மட்டக்களப்பு நகரத்தினுள் இரண்டு ஆண்கள் பாடசாலைகள் உண்டு. ஒன்று புனித மைக்கல் கல்லூரி மற்றையது எங்கள் மெதடிஸ்ற் மத்திய கல்லூரி.
புனித மைக்கல் கல்லூரியின் வணக்கத்துக்குரிய பிதா வெபர் அவர்களின் பெயரையே மட்டக்களப்பின் விளையாட்டுமைதானத்திற்கு வைத்திருக்கிறார்கள். இதைவிட வேறென்ன பெருமையை எம்மால் அவருக்குக் கொடுத்திட முடியும்?
70 களிலும் 80களிலும் வெள்ளையுடுத்திய அந்தப் பெருமனிதரைக் கண்டிருக்கிறேன்.
Rev. Father Harold John Weber S.J அமெரிக்காவில் உள்ள New Orleans, Louisiana என்னும் இடத்தில் பிறந்து 1947இல் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து 50 ஆண்டுகள் புனித மைக்கல் கல்லூரியில் கடமையாற்றியவர்.
19.4.1998 அன்று அவர் இறந்தபோது நடைபெற்ற இறுதிஊர்வலத்தைப்போன்றதொரு ஊர்வலத்தை மட்டக்களப்பு கண்டதில்லை. அத்தனை பிரபலமானவர் அவர்.
நாம் முத்தவெளியில் (வெபர் அரங்கில்) காற்பந்தாடிய நாட்களில் ஒரு முஸ்லீம் மாணவரை தினமும் 800 மீற்றர் ஓடுவதற்கு பயிற்றுவிப்பார். அக்காட்சி இன்றும் என் நினைவுகளில் உண்டு. பின்னாட்களில் அம்மாணவன் இலங்கையின் முன்னணி வீரனாக வந்தார் என்றே நினைவிருக்கிறது.
Basketball இல் புனித மைக்கல் கல்லூரியை கொடிகட்டிப்பறக்க வைத்தவர் Rev.Fr.Eugene Hebert S.J. இவருக்கு Rev. Fr. Basketball என்று இன்னொரு பிரபலமான பெயரும் உண்டு.
70களின் நடுப்பகுதியிலும் 80 முதற்பகுதியிலும் மெய்வல்லுனர்போட்டிகளிலும் நாம் புனிதமைக்கல் கல்லூரியை வெற்றிகொள்வதைவிட அவர்களே எம்மை வெற்றிகொண்டார்கள். காற்பந்தாட்டத்திலும் அப்படியே. அக்காலத்தில் கிறிக்கட்போட்டிகள் குறைவாகவே நடைபெற்றன.
விளையாட்டு என்று வந்துவிட்டால் எமக்கு முன்னணி எதிரிகளாக இருப்பது இவர்களே. இது மனதில் படிந்துபோய்விட்ட விடயம். இப்போதும் அப்படியே.
இதை மறைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் எப்போதும் மெதடிஸ்ற்மத்திய கல்லூரியின் மாணவனே. அதிலும் பிரின்ஸ் காசிநாதரின் சந்ததி என்ற தலைக்கேறிய பெருமை எனக்குண்டு.
மற்றைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாடசாலைகளுக்கும் இலங்கைவாழ் தமிழர்களுக்கும் இடையே, உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பு உண்டு என்பதை அவதானித்திருக்கிறீர்களா?
'எமது பாடசாலை' என்றவுடன் வாழ்க்கையின் அயர்ச்சியில் இருந்து மீண்டு உயிர்ந்து எழும் பழையமாணவர்கள் எத்தனை எத்தனை. இதற்கான காரணம் என்ன?
பதில் தேவையற்ற கேள்விகளில் இதுவுமொன்று.
நாம் புலம்பெயர்ந்து வந்தபோது பாடசாலைகளையும் பெயர்த்துக்கொண்டு வந்திருக்கிறோம். வருடாந்தம் எமது பாடசாலைகளின் பழையமாணவர்கள் காற்பந்து, கிறிக்கற் என்று மோதிக்கொள்கிறார்கள். 40, 50, 60 வயதுகளிலும் தூக்கமுடியாத உடலைக் காவியோடி, வாயாலும் மூக்காலும் புகைதள்ளியபடி, இதோ நான் விழுந்து சாகப்போகிறேன் என்ற நிலையிலும் வேர்த்து விறுவிறுத்து, பாடசாலைக்காய் உயிரைக்கொடுத்து, ஓர்மத்துடன் விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன். நானும் விளையாடியிருக்கிறேன். தோல்விகளின் வலி அந்நாட்களைவிட இப்போதுதான் அதிகமாக இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இன, மத, மொழிவேறுபாடுகளைக்கடந்து மாணவர்களும் பாடசாலையென்றவுடன் ஓரணியில் நிற்கும் விந்தையென்ன? எது எம்மை இவ்வாறு பிணைத்துப்போடுகிறது?
காலம், பல நாட்டவர்களைச் சந்திக்கும், அவர்களுடன் பழக்கும் சந்தர்ப்பத்தைத் எனக்குத் தந்தருக்கிறது. அவர்களிடம் இதைக்கேட்டிருக்கிறேன். இதிலென்ன இருக்கிறது. அது பாடசாலை. அக்காலம் முடிந்துவிட்டது என்று மிகச் சாதாரணமாக்க கூறுவார்கள். எனக்கு நெஞ்சு வலிக்கும்.
