அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே
நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன்.
காலம் எம்மை
பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான்.
நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித
முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும்
அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும்
அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே
இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம்.
நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது
உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று என்னை தெம்பூட்டும் நண்பனை
இழந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது நிலையில்லாது என்பதை வாழ்க்கை மீண்டும்
எனக்கு கற்பித்திருக்கிறது. மரணத்தைப் போன்றதோரு ஒரு சிறந்த ஆசான் எதுவுமில்லை. அது, தன்னை பல
மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து போகிறது. என் நண்பனின் பிரிவும்
அப்படியானதே.
நான் அவனை முதன் முதலில் சந்தித்தபோது மிகவும் திடகாத்திரமான உடம்புடன்
தான் இருந்தான். காலப்போக்கில் சில பல நோய்கள் அவன் உடல்நிலையை
பலவீனமாக்கின. மருந்து மாத்திரைகளில் நாட்டமற்ற மனிதன் அவன்.
அவன் எப்போதுமே ஆழமான மௌனத்தைக் கடைப்பிடிப்பவன். என்னைப் போல்
அலட்டித்திரியும் குணம் அவனிடமில்லை. அவனுக்குள் பலதும் இருக்கும்.
பலதையும் உள்ளடக்கியவனே அவன். முக்கியமாய் புத்தகங்களை தன்னுடன் எப்போதும்
வைத்திருப்பான். இறுதியாய் அவன் வைத்திருந்த புத்தகம் புஸ்பராணியின்
”அகாலம்”. அவன் காலமும் அத்துடன் அகாலமாகியது தான் வேதனை.
ஒரு நாள் ஒரு நண்பன் தலையிடிக்கிறது என்றான். இந்தா என்று குளிசையை
நீட்டினான். வேறொரு நாள் நாம் ஆப்பிள் சாப்பிடும் போது எமக்குக் கிடைத்த
அப்பிள் பழத்தை இரண்டாக வெட்டவேண்டியேற்பட்டது. தன்னிடம் இருந்த சிறு
கத்தியை நீட்டினான். இன்னொரு நாள் ஒரு நண்பர் எழுதுவதற்காக பேனை தேடினார், அதுவும்
அவனிடமிருந்தது. குடை, நீர், கணணி இப்படி எதையும் தன்னோடு கொண்டலையும்
அற்புதமான ஜீவன் அது.
முடியாது என்று அவனிடம் இருந்து வார்த்தை
வெளிப்பட்டது இல்லை. எதையும் தன்னை
வருத்தியென்றாலும் செய்யும் குணம் நான் அவனை சந்தித்த முதல்நாளில் இருந்தே
அவனிடம் இருந்தது. அவனிடம் இருந்து நான் கற்றுக்கொள்வதற்கு
அதிகமிருக்கிறது.
ஒரு
வருடத்திற்கு முன் அவனுடம்பில் ஏற்பட்ட சில காயங்கள் அவனது உடலை பலமாய்
பாதித்தது. ஒரு காயம் ஆறுவதற்கு முன் மறுகாயம், அது ஆறுவதற்கு முன் இன்னொன்று
என்று விதி அவனுடன் விளையாடிக்கொண்டே இருந்தது. அவனின் கட்டுமஸ்தான உடலும்
காலப்போக்கில் வலுவிழந்து அவனை முன்பைப்போல் சுகதேகியாய் நடமாட முடியாது
முடக்கிப்போட்டது. இருப்பினும் என்னுடன் அலைந்து திரிந்தான்.
நானும் என்னாலானதைச் செய்து பார்த்தேன். விதி சில முடிவுகளை எடுக்கும்
போது நான் அல்ல யார் எதைச் செய்தாலும் அது விதியின் படியே செல்லும் என்று
நான் கடந்துவந்தபாதை எனக்கு அறிவித்திருக்கிறது. நண்பனின் வாழ்க்கையிலும்
அப்படியே நடந்தது.
நண்பனும் நானும் இரண்டு நாட்களுக்கு முன் ஒஸ்லோவின் வீதியொன்றில்
நடந்து கொண்டிருந்து போது எனது ஒரு பக்கத்து தோளில் கையை ஊன்றியபடியே
வந்துகொண்டிருந்தான். அவனின் சுகயீனத்தின் கனத்தை நான் எனது தோளில்
உணர்ந்தேன்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தோளில் இருந்து அவன் கை சறுக்கியதை உணர்ந்து
திரும்பிப் பார்த்தேன். மூச்சுப் பேச்சற்று வீதியில் கிடந்தான்.
அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டேன் அவனை. உடல் குளிர்ந்தது போலிருந்தது.
எம்மைக் கடந்து சென்றவர்கள் பரிதாபத்துடன் என்னைப் பார்த்தார்கள்.
அவனைத் தூக்க சிலர் உதவினர். நெஞ்சோடு அணைத்தபடியே அருகில் இருந்த கடைத் தொகுதிக்குள் அவனைக் கொணடுபோனேன் போனேன்.
பலரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். உதவிக்கு எவரும் வரவில்லை.
அருகில் இருந்த கடைக்குள் அவனைக்கிடத்தினேன்.
அக்
கடையில் அமர்ந்திருந்த அழகி நட்புடன் புன்னகைத்தாள். ஏதும் உதவி வேண்டுமா
என்றாள். ஆம் என்று தலையாட்டினேன். அருகில் உட்கார்ந்து நண்பனை
பரிசோதித்தாள். மௌனமாய் நிமிர்ந்து பின்பு உதட்டைப் பிதுக்கினாள்.
உனது தோள் பை (rucksack)
இனிபாவிக்க முடியாதளவுக்கு கிழிந்துவிட்டது. இதனால் இனி எதுவித
பிரயோசனமும் இல்லை என்றாள். அத்துடன் பயப்படாதே, அங்கே பல புதிய தோள்பைகள் (rucksack) இருக்கின்றன என்றாள்.
அவள் காட்டிய திசையில் சென்று, நான் எனது புதிய நண்பனை தேடத்தொடங்கினேன்.
எனது பழைய தோள் பை (rucksack)யின் ஆத்மா சாந்தியடையக் கடவதாக!
நீங்கள் என்னை கொல்லாமலும் இருக்கக் கடவதாக!
ஏன்டா ஏன்??? ரொம்ப காண்டாகிட்டன்!!! ஆன ரொம்ப ரொம்ப இரசித்தேன்!!!
ReplyDeleteநண்பன் உங்களுக்குத் அப்பப்ப தேவைப்படும் ரம்பத்தையும் எப்பவும் வைத்திருந்திருப்பான்... :-)
ReplyDeleteNanparkalai ippadi thedinaalum nallathuthaan polum
ReplyDelete