இன்று மாவீரர் நாள். எனது தென்னிந்திய நண்பரெருவர் தெற்கு நோர்வேயில்
இருந்து வந்திருந்தார். அவருடன் மாவீர்நாளுக்கு செல்வது என்று
முடிவாகியிருந்தது.
இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது அவரின்
குழந்தையும் அவருடன் இருந்தாள். அவளும் நானும் ஏற்கனவே ஒருவரை ஒருவர்
ஓரளவுக்கு அறிவோம். கண்டதும் மயக்கும் ஒரு புன்னகை புரிந்தாள். ”பிடி”
என்று கூறியபடியே அவளைத் துரத்திப்பிடிக்க வருவது போல ஓடினேன்.
முத்துக்கள் கொட்டியது போல் சிரித்தபடியே ஓடினாள். அவளின் அழகிய
சிரிப்பிலும், அழகிய பல்வரிசையிலும் உலகின் அழகெல்லாம் தெரிந்தது.
அவர்களின்
வாகனத்தில் மாவீரர்விழா நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது நோர்வேஜிய
மொழியிலும், அழகான தென்னிந்தியத் தமிழிலும் பேசியபடியே வந்தாள். அவளின்
குறும்பும், சிரிப்பும் என் குழந்தைகளை நினைவூட்டின.
விழாமண்டபத்தில் என்னருகில் அவளை உட்காரவைத்தேன். இல்லை அப்பாவின் மடியே
பாதுகாப்பனது என்பது போல் தந்தையின் மடியில் குந்தியிருந்து என்னுடன்
விளையாடிக்கொண்டிருந்தாள். எமது பேச்சு அவளின் நண்பர்களைப்பற்றியதானபோது
”என்னருகில் வந்தால் உனது நண்பர்களின் பெயரைச் சொல்லுவேன்” என்று கூறினேன்.
கண்கணை அகலமாக விரித்தபடியே ”உனக்கு அவர்களை தெரியுமா?” என்றாள் நோர்வேஐிய
மொழியில்.
அவனைத் தூக்கி எனது மடியில் வைத்துக்கொண்டேன். எனது
இளைய மகளின் சகல நண்பிகளையும் நான் மிக நன்றாக அறிவேன். முத்தவளின்
நண்பிகளையும் அறிவேன். எனவே அவர்களின் பெயர்களைக் கூறியபடியே, ”இதுவா உன்
நண்பியின் பெயர், இதுவா உன்
நண்பியின் பெயர்?” என்று கேட்கலானேன். அவளும் என் மடியில் இருந்தவாறே
இல்லை, இல்லை என்று சிரித்தபடியே கூறிக்கொண்டிருந்தாள். நான் பிழையாக
பெயர்களை கூறியபோது அவள் அழகாகக் கண்களால் சிரித்தாள். அவளின் சிரிப்பு
மயக்கும் அழகாய்இருந்தது. இப்படியான தெய்வீகச் சிரிப்புக்களுடனேயே, சில
வருடங்களுக்கு முன், எனது நாட்களும் இருந்தன. குழந்தைகளின் சிரிப்புக்கு
இணையான பொருள் இவ்வுலகில் எதுவுமில்லை என்று வாழ்க்கை என்க்குணர்த்திப் போன
நாட்கள் அவை.
சற்று நேரத்தில் இவள் தந்தையின் மடியிலேறி உட்கார்ந்து தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்தவாறு துங்கிப்போனாள்.
என் குழந்தைகள் என் கழுத்தைக்கட்டியபடியே தூங்கிப்போன நாட்களில் நான் என்னை மறந்து அவர்களை ரசித்திருக்கிறேன்.
என் நெஞ்சில் காற்றின் மிருதுடன் சாய்ந்திருக்கும் அவர்களின் உடல்,
கழுத்தில்படும் அவர்களின் வெம்மையான மூச்சுக்காற்கு,
எவ்வித ஆரவாரத்தையும் கவனிக்காது பாதுகாப்பாய் உறங்கும் அவர்களின் நம்பிக்கை,
குழந்தைகளின் கையினுள் எமது விரலொன்றை வைத்தால் அதை தூக்கத்திலும் பொத்திப்பிடிக்கும் அதிசயம்,
அவ்விரலகளின் வெம்மை,
தூக்கத்தில் ”அப்பா” என்றழைக்கும் போது பெருமையில நிரம்பும் என் மனது,
அவ்வப்போது அவர்களின் தலையைக் கோதிவிடும் என் கைகள் என்று என் குழந்தைகள், என்னுடன் தூங்கிப்போன கணங்கள் ஒரு நெடுங்கவிதைபோல் எனக்குள்
இருக்கிறது. அக் கவிதையை மீண்டும் வாசிப்பது போலிருந்தது, அவள் என் பக்கமாக
பார்ததபடியே தனது தந்தையின் மார்பில் தூங்கிய பேரழகு.
என்னையறியாமலே அவள் தலையைக் கோதிவிட்டேன். அவளின் கண்களுக்குள் வழிந்துகொண்டிருந்த தலைமுடியை ஒதுக்கினேன்.
தந்தையின் கழுத்தை கட்டியிருந்தன அவள் கைகள்.
அவள் நித்திரை குழம்பிவிடக் கூடாது என்று மனம் பதபதைத்துக்கொண்டிருந்து.
சற்று பொறாமையாயும் இருந்தது அவளின் தந்தையில், உலகின் பேரழகை கையில் வைத்திருக்கிறாரே என்று.
அவளைப் பார்ப்பதும், முகத்தை வருடுவதும், தலைமுடியை கோதிவிடுவதுமாய் இருந்தேன் சில நிமிடங்கள்.
இப்போது அவள் தந்தையின் கழுத்தை கட்டியிருந்த கைகளை விடுவித்து, கைகளை தொங்கவிட்டபடியே பெருந்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
என்னையறியாமலே
அவளின் கையினுள் எனது ஆட்காட்டி விரலை வைத்தேன். அவளின் கையின் வெப்பம்
எனது குழந்தைகளின் வெப்பததைப்போலிருப்பதாய் உணர்ந்தேன்.
அப்போது தெய்வம் என் விரலை இறுக்கமாய் பற்றிக்கொண்டது. நான் மோட்சமடைந்திருந்தேன், அடுத்துவந்திருந்த சில கணங்கள்.
என் மனம் பல ஆண்டுகளுக்கு முன்பான நாட்களில் நனைந்துகொண்டிருக்க அவளின் முகத்தை மெதுவாய் வருடினேன். தெய்வீகமாய், அவள் தூக்கத்தில் சிரித்தாள்.
இன்றைய நாள் மிக மிக நல்லது.
இது அதித்தி என்னும் அக் குழந்தைக்குச் சமர்ப்பணம்.
அவள் யார் என்று எமக்கு புரிகிறது ஐயா
ReplyDelete