மரியாதைக்குரிய மக்ஸ் (Max) என்னும் Sigfus Sverrisson
சில வாரங்களுக்கு முன் தொலைபேசியில் தடித்த, கரகரப்பான, விறைப்பான, அவசரமான குரலுடன் அறிமுகமானவர் தான் இந்த மக்ஸ். விசித்திரமான மனிதர். இரண்டு நாட்கள், அதுவும் 4 மணித்தியாலங்கள் மட்டுமே பழகியவர் என்னை அதிகமாகவே பாதித்தார்.
அவரின் கணணி மக்கர் செய்த போது நான் கணணி திருத்துவது பற்றி அறிந்து அது பற்றி உரையாட என்னைத் தொடர்பு கொண்டார்.
ஆரம்பத்திலேயே அவர் நோர்வே நாட்டிவரில்லை வெளிநாட்டவர் என்று தெரிந்தது. நான் நோர்வே நாட்டவனா என்று கேட்டார். நான் இல்லை என்றது அவருக்கு திருப்தியை கொடுத்திருக்க வேணும். தனது கொம்பியூட்டர் இன்டர் நெட்டுக்கு போகுதில்லை என்றும், வைரஸ் இருக்கு என்றும் சொன்னார். வைரஸ் இருப்பது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டபோது... அப்படித்தான் நினைக்கிறேன் என்று குரலை உயர்த்தி கடுமையாகச் சொன்னார். ஆகா, அப்படியா என்றேன்... உடனே வா...என கட்டளையும் போட்டு விலையையும் கேட்டார்.
ஐயா! என்னிடம் இன்று வாகனம் இல்லை.. நாளை வரவா என்றேன்? இல்லை, இல்லை உன் விலாசம் சொல் நான் வருகிறேன் என்றார். சரி என்று விலாசமும், வழியும் சொல்லி, நேரம் குறித்துக் கொண்டோம்.
ஒரு மணிநேரத்தில் தொலைபேசியில் அவசரமாய் அழைத்து தான் தொலைந்து விட்டதாக அதே தடித்த, கரகரப்பான, விறைப்பான, அவசரமான குரலில் கூறினார்.
எங்கே நிற்கிறீர்கள், ஏதும் அடையாளம் சொல்லுங்கள் என்றேன்.
Narvesen என்னும் கடைக்கு முன்னால் என்றார். (ஒஸ்லோவில மட்டும் 100 க்கு குறையாத அளவு Narvesen கடைகள் இருக்கு)
அய்யா! அது எல்லா இடத்திலயும் இருக்கும் கடை. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்றேன்?
மீண்டும் Narvesen என்றார். எனக்கு மண்டை விறைக்கத் தொடங்கியது. மிகவும் ஆறுதலாகவும்...அன்பாகவும் (பல்லைக்கடித்துக் கொண்டு) ஐயா நீங்கள் நிற்கும் இடத்தில் யாரிடமாவது நீங்கள் நிற்கும் இடத்தின் பெயரை கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.. பக்கத்தில் போன யாரோ ஒரு (அப்)பாவியை மடக்கி அவரின் தடித்த, கரகரப்பான, விறைப்பான, அவசரமான குரலில் நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டது தொலைபேசியினூடாக தொளிவாகக் கேட்டது. பதில் அறிந்து மீண்டும் வழி சொன்னேன். மீண்டும் இரண்டு தரம் தொலைந்து 1 மணி நேரத்தின் பின் வீட்டுக்குள் வந்தார்.
கதவைத் திறந்ததும் விறு விறு என்று தனது பையுடன் சப்பாத்தையும் களட்டாமல் ஹால்க்குள் நுளைந்தார். நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நண்பரே! நாம் வீட்டுக்குள் சப்பாத்துடன் போவதில்லை, நீங்களும் சப்பாத்தை களட்டிவிட்டு வாருங்கள் என்றேன்.
