தனது காலம் முடிந்துபோவதற்குள் எல்லாற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்ற பெரும் அவசரம் அவரது மனதை அலைக்கழிக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அவரது வழக்குகள் பேசித்தீர்க்க முடியாதவை என்பதை அவர் இன்றும் அறிந்துகொள்வில்லை.
நானும் அவரும் 1987ம் ஆண்டுகாலத்தில் நோர்வேயில் ஒரே அகதிகள் முகாமில் பல மாதங்கள் ஒன்றாக வசித்திருந்தோம். சந்தித்த முதல் நாளில் இருந்தே அவர் வித்தியாசமானவராகவே இருந்தார். அதிகம் பேசினார். அதிகம் அமைதியாக இருந்தார். அதிகம் நடந்தார். அதிகம் யோகாசனம் செய்தார், அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். அதிகமாகவே திட்டித்தீர்த்தார்.
அண்மையில் அவரைச் சந்தித்தபோது 29 வருடங்களுக்கு முன் கூறிய கதைகளில் பலதை மீண்டும் உரத்துப் கூறிக்கொண்டிருந்தார். நான் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா என்று அவசியம் அவருக்கு முன்பும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. தான் நினைத்ததைக் கூறுவார். நிறுத்தாமல் தொடர்வார். அவர் நினைத்தபொழுதில் கதை புதிய திருப்பத்தில் நுழைந்து வேறு பாதையில் தொடர்ந்துகொண்டிருக்கும். அவர் நினைக்கும்போது மட்டும்தான் கதை நிற்கும்.
அன்றொரு நாள் தமிழர்கள் அதிகம் வந்துபோகும் பல்பொருள் அங்காடியினுள் நண்பர்களுடன் நின்றிருந்தேன். அங்கு யாரோ உரத்துப்பேசுவது கேட்டது. குரலும் பரீட்சயமானதாய் இருந்தால் காதைக் கொடுத்தேன். 29 வருடங்களுக்கு முன் எங்கள் அகதி முகாமில் அவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடந்த ஒரு வழக்கைக் காற்றுக்குக் கூறி நியாயம் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே வந்துபோன பெயர்களில் எனது பெயரும் ஒன்று. என்னிடம் அவருக்கு சிறு பட்சம் உண்டு என்பதை அறிவேன் நான்.
ஏன், எப்படி அந்த பட்சம் வந்தது என்பதை நான் அறியேன். காரணம் தேடக்கூடாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
என்னைக் காணும் இடங்களில் சஞ்சயன் என்று கையைப்பிடித்து உரையாடுவார். அவருடன் அதிகம் உரையாடிய ஒரே காரணத்தால் 29 வருடங்களுக்கு முன்பே ‘விசரன்’ என்று பட்டத்தையும் நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அதெல்லாவற்றையும் கடந்து எனக்கு அவரில் ஒருவித ஈர்ப்புண்டு என்பதை மறைப்பதற்கில்லை.
அவரின் பேச்சுக்களில் அறிவார்த்தமான விடயங்கள இருக்கும். விசாலமான தமிழிலக்கிய அறிவுடையவர். ஆங்கிலப்புலமை உண்டு. சிங்களமும் அறிந்தவர், 1970களில் யாழ்ப்பாணத்தின் முக்கிய மேடைப்பேச்சாளர் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்.
இத்தனை இருந்தும் என்ன அவரின் பேச்சின் நீளத்தினாலும், தொடர்பின்மையாலும் அவரது புலமை அடிபட்டுப்போய்விடும். அவருடன் உரையாட அதீத பொறுமைவேண்டும்.
நோர்வேயில் வடமேற்குப்பாகத்தில் வாழ்ந்திருந்த தமிழர்கள் 1987இல் தொடர்ச்சியாக ஒரு கையெழுத்துப்பிரதியொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ”தமிழின் தொன்மை” என்ற தொனியிலான ஒரு தொடர் கட்டுரையை எழுதினார். நாம் வாழ்ந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் யாப்பினையும் இவரே எழுதியதாகவே நினைவிருக்கிறது.
நாம் வாழ்ந்திருந்த அகதிமுகாமில் அந்நாட்களில் இளைஞர்களே நிறைந்திந்தார்கள். ஒரு மனிதரை கேலிபேச, சேட்டைவிட இளைஞர்களுக்கு யாரும் கற்பிக்கவேண்டியதில்லையே.
எனவே இந்தக் கதையின் நாயனுக்கும் இளைஞர்களுக்கும் எப்போதும் அன்பான மோதல்கள் நடக்கும். சமத்துவபானம் உட்புகும் நேரங்களில் மோதல்கள் எல்லைமீறியதுமுண்டு.
அன்றொரு நாள், இளைஞர்கள் அவரை எல்லைமீறிக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், ஒரு கட்டத்தில் அவரது பொறுமை காற்றில் பறந்தது. நாற்காலியில் இருந்து எழுந்தார். இளைஞர் கூட்டம் ‘ஓ’ என்று பெரிதாய் ஆரவாரித்தது.
‘டேய்……………., வேசைமக்களே…………! உங்களுக்கு ஒரு சவால்’ என்றார்.
இளைஞர் கூட்டம் நக்கலாய் தங்களுக்குள் பார்த்துக்கொண்டபின் சிரிக்கவும் செய்தது. யாரோ விசில் அடித்தார்கள்.
