ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி

அன்று காலை ஹோட்டலைவிட்டு காலை 9 மணிபோல் வெளியே வந்ததும் இன:றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னுதாரணமாக தாங்கமுடியாத வெம்மையும், பழுக்கமும் முகத்திலடித்தது.

இன்று ஒரு முன்னாள் போராளியினை சந்திக்கச் செல்வதாக எனது வழிகாட்டி கூறியிருந்தார். நாம் நாளை நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும், செல்லும்  வழியில் கடைகள் பெரிதாக இருக்கமாட்டாது எனவே நீங்கள் உணவு, நீர் போன்றவற்றை எடுத்துவாருங்கள் நேற்று விடைபெற்ற போது அறிவித்திருந்தார்.

நானும் அதற்கேற்றவாறு தயாராகவே நின்றிருந்தேன். நண்பர் வந்ததும் மோட்டார்சைக்கிலில் ஏறிக்கொண்டேன்.  வாவிவீதியினூடாக நாம் சென்றுகொண்டிருந்தோம். வாவிவிதி கடந்ததும் வெள்ளைப்பாலத்தைக் கடந்து மட்டக்களப்பு பஸ்நிலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது மோட்டார் சைக்கில்..

நீல நிறத்தில் புதிய பஸ்நிலையம் அழகாக இருந்து. நண்பர் மோட்டார்சைக்கிலை நிறுத்திக்கொண்டார். சற்று நேரத்தில்  புழுதியை இறைத்தபடியே ஒரு பஸ் வந்தது. பலரும் அதிலிருந்து இறங்கினர். சில இளம் பெண்கள் மட்டும் ஆட்டோக்களில் ஏறிக்கொள்ள அந்த ஆட்டோக்கள் மார்க்கட் பகுதிநோக்கி விரைந்தன.

நண்பர் அர்த்தமுள்ள ஒரு பார்வையை என்மீது வீசினார். தலையை ஆட்டினேன் நான்.  நேற்று மாலை எமக்கு கிடைத்த தகவலின்படி படுவாங்கரைக் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும், முன்னாள் போராளிகளும் மட்டக்களப்பில் பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாகள் என்று கூறப்பட்டது. அச்செய்தியில் குறிப்பிட்ட  இந்த பஸ் பற்றியும் கூறப்பட்டது. அதை உறுதிசெய்யவே இங்கு வந்திருந்தோம்.

மார்க்கட் நோக்கிச் சென்ற ஆட்டோக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்வதால் அவ்விடத்தில் நாம் ஒரு நண்பரை நிறுத்தியிருந்தோம். தொலைபேசியில் வந்த நண்பர் ஆட்டோக்களின் வருகையை உறுதிப்படுத்தினார்.  எனவே நேற்றுக் கிடைத்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்.

நான் மீண்டும் மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்துகொண்டேன்.

விமானநிலைய விதியால் சென்று புதூரினூடாக மோட்டார்சைக்கில் சென்றுகொண்டிருந்தது. எமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ட்ராக்டர் இன் புழுதி எங்கள் முகத்தில் படிந்துகொண்டிருந்தது.

ஏறத்தாள இரண்டு மணிநேர மோட்டார் சைக்கில் ஓட்டத்தின் பின்பு ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்தில் நின்றிருந்தோம். எனது நண்பர் குறிப்பிட்டஒருவரின் பெயரைக் கூறி விசாரித்துக்கொண்டிருந்தார்.

சிலர் முகத்தைச் சுளித்தனர். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர். ”அவளுக்கு என்னத்துக்கு உதவி செய்யிறீங்க  ஊருக்குள வேற ஆட்கள் இல்லையா” என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன. எம்மீது விழுந்த சிலரின் பார்வையில் சந்தேகம் குடியிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.