என்ன சப்பாத்தை களட்டுவதா? என்ற தொனியில் என்னை பார்த்தவர். முடியாது எனது காலில் புண் இருக்கு என்றார். என்னடா வம்பு இது என்று நினைத்து விட்டு விருப்பமில்லாமல் மக்ஸ்க்கு எனது ராஜ்யத்தில் விதிவிலக்களித்தேன். நன்றி என்றார் தடித்த,........ குரலில்.
சரி.... என்னய்யா உனது பிரச்சனை? என்றேன்.
தூசனத்தில் திட்டியபடியே இந்த சனியன் வேலை செய்யுதில்லை, தான் இசையமைத்த பாடல்களைக் காணவில்லை, அவை மிக மிக முக்கியமானவை என்றார் தனது கணணியை பார்த்தபடியே. அவர் சொல்லி முடிய முதல் குப்பென என் முகத்திலடித்தது நொதித்துப் போன பதார்த்ததொன்றும் சிகரட் வாசனையும். மறு பக்கம் திரும்பி மூச்செடுத்தேன்.
ஊத்தையாய் கண்றாவியாய் இருந்த கணணியை வாங்கி இயக்கினேன்....
அதுவோ திரையில் ”நீ கள்ளப் ப்ரோகிறாம் பாவிக்கிறாய்” என்ற தொனியில் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தது. அதைவிட பாதுகாப்பு சம்பந்தமான எதுவும் கணணியில் இருக்கவில்லை. விசயத்தை ஆறுதலாக விளக்கினேன்.
அது தான் நான் செய்த மோட்டு வேலை....
தூசனத்தில் என்னை திட்டியபடியே பீரங்கியாய் முழங்கினார் மக்ஸ். (நானும் முதலில் கொஞ்சம் பயந்தது தான் போனேன்)
டு ஆர் கால் மன் (நீ விசரன்) என்று கத்தினார்.
நான் பயத்தில் விறைத்துப் போய் அவரை பார்த்துக் கொண்டே தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன். (வேறு என்னத்தை செய்வது?)
நான் 700 குறோனர்கள் குடுத்து திருத்தினேன் என்றார்.
இதற்கும் தலையாட்டினேன்
சென்ற வருடம் தான் இந்த கணணியை வாங்கினேன் என்றார்.
நான் இப்பவும் தலையாட்டிக் கொண்டிருந்தேன்
நீ நான் கள்ளப் ப்ரோகிறாம் பாவிக்கிறேன் என்கிறாய்... உனக்கு விசர் இல்லாமல் வேறு என்ன? என்றார் உக்கிரம் குறையாமலே
இப்போது எனக்குள் இருந்த பயம் மறைந்து பரிதாபமாய் மாறியிருந்தது.
என்னை கொஞ்சம் பேச அனுமதிப்பாயா? என்றேன் மிகவும் மரியாதையாக
உடனடி பலன் கிடைத்தது
ம்..ம்.. சொல் என்றார் கரகரத்த குரலில்
அய்யா! நீ கணணி வாங்கியதும் உண்மை.
அவன் திருத்தியதும் உண்மை
ஆனால் அவன் போட்ட ப்ரோகிறாம் தான் பிழை என்றேன்
சொல்லி வாய் மூடவில்லை.. தொலைபேசியில் கணணியை திருத்தியவனை திட்டிக் கொண்டிருந்தார் மக்ஸ்
இவர் கதை புரியாமல் அவன் திட்ட, அவன் கதை புரியாமல் இவர் திட்ட
சிறுது நேரம் தொலைபேசி யுத்தம் நடந்தது. நானோ... ஆகா, ஆபத்தான ஆளிடம் மாட்டிவிட்டேனே எப்படி தப்புவது என்று வடிவேலு மாதிரி யோசித்துக்கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் தொலைபேசியை வைத்தவர்...
அவனை சும்மாவிட மாட்டேன் என்று கறுவிக் கொண்டார்
கோபத்தில் அங்கும் இங்கும் நடந்தார்
நடையை நிறுத்தி, நிமிர்ந்து என்னைப் பார்த்து
நீ கோட்டுக்கு வருவேணும் என்றார்.
திகைத்துப் போன நான்
ஏன்? என மிகவும் மரியாதையுடன் கேட்டேன்.
