வளமான விவாகரத்துக்கள்

மனிதர்களுக்கு இயங்குவதற்கு ஒரு உந்துசக்தி அவசியம். கேள்விகளும் பதில்களும் அப்படியானவை. கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் பதில்களும் இல்லை. அப்பதில்களுக்கான செயற்பாடுகளும் இல்லை.

என் வாழ்க்கையை மாற்றியமைக்க இரண்டு கேள்விகள் முக்கியமானவையாக இருந்தன.

திருமணம் என்னும் முறையினூடாக வாழ்வை உன்னுடன் பகிர முன்வந்த ஒருவருக்கு, உன் குழந்தைகளின் தாய்க்கு நீ பெரும் வலிகளை கொடுப்பது நியாயமா? இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் ஒரு பாதிரியார். அதே பாதிரியார் “நீ உன் குழந்தைகளுக்கு பிரச்சனைகளுடனேயே வாழ் என்று கற்றுக்கொடுக்கிறாய். நீ அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாயா? என்றும் கேட்டார்.

 இந்த இரண்டு கேள்விகளுமே எனது மணவிலக்குப்பற்றிய சிந்தனைகளின் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாய் இருந்து.
இக்கேள்விகள் என்னுள் ஏற்படுத்திய உந்துசக்தி இல்லையேல்; நான் இன்றும் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபடி, மற்றையவருக்கு வலிகளைக் கொடுத்தபடி, குழந்தைகளுக்கும் மனவருத்தத்தைக் கொடுத்தபடி வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.

அந்தப் பாதிரியார் எனது குடும்ப நண்பர். எங்கள் குழந்தைகளின் தோழன். அவரை நான் 1987ம் ஆண்டுதொடக்கம் அறிவேன். அவரது குடும்பத்தின் 4 தலைமுறைகள் எனது நண்பர்கள். எனது வாழ்வின் கனமான காலங்களை நான் அவருடன் பல ஆண்டுகளாக பகிர்ந்து வந்திருந்திருக்கிறேன். அவர் முன் வெட்கத்தைவிட்டு அழக்கூடிய உறவு எங்களுடையது. இன்னொருவரின் வேதனைகளை மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய அற்புதமான மனம்கொண்ட மனிதர் அவர்.

நான் அந்நாட்களில், நோர்வேயின் பெரியதொரு கப்பல்கட்டும் கம்பனியில் பல ஆண்டுகளாக கணனித்துறை பொறுப்பாளராக இருந்தேன். வெளிநாட்டவராக அப்படியானதொரு தொழிலில் இருப்பது அந்நாட்களில் அரிதான விடயம். கைநிறைந்த சம்பளம்இ வசதியான வேலைஇ வேலைநேரக் கட்டுப்பாடு அதிகம் இல்லை. பல பல வெளிநாட்டுப்பிரயாணங்கள், வீட்டில் இருந்தவாறே வேலை செய்யலாம். இப்படிப் பல வசதிகள்.

குழந்தைகள் பாடசாலையிலும், விளையாட்டிலும் முதன்மையானவர்களாகவும், அவர்களுக்கு பல நோர்வே நாட்டு நண்பர்களும் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோருடன் எமக்கு சிறந்த நட்பு இருந்தது.

நான் வாழ்ந்திருந்த கிராமத்தில் பொதுவேலைகளிலும் விளையாட்டுக்கழக நிர்வாகத்திலும் குழந்தைகளுக்கான வேறு நடவடிக்கைகளிலும் ரோட்டறி கழகத்திலும் ஈடுபட்டேன். தமிழர்களுடனும் மகிழ்ச்சியுடன் பழகி வந்தேன்.
வாழ்க்கை இவ்வாறு மகிழ்ச்சியாக ஓடத்தெடங்கியபோதுதான்; மனப்பிளவு எமக்கிடையில பூனையின் பாதங்களின் ஒலியுடன் புகுந்துகொண்டது. அதை தெளிவாக உணர்ந்தறியும் அறிவு அப்போது என்னிடம் இருக்கவில்லை. அந்தச் சிறு மனப்பிளவினுள் அழுக்கு சேரச் சேர அது சீழ்கட்டத்தொடங்கியது. இதற்கான காலங்களாக ஏறத்தாழ 14 ஆண்டுகள் இருந்தன என்பதுதான் வேதனை. எனது அப்போதைய வயதின் ஏறத்தாழ மூன்றில்ஒரு பகுதி அது.

