள் அவரை அடையாளம் காணமுடியாதளவுக்கு புத்திரசோகம் உருக்குலைத்திருந்தது. அவரருகில் நின்றிருந்தேன். அவரது கண்கள் மகனையே பார்த்தபடியிருக்க எதோ மகனுக்கு கூறிக்கொண்டிருந்தார். அவர் என்ன கூறுகிறார் என்று உற்றுக்கேட்டபோது ”அம்மாவரும் வரையில் கவனமாக இருங்கள்” என்று கேட்டது. தாயல்லவா.

தேவாலயத்தினுள் இருந்து குழந்தை அடக்கம்செய்யும் இடத்திற்கு ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது. முன்னால் இரு குழந்தைகள் காற்றடைத்த பலூன்களை கையில் வைத்திருந்தனர். அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும். குழந்தைகளான அவர்களுக்கும் மரணம், தன்னை ஈவுஇரக்கம் இன்றி அறிமுகப்படுத்திக்கொண்டிருந்ததை அவர்களின் உடல்மொழிகளினூடாக அறிந்துகொள்ளக்கூடிதாய் இருந்தது. இருப்பினும் தம்பியை இனி சந்திக்கமாட்டோம், விளையாட, கோவிக்க, அணைத்தபடியே தூங்கிப்போக அவன் வரமாட்டான் என்பதை அவர்கள் முழுவதுமாக புரிந்துகொண்டிருப்பார்களா?

மரணம் எவ்வளவு குரூரமானது, ஈவுஇரக்கமற்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டிக்கிடக்கிறது?

முதன் முதலில் மரணம் எனக்கு அறிமுகமாகியது எனது தந்தையின் மூலமாகவே. தந்தையும் நானும் பூனையும் எலியுமாய் இருந்ததாலோ என்னவோ தந்தையின் மரணம் முதல் நாள் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவருக்கு கடமை செய்தபோதும், சுடலையில் இருந்து வீடுதிரும்பிய பின்னும் அதற்குப் பின்னான பலநாட்களிலும் அவரது மரணம் என்னை பெரிதும் பாதித்திருந்தது.

ஊர்வலம் அடக்கம் செய்யும் இடத்தை அடைந்தது. அடக்கம்செய்யும் நிகழ்வின்பின் குழந்தைகளின் கையில் இருந்த பலூன்களை காற்றில் விட்டனர்.

அகன்று, பரந்து விரிந்துகிடந்த, மேகங்களற்ற, நீலநிற வானத்தை நோக்கி பலூன்கள் அசைந்தபடியே மேலேறி, சற்றுநேரத்தில் தனித்தனியே பிரிந்து, உருவத்தில் சிறுத்து, கண்ணில் இருந்து மறைந்துபோயின.

குடும்பம் ஒன்றின் வாழ்க்கையைப்போன்று இணைந்திருந்து, பின்பு தனித்தனியே பிரிந்து, காலப்போக்கில் தனித்தனியே மறைந்துவிடும் மனிதவாழ்க்கையைப்போலிருந்தது அந்த பலூன்களின் பயணம்.

துயரத்தைக் கடத்தல்பற்றி வாசித்த ஒரு கட்டுரையில், துயரத்தை கடந்துகொள்வதற்கு அல்லது மீண்டுகொள்வதற்கு ஆன்மீகம், சமூகசேவை, வாசிப்பு, எழுத்து, உரையாடல், இயற்கை, கலைகள் என்பன பலமாய் உதவும் என்று இருந்தது. 

துயரங்களைப் பேசுதல் என்பது எமது சமூகத்தில் பேசாப்பொருள். ஆனால் மேற்கத்தய நாடுகளில் துயரங்களை கடந்துகொள்வதற்கு உரையாடற்குழுக்கள், உளவள துணையாளருடனான உரையாடல், உளவள வைத்தியருடனான உரையாடல் என்று பலவகையான உரையாடல் முறைகள் இருக்கின்றன.

நானும் மணமுறிவின்பின் குழந்தைகளுடனான பிரிவுபற்றி உளவள துணையாளருடன் பலதடவைகள் உரையாடியிருக்கிறேன். அவ்வுரையாடல்களின்போது நான் கண்கலங்கியிருக்கிறேன், கண்ணில் இருந்து நீர் ஆறாய் வழிந்தோடியிருக்கிறது, மெதுவாய் அழுதிருக்கிறேன், தாங்கமுடியாது கேவிக் கேவியும் அழுதிருக்கிறேன். அழுதோய்ந்த நேரங்கள் சீழ்வடிந்தோடியபின் புண்ணுக்கு கிடைக்கும் ஆறுதலை உணர்ந்திருக்கிறேன். கடந்துபோன 6 வருடங்களில் அழுதும், எழுதியும், வாசித்தும், மனதை வேறு செயற்பாடுகளில், சிந்தனைகளில், ஈடுபடுத்தி துயரினை கடந்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் முழுவதுமாய் மீண்டுகொள்ளவில்லை. காலப்போக்கில் வாழ்வின் சில பகுதிகள் என்னோடு நிழலைப்போன்று தொடர்ந்துவரும் என்பதனை உணர்ந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது மச்சாளும் தனது துயரினை ஆன்மீகம், சமூகசேவை ஆகியவற்றில் ஈடுபட்டும், தனது மகளுடன் அதிக நேரங்களை செலவளிததும், மகனின் இழப்பு பற்றி உரையாடியும் தனது துயரைக்கடந்து சாதாரணமான ஒரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

மகனை இழந்த நண்பர் இன்றைய உரையாடலின்போது, புத்திர இழப்பு என்பது கடந்துகொள்ள முடியாத பேரிழப்பு, அது வாழ்நாள்முழுவதும் என்னை விட்டகலாது என்றார்.

அடக்கம்செய்யும் நிகழ்வு முடிவடைந்தது அனைவரும் அகன்றுகொண்டிருந்தனர். நானும் வெளியேறிக்கொண்டிருந்தேன். தொலைவில் அக்குடும்பத்தினர் நின்றிருந்தனர். அவர்களின் சில நெருங்கிய நண்பர்கள் அங்கிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் அந்த நண்பர்களும் அவர்களைவிட்டு அகன்றுவிடுவார்கள். பெரும் துயர வெளி ஒன்றினை அக்குடும்பம் தனியே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது என்று நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.

மரணம் மீண்டுமொருமுறை ”நான் இருக்கிறேன்” என்று நிறுவிப்போயிருக்கிறது.

புத்தனுக்குப்போன்று மரணம் எனக்கும் போதிக்கட்டும்.

2 comments:

  1. மரணம் ஒரு போதிமரம் போல. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  2. உங்கள் பதிவுகளை மறக்காமல் வாசிக்கும் ஒருவன். ஒவ்வொரு பதிவும் எனது வாழ்கையில் நடந்த ஒரு விடயத்தை பிரதிபலிப்பதாக இருப்பதே உங்கள் எழுத்தின் வெற்றி. தரமான எழுத்துநடை இன்னொரு காரணம். தொடர்ந்து எழுதுங்கள் ஆனால் இப்படி கண்களை குளமாக்காது இருந்தால் நன்று. இருக்கும் கவலைகள் போதுமே ஏன் கூடுதலாக.

    ReplyDelete

பின்னூட்டங்கள்