சாட்சி என்றார்..
எதற்கு என்று கேட்கமுதலே தான் போலீஸ் போய், திருத்தியவனை கோட்டுக்கு இழுத்து நட்ட ஈடு கேட்கப் போகிறேன் என்றார்
என்னடா கோதாரி இது.. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் யாரோ என்ற மாதிரி நான் இவனிட்ட மாட்டுப்பட்டிட்டனே என்று போசித்துக் கொண்டிருந்தேன்.
மக்ஸ் தனது கணணியை எடுத்து மூடியபடியே..
வா, கணணி திருத்தியவனிடம் போவோம் என்று இன்னொரு போடு போட்டார்.
இப்போது நான்
குரலை கடுமையாக்கி மக்ஸ் என்றேன்.
என்ன என்றார்
உனக்கு கணணி திருத்தி தர என்னால் முடியும் ஆனால் கோட்டுக்கு அல்லது வேறு இடத்துக்கு வர முடியாது.. மன்னித்துக்கொள் என்றேன் கடுமையும், நட்பும் கலந்து.
தன் தாடியை சொறிந்தபடியே போசித்த மக்ஸ்
தான் கணணி திருத்தியவனிடம் போவதாகவும், பின்பு போலீசிடம் போவதாகவும் சொல்லி
உனக்கு எவ்வளவு காசு தரவேண்டும் என கேட்டார்.
எதற்கு என்றேன்
கணணியை பார்த்தற்கு என்றார்
இல்லை...நண்பரே...நான் வேலை செய்யாடமல் காசு வேண்டுவதில்லை என்றேன்
குட்.... குட் பிரின்சிபல்.. என்று எனது கையைப் பற்றி முறியுமளவுக்கு கைகுலுக்கி, மீண்டும் சந்திப்பதாக கூறி மிக அவசரமாக மறைந்து போனார் நன்பர் மக்ஸ்
புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது வீடு.
அப்பபா என்ன பரப்பான மனிதர்... சற்று நேரம் கூட மனிதர் உட்காரவில்லை, அமைதி கொள்ளவில்லை, அமைதியாய் பேசவில்லை எதையோ தொலைத்தவர் போல பரபரத்துக் கொண்டிருந்தார்.
மக்ஸ்ஐ திட்டியபடியே நிலத்தில் இருந்த மக்ஸின் சேற்றுக் காலடிகளை கழுவிமுடித்தேன்
அதே நாள் மதியம் மக்ஸ்ஜ மறந்து மதிய தூக்கத்தின் ஏகாந்தத்தை அனுபவிததுக் கொண்டிருந்தேன்....
தொலைபேசி மணியடித்தது... விசரைக் கிளப்பியது
தூக்க கலக்கத்தில் தொலைபேசியை எடுக்க முதலே
ஹலோ, ஹலோ நான் மக்ஸ், மக்ஸ் கதைக்கிறேன் என்று கத்திக் கொண்டிருந்தார் நமது மக்ஸ்
என்ன என்றேன் சற்று எரிச்சலுடன்?
எனது எரிச்சலை கண்டுகொள்ளாமலே, கணணி திருத்தியவன் தன்னை மிகவும் மரியாதை இன்றி திட்டி அனுப்பி விட்டதாகவும், தான் தற்போது போலீசுக்கு போய்கொண்டிருப்பதாயும் கோபத்துடன் சொன்னார்.
ம் ..ம் என்றேன் எரிச்சல் கலந்த தூக்க கலக்கத்தில்
ஐ கோல் யூ என்ற படியே தொலைபேசியை வைத்தார்.
எனக்கு நித்திரை போய் விசர் வந்திருந்தது
அரை மணிநேரத்தில் மீண்டும் தொலைபேசியில் வந்த மக்ஸ்
போலிசில் தான் காத்திருப்பதாய் சொன்னார். தேவை என்றால் உன்னை தொடர்பு கொள்வேன் என்று சொல்லி எனது பதிலை எதிர்பார்க்காமல் தொலைபேசியை வைத்தார்.