அந்நாட்களில் குடும்ப நீதிமன்றங்கள், மன நல ஆலோசனையாளர்கள், உளவியலாளர்களுடனான சந்திப்பு, மாத்திரைகள், நித்திரையற்ற நீண்ட இரவுகள் என்று வாழ்க்கை தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

அந்நாட்களில் பிரிந்து சென்று தனியே வாழ்வோம்; என்று நினைத்தபோது குழந்தைகளின் அன்பான முகம் அந்த எண்ணத்தைத் தடைபோடும். 1998-99ம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதன் முதலாக நான் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தேன். மூத்தவளுக்கு அப்போது ஒன்றரை இரண்டு வயது. அவளைப் பார்க்காது இருக்க முடியவில்லை. எனது கோபம், ஈகோ அனைத்தும் அவளின் சிரிப்பில் கரைந்துபோனது. மீண்டும் அவளுக்காக ஒட்டிக்கொண்டேன்.

அடுத்துவந்த காலமும் மகிழ்ச்சியானதில்லை. மனப்பிளவின் தாக்கமும் இலகுவானதல்ல. அதை அகற்றிக்கொள்ள மிகச் சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. என்னால் அது முடியவில்லை. மற்றையவர் மீதான வெறுப்பு மெது மெதுவாக அதிகரித்துக்கொண்டேபோனது.
பேச்சுவார்த்தை கோடைகாலத்துக் குளம்போன்று மெது மெதுவாக வறண்டு, பேச்சு அவசியத்திற்காக மட்டும் என்று மாறி, காலப்போக்கில் அந்த அவசியமும் அநாவசியம் என்றாகியது.

அந்நாட்களில் தந்தையின் ஸ்தானமே எனது வாழ்க்கை என்று வரிந்துகொண்டேன். குழந்தைகளுக்கான அனைத்தையும் என்னால் செய்யமுடிந்தது. தலைசீவி பின்னலிடுவதில் இருந்து சமைத்து உணவளித்து, பாடசாலைக்கு அழைத்துப்போய், விளையாட்டுக்களுக்கு சென்றுவந்து, அவர்களை தூங்கவைப்பதுவரை.

நான், எனக்காக தனியே சமைத்து, தனியே உண்டு, தனியே படுத்து என்று “தனி” உலகம் ஒன்று எமது வீட்டினுள் இயங்கிவந்தது.
ஊருக்கும், உலகத்திற்கும் எதுவுமே தெரியாது. “ஆஹா, இதுவல்லவோ குடும்பம்” என்று ஊர் நினைத்துக்கொண்டிருந்த காலம். அத்தனை அற்புத நடிகனாக நான் இருந்தேன். அனைவரும் நடித்தோம்.

ஒரு மனிதனின் உச்ச தேவைகளில் ஒன்று காமம். இந்த காமத்தின் அடிப்படையிலேயே உலகம் ஆதிதொடக்கம் இயங்கிவருகிறது இல்லையா? ஒரு குடும்பத்தின் விட்டுக்கொடுப்பும், மற்றையவரின் மகிழ்ச்சியை விரும்புவதும், மற்றையவரின் மகிழ்ச்சிக்காக தன்னை இழப்பதும், இருமனிதர்களின் பாலியல் வேட்கை என்னும் காமத்தில்தான் என்றார், எனக்கு உளநல அறிவுரையாளராக அறிமுகமான ஒரு பாதிரியார். கொழும்பில் அவரிடம் சென்றிருந்தபோது அவர் இதைக் கூறினார்.

“உங்களுக்கிடையில் பாலுறவு இல்லை எனின் உங்களின் பிரச்சனைகள் மேலும் மேலும் சிக்கலாகும். நீங்கள் மட்டுமல்ல, இதை எமது சமூகமும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. காமத்தை பாவச் செயல் என்று பார்க்கவே மதங்களும், கலாச்சாரமும் கற்றுத்தருகிறது. இது முற்றிலும் தவறானது. இரண்டு மனமொருமித்த மனிதர்களின் பாலியல்வேட்கை என்பது முதலாவது மனிதனின் காலத்தில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது இயற்கையின் ஒரு அம்சம். ஒரு புனிதமான செயல். அன்பின் அதி உச்ச வெளிப்பாடு அது. புரிதலுக்கான முதல் இடம் அது என்றும் கூறினார் அவர்.

