மனச்சாட்சியுடன் நட்பாயிருங்கள்


கடந்து போன சில கனதியான நாட்களின் மீண்டும் உயிர்திருக்கிறேன் இன்று. நேற்றைய இரவின் ஞானம் என்னை எனக்கு மீட்டத் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

என்னை மீடடுக்கொண்ட பரவசத்தில் இருந்து மீள முதலே அதை பகிர்ந்து கொள்வதற்காய் இந்தப் பதிவை எழுதத்தொடங்கியிருக்கிறேன்.  இது ஒருவித பரவசமான பதிவு.

சில நாட்களுக்கு முன் நண்பர்கள் சிலர் என்னை, எனது குறிப்பிட்டதோர் செயலுக்காய் மிகக் கடுமையாய் விமர்சித்தார்கள்.

மனம் கனத்தும், சிறுத்தும் போனது. வெட்கித் தலைகுனிந்திருந்தேன், மனச்சாட்சி விரோதியாகிப்போனது, அமைதியற்ற மனம் தறிகெட்டுப் பாய, தூக்கமற்று என்னை முழுவதுமாய் இழந்திருந்தேன்.

என் செயலால் பாதிக்கப்பட்டவர்களின்  மனம் பெரும் சஞ்சலத்துக்கும் வேதனைக்கும் உள்ளானது.  மனங்கள் காயப்பட்டும், உறவுகளில் விரிசலும் ஏற்பட்டன. நட்புகளை இழந்து அனாதரவானது போலணுர்ந்தேன். பாதுகாப்புணர்வினை இழந்துபோனேன்.

கொட்டப்பட்ட வார்த்தைகளை  எப்படி அள்ளியெடுக்கமுடியாதோ அப்படிப்பட்ட நி‌லை அது.  மற்றவர்கள் பாதிக்கப்படவார்கள் என்று நினைத்தோ, மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்துடனோ செய்யப்பட்ட செயல் அல்ல. அன்றைய நிலையில் அது தவறாய்ப் புரியவில்லை, ஆனாலும் இன்று அது தவறு என்று புரிந்திருக்கிறது.


நான் குற்றமற்றவன் என்று எப்போதும் கூறியதில்லை. தவறுகள் செய்யாது இருக்க நான் ஒன்றும் தெய்வப்பிறவியும் அல்ல, உணர்ச்சிகள் இன்றி வாழ நான் ஜடமுமல்ல. நானும் நன்மை தீமைகள், ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண மனிதனே. நன்மையும் தீமையும் இங்கும் உண்டு எங்கும் உண்டு.

மற்றவருக்கு  என்னாலும், எனக்கு மற்றவர்களாலும் துன்பம் ஏற்படாமல் வாழவே விரும்புகிறேன். என் மனட்சாட்சியுடன் பூசலின்றி வாழ்தல் முக்கியம் எனக்கு. தற்போது அது  சாத்தியமாயிருக்கிறது.

என் தவறுகளை தவறு என்று ஏற்றுக்கொள்ளவும், தயக்கமின்றி மன்னிப்புக்கோரவும், அவற்றில் இருந்து பலதைக் கற்றுக்கொள்ளவும் என்னால் முடிகிறது.

கடந்து போன நாட்கள், கடந்து போனவையே. கடந்த நாட்களில் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியாது என்பது புரியும் அதே வேளை அத் தவறுகளில் இருந்து வாழ்வினைக் கற்றல் இன்னும் சாத்தியமாயிருக்கிறது, எனக்கு.

கற்றலால் உயிர்க்கலாம் என்பதையும் அனுபவித்துணர்ந்திருக்கிறேன்.

என் தவறுகளை தவறு என்று, அவற்றை ஏற்று, தவறுகளை மன்னிக்கமுடியுமா என்று மனதாரக் கேட்டு  நிமிரும் போது, மனமானது சுமந்துகொண்டிருந்த கனதிகளை இழந்து, என்னுள் புயலுக்கப் பின்னான தென்றலைப்போன்றதோர் பெரும் அமைதியையும், சுகத்தையும் தந்து போகிறது.  இழந்து போன நிம்மதியும், சுய நம்பிக்கையும், சுயமும் முன்பைவிட பல மடங்கு அதிகமாக எனக்குள் ஊறிக்கொண்டிருப்பதை உணருகிறேன்.

சில நாட்களின் பின், மனச்சாட்சி என்னுடன் மீண்டும் நட்பாய் தோளில் கைபோட்டு தோழமையுடன் பேசுறது.  முள்ளாய் குத்திய படுக்கையும், தொலைந்து போன சுகமான தூக்கமும், நிம்மதியற்று தறிகெட்டு ஓடிய சிந்தனைக் குதிரையும், கூனிக்குறுதியிருந்த மனமும் தந்த வேதனைகளைக் கடந்து, மனமாது, சீழ் வடிந்த ரணத்தின் ஆறுதலையும், சுகத்தையும் உணர்ந்திருக்கிறது.

முன்பைவிட என்னில் எனக்கு பலமான பாதுகாப்பான உணர்வும், நம்பிக்கையும ஏற்பட்டுள்ளதுடன் அன்பான, தவறுகளை மறந்து மன்னிக்கும் மனிதர்களிலும், நண்பர்களிலும் பெரும் நம்பிக்கையும் எழுந்திருக்கிறது. மனித உறவுகள் பலப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நண்பர்களை பெற்ற நான் அதிஸ்டசாலியே.

தவறுகள் தவறாயிருப்பினும், தவறுகளினால் கிடைக்கும், ஞானத்தின் சுகத்னை அனுபவித்துணரும் போது, என்னை நான் பல காலங்களின் பின் மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறேன். மனம் காற்றில் சருகாயிருக்கிறது.

நண்பர்களே! மனச்சாட்சியுடன் நட்பாயிருங்கள். அதுவே யாதுமாகிறது.


பல நாட்களின் பின் இன்றைய நாள் மிக மிக அழகாயிருக்கிறது.



3 comments:

  1. உண்மைதான் மனட்சாட்சிதான் உற்ற நண்பன்! அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  2. மாசிலாSeptember 21, 2012 10:12 am

    மிக அருமையாக உணர்ந்து எழுதி உள்ளீர்கள். உள் மன ஆராய்ச்சியில் மூழ்கி நாம் நம் நல்லவை கெட்டவைகளை அலசி பார்ப்பது அவசியம். நாம் செய்தது தவறு எனும்போது, நமது ஆணவம், திமிர், கௌரவம் போன்றவகளை தூர எறிந்து மன்னிப்பு கேட்பதால் நாமும் நம்மை சுற்றியுள்ள சமுதாயமும் உயர வளரும்.

    ப்கிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டங்கள்