இரண்டு மணிநேரத்தில் மீண்டும் மக்ஸ்
என்னய்யா என்றேன் சலிப்புடன்
போலீஸ் தன்னை கலைத்து விட்டதாகவும், போலீஸ் தனது கடமையை செய்யவில்லை எனவும் திட்டினார்.
ஆறுதல் படுத்தி தொலைபேசியை வைத்தேன். (போலீஸ்சுக்கு இருக்கிற பிரச்சனைகளில் இவரின் பிரச்சனையை அவர்கள் பிரச்சனை இல்லை என்றே நினைத்திருப்பார்கள்....கற்பனையில் மக்ஸ் போலீசுடன் எப்படி கதைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தேன்...போலீஸ்காரனிடத்தில் பரிதாபம் ஏற்பட்டது.
ஒரு வாரத்தின் பின் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டார் நண்பர் மக்ஸ்
இந்த முறை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் வழக்கு போட்டிருந்தார். அவர்கள் இது பற்றி முடிவு சொல்ல 8 மாதமாகும் என்றதால் அதிகமாகவே சலிப்படைந்து என்னை என்ன செய்யலாம் என்று கேட்டார். 8 மாதம் கணணி இன்றி இருப்பது தனக்கு கஸ்டம் என்றார்.
உனது கணணியில் இருப்பது கள்ள ப்ரோகிறாம் என்பதை ஒரு கணணி கடையில் கொடுத்து எழுத்து மூலமாக உறுதி செய்து கொள், அதை சாட்சியாக பயன்படுத்தலாம். அதன் பின் கணணியை என்னிடம் தா திருத்தித் தருகிறேன் என்றேன்.
சரி என்று சொன்னார். சொன்ன படியே 4 நாட்களின் பின் மீண்டும் தொல்லை பேசியில் வந்ததார்.
இம் முறை மக்ஸ்ஜ வீட்டுக்கு அழைப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனவே அவரின் விலாசம் கேட்டு நவிகேசனில் தட்டிவிட்டேன். இடது பக்கம் திரும்பு, நேரே போ, மீண்டும் இடது பக்கம் திரும்பு என கட்டளையிட்டுக் கொண்டிருந்தது நவிகேசனுக்குள் இருந்த பெண் குரல்.
10 நிமிடங்களின் பின் நீ தேடிய இடம் வந்து விட்டது என்றது பெண்ணின் குரல்.
ஆனால் மக்ஸ் சொன்ன 68A ஜ மட்டும் காணவில்லை. 62, 64, 66, .. ,70, 72 இலக்கங்கள் இருந்தன...ஆனால் 68 மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை.. வாகனத்தை விட்டு இறங்கி தேடத் தொடங்கினேன். இதற்கிடையில் 2 தரம் மக்ஸ் இடம் வழி கேட்டேன். 68A க்கு வந்து போன் பண்ணு என்று ஈவுஇரக்கம்மின்றி தொலைபேசியை துண்டித்தார்.பத்திக் கொண்டு வந்தது எனக்கு
நான் நிற்கும் இடம் சரியில்லை என்று எனது பலனாய்வுத்துறை எச்சரித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் குப்பை கூழங்களும், ஒதுக்கி விடப்பட்ட கரிய நிற ஸ்நோவும், ஒரு வித நாற்றமும் அவ்விடத்தின் தரத்தை கூறிக் கொண்டிருந்தன. சுற்றியிருந்த அடுக்குமாடிக் கட்டடங்கள் பராமரிக்கப்படாததால் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. என்னடா இது நோர்வேயிலா நிற்கிறேன் என்றளவுக்கு அந்த இடம் ஊத்தையாயும், குப்பையாயும், பராமரிப்பற்றும், பயத்தை தருவதாயும் இருந்தது.
சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சற்று முன்னேறினேன். எங்கும் ஆபிரிக்கரர்கள் மட்டுமே தெரிந்தனர். 62ம் இலக்கத்துக்கு பின்புறமாய் ஒரு பாதை போயிற்று... அதனூடாக நடந்து போய்ப் பார்த்தேன். 64 வந்தது. இன்னும் சற்று நடந்தேன் சுற்றாடல் பயங்கரமாக இருந்தது. உடைந்த கார்களும், குப்பையும், வீட்டுக் கழிவுகளும், உடைந்த போத்தல்களும், துர்நாற்றமும் அவ்விடத்தின் தரத்தை சொல்லிக் கொண்டிருந்தன. ”கெத்தோ” என்னும் சேரிப்புறத்தில் நிற்பதை உணர்ந்த போது அமெரிக்க படங்களில் வரும் ”கேத்தோ” கறுப்பர்களின் அட்டகாசங்கள் பின்னந்தலையில் வந்து போயிற்று
ஆனால் என்னைக் கடந்து போன எல்லா ஆபிரிக்கர்களும் வலது கையை இடது பக்க நெஞ்சில் வைத்து தலையாட்டினார்கள் அல்லது அஸ்லாம் அலைக்கும் என்றார்கள், அல்லது நோர்வேஜி மொழியில் மாலை வணக்கம் சொன்னார்கள். நானும் புன்னகைத்தபடியே தலையாட்டிக் கொண்டு அவர்களை கடந்து கொண்டிருந்தேன். மனமோ மனிதர்களின் உடை, இடம் பார்த்து முன்கூட்டியே எடைபோடாதே என்று எத்தனை தரம் உனக்கு சொல்வது என என்னைத் திட்டிக் கொண்டிருந்தது.
ஆபிரிக்கர்களைப் போல நாம் ஏன் மற்றவர்களை பார்த்து சிரிப்பதோ, தலையாட்டுவதோ இல்லை என்று எனக்குப் புரியவில்லை. நம்மவர்கள் முன்னால் வருபவன் தமிழன் என்றாலே முகத்தை இறுப்பிடித்துக் கொண்டு காணாத மாதிரி கடந்து போவார்கள். சக மனிதனுக்கு ஒரு புன்னகையைத்தானும் இலவசமாக தர முடியாத பிசினிகனா நாம்?
66ஆம் கட்டடத்தின் பின்னால் 68ம் இலக்க கட்டடம் இருந்தது. மக்ஸ்க்கு போன் பண்ணினேன். சற்று நேரம் காக்க வைத்துவிட்டு வந்தார் மிரியாதைக்குரிய மகஸ்.
வா, வா என்று அழைத்தபடியே வழிகாட்டிக் கொண்டு நான்கு மாடிகளுக்கான படிகளை லாவகமாக கடந்து தனது அப்பார்ட்மன்ட் கதைவை திறந்து வா உள்ளே என்றார். முதல் வேலையாக தனது சப்பாத்தை கழட்டி வைத்தார். ஆகா என்னடா இது.. எனது வீட்டிற்கு வந்த போது சப்பாத்தை களட்டாதவர் தனது வீட்டில் சப்பாத்தை களட்டுகிறார் என்று யோசித்தபடியே எனது சப்பாத்தை களட்டினேன். அதற்கிடையில் மக்ஸ் தனது கதிலையில் அமர்ந்து சிகரட் ஒன்னற பத்த வைத்துக் கொண்டிருந்தார்.
கதவைத் தாண்டி உள்நோக்கி நகர்ந்தேன்.... என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. இந்த 44 வருடத்தில் அப்படி குப்பையான, ஒழுங்கற்ற இடத்தை நான் கண்டதில்லை. சற்று பயந்து தான் போனேன்.
உட்கார் என கதிரையை இழுத்துப் போட்டு கட்டளையிட்டார் நண்பர் மக்ஸ். உட்கார்ந்தேன்
இதைப் பார் என ஒரு கடதம் ஒன்றைத் தந்தார். அதில் ஒரு கணணி நிறுவனம் இவரின் கணணியில் இருப்பது கள்ள ப்ரோகிறாம் என உறுதி செய்யப்பட்டிருந்தது. பார்த்தாயா என்ன எழுதியிருக்கு என வெற்றிப் பெருமிதத்தோடு என்னைப் பார்த்தார்.