பேச்சுவார்த்தையை மட்டுமல்ல, காமத்தையும் மனப்பிளவு வென்றது. காலப்போக்கில் மனப்பிளவு தனது வேலையை ஆரம்பித்தபோது எதைக் கதைத்தாலும், செய்தாலும் குற்றமாகியது. அவை தர்க்கங்களாயின. தர்க்கங்கள் வெடித்து அடங்கின. உரையாடல்களுக்கான மனப்பான்மை எவரிடத்திலும் இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் காயப்படுத்தி சின்னாபின்னப்படுத்தவே விரும்பினோம்.

அந்தப் பாதிரியாரிடம் எங்கள் மனப்பிளவுகள்பற்றிப் பேசினேன். உங்களுக்குள் மனப்பிளவு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இவ்விடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் விரும்புகிறீர்களா? உங்களின் மணவாழ்க்கையை தொடரவிரும்புகிறீர்களா என்றும் நீங்கள் யோசிக்கவேண்டும். என்றார். அன்பு இல்லை எனின் போலியாய் வாழாமல், விலகிவிடுங்கள். அனைவருக்கும் அது நன்மையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தர்க்கம் என்பது “மற்றையவரை புரிதல்” அல்லவே. என் கருத்தைத் திணிப்பதும், அதை ஏற்றுக்கொள்ளவைப்பதும், அதை சாதிப்பதுமே தர்க்கத்தின் குணாம்சங்கள். இது எப்படி இரு மனிதர்களை நட்பாக்கும்?

புரிதலுக்கு உரையாடலே அவசியம். எனவே உரையாடப் பழகுங்கள். மற்றையவரின் வலிகளை உங்கள வலிகளாகப் புரிந்துகொள்;ளுங்கள். மற்றைவரை பேசுவதற்கு அனுமதியுங்கள். ஆர்வமாக உரையாடுங்கள். உரையாடலை உள்வாங்கிக்கொள்ளுங்கள். இது புரிதலுக்கான முதற்படி. என்று உரையாடலின் அவசியத்தை புரியவைத்தார்.ஆனால் என் மனதில் மற்றையவருக்கான அன்பும் இடமும் இருக்கவில்லை. வெறுப்பு அதிகரித்துக்கொண்டேபோனது. கண்களில் வெறுப்பை உமிழ்ந்து திரிந்தேன். உரையாடலுக்குரிய எந்த உணர்வும் என்னிடம் இருக்கவில்லை. மாறாக அவரை வருத்தவே விரும்பினேன். அதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருந்தது. இது ஒரு மனநோயாளியின் மனநிலையல்லவா? நான் மன அழுத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பது அப்போது புரியவில்லை, எனக்கு.
விவாகரத்து செய்வோமா என்ற சிந்தனை வரும்போது, உற்றமும் சுற்றமும் சமூகமும் ஒரு பெருந்தடையாகத் தெரிந்தன. வெட்கமாக இருந்தது விவாகரத்து என்பதை நினைத்தால். குழந்தைகள் இங்கும் அங்குமாக அலைவார்களே என்று அடித்துக்கொண்டது மனது. தீர்க்கமான முடிவு எதையும் எடுக்கமுடியவில்லை.
போலியாய் வாழ்தல் என்பது சகஜமானது. வெளியில் அழகிய குடும்பம். புகைப்படங்களில் மட்டுமாயிருந்தது, சிரிப்பு. குழந்தைகளும் இதனை அழகாக பின்பற்றினார்கள். பிறழ்வான வாழ்க்கையே வாழ்க்கையானது. அனைவருக்கும்.

