நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் 
அவசரப்படவேண்டியதில்லை, மதியம் 12 மணிக்கு முதல் ஒரு வேலையும் இல்லை 
என்பதால் தூக்கத்தின் சுகத்தினை அனுபவித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் 
அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.
அண்ணண் நான் ______ கதைக்கிறேன் என்றார். எனக்குப் அவர் கூறிய பெயர் நினைவில் 
இருக்கவில்லை. ஆனால் அந்தக் கணீர் என்ற குரல் நினைவில் இருந்தது. எனவே அது 
யார் என்று புரிந்து கொண்டேன். 
அவர் ஒரு பெண்போராளி, 30 வயதுகள் 
இருக்கலாம். சென்றவருடம் இலங்கை சென்றிருந்தபோது அவரைச் சந்தித்திருந்தேன்.
 கணவன் முள்ளிவாய்கால் காலங்களின்போது காணாதுபோனவர். இன்றுவரை எதுவித 
தகவலும் இல்லை. தற்போது அவருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 
படுவான்கரைப்பகுதில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்திருந்தார். நான் அவரைச் 
சந்தித்தபோது.குடும்பத்தினரின் தொடர்பின்றியும், உதவியின்றியும் வாழவேண்டிய
 நிர்ப்பந்ததின் மத்தியில் பலத்த சிரமத்துடன் வாழ்ந்திருந்தார். 
உளவாளிகளும்( தமிழர்களான முன்னாள் போராளிகள்), உள்ளூர் 
பெரிசுகளும் அவரைக் குறிவைத்து, சந்தர்ப்பத்துக்காய் காத்திருப்பதை 
அறிந்த ஒரு நண்பர்தான் அவரை எமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான் அங்கு நின்றிருந்த நாட்களில்அவருக்கு பிரச்சனைகள் அதிகரித்ததால் அவர் உடனடியாக இடம் 
பெயரவேண்டியேற்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தனிமனிதரின் முயற்சியினால் 
நடாத்தப்படும் ஒரு ஆநாதரவானவர்கள் வாழும் இல்லத்தில் அவர் வாழத் 
தொடங்கினார்.
எனது நோர்வே நண்பர் ஒருவர் அவரின் மாதாந்த 
செலவீனங்களைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இடையிடையே எனது நண்பர்கள் மூலமாக 
அவரைப்பற்றி அறிந்து கொள்வேன். கடந்து 4 - 5 மாதங்களாக அவரின் வாழ்வு 
நிம்மதியாக ஓடிக்கோண்டேயிருந்தது.
இன்று தொலைபேசியில் வந்ததும் அவர்தான். எப்படி இருக்கிறீர்கள்?, மகன் எப்படி? வாழ்க்கைநிலை எப்படி என்று பேசிக்கொண்டிருந்தோம்.
அவர்
 தங்கியிருக்கும் இடம் மிகவும் சிறியது. அங்கு பல அநாதரவான பெண்கள் 
தங்கியிருக்கிறார்கள். பல குழந்தைகளும் தங்கியிருக்கிறார்கள். மிகுந்த 
இடப்பற்றாக்குறை இருக்கிறது. சாதாரண ஒரு வாழ்விற்கான இடமல்ல அது. 
தற்காலிகமான பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய இடமே அன்றி, நிரந்தர இடமல்ல அது
 என்றார்.  
அண்ணண்! எதிர்காலத்தை நினைத்தால் பயமாயிருக்கிறது. என்ன செய்வது என்று 
புரியவில்லை, குழப்பமாயிருக்கிறது, மகனைப் படிப்பிக்கவேண்டும் என்று கூறினார். மனது கனத்துப் போனது 
எனக்கு.
அவரின் வாழ்வில் 15 ஆண்டுகளுக்கு மேலான காலத்தினை 
விடுதலைக்காக பொடுத்திருத்திருக்கிறார். கல்விகற்கும் காலத்தில் இயக்கத்தில் 
இணைந்ததால் கல்வித்தகைமைகள் எதுவுமில்லை. இயக்ககட்டடைப்பில் உயர் பதவியில் 
இருந்தால் தொழிற்பயிற்சியோ, அனுபவமோ இல்லை. தெரிந்ததெல்லாம் இயக்கமும், 
போரியல்வாழ்வும், போரியல்அறிவும் மட்டுமே. 
