இரத்தத்தின் அர்த்தம்

நேற்று மாலை ஒரு கடையின் கீழ்மாடியில் கணணி திருத்திக்கொண்டிருந்தேன். அது நிலத்தின் கீழ் அமைந்திருக்கும் பகுதி. மேலேயுள்ள கடை ஒரு internet cafe. கல்லாவில் ஒரு அழகிய பாக்கிஸ்தான் நாட்டுப் பைங்கிளி குந்தியிருந்தாள்

நிலத்தின் கீழ் அழைந்துள்ள பகுதியாதலால் எப்போதும் மிகவும் அமைதியாகவே இருக்கும். திடீர் என்று மேல் தளத்தில் ஏதோ பெரியதொரு பொருள் விழுந்தது போன்றதொரு பெருஞ்சத்தம் கேட்டது.  ஏதும் பெரியதொரு பொருள் விழுந்திருக்கலாம் என்ற அசிரத்தையாய் இருந்தேன்.

திடீர் என கடையின் கல்லாவில் அமர்ந்திருந்த பெண் பெருத்த குரலில் என்னை அழைப்பது கேட்டு மேலே ஓடினேன். அங்கே பார், அங்கே பார் என்று அவர் கையைக் காட்டிய திசையில் ஒரு மனிதரின் கால்கள் நிலத்தில் தெரிந்தன. அருகே சென்ற போது அவர் மயக்கத்திலிருந்தார். 

கணப்பொழுதில் நடந்ததை ஊகிக்க முடிந்தது. வழமையான கதிரைகளை விட உயரமாக கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே கணணியை இயக்கிக் கொண்டிருந்தவருக்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்திருக்கிறார். நிலம் பளிங்குக் கற்களினால் ஆனது. எனவே  பலமாய் அடிபட்டு கண் இமையருகே வெடித்து இரத்தம் வெள்ளமாய் ஓடிக் கொண்டிருந்தது. மனிதர் குப்பற விழுந்திருந்தார்.

விரைவில் 113 இலக்கத்தக்கு அழைத்த விபரம் சொல்லப் பணித்தேன், கல்லாவில் உட்கார்ந்திருந்த பெண்ணை. கடையில் இருந்த ஒருவரின் உதவியுடன் அவரை திருப்பிய போது இரத்தோட்டம் அதிகரிக்க  அருகில் இருந்த உடையினால் காயத்தை அமத்தியவாறே அவரின் மூச்சை கவனித்தோம். மூக்கால் மூச்சு வரவில்லை.  அந் நேரம் 113 தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலவரத்தை அறிவித்த போது, எம்மை அவரின் நெஞ்சில் கையை வைத்து அமத்தச் சொன்னார்கள். அருகில் இருந்தவர் நெஞ்சை அமத்திக் கொண்டிருந்த போது  அவரின்  கழுத்தின் பின்புறம் கையை வைத்து தலையை நிமிர்த்தினேன்.  சளியும், இரத்தமும், திரவப்பொருட்களும் வாய்க்குள் தேங்கியிருந்தது. . தலையை சரித்ததும் அவை வளிந்தோட மீண்டும் கழுத்தின் பின்புறம் கையை வைத்து தலையை நிமித்தினேன். இப்போ மூச்சு எடுப்பதற்கு முயற்சித்தார். இரத்தமும், திரவங்களும்  வாயிலிருந்த தெறித்துக் கொண்டிருக்க ஒரு முறை இருமி மூச்சை ஆழமாக இழுத்து விட்டார்.

113 தொலைபேசியில் நேரடியாக நாம் என்ன நடக்கிறது என அறிவித்துக்கொண்டிருக்க அவர்கள் எம்மை வழிநடத்திக் கொண்டிருந்தனர். உடையினால் அமத்தப்பட்டிருந்த காயத்தில் இருந்து இரத்தம் வழிவது நின்றிருந்தது. மனிதரின் ‌ கண்ணளைச் சுற்றி நீலம் பாய்திருக்க மனிதர் மயக்கம் கலைந்தார். அப்போது தான்  அவரின் காதில் இருந்த ஒலிபெருக்கி   சாதனம்  கண்ணில் பட பலத்த சத்தமாய் ” ஆறுதலாய் படுத்திருங்கள்” வைத்தியர் வந்து கொண்டிருக்கிறார் என்றேன். ஏனோ திமிறி திமிறி  எழும்ப முயற்சிக்க அவரை பலவந்தமாக படுக்கவைத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சாதாரணமாய் மூச்சுவிட்டபடியே அமைதியாகினார்.