‘என்ன சவால்? யார் கூட தண்ணியடிக்கிறது என்றா?’ என்றது ஒரு இளசு.
ஏளனமாக அவனைப்பார்த்தபடியே ‘நான் செய்வதை நீங்கள் செய்தால், இனிமேல் நீங்கள் எப்படியும் என்னை நக்கல்பண்ணலாம்’ என்றார்.
பெரும் ஆரவாரம் எழுந்தது. அதுவே சவாலுக்கு நாம் தயார் என்று அறிவித்தது.
சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுணர்ந்தபின் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி கால்களை மேலே தூக்கிக்கொண்டு நின்றார்.
‘இதுவா….. போட்டி, எவ்வளவு நேரம் நிற்கவேண்டும் ?’ என்று ஒரு இளசு கேட்டது.
தலைகீழாக நின்றபடியே நடந்துபோனார். மாடிப்படிகளுக்கு அருகில் சென்றவர், இரண்டாம் மாடிக்கு லாவகமாக கைகளால் ஏறிப்போனார். அப்புறமாய் இறங்கியும் வந்தார். வந்தவர் காலை ஊன்றி நிமிர்ந்தார்.
இளைஞர்கள் சபை அதிர்ந்துபோய் ஆளையாள் பார்த்துக்கொண்டது. பெரும் அமைதி நிலவியது.
அவர் எதுவும் பேசவில்லை. ஆறுதலாக அனைவரையும் ஊடுருவிப்பார்த்தார். பின்பு விறுவிறு என்று தனது அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டார்.
இதன்பின்பும் இளைஞர்கூட்டம் அவரைக் நக்கலடித்தது. ஏளனமாய் அவர்களைப் பார்த்துச் சிரிப்பார்.
சில மாதங்களுக்கு முன் அவரை ஒரு வைத்தியரின் கந்தோரில் சந்தித்தேன். மனைவியுடன் வந்திருந்தார். அங்கு அவர் நொண்டி நொண்டி நடந்தார். டாக்டர் வந்து இருவரையும் அழைத்துப்போனார். அவர் தனது முதுமையுடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
சில தினங்களுக்கு முன்னர் வந்த ஒரு தொலைபேசி அவரின் மனைவி இறந்துவிட்டதாக அறிவித்தது. வீடுதேடிப்போனேன். இப்போதான் வெளியே சென்றார் என்றார்கள். நான் அங்கு நின்றிருந்தபோது அவர் வரவில்லை. மறுநாள் நல்லடக்கம் முடிந்து அவரைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்தபின் அவரருகே சென்றேன். எனது முழங்காலில் அறுவைச்சிகிச்சை நடந்திருப்பதால் ஊன்றுகோல்களின் உதவியுடனேயே நடந்தேன்.
கண்டதும் ‘சஞ்சயன், என்ன நடந்தது’ என்றார். நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் வழமைபோன்று பேசத்தொடங்கியிருந்தார். நான் அமைதியாய் நின்றிந்தேன். பலர் அவரிடம் கைலாகுகொடுத்து விடைபெற்றார்கள். அவர் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவருக்கு அவரது பேச்சே முக்கியமாய் இருந்தது.
அவரது மகள் வந்து அவரை அழைத்துப்போனார். அப்போது அவர் என்னைப் பார்த்து ‘வந்து சாப்பிட்டுவிட்டுப் போ’ என்றார். ‘நிட்சயமாய்’ என்றேன்.
உணவருந்தும் இடத்தில் எனது மேசை காலியாக இருந்தது. எனைய மேசைகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைத் தேடிவந்து என்னருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தனது குடும்பம் நோர்வேக்கு வரமுன் அனுபவித்த அல்லல்களை கூறிக்கொண்டிருந்தார். கண்கள் பிற்காலத்தில் அலைந்துகொண்டிருந்தன. பலர் வந்து விடைபெற்றார்கள். தலைமட்டும் அசைந்தது. பேச்சு நிற்காமல் தொடர்ந்தது.
உணவருந்தியபடியே அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பேசியிருப்போம். நான் புறப்படவேண்டும் என்றேன்.
கையைப்பிடித்தார். ‘சஞ்சயன், எனக்கு இனி ஒருவரும் இல்லை. அவளும் போய்விட்டாள். ஒருவருக்கும் இனிமேல் பாரமாக இருக்கக்கூடாது. எனது பெரிய பிரச்சனையே நான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதுதான்’
‘ம்’
‘இனி நான் பேசப்போவதில்லை. வாயை மூடிக்கொள்ளப்போகிறேன்’ என்றார்.
நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவரால் அது முடியாதது என்பதை நான் அறிவேன்.
உட்கார்ந்திருந்த அவரது தோளைப்பற்றி ‘அண்ணை, நான் விடைபெறுகிறேன்’; என்றேன்
தோளில் இருந்த எனது கையின்மேல் தனது கையைவைத்தார். முதுமையான அந்தக்கைகள் நடுங்கியதை உணர்ந்தேன்.
கடலுக்கு அலைகள் வேண்டியிருப்பதைப்போன்று மனிதனுக்கு பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது.
கடலின் அலைகளை ஏற்றுக்கொள்ளும் கரைகளைப்போன்று மனிதர்களின் பேச்சுக்ளை கேட்டுக்கொண்டே இருக்கத்தான் எவருமில்லை.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்