போரின் பின்னான இன்றைய வாழ்வியற் சூழலுக்குள் அவரால் 
இயங்கமுடியாதிருக்கிறது. மிவவும் தடுமாறிக்கொண்டிருந்தார். உங்களால் என்ன செய்ய முடியும் என்று கூறுங்கள் 
அதற்கான முயற்சிகளை செய்து பார்ப்போம் என்றேன்.
என்ன செய்வது என்று 
தெரியவில்லை, ஆனால் பயமாயிருக்கிறது என்றபோது, அவரின் சுயநம்பிக்கை, நான் அவரைச் 
சந்திததபோதிருந்ததை விட பலமடங்கு குறைந்திருந்ததை அவதானித்தேன். 30 
வயதுகளின் ஆரம்பத்தில் கணவன் இன்றி, தொழில் இன்றி, 5 வயதுக் குழந்தையுடன், குடும்பத்தாரினது உதவியின்றி, சமூகத்தின் அரவணைப்பின்றி 
ஒரு தற்காலிக இடமொன்றில், இன்னும் பலருடன் வாழும் அவரின் மனநிலை 
எப்படியிருக்கும் என்று உணரக்கூடியதாகவிருந்தது. 
நலிந்த மக்களுக்கு வாழ்வாதரத்தை ஏற்படுத்திக்கொடுக்க விரும்பும் தமிழ்ர்களின் உதவியினால் பல குடும்பங்கள் சுயதொழில் செய்து 
வாழ்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொண்டதை அவர் அறிவார். எனவே உங்களால் ஏதும் 
தொழில் செய்யமுடியுமாயின் கூறுங்கள், அதற்கான முதலீட்டுக்கான உதவிகளைப் பெற
 முயற்சிப்போம் என்றேன், அவரிடம். என்ன தொழில் செய்வது? எப்படிச் செய்வது? அது 
பற்றிய அறிவே எனக்கில்லையே என்றார். 
நான் நன்கறிந்த ஒரு முன்னாள் போராளி சுயதொழில் செய்கிறார். அவரிடம் உங்களுக்கு தொழில் 
கிடைக்கலாம் ஆனால் நாளொன்றுக்கு போக்குவரத்துக்கு 3 மணிநேரம் வேண்டும், உங்களால் முடியுமா, என்றேன். குழந்தையின் சிறுவர் பாடாசலையில் நேரப்பிரச்சனைகள் வரும் என்றும்,
 தொழிட்சாலைக்கு அருகிற்கு வீடு மாறுவது என்றாலும் 1 லட்சம் முற்பணமாகக் 
கொடுக்கவேண்டும் என்றும், வாடகை ஏறத்தாள  5000 வரலாம் என்றும் கூறினார். 
எனக்கு அறிமுகமான ஒருவரின் தாயார் கொழும்பில் தனியே வாழ்கிறார்.  அங்கு
 தங்கியிருக்க அவர்கள் அனுமதித்தால் அந்த முதியவருக்கும் 
உதவியாயிருக்கும், உங்கள் குழந்தைக்கும் கல்விகற்பதற்கு அவர்கள் உதவ நான் முயற்சி செய்கிறேன். எனவே  அவர்களிடம் கேட்கவா என்றதுக்கு, குழந்தையின் 
விளையாட்டுக்கள், குழப்படிகளை தாங்கிக்கொள்வார்களோ என்னவோ என்று பயந்தார்.
நான் கேட்பதற்காய் கோவித்துக்கொள்ளாதீர்கள், மனதில்பட்டதை கேட்கிறேன் 
என்றபடியே, வெளிநாட்டில் திருமண ஒழுங்குகள் ஏதும் செய்யும் வாய்ப்புக்கள் 
ஏற்பட்டால் அது பற்றி உங்கள் கருத்து என்ன என்றேன்.  
சற்று அமைதி நிலவியது எமது உரையாடலில். ”அண்ணண்! அவர் 
சாகவில்லை என்றே நம்புகிறேன். கட்டாயம் எங்காவது இருப்பார். அப்படி அவர் 
இருந்து என்னைத் தேடிவந்தால் என்ன செய்வேன். அவர் பாவமல்லவா என்றார்” 
என்னால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாகவிருந்தேன்.