புன்னகைத்தேன் நான்
அவனிடம் 1 லட்சம் குறோணர்கள் நட்டஈடு கேட்கப் போகிறேன் என்றார்.
இதற்கும் புன்னகைத்தேன்
தான் தயாரித்த இசை (பாடல்களை) கணணி திருத்தியவன் அழித்து விட்டான் என்றார்.
என்ன.. உனது பாடல்களா என்றேன் ஆச்சசரியத்துடன்.
ஆம், நான் ஒரு இசையமைப்பாளன் என்றார் வலு கூலாக
மனிதரிடம் எனக்கு ஒரு வித மரியாதை கூடியிருந்தது
சரி உனது கணணியை திருத்த வேண்டுமானால் எனக்கு கணணியின் மென்பொருட்கள் வேண்டும் என்றேன்.
உனக்கு முன்னால் இருக்கிறது என்றார்..
கணணியை இன்ஸ்டோல் பண்ண போட்டேன்... அது தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது.
மெதுவாய் கண்களை சுற்ற விட்டேன்
முருகா! இப்படியும் குப்பையாய் இருக்க முடியுமா என மனம் கேட்கத் தொடங்கியது
முதலில் கண்ணுக்குத் தெரிந்தது இசை சம்பந்தமான கருவிகளே.
3 விதமான கிட்டார்கள்,
4 பெரிய Peavey இன ஒலிபெருக்கி சாதனங்கள்,
Amplifier கள்
ஒலி வாங்கிகள் பல
இரைந்து கிடந்த சீடிக்கள்
நூடில்ஸ் மாதிரி சிக்குப்பட்டிருந்த வயர்கள் ஒரு கும்பம்
இவற்றை விட எங்கும் பியர் போத்தல்கள் கொஞ்சம் குடித்தும், குடிக்காமலும், பதிதாயும் இருந்தது. நான் அங்கிருந்த 2,5 மணிநேரத்தில் மக்ஸ் 4 - 5 பியர் போத்தல்களை காலி பண்ணியிருப்பார்.
மேசையில் பழைய பிட்சா துண்டுகளும், புளித்துபோன பால்பெட்டியும், கசங்கிய கைதுடைத்த பேப்பர்களும், ஒரு தொகை சிகரட் கட்டைகளும், 2 பியர் போத்தல்களும் இருந்தன.
திடீர் என என்னைப் பார்த்த மக்ஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கணணி மூலமாக களவெடுக்கிறார்களாம் உண்மையா என்றார்?
ஓம் அப்படித் தான் கதைக்கிறர்ர்கள் என்றேன்.
தனது பணம் பற்றி தான் பயப்படுவதாயும் ஆனால் வங்கி தானே அதற்றுப் பொறுப்பு என்பதால் சற்று ஆறுதலாய் இருப்பதாகவும் கூறினார்.
நான் வழமைபோல தலையாட்டிக் கொண்டிருந்தேன்
மக்ஸ் இன் படுக்கையறையும், வரவேற்பறையும் ஒன்றாகவே இருந்தது. மேலே ஒரு லைட் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்ன குப்பையாய் இருக்கிறது என யோசிக்கிறாயா என எனது மனதை திறந்து பார்த்தவர் போல என்னைக் கேட்டார்... சிரித்தபடியே ஓம் என்றேன்.
நான் சொல்வதை மிக அவதானமாகக் கேள் என்றார். எனது பதிலை எதிர்பார்க்காமலே இப்படிச் சொன்னார்.
ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள் அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு ஆன் ஒளிந்திருக்கிறான் என்றும்.... ஆனால் தன்னிடம் மட்டும் அந்த பெண் இல்லை என்றும் கூறினார்.
புரியவில்லை என்றேன் (சத்தியமாக எனக்கு புரிந்திருக்கவில்லை)
இந்த முறை உதாரணத்துடன் விளக்கினார்.
