விசர்நாய்க்கு வந்த பல்வலி

நேற்றுமுன்தினம் அன்பு நண்பரொருவருவரின் 50 அகவைக்கான.  கொண்டாட்டங்கள் முடிந்து கட்டிலில் கடுங்களைப்புடன் விழுந்தபோது நேரம் பின்னிரவு 2 மணியிருக்கும்.

சடுதியாய் முளிப்புவந்தபோது மேற்தாடையில் உள்ள வேட்டைப்பல் பயங்கரமாக வலியைத்தந்துகொண்டிருந்தது. வலியின் தீவிரம் கண்வரை நீண்டுசென்றது. என்னிடம் இருந்த வலிநிவாரண மாத்திரைகளில் 4 மாத்திரைகளை விழுங்கினேன். அப்போதும் வலி அடங்கியதாய் இல்லை. எனக்கு பல்வலி வந்தால் நான் கராம்பு சப்புவதுண்டு. அது வலியை குறைத்துவிடும் அல்லது சுகமாக்கும். எனவே கராம்பு சப்பினேன். வலி சற்றுக் குறைந்தாலும் தாங்கமுடியாத அளவிலேயே இருந்தது.

நேரத்தைப்பார்