இறுதியில் நாம் தேடிவந்த வீட்டினை அடையாளம்காட்டினான் ஒரு சிறுவன். உள்ளே இருந்து  ஒரு வயதான பெண் வெளியே வந்தார். நண்பர் அவருடன்  எம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்.” மனே ஓடிப்போய் முன் வீட்டுல ரெண்டு கதிர வாங்கிவாடா”  என்று கட்டளையிடப்பட்டது, அவளுக்கு. கிழிந்த ஊத்தையான துணியினை உடுத்தியிருந்த ஒரு பெண்குழந்தை படலையைத்தாண்டி ஓடினாள்.

மேலாடைமட்டும் அணிந்திருந்த ஒரு சிறுமி அப்பெண்ணருகிலேயே நின்றிருந்தாள். அப்போது  செயற்கைக்கால்களை பொருத்திய ஒரு பெண் வீட்டுக்குள் நுளைந்துகொண்டிருந்தார். அவரது மற்றைய கால் முழங்காலுக்கு கீழே சிதைந்திருந்தது. காயங்களில் இருந்து இரத்தமும் நீரும் வழிய கொசுக்கள்  அவர் காலை மொய்த்துக்கொண்டிருந்தன.

மெதுவாய் உள்ளே நுளைந்த அவரைப் பார்த்தேன் 30 அல்லது 33 வயது கடந்திருக்கமுடியாது என்று கூறியது உணர்ச்சிகளற்ற அவர் முகம். கடின வாழ்வின் இறுக்கம் அவரது முகத்தில் தெரிந்தது.

அந்நேரம் பார்த்து கதிரைகள் இரண்டினை இரு சிறுவர்கள் தலையில் சுமந்து வந்தனர்.  எம்மை உட்காரச்சொன்னார்கள். உட்கார்ந்து கொண்டோம். பெரும் அமைதி அங்கு பேசிக்கொண்டிருந்தது. நான் அங்கிருந்த பெண்குழந்தையை அருகில் அழைத்தேன். அம்மாவின் பின்னால் மறைந்துகொண்டாள் அவள்.

செம்பில் எமக்கு நீர் வழங்கப்பட்டது. அண்ணாந்து குடிக்க சற்றே சிரமப்பட்டேன். அதைக் கண்ட குழந்தைகள் சிரித்தார்கள். சேர்ந்து சிரித்தேன். அதுவே எமக்கிடையில் ஒரு வித நட்பை ஏற்படுத்தியது.

அதன் பின் அங்கிருந்த நேரமனைத்தும் என் வாழ்வினில் மறக்கமுடியாத நேரங்களாகப்போகின்றன என்பதை அறியாமல் அங்கு நின்றிருந்தேன். அப் பெண் பேசத் தொடங்கினார்.

குழந்தைப் போராளியாய் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு, பயிட்சி கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்பு கண்ணிவெடி அகற்றும் போது அது வெடித்ததினால் ஒரு காலையும் மறு காலில் முழங்காலுக்கு கீழேயும் காயப்பட்டிருக்கிறார். சிறந்த வைத்திய வசதி இல்லாததனால் பாதிக்கப்பட்ட ஒரு காலில் இன்றும் புண்கள்  வருகின்றன.காயப்பட்டு ஏறத்தாள 12 ஆண்டுகளாகின்றன.

திருமணம் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கின் பிரிவின் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கணவன் காணாமல் போய்விட்டார். இரண்டு  பெண் குழந்தைகள் இருக்கின்றன. தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். தந்தைக்கு 70 வயதாகிறது. சிங்களப் பகுதிகளில் வெள்ளாமை (வயல்) வெட்டும் தொழில் புரிகிறார்.

முதலாவது குழந்தைக்கு 9 வயதாகிறது. அவளிடம் அவளின் பெயரைக் கேட்டேன். சிரித்தாள். அப்போது அவளின் தாய் அவளால் ‌பேச முடியாது என்றார். அன்றைய அதிர்ச்சிகளின் ஆரம்பம் அது. அக் குழந்தை இன்று வரை பாடசாலைக்குச் செல்லவில்லை. செவிப்புலனற்றவர்களின் பாடசாலைக்கு  வாரத்தில் ஒரு தடவை அவளை அழைத்துச் சென்று வருவதற்கு அவர்களுக்கு 40 இலங்கை ருபாய்கள் தேவைப்படுகிறது. அத் தொகை அவர்களிடம் இல்லையாகையால் இன்றுவரை அக் குழந்தை பாடசாலைக்குச் செல்லவில்லை. அவளுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் அருகில் உள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள்.