ஊருக்குள் வரும்போதெல்லாம் எனது பாடசாலையினுள் நடப்பது, நான் வாழ்ந்தலைந்த கட்டங்களைத் தொட்டுணர்வது, எங்காவது எங்கள் நினைவுச்சின்னங்களைக் காணும்போது என் ஆத்மா மகிழ்வதும், தாயின் அரவணைப்பில் இருப்பதைப்போன்ற உணர்வுகளையும், வாழ்க்கையின் வலிகளையும் செப்பனிடும் உணர்வையும் தரவல்லது.
பேராசான்களை தேடிச்சென்று, அருகமர்ந்து உரையாடி, நினைவாடி, உயிர்த்துத் திரும்பும் நாட்கள் வாழ்வின் முக்கிய நாட்களாகிவிடுகின்றன.
அறிமுகமில்லாத ஒரு மனிதக் கூட்டத்தில் அல்லாடும்போது “நானும் மட்டக்களப்பு சென்றலில் படித்தவன்” என்பவருடன் பிணைப்பும், பாதுகாப்புணர்வும் ஏற்படுகிறதே, ஏன்? எப்படி?
இப்படியான உணர்வுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு Big match காய்ச்சல் வருடத்தில் ஒருதடவை வரும்.
இவ்வாரத்தின் சனிக்கிழைமையும் ஞாயிற்றுக்கிழமையும் அக்காய்ச்சல் தூக்கியடித்தது.
போர்க்காலத்தில் நண்பர்களின் கடிதங்கள் மூலமாகவே ஊரில் நடப்பவை தெரியவரும்.
பின்பு தொலைபேசி அழைப்பு போதுமாய் இருந்தது.
கைத்தொலைபேசி வந்ததும் குறுஞ்செய்தி நேரஞ்சல் தகவல்களை அறிவித்தது.
இப்போது பழைய மாணவர்கள் பாடசாலைக்கான மீடியா குழுமம் ஆரம்பித்து நேரஞ்சல் செய்கிறார்கள். காலைக்கடன்களைக் கழித்தபடியே விக்கட் விழுந்ததும் ஆர்ப்பாரிக்க முடிகிறது.
நேற்று, ஒரு பவுன்டறி (4) ஓட்டத்தினை சற்று ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினேன். சுரங்க ரயிலில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை?’
இவ்வாரத்தின் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பட்மின்டன் சம்மேளனத்தின் நோர்வே தழுவிய கூட்டமொன்றில் பங்குபற்ற வேண்டியிருக்கிறது. அவ்வப்போது நேரஞ்சலையும், மெசேஞ்சரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நேரஞ்சல் தடைப்பட்டால் நெஞ்சு அடித்துக்கொள்கிறது. நண்பர்களுக்கு செய்தி அனுப்பிக்கேட்கிறேன். பதட்டப்படுகிறேன். நகம் கடிக்கிறேன். எழுந்து அங்கும் இங்கும் நடக்கிறேன். மீண்டும் நேரஞ்சல் ஆரம்பிக்கும்வரை நிம்மதியற்றுப்போகிறது.
ஆனால், இவைதான் வாழ்வின் உச்சக்கணங்கள் என்று நினைக்கத்தொன்றுகிறது. எத்தனை கோடிகளைக் கொட்டிக்கொடுத்தாலும் ,இவ்வனுபவங்களைப் பெறமுடியாதல்லவா?
2010ம் ஆண்டு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியில் நாம் தோற்றதுபற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். எனக்கு எழுத்து மனதை ஆற்றும் தோழன். இன்றும் அப்படியே.
கடந்த ஆண்டுகளில் எங்கள் பாடசாலை மாணவர்களும் பழையமாணவர் சங்கமும் உயிர்ப்புடன் இயங்குவதால் நாம் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
நேற்று முதலில் பந்தெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 98 ஓட்டங்களுக்கு சகல ஆட்டவீரர்களையும் இழந்தபின் ஆடிய எம்மவர்கள் 200 கடந்தபின் இன்று ஆட்டத்தைக் கைமாற்றிக்கொடுத்தார்கள். இருப்பினும் புனித மைக்கல் கல்லூரியினர் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிதோல்வியற்ற சமநிலையில் போட்டியை முடித்தனர்.
போட்டிகளைப்போன்றே போட்டிகளின் பின்னான உரையாடல்கள் சுவராஸ்யமானவை. சிலர் இது எமக்கு தோல்வி என்றனர். சிலர் போட்டியின் உத்திகளை மாற்றி விளையாடியிருக்கலாம் என்றனர். இன்னும் பல வாரங்களுக்கு இது உரையாடி அலசி ஆராய்ந்து, மனங்களை ஆற்றிக்கொள்வோம். இப்படியான big match களின் பின்புலத்திலுள்ள தத்துவமே இவைதானே. தோல்விகளும், வெற்றிகளும் எம்மை இணைக்கின்றன.
எத்தனையாண்டுகள் புலம்பெயர்ந்திருப்பினும் மனதுக்கு மிக நெருக்கமான இப்படியான நாட்களைப்போன்ற உயிர்ப்பான நாட்களை இங்குள்ள வாழ்க்கை தருவதில்லை.
இதேபோலத்தான் இங்குள்ள பலர், தங்கள் ஊர்களில் உள்ள பாடசாலைகள், சங்கங்கள், விளையாட்டுக்கழகங்களில் உயிரையே வைத்திருக்கிறார்கள். அவற்றிற்காக இங்கிருந்து இயங்குகிறார்கள்.
எனது புலப்பெயர்வு என்பதானது மனரீதியாக நடைபெறவில்லை என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறேன். 20 வருடத்து வாழ்க்கை தரும் உயிர்ப்பான அனுபவங்களை 30 வருட வாழ்க்கையனுபவம் தரவில்லை. நான் புலம்பெயர்ந்தபோது மனம் புனிதப்பூமியிலேயே தங்கிவிட்டது என்பதுதான் இதன் காரணமா?
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்