வீட்டை ஒழுங்காக வைப்பது, சமைப்பது என்பவற்றை பெண்களே அதிகமாகச் செய்கிறார்கள் அல்லவா? அதே வேலைகளை ஆணும் செய்கிறான் ஆனால் பெண்களை விட குறைவாக. அதே மாதிரி ஒரு ஆண் செய்யும் வேலையை சில பெண்களும் செய்கிறார்கள்...
எனுவே தான் ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள் அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு ஆன் ஒளிந்திருக்கிறான் என்றும்.... கூறுகிறேன் என்றார்.
புரிகிறது என்று தலையாட்டினேன்.
எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.
சரி அதற்கும் உனது வீடு குப்பையாய் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்றேன்...
அடாவடித்தனமாக வெடித்துச் சிரித்துவிட்டு சொன்னார்
என்னில் பெண்ணுக்குரிய தன்மைகள் இல்லை என்று
இப்ப புரிந்தது அவரின் துத்துவம் எனக்கு..
சிரித்தபடியே புரிகிறது என்றேன்..
மக்ஸ் தனது PS2 இல் chess விளையாட ஆரம்பித்தார். நான் கணணியுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தேன். இடைக்கிடை பியர் போத்தலை வாயில் வைத்து தலையை உயர்த்தி வாழ்வை அனுபவித்துக் கொண்டே chess விளையாடிக் கொண்டிருந்தார். திடீர் என பெரும் ஆரவாரத்துடன் உன்னை இன்றும்வென்றுவிட்டேன் என்று டீவியை பார்த்து கத்திவிட்டு....என்னிடம் நீ chess விளையாடுவாயா என்றார். ஓம் என்றால் வா விளையாடுவோம் என்பார் என்ற பயத்தில் இல்லை என்றேன். திருப்தியடைதமாதிரி தலையை ஆட்டினார்.
தான் தனது 8 வயதில் இருந்தே chess விளையாடுவதாயும்..Bobby Fischer என்னும் உலகச் சம்பியனை ஜஸ்லாந்தில் இருதடவை சந்தித்திருப்பதாயும். அவர் 2008 ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் சொல்லிவிட்டு என்னைப் ஊடுருவிப் பார்த்த படியே தான் 2 தடவைகள் ஜஸ்லாந்து நாட்டு சம்பியனாக வந்திருக்கிறேன்... அவை எனது வாழ்வின் மிக அழகிய நாட்கள் என்றார்.
எனக்குள் மக்ஸ் இமயம் போல் வளர்ந்திருந்தார் இப்போது. இப்படி ஒரு குடிகாரனுக்குள் இப்படியும் திறமை இருந்திருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தது. நீ கெட்டிக்காரன் மக்ஸ் என்று எழுந்து அவரின் கையைக் குலுக்கினேன். நன்றி.. நான் கெட்டிக்காரன் தான் என தனக்குத தானே சொல்லிக் கொண்டார். அதை நானும் ஆமோதித்தேன்.
அப்போது தான் அவரை முழுமையாக பார்த்தேன். ஆறு அடியை விட உயரமான உடம்பு, வயது 50 க்கும் 60 க்கும் இடையில் இருக்கும், மாதக்கணக்கில் சவரம் செய்யாத முகம் முழுக்க பிறவுன் நிற தாடி பச்சைப்பசேல் என வளர்ந்திருந்தது. மிகவும் தடகாத்திரமான குடியே கதி என கிடக்கும் உடம்பு.
நான் இப்படி அவரை அளவெடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு பியர் போத்தலை எடுத்து அநாயசியமாக லைட்டரால் மூடியைத் திறந்து, வாய்க்குள் போத்திலை கவிட்டுக் கொண்டார்.
தண்ணிவிடாய்தது எனக்கு...எனினும் அடக்கிக் கொண்டேன் குசினியை எட்டிப் பார்த்தபின்...மாதக்கணக்கான பாத்திரங்களும், போத்தல்களும், சிகரட் துண்டுகளும் குசினி எங்கும் இரைந்து கிடந்தது. மனிதரைப் பார்த்தால் பாவமாகவும் இருந்தது (பயமாகவும் தான்).