சுயதொழில்
 தொடங்குவதற்கான அறிவுரைகள் வழங்கும் இரு நண்பர்களின் தொடர்புகளைக் 
கொடுத்து அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள். அதன் பின் மீண்டும் பேசுவோம் 
என்று கூறி தொலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டேன்.
அதன் பின் இன்றைய காலைப்பொழுது முழுவதும் அவரைப்பற்றிய நினைவாகவே 
இருந்தது. நான் அவரைச் சந்தித்தபோது அவர் மீது மிகுந்த மரியாதை 
உருவாகியிருந்தது. வயது குறைந்து பெண்ணாலும் அவர் வகித்த பதவியும், 
விடுதலையுணர்வும், வன்னித் தலைமை மீது அவர் காட்டிய விசுவாசமும், 
முள்ளிவாய்காலில் ஒரு கைக்குழந்தையுடன்அவர் கடந்து வந்த வலிகளும் எனக்கு அவர் மீது பெரு 
மரியாதையை உருவாக்கியிருந்தது.
இயக்கம் இருந்த காலங்கள் மறைந்து, இன்றைய காலத்தில், முன்னைய போராளிகள்
 சமூகத்தில் ஏனையவர்களுடன் சமமாக வாழும் நிலை இல்லாதிருப்பதன் காரணங்கள் 
என்ன என்று சிந்தனை கட்டற்று ஓடிக்கொண்டேயிருந்தது.
எங்கள் சமூகம் ஏன் 
இப்படியிருக்கிறது? எத்தனை எத்தனை வளங்களைக் கொண்டிருக்கிறது எமது 
பலம்பெயர் சமூகம்? அப்படியிருந்தும் ஏன் பலரும் நாம் கடந்து வந்த பாதையை 
திரும்பிப்பார்க்கின்றோம் இல்லை?  டாம்பீகமான விழாக்கள், சுற்றுலாக்கள், 
அதீத சௌகரீயங்கள் என்று 
சுயநலமாய் சிந்திக்கும் ஒரு மனிதக்கூட்டமாய் நாம் மாறிப்போனதற்கான காரணம் 
என்ன? சக மனிதின் வலிகளைப் புரிந்துகொள்ளாமுடியாத அளவுக்கு நாம் மாறக் 
காரணம் என்ன?
சிந்திக்க சிந்திக்க கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
போரின் முன்னும் பின்னும், போராளிகள் பற்றி புலம்பெயர்
 சமூகம் கொண்டிருக்கும் முறன்பாடான நிலையானது விசித்திரமாக இருக்கிறது. 
போர்க்காலங்களில் போற்றிப் புகழப்பட்டவர்கள் இன்று தமது இருப்புக்காக 
கையெந்தும் நிலையில் இருக்கிறார்கள். இருப்பினும் எவரும் இவர்கள் பற்றி 
சிந்திக்கும் நிலையில் இல்லை. மக்கள் அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் பெருமனிதர்கள்
 உட்பட.
இன்று 
முழுவதும் இன்று உரையாடிய பெண்ணிண் குழந்தையின் முகம் 
நினைவிலாடிக்கொண்டேயிருக்கிறது. சக தமிழனாய் அவனின் முகத்தை சந்திக்கும் 
தைரியம் எனக்குண்டா என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நீங்களும் அதே கேள்வியினை கேட்டுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

 
 
சஞ்சயன்.... எனக்கு ஒன்றும் சொல்ல தோணவில்லை அய்யா!
ReplyDeleteமனதுக்குள் நீ நல்ல இருக்கனும்பா சாமி என்று தான் முணுத்துக்கொண்டேன்.
நீண்ட காலமாய் உங்கள் இடுகையை படித்தாலும் இப்போது தான் பின்னூடம் இடுகிறேன். உங்கள் மனித நேயத்துக்கு தலை வணங்குகிறேன்.
நீ எழுதுப்பா! உனது எழுத்துக்களை படித்துத்தான் மனதை அறுதல் படுதிக்கின்றேன்.
ReplyDeleteமனிதம் இன்னும் செத்து விடவில்லை என்பதை நீ மீண்டும் மீண்டும் நிருபிக்கின்றாய்!
ReplyDeleteவணக்கம்!
வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்