தர்க்கங்கள், வாய்ச் சண்டைகள், ஒத்துழையாமை என்பன தினசரி நிகழ்வுகளில் ஒன்றாகின. வீட்டுக்குச் சென்றால் பிரச்சனை என்ற எண்ணம் வளரத்தொடங்கியது. இதனால் இருவரின் தனிமை உணர்வும் வளர்ந்தது. அதுவும் மனப்பிளவுக்கு நீருற்றியது.

பெரும் வேதனை என்னவென்றால் விவாகரத்தாகி 6 – 7 வருடங்களின் பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் எனது மகள் மேற்கூறிய வேதனையான சம்பவங்களை நீங்கள் இருவரும் எங்கள் முன்னிலையில் தவிர்த்திருக்கவேண்டும், அவை இன்றும் நினைவில் இருக்கின்றன. அவை மிகவும் வேதனையானவை என்று கூறினாள். வெட்கித் தலைகுனிந்திருக்கத்தான் முடிந்தது அப்போது.
என் மனப்பிளவை நான் புரிந்துகொண்ட ஆரம்பகாலத்திலேயே நான் அதனை தெளிவாக எடுத்துக்கூறியிருக்கவேண்டும். நாம் பிரிந்து செல்வதே சிறந்தது என்று கூறி அதற்கான செயற்பாடுகளை நான் முன்னெடுத்திருக்கவேண்டும்.

ஆனால் குடும்பம், பெற்றோர், சகோதரங்கள், நண்பர்கள், ஊர், சமூகம் என்று ஒரு பெரும் வட்டம் என் முன்னே தடையாக நின்றிருந்தது. மற்றவர்கள் கேலிபேசுவார்கள், தவறாக எண்ணிக்கொள்வார்கள், என் மரியாதை என்னாவது என்று ஊருக்குப் பயந்து வாழ்ந்த காலம் அது.
காதலித்து, திருமணமாகி, என்னுடன் குழந்தைகளைப் பெற்ற ஒருவருக்கு தர்க்கங்கள், வார்த்தைகள், கேலிகள், எரித்திடும் உக்கிரமான பார்வை, அன்பை மறுத்தல், உரையாடலை மறுத்தல், பலர்முன் சிறுமைப்படுத்தல், ஒத்துழையாமை என்று பலவிதத்திலும் எனது மனப்பிளவின் உக்கிரத்தைக் காண்பித்து குரூரமாய் மகிழ்ந்தேன்.



உண்மையில், நான் காதலித்த மனிதருக்கு, என் குழந்தைகளின் தாய்க்கு வலிகளை நான் கொடுக்கிறேன் என்றால் நான் அவ்விடத்தில் ஒருவித நோயாளியாத்தானே இருக்கவேண்டும்? இல்லையா?
மேற்கூறியது இப்போது புரிகிறது. அப்போது ஈகோ கண்ணை மறைத்திருந்தது. இதை நான் தவிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது அப்போது இருந்த மனநிலையில் சாத்தியமா? என்பது பெருங்கேள்வியே.
மனப்பிளவுகள் ஆரம்பித்த காலங்களிலேயே நாம் அதன் தார்ப்பர்யத்தைப் புரிந்து, பிற்காலத்தை உணர்ந்து நண்பர்களாகப் பிரிந்திருக்கவேண்டும்.

பிரிந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளுக்கு பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கவேண்டும். இறுதிக்காலம் வரையில் எவரும் எமக்கு இதுபற்றி எடுத்துக்கூறவில்லை. எனக்கும் இது புரிந்திருக்கவில்லை. இப்படியான சமரசங்கள் அமைதியான வாழ்க்கையின் அத்திவாரங்கள் என்பதை எமது சமூகத்தில் கற்கமுடியாதிருந்தது என்பது எமது தூரதிஸ்டமே.

ஒருவர் பிரிந்துசெல்ல விரும்புகிறார், அந்த உறவு செப்பனிடப்பட முடியாதது எனின் அவர் விரும்புவதைக் கொடுப்பதே நாம் அவருக்கும், நமக்கும் செய்துகொள்ளக்கூடிய மிகச்சிறந்த காரியம் அல்லவா?

இல்லை, நான் எதையும் செய்யமாட்டேன். நீ விரும்பினால் எதையும் செய்துகொள் என்பது நாம் நோயாளி என்பதை அறிவிக்கும் ஒரு சமிக்ஞை என்றே கருதவேண்டும். பல உறவுகளின் சமாதியில்தான் ஈகோ வாழ்ந்துகொண்டிக்கிறது.