கணணியை திருத்தி முடிய.. மக்ஸ் இன்டர்நெட் கனேக்சன் வேனும் அப்டேட் செய்ய என்றேன். இங்கு இன்டர் நெட் இலவசம் எடுத்துக் கொள் என்றார். இல்லை எல்லாம் பாஸ்வேட் கேக்கிறது என்றேன். தன்னிடம் பாஸ்வேட் இல்லை என்றார் வலு கூலாக.
சரி அன்டி வைரஸ் ப்ரோகிறாம் இருக்கா என்றேன்.. ஆம் என்று சொல்லி தேடத் தொடங்கினார். வீடு முழுக்க தேடி கடைசியாய் ஒரு பெட்டியை திறந்து கொட்டினார். 100க்கு மேற்பட்ட சீடிக்கள் சிதறி விழ அதிலிருந்து அன்டி வைரஸ் ப்ரோகிறாம் சீடியை 10 நிமிடங்களில் தேடித்தந்தார்.
இன்டர் நெட்டுக்கு என்ன செய்ய என்று கேட்டேன். தெரியா என்றார். சரி வா எனக்குத் தெரிந்த ஒருவரின் நெட்கபேக்கு போய் இணைப்பை எடுப்போம் என்றேன். நீ நல்லவன் என்று சொல்லியபடியே வெளிக்கிட்டார். எங்கே என்வாகனம் என்றவரிடம் அது மெயின் ரோட்டில் நிற்கிறது கொஞ்சம் நடக்க வேண்டும் என்றேன். ஆலுத்துக் கொண்டே நடந்தார்.
எனது பூர்வீகம் விசாரித்தார். சொன்னேன். தனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் என்றார். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் எனவும் ஐஸ்லாந்தில் வாழ்வதாயும், தனது மனைவி நோர்வேக்கு வர இருப்பதாகவும் தனது சரித்திரம் விளக்கிக் கொண்டே வந்தார்.
நெட்கபேயில் இவரைக் கண்ட நண்பர் ஒருவர்
என்ன... ஒரு வெறிக்குட்டி போல என்றார்....எனக்கு எரிச்சல் வர
அவர் ஐஸ்லாந்து நாட்டில் 2 தரம் chess சம்பியனானவர் என்றதும்... பார்த்தா இப்படி தெரியேல்லேயே.. உமக்கு ஏதோ கதைவிட்டிருக்கிறான் நீரும் நம்பீட்டீர் என்றார்.
எனது மனதில் ஏதோ அப்படியான சந்தேகம் வரவில்லை. ஏன் அவர் எனக்கு பொய் சொல்ல வேனும் என்ற கேள்வியே எழுந்தது.
வெளியே போய் வாய் நிறைய சோக்லேட்டுடன் வந்தார் மக்ஸ்.
எனது வேலை முடிந்து விட்டது. இந்தா உன் கணணி என்றேன்.
என்னைக் வீட்டில் விட்டுவிடு என்றார்.
சரி வாருங்கள் என்று அவரின் வீட்டருகில் வந்தவுடன். கைகுலுக்கி ,பேசிய பணத்தையும் மேலதிகமாக சில குறோனர்களும் தந்து மீண்டும் சந்திப்போம் என்றார்.
முன்பிருந்த பயம், சந்தேகம் இன்றி கட்டாயம் சந்திப்போம் என்றேன்.
வாகனத்தில் இருந்து இறங்கி கை காட்டியபடியே இருட்டினுள் கரைந்து போனார் நண்பர் மக்ஸ்
கதை ஓட்டம் சிற்ப்பாக இருக்கிறது..!
ReplyDeleteஎங்கும் குழம்பவில்லை..என்னையும்..:-)
ரொம்ப சுவாரஸ்யமான கதை
ReplyDeleteசில நேரங்களில் இப்படியான கஷ்டமர்கள் கஷ்டம் தந்து மனசுக்கு இஷ்டமானவர்கள் ஆவதும் உண்டு !
உண்மை தான் ஆயில்யன். வருகைக்கு நன்றி
ReplyDelete