இந்த சொக்ஸ் பண்ணுற தொல்லை தாங்கமுடியவில்லை.
மூக்குள்ளவரை சளிபோல இதுவும் நான் இந்த ஊரில இருக்கும்வரையில் என்னைத்தொடரும் போலிருக்கிறது. விதி வலியது இவ்விடயத்திலும்.
முதலில் பிரச்சனையை விபரித்தால்தான் உங்களுக்குப் புரியும்? கடந்த 23 வருடங்களாக நான் வாஷிங் மெசீனுக்குள் 2 சொக்ஸ் போட்டால் வாஷிங் மெசீன் ஓன்றைத்தான் திருப்பித்தருகிறது. 2 சோடி போட்டால் ஒரு சோடியை மட்டும் திரும்பித் தருகிறது ஆனால் அது வேற வேற நிறத்திலிருக்கும். ஆச்சர்யம் என்னவென்றால் அடுத்தமுறை உடுப்புகளைக்களுவும் போது முதல் முறை காணாமல்போன சொக்ஸ் வந்திருக்கும் ஆனால் இந்த முறை போட்டது வந்திருக்காது. கல்லைக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் மாதிரி அல்லது பார்முடா முக்கோத்தினுள்ளக்குள் சென்ற கப்பல் மாதிரி.. மாயமாய் மறைகிறது.
வாஷிங் மெசீன் என்ற பெயரைமாற்றி சொக்ஸ்தின்னி மெசீன் என்று வைத்திருக்கலாமோ என்று எண்ணுமளவுக்கு அதன் தொல்லை தாங்க முடியாதிருக்கிறது. இதனால் குடும்பத்துக்குள்ளும் பிரச்சனைகள் வருகிறது.
உங்களுக்கு ஒரு சொக்சைஐக் கவனமா கழுவி எடுத்து வைக்கத் தெரியல என்றும் இதை ஆதாரமாக வைத்து உங்களுக்கு ஒன்றுமே உருப்படியா செய்யத் தெரியாது என்றும் தேணொழுகப் ”பேசுகிறாள்”” தர்மபத்தினி.
காலை அவசரத்தில் மகள் அப்பா ஒரு சொக்ஸ் தான் இருக்கு என்று கத்தி மற்றதை தேடு என்று கட்டளையிட்டு இம்சை பண்ணுகிறாள்.
நான் ஏதோ வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது போலிக்கிறது இவர்கள் பேச்சு. இல்லாத சொக்ஸை நான் எங்கு தேடுவேன்? நீங்கள் என் மீது பரிதாபப் படுவது புரிகிறது. ஆனால் அவர்களுக்குப் புரியமாட்டேன் என்கிறதே.
எங்கள் வீட்டில் மூன்று சொக்ஸ” பாக் (பைகள்) இருக்கிறது. அ வையும் உருண்டு திரண்டு எனது வண்டியைப்போன்று வளருகின்றனவேதவிர குறையமாட்டேன் என்கின்றன. ஒவ்வொரு முறையும் தனி சொக்ஸ் வரும் போது அதனுள் திணிப்பேன்.
ஆண்டுக்கு ஒரு முறை குடும்பமாக இருந்து தனி சொக்ஸ்களை சோடி சேர்ப்போம். கலியாண புரோக்கர் மாதிரியான வேலை தான் இதுவும். நிறம் பார்த்து, சைஸ் பார்த்து, நீள அகலம் பார்த்து சோடி சேர்ப்போம். அடுத்த முறை கழுவும் வரை சோடிகள் சேர்ந்திருக்கும் ஆனால் கழுவப்போட்டால் டிவோஸ் தான்.
எனக்கு சொக்ஸ் தட்டுப்பாடு வரும் போது பையை கிண்டி பகுத்தமதிப்பாக நிறம், அளவு பெருந்தும் சொக்ஸ்களை எடுத்து மாட்டிக் கொண்டு போவேன். ஒன்று கறுப்பாயும் மற்றது கிட்டத்தட்ட கறுப்பாயும் இருக்கும். அனால் எனக்கு ரெண்டும் கறுப்புத்தான்.
இந்த சொக்ஸ்களால் வரும் தட்டுப்பாட்டை நான் ராஜதந்திரமாக யோசித்து தீர்த்துக் கொண்டிருக்கிறேன். எப்படித் தெரியுமா? நான் சொக்ஸ் வாங்கும் பொது ஒரே விதமான 4 -5 சோடி வாங்குவேன்... நாசமா போன மெசீன் ஒன்றைத் தின்னாலும் மற்றது இருக்கமுள (சீச்..சீ யாரது கண்ணலங்கி தெய்வமே சொல்லி என்று காலில் விழுந்திருப்பது... அண்ணன் சிஸ்யனா யாரயும் சேர்த்துகிறதில்லப்பபா)
நானும் என்னால் முடிந்தவரையில் இந்தப் பிரச்சனையை துப்பறிந்து பார்த்துவிட்டேன். இதுவரையில் துப்புத்தலங்கவில்லை. சங்கர்லாலை அழைப்போம் என்றால் அந்த மனிதரும்ம் உயிருடன் இல்லை. மூத்த மகள் பெல்ஜியம் நாட்டு துப்பறியும் நிபுணர் Poirotஇன் தீவிர ரசிகையாகிவிட்டாள். அவரை அழைப்போம் என்றால் மனிதர் கொலைக் கேஸ் மட்டும் தான் எடுப்பாராம் என்கிறாள் மகள்.