அவர்களின் வீட்டில் ஒரு முலையில் ஒரு மீன் வலை இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைக் கண்ட அவர் அது தனது தந்தை வீடு திரும்பும் நாட்களில் மீன்பிடிக்கும் வலை என்றார்.  அவரின் தாயார் மகளின் சோகமான வாழ்க்கையின் சில பகுதிகளையும் தாம் அனுபவித்த வேதனைகளையும் பகிர்ந்து கொண்ட போது கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது, அவருக்கு.

கணவர்  கைது செய்து காணாமல் போன பின் வாழ்க்கை அதிகமாய் இவரை ஆட்ப்படைத்திருக்கிறது. ஒரு அரச பிரபலத்தை சந்திதது உதவி கேட்டபோது சரி, பார்ப்போம் என்றாராம்.

வறுமை தறிகெட்டு ஓடியகாலங்களில் அங்கவீனமான உடலுடன் பால்வினைத்தொழில் செய்திருக்கிறார். அதன் காரணமாக கருவுற்று ஒரு குழந்தைக்கு தாயாகியும் இருக்கிறார். தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் அக் குழந்தையை  நல்ளுள்ளம் படைத்த ஒரு குடும்பத்திடம்  தத்துக்கொடுத்திருக்கிறார்.

தற்போது ஊர் மக்கள் இது பற்றி அறிவதால் இவர் குடும்பம் தீண்டத்தகாத குடும்பமாகியிருக்கிறது. ஓதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார். கூலித்தொழிலும் கிடைப்பதில்லை. தாயார் அவவப்போது மீன்பிடித்து குடும்பத்தை காப்பாற்றிவருகிறார்.

இவரின் கதைகளை பேசிக்கொண்டிருந்த போது அவரின் குழந்தைகள் நட்பாகிப்போகின என்னுடன். ‌நாம் அங்கிருந்து புறப்பட்ட போது ஒரு சிறுமி எனது கையைப்பற்றியிருந்தாள், எனது கையை விடுவித்துக்கொண்ட போது என் கண்களைச் சந்தித்த அவளின் பார்வையை நேரே சந்திக்கமுடியாததால் தலையைக் குனிந்து கொண்டேன்.

மோட்டார்சைக்கில் புறப்பட்டபோது  காயும் வெய்யிலையும், புழுதியையும் பொருட்படுத்தாது எம்மெதிரே ஓடினார்கள் அக் குழந்தைகள். சற்று நேரத்தில் நாம் அவர்களைக் கடந்த போது அவர்களை நிமிர்ந்து பார்க்க திராணியற்றதனால் helmet இனுள‌்  முகத‌்தை மறைத்துக் கொண்டேன்.

மீண்டும் மோட்டார்சைக்கில் படுவான்கரைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


மேலே உள்ள படம் குறிப்பிட்ட குடும்பத்தவர்களின் கால்களையே காட்டுகிறது.

5 comments:

  1. தலைநிமிர்ந்து வாழ முயன்ற எம் இனத்தின் இன்றைய நிலை எண்ணி மனது கனக்கின்றது. எம் நிம்மதியான வாழ்விற்காய் போராடியவர் நிலை இன்று....! வெட்கித் தலை குனிகின்றேன்.

    ReplyDelete
  2. கொடுமையான உணர்ச்சி சிக்கல்கள் யாரை நோவது யுத்தம் விதைத்தது எத்தனை துயரங்களை!

    ReplyDelete
  3. 'ரசித்தேன்' என்று எழுத முடியவில்லை . கனத்த மனதை இறக்க முடியவில்லை. திடீரென எனக்கு மிகப் பிடித்த பெண்ணின் தோளில் முகம் புதைத்து அழ வேண்டும் போல் உள்ளது... பிறகு எதன் மீதும் எல்லார் மீதும் கொலை வெறியாய்க் கோபம்.