வெளியே போய் அம்பியூலன்ஸ் வருகிறதா எனப் பார்த்தேன். கடைக்கு முன்னால் இருந்த வாகனங்களை அப்பறப்படுத்தக் கேட்டேன். அப்பறப்படுத்தினார்கள். அம்பியூலன்ஸ் 6 - 7 நிமிடத்தில் வந்தது. எமக்கு அவ்வளவு நேரமும் யுகமாய்க் கழிந்தது.

அவர்கள் அம் மனிதரை அழைத்துப்போயினர். இரத்தம் எல்லாம் துடைத்து சுத்தப்படுத்தி,  எனது கைகளை தொற்றுநீக்கியால் சுத்தப்படுத்திக்கொண்டு அமர்ந்த போது மனம் மட்டும் ஆறாமல் ஓடத்தொடங்கியிருந்தது.

இது ஒரு சிறு சம்பவம்.

எனக்கு உதவிக்கு 113 தொலைபேசியில் இருந்து  10 செக்கனுக்குள் உதவி கிடைத்தது. எதிர்க்கரையில் இருந்து ஒரு மருத்துவர் என்னை வழி நடாத்தினார். அம்பியூலன்ஸ் வண்டி 6 -7 நிமிடத்தில் வந்தது. அதிலும் வைத்தியர் இருந்தார்.

ஆனால், யுத்தத்தின் இறுதி நாட்களை எண்ணிப் பார்த்தேன். எப்படி அவ்வளவு கொடுமையான நாட்களை மக்கள் கடந்து வந்தார்கள். மயங்கி விழுந்த ஒருவருக்கே நான் இந்தப் பாடு பட்டேன். நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது. ஏதும் நடக்கக் கூடாதது நடந்து விடுமோ என்று பயந்தேன்.

எண்ணிக்கையற்ற மரணங்களின் மத்தியிலும், ஆறாய் ஓடும் இரத்தத்திலும், அவயங்களை இழந்தும், மழையாய் பெய்த எறிகணைகளின் மத்தியில் எப்படி இவர்களால் வாழ முடிந்தது? அவர்களால் இப்போதும் நிம்மதியாக இருக்கமுடியுமா?

இன்றைய இரத்தத்துக்‌கே எனக்கு தலை சுற்றியது.  நான் போரின் மத்தியில் இருந்திருந்தால் என்னால் இப்படி இயங்கியிருக்க முடியுமா? இயங்கியிருந்தாலும் அந்தக் கொடிய காட்சிகளை மனம் தான் மறந்திருக்குமா?  ஒரு பைத்தியமாய் திரிந்திருப்பேன்.

2009 இல் இங்கிலாந்துக்கு சென்றிருந்த போது வெளிநாட்டு உதவி நிறுவனமொன்றில் இருந்த, வைத்தியப்பிரிவில் தொழில்புரிந்த ஒருவரை நண்பரின் நண்பராகச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் 1000த்துக்கும் அதிக படங்கள் இருப்பதாகச் சொன்னார். அத்தனையும் பேர் தந்த மனித அழிவுகள். காயங்களைக் கண்டு மனம் வரண்டுவிட்டது என்னும் தொனியில் பேசினார் அவர். அவர் கூறிய நம்ப மடியாத செய்திகளும் உண்மையானவை என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

அதேபோல் இன்னொரு நண்பர் வவுனியா சென்றிருந்த போது (2009 நடுப்பகுதியில்) வைத்தியசாலைக்கு செல்ல விரும்பி அதனைத் தெரிவித்த போது,  அங்கு போகாதே உன்னால் தாங்கமுடியாது என்று சொல்லி மருத்துவர்கள் தடுத்ததாக அறிந்தேன்.