ஒரு நாள் இதற்கு ஒரு முடிவு காண்பது என்று முடிவு செய்தேன். தலையை வாஷிங் மெசீனுக்குள் விட்டு தலைகீழாக இருந்தும் தேடிப் பார்த்தேன். காணாமல் போன அந்த சொக்ஸ் உண்மையிலேயே காணாமல் போயிருந்தது. (அந்த நேரம் யாரும் மெசீன ஆன் பண்ணியிருந்தால்... ஒஸ்லோ முருகா..)
ஏதும் பில்லி சூனியமாயிருக்குமோ என்று நினைத்து இந்தியாவில் இருந்து லண்டன் வந்து டீவீல விளம்பரம் பண்ணும் ”ஆதிவாசியிடம்” அம்மன் படம் போட்ட யந்திரத் தகடு ஒன்றை வாங்கி வந்து வாஷிங் ரூமுக்குள் வாஷிங் மெசீனுக்கு மேல் மாட்டியிருந்தேன். ஆனால் அம்மனுக்கும் தண்ணி காட்டியது சொக்ஸ். அந்த ஆதிவாசி டீவீ வளம்பரத்தில் நாடிபிடித்து, கைபார்தது, காண்டம் பார்த்து அது இது பார்த்து என்றாரே தவிர சொக்ஸ் பிடித்து என்று சொல்லவில்லை, நானும் அதை நானும் கவனிக்கவில்லை. யந்திரத் தகடு போட்ட பின்பும் சொக்ஸ் வராததன் காரணம் அதுவாயிருக்குமோ? என்னவோ? அம்மனுக்குத் தான் வெளிச்சம்.
எனது தூரதிஸ்டமோ தர்ம பத்தினியின்அதிஸ்டமோ தெரியவில்லை அவள் உடுப்பு தோய்க்கும்போது எல்லாம் சரியாக வருகிறது. சொக்ஸ்சும் அவளுடன் கள்ளன் பொலீஸ் விளையாடாமலும், எண்ணிக்கை குறையாமலும் சரியாக வருகிறது. எதிர்த்துக் கதைக்க முடியவில்லை என்னால். அவள் சொக்ஸ்ஐ கையால் கழுவி பிறகு தோய்த்த உடுப்புக்குள் கலந்து வைக்கிறாளோ என யோசிக்கிறேன் அல்லது சொக்ஸ் காணாமல் போகும் போது அடக்கி வாசிக்கிறாளோ? யாமறியோம் பராபரமே.
இன்று உடுப்பு தோய்க்கப்போடும் போது 2 சோடி சொக்ஸ் போட்டேன் வாஷிங் மெசீனிக்குள். முன்னைய அனுபவங்களின் காரணமாக வடிவாக, நிதானமாக 1 , 2 1 , 2 என்று எண்ணி எண்ணி மெசீனுக்குள் போட்டேன் வாஷிங் மெசீனை பூட்டினேன். அதன் பிறகும் மனம் பொறுக்காமல் மீண்டும் திறந்து நான்கும் உள்ளே இருக்கிறதா என சரிபார்த்து மீண்டும் பூட்டினேன். ஒரு தரம் என்னைச் சுற்றி நிலத்தையும் பார்த்துக் கொண்டேன். நிலத்தில் விழுந்திருக்கலாம் அல்லவா. வர வர இந்த சொக்ஸ் பிரச்சனையால் மனநோயாளியாகிக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது.
இந்த சர்வதேச பிரச்சனை பற்றி பலருடன் விவாதித்திருக்கிறேன் (ஜ.நா வுக்கு கொண்டு போகாத குறைதான்) எல்லோரும் இதையே சொல்கிறார்கள் அல்லது நோ கொமன்ட்ஸ் என்கிறார்கள் (மனைவி அருகில் இருந்தால்). நோ கொமன்ஸ் என்றால் அவர்கள் எனது கூற்றை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.
உங்களுக்கு ஏதும் தீர்வு தெரிந்தால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.
அது வரை சொக்ஸ் தேடிக் கொண்டிருக்கும், நான்.
(இந்த ”நான்” ஆணவத்தின் அறிகுறி அல்ல என்றும் சிலருக்கு அறியத்தருகிறேன்)
30.05.10
1. சொக்சை கழுவாமல் விடலாம்.. ஆனா அது பூமிக்கே கேட்டை விளைவிக்கும் என்பதால (பரிசோதனை எலியா நாங்க இருந்ததொரு காலம்!)அந்த ஒப்சனை விடுவம்.
ReplyDelete2. ஒரு சின்னத் தலாணி உறை எடுத்து அதுக்குள்ளே கழுவ வேண்டிய சோடி சொக்சைப் போட்டு தலாணி உறையின் வாயைக் கட்டிவிடவும்.. பிறகு கழுவி முடிந்தவுடன் ஏறாவூர் முத்து எந்தக் கடவுளை வேண்டிக்கொள்வாரெண்டு தெரிந்தால் அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டு தலாணி உறையைப் பிரித்துப் பார்க்கவும். சோடியா இருந்தாச் சரி. இல்லாட்டி CERNகாரனிட்டப் போய் ஐயா கருந்துளையொண்டு என்ட வோஷிங் மெசினுக்குள்ள இருக்கு என்டு அவனிட்ட வோசிங் மெசினை வித்திட்டு சொக்சைக் கையால கழுவத் தொடங்கிறதுதான் ஒரே வழி!!