    ReplyDelete
  4. படித்ததும் நெஞ்சம் அதிர்ந்தது. துக்கம் தொண்டையை அடைக்கின்றது. இத்தகையவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வழிமுறைகள்/தொண்டர் நிறுவனங்கள் எவையும் இல்லையா?

    இந்தக் கட்டுரை ஆசிரியர் ஒரு தன்னார்வலர் என நினைக்கின்றேன். ஆனால், இவ்வாறு மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் பற்றிய தகவல்கள் சேகரித்து, உரிய புனர்வாழ்வு வழங்குவது தொடர்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தனிநபர்கள் ஈடுபடுவதை விட (அம்முயற்சி போற்றத்தக்கதுதான் என்பதில் ஐயமில்லை) இது தொடர்பில் நிறுவனமயப்பட்ட செயற்திட்டமொன்று அவசியம்.

    நடைமுறையில் இப்பிரதேச மக்களுக்கு உதவிசெய்ய முன்வருவோரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுதல், தொண்டர் நிறுவனங்களின் சுயாதீனத் தொழிற்பாட்டுக்கு எதிரான இறுக்கமான/தீவிரமான கட்டுப்பாடுகள் அல்லது அனுமதி மறுப்பு என்பன இம்மக்களின் புனர்வாழ்வு தொடர்பான காத்திரமான செயற்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரும் தடைகளாய் அமைந்துள்ளன எனக் கருதுகின்றேன்.

    இப்படியான மனதைப் பிழியும் உண்மைச் சம்பவங்களைப் பார்த்துக் கலங்கிப் பெருமூச்சு விடுவதற்கு அப்பால், நாம் அனைவரும் இணைந்து இந்த விஷச் சக்கரத்தில் இருந்து இப்பெண்களை/குழந்தைகளை மீட்டெடுக்க ஆவன செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்பது குறித்தும், எப்படிச் செய்யலாம் என்பது குறித்தும் பரவலான கருத்துப் பரிமாற்றமும் விழிப்புணர்வும் இன்றைய அவசரத் தேவை.

    சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான மக்கள் நிவாரணங்களைச் சுமந்து சென்றனர். சிரச போன்ற ஊடகங்கள் இதில் முனைப்பாய் இருந்து மக்களைத் தூண்டி, வழிநடத்தின; களத்தில் நின்றன. இந்தப் பிரச்சினைகளை நாம் நமக்குள் பேசிப் பேசி அழுது பயனில்லை. சிங்கள்/ஆங்கில ஊடகங்களின் வழியே இவை பெரும்பான்மைச் சகோதரர்களைச் சென்றடைய வழிசெய்ய வேண்டும். மனிதநேயமிக்க/ யுத்தத்தை மிக வெறுத்த அனேக நல்லுள்ளங்கள் அவர்களில் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். சாதகமான கருத்துருவாக்கத்தின் மூலம் முழு இலங்கை மக்களினதும் கவனத்தை இப்பிரச்சினையை நோக்கி ஈர்க்க வேண்டும். அதன்மூலம் அவர்களின் உதவிகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்பதோடு, நாமும் பகிரங்கமான முறையில் இம்மக்களுக்குத் தங்குதடையின்றி உதவக்கூடியதாய் இருக்கும். என் சிற்றறிவுக்கு எட்டும் தீர்வுகளில் இதுவும் ஒன்று. மற்றவர்களும் இது குறித்துக் கருத்துரைக்கலாமே!

    மிக்க அன்புடன்,
    லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

    ReplyDelete
  5. துயரங்கள் நீளும் நிலை
    தொடரும் இந்த நிலை
    மாறுவது எப்போது?
    உதவ வேண்டிய
    சுற்றம் சூழல் உதவாது
    வேடிக்கை பார்ப்பது
    அழகல்ல - அந்த
    ஆண்டவனும் திரும்பிப் பாரார் - இந்த
    ஈழத் தமிழரின் நிலையை பகிர்ந்த
    தஙகளுக்கு நன்றி

    ReplyDelete

பின்னூட்டங்கள்