சாலையில் கடந்துபோகும் வானங்களை பிரஞ்ஞையில் கொள்ளாததைப் போல் நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும் ஓடிவிட்டன. பலரின் காயங்கள் ஆறியிருக்கலாம் ஆனால் அவர்களின் காயத்தில் உள்ள காயங்கள் ஆறுமா?.

அது பற்றி நமக்கென்ன கவலை,  நாங்கள்  தானே கிழமைக்கு பல தடவைகள்  வார்த்தை ஜாலத்துடன்  விஸ்கியும், கோழிக்காலும் குழைத்துண்டபடி பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறோமே.

சமுக பிரஞ்ஞையும் பொறுப்புமற்ற மனிதர்களாய் மாறிவிட்டேமா?

இன்று ஒருவரின் சிறு காயம் இத்தனையையும் சிந்திக்த்தூண்டினாலும், நாளை, மீண்டும் இவை மறந்து‌போகும். வழமை போல.

நானும் மனிதன்!  ஹய்யோ .. ஹய்யோ!


இன்றைய நாளும் நல்லதே!


.

4 comments:

  1. மனதில் உள்ள காயம் ஆறவே ஆறாது இறக்கும் வரை பலர் மனநிலைத்தாக்க்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. இரத்தத்துக்குத்தான் எவ்வளவு அர்த்தங்கள்.'இரத்தத்துக்கு இரத்தம்' என்னும் போது அது பழி வாங்கலின் குறியீடு.'இரத்தத்தின் இரத்தமே' என்னும் போது பாச மிகு விளிப்பு.'இரத்தக் கண்ணீர் ' என்று கூட ஒன்று உண்டு.
    சஞ்சயன் ,என்னுடைய 'அரசனின் வருகை' சிறுகதை 'ரத்த ஆற்றங் கரையில் அந்த நகரம் இருந்தது' என்ற வாக்கியத்துடன்தான் ஆரம்பிக்கும்.
    உங்கள் இன்றைய சூழலில் ரத்தம் என்பது அதிர்ச்சி தரும் ஒன்று.ஆனால் எங்களைப் போன்ற பலர் ரத்தத்துக்குப் பழக்கப் பட்டு மரத்துப் போனவர்கள்.உங்கள் பதிவு பல பழைய நினைவுகளைக் கிளறி விட்டன.வாழ்த்துகள்.
    அதெல்லாம் சரி.
    அதென்ன 'பாகிஸ்தான் நாட்டுப் பைங் கிளி ?'[ பாவன்னாவுக்கு பையன்னாவா?] அவள் குர்திஸ்தானை சேர்ந்தவளாக இருந்தால் 'குட்டிக் குரங்கு' போல் தோன்றியிருப்பாளோ?'அப்படியெல்லாம் ஆண் பார்வை பார்க்கப் படாது.'இந்த வம்புகளால்தானே ஜான்சிராணிகள் உங்களை ரவுண்டு கட்டி அடிக்க வருகிறார்கள். 3 நாட்கள் கூடக் கழியவில்லை.அதற்குள் உங்களுக்குக் குளிர் விட்டுப் போய் விட்டதே?

    ReplyDelete
  3. பைங்கிளி பத்திரிக்கை என்றால் மலையாள மொழியில் மஞ்சை பத்திரிக்கை என அர்த்தம் கொள்ளபடுகின்றது. அப்பெண்ணை பைங்கிளி என அழைக்க காரணம் என்னவாக இருக்கும்? பாக்கிஸ்தான் பெண் என்பதால் கறுப்பு பர்தா அணிந்திருப்பாரே. இருப்பினும் விசரன் அண்ணாவின் மனித நேயம் கொண்ட சேவைக்கு மனதார வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  4. GREAT MESSAGE...!!! WRITE MORE..!!! READ THIS AT ILKKIYAPOONKAA ON 13-3-11 IN OSLO! KL 16.00!

    ReplyDelete

பின்னூட்டங்கள்