எவரும் எவருக்காகவும் ஏன் நோயாளியாக வேண்டும்?

நாம் நண்பர்களாகப் பிரிந்திருந்தால் அது மற்றையவருக்கும், குழந்தைகளுக்கும், எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். இத்தனை வலிகளை நாம் கடந்துவந்திருக்கத்தேவை இல்லை.

நான் இவ்வளவு மனஅயர்ச்சியடைந்திருக்கத் தேவையில்லை. வாழ்வின் 14+8 வருடங்கள் நான் நொந்து வாழ்ந்திருக்கவேண்டியதன் அவசியம்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? இழக்கப்பட்ட காலம் மீண்டுவரவா போகிறது?
ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டு கேள்விகளையும் அந்தப் பாதிரியார் கேட்டபின் நான் அவற்றைப்பற்றி சிந்தித்திருந்த நேரங்களில் அவற்றில் இருந்து பல கிளைக்கேள்விகள் தோன்றின.
அக்கேள்விகளின் பதில்கள் நான் ஒரு மனிதருக்கும், எனது குழந்தைகளுக்கும் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கையைக் கொடுக்கிறேன் என்று திடமாக உணரமுற்பட்டேன். அது மிகத்தவறு என்பதையும் உணரத்தொடங்கினேன்.

இந்த விதத்தில் நான் பெரும் அதிஸ்டசாலியே. நான் சுகயீனமாக இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுமளவிற்கு நான் சுகமாக இருந்திருக்கிறேன். இன்றும் என்னை ஆறுதல்படுத்தும் உணர்வு இது.
எம்மில் பலர் அமைதியாக, அன்பாக வாழவேண்டிய வாழ்க்கையை தர்க்கத்திலும், தன்னை நியாப்படுத்துவதிலும், மற்றையவரை சிறுமைப்படுத்துவதிலும் காயப்படுத்துவதிலும் உளவியல் வன்முறையிலும் காலத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இங்கும் நாம் தான் நோயாளி என்பதை மறந்தேவிடுகிறோம்.

விலகிக்கொள்ளப்போகிறேன். என்னால் உங்களுடன் இணைந்து வாழ முடியாது என்று கூறும் மனஉறுதி எங்களில் எத்தனைபேரிடம் உண்டு? அப்படிக் கூறினாலும் சரி, நாம் உட்கார்ந்து இதைப்பற்றிப்பேசுவோம் என்பவர் எத்தனைபேர்? இணைந்து வாழவிரும்பாத ஒரு மனிதரை கட்டாயப்படுத்தி வாழவைத்துக்கொள்வதில் என்ன மாதிரியான வாழ்க்கை கிடைக்கும்? இந்த இடத்தில் யார் நோயாளி?

கட்டாயப்படுத்தப்படுபவரின் மனநிலை அவர்களுக்கு இடையிலான உறவுக்கு சாதகமாக மாறுமா இல்லை மேலும் பாதகமாக மாறுமா? அது மேலும் மேலும் உறவினை சிக்கலாக்கும் என்பதை நான் கூறத்தேவையில்லை. அப்படியாயின் அந்த உறவு மேலும் மேலும் சிக்கலாவதையா நான் விரும்புகிறேன்? உண்மையில் நான் இப்பிரச்சனைக்குரிய தீர்வையல்லவா விரும்பவேண்டும்? அதுதானே வளமான சிந்தனை? ஆனால் நாம்; அவ்வாறு சிந்திக்கின்றோமா? இங்கும் ஒருவிதத்தில் நாம்; நோயாளியாகிறோம்; அல்லவா?

என்னுடனான ஒரு பிரச்சனையை நான் முழுமையாகத் தீர்க்காமல், அதனுடன் தொடர்ச்சியாக உழன்றுகொண்டிருப்பது என்பது எவ்வளவு அறிவீனம்? இங்கும் என் செயற்பாடுகள் தவறாக அல்லவா இருக்கின்றன.
இப்படியான சிரமமான காலப்பகுதியில் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, சுயவிமர்சனப் பார்வையுடன் வாழ்வை நோக்குவது அவசியம். ஆனால் அது இலகுவானதல்ல.

