நியூட்டனின் ”(தலை)விதியும்” திருவள்ளுவனும். சந்தேகங்கள்...

சில நாட்களாகவே ஒருவரின் செயலால் மனம் தேவைக்கு அதிகமாகவே எரிச்சலில் இருக்கிறது. சரி.. அது பற்றி திருக்குறள் என்ன சொல்கிறது என்று இணையத்துக்குள் புகுந்து தேடத் தொடங்கினேன். நான் தேடியதற்கு பதில் இருந்தது இப்படி:

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656)


அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார்.

பொருத்தமாகத் தான் எழுதியிருந்தார்  திருவள்ளுவர். 

அதை வாசித்த பின்,  வேறு சில குறள்களையும்  அதற்கான  உரைகளையும்
கடந்து போய்க்கொண்டிருக்கும் போது  இந்தக் குறளும், உரையும் கண்ணில் பட்டது:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் (குறள் 427)

உரை:ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

இதை வாசித்தவுடன் மனதுக்குள் ஒரு சிறு குழப்பம் வந்தது. அதைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்கள் எனது குழப்பத்தை தீர்க்கலாம்.

உங்களுக்கு நியூட்டனின் 3ம் விதி நினைவிருக்கிறதா? இல்லை என்றால் அது இப்படிக் கூறுகிறது ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை இருக்கும்.

எனக்கேதோ வள்ளுவரின் குறளுக்கும் நியூட்டனின் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவே தெரிகிறது. வள்ளுவர் விஞ்ஞான ரீதியாக தர்க்கிக்காவிட்டாலும் மெய்ஞான ரீதியாக நியூட்டனின் விதியை அலசுகிறார் என்கிறது எனது மனம். ஒன்றை அலசுவதாயின் அனுபற்றி பலத்த அறிவு வேண்டியிருக்கிறது. இருவரும் ஒரே கருத்தை இருவேறு விதமாகப் பார்க்கிறார்கள். ஒன்று விஞ்ஞான ரீதியாக, மற்றொன்று மெய்ஞான ரீதியாக.

நியூட்டன் 1600ம் காலத்து மனிதர். திருவள்ளுவரோ கி.மு. முதல் நூற்றாண்டு மனிதர். ஏறக்குறைய 1700 வருட வேறுபாடு இருக்கிறது இவர்களுக்கிடையில். இவர்கள் இருவரைத் தவிர வேறு எவரும் இவைபற்றி பேசியதாக என் சிற்றறிவுக்கு தென்படவில்லை. அப்படி ஏதும் இருந்தாலும் அவை கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்குமா என்பதும் சந்தேகமே.

எனவே விசை யற்றிய அறிவு திருவள்ளுவனிடம் இருந்தே நியூட்டனுக்கு வந்திருக்கலாம் என்று நாம் தர்க்கிக்கலாமா?

இங்கு, விசையை மெய்ஞானத்திலும், விஞ்ஞானத்திலும் நாம் காண்கிறோம். அப்படியாயின் மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்குமான வேறுபாடு என்ன?

குசும்புக்காக இக் கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதை கற்பூரமடித்து  சத்தியம் செய்கிறேன். இனிமேல் தான் மெய்ஞர்னத்தைப் பற்றி நான் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக எனக்கு விஞ்ஞானம் தெரிந்ததாக நீங்கள் நினைக்கவும் கூடாது.

தேடலே வாழ்வாகிறது....

பதிலை எதிர் பார்க்கிறேன்.


.

1 comment:

  1. //எனவே விசை யற்றிய அறிவு திருவள்ளுவனிடம் இருந்தே நியூட்டனுக்கு வந்திருக்கலாம் என்று நாம் தர்க்கிக்கலாமா?//

    நியூட்ட‌ன் மூன்றாம் விதியை த‌ந்த‌து 1687.திருக்குற‌ள் ஆங்கில‌த்தில் மொழி பெய‌ர்த்த‌து போப் 1886 ஆண்டு. நியூட்ட‌ன் திருவ‌ள்ளுவ‌ரைப்ப‌ற்றி அறிந்திருக்க‌ வாய்ப்பில்லை.

    //தேடலே வாழ்வாகிறது....//

    என்னைப் பொருத்த‌வ‌ரை தேட‌லே வாழ்க்கையை இனிப்பாக்குகிற‌து,..

    ReplyDelete

பின்னூட்டங்கள்