என்னில் ஒரு பிழையும் இல்லை, அல்லது குறைவாகவே பிழைகள் இருக்கின்ற என்னும் மனப்பான்மையை வெல்வதும் கடினம். இங்கும்; நோயாளிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.ஆனால், உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திக்காமல் யதார்த்தத்தின் அடிப்படையில் அறிவார்த்தமாக சிந்தித்தால் மட்டுமே நாம் இப்படியான மன, மண முறிவு நிலைகளில் இருந்து ஓரளவு இலகுவாக நாம் மீண்டுகொள்ளலாம்.

இது எங்கள் சமூகத்தில் சாத்தியமா? சாத்தியமில்லை என்றால் ஏன் சாத்தியமில்லை என்பதையும் நாம் ஆராயவேண்டும்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. இங்கு மற்றையவரும் வாழவேண்டும் என்ற எண்ணமும் எனக்கு அவசியமாய் இருந்தாலன்றி, இங்கும் நாம்; ஒரு விதத்தில் நோயாளியின் கூறுகளைக் கொண்டிருக்கிறோம்.
எனக்கிருக்கும் சுதந்திரம் மற்றையவருக்கும் இருத்தல்வேண்டும். அது மற்றையவரின் அடிப்படை உரிமை. எனது விருப்பங்களை மற்றையவர்மீது திணிப்பது நியாயமா?

என் மீது நான் விரும்பாததை திணித்தால் என் மனநிலை எப்படி இருக்கும்?
இவ்வாறு மற்றையவரையும் மதித்து அதன் அடிப்படையில் பிரிவினை திட்டமிட்டுக்கொண்டால் “ஒரளவாவது நண்பர்களாகப் பிரிந்து கொள்ளலாம்”.நண்பர்களாகப் பிரிந்துகொள்ள முடியாதவர்கள், தங்களின் புதிய வாழ்க்கையையும் தவறான பாதையில் தொடர்கிறார்கள். கோபங்கள் தொடரும், இணைந்த செயற்பாடு இருக்காது, பழிவாங்கும் எண்ணம் உண்டாகும். நிம்மதி குலையும். அதாவது மீண்டும் நோயாளியாக உருமாறுகிறோம்.

எனவே மணமுறிவுகளின்போது விரோதிகளாகாதவகையில் உறவுகளைப்பேணுதல் அவசியம். மணவிலக்கில் மற்றையவருக்கு உதவியாக இருப்பதிலும் தவறில்லை. அதன் பின்பும் அவருக்கு உதவுவதிலும் தப்பில்லை. இதில் இருந்து குழந்தைகள் பலவற்றையும் கற்றுக்கொள்வார்கள். வாழ்வும் அமைதியாய் இருக்கும்.
இப்படியான சிந்தனைமுறைகளை எமது சமூகம் உருவாக்கிக்கொள்வதை விடுத்து….. சமாளித்துப்போங்கள் என்பதானது… மூச்செடுக்க சிரமப்படும் ஒருவரைப்பார்த்து சற்றுக் ‘குறைவாக மூச்செடு’ என்பது போலானது.

காலத்திற்கு ஏற்ப சிந்தனைமுறைகளும் மாற்றமடையவேண்டும். கலாச்சாரம் என்பது வாழ்வினை வளமாக்குவதற்கே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

விவாகரத்துக்கள் எமது கலாச்சாரத்தில் இல்லை என்பது தன் தலையில் தானே மண்ணள்ளிப்போடுதலே அன்றி வேறெதுமில்லை.
வாழ்க்கை வாழ்வதற்கே.

3 comments:

  1. அருமை
    சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    ReplyDelete
  2. ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சுய பரிசோதனை ..அழகான விளக்கமான எழுத்து நடை .".வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாடி ".எல்லோராலும் வாசிக்க படவேண்டும். .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. சஞ்சயன்
    என்ன சொல்ல.... என வாழ்வைப் பார்ப்பது போல் உள்ளது...என்னால் அடுத்த கட்டம் போகமுடியல்ல...,. Time Will give you all the reasons... (french proverbe)

    ReplyDelete

பின்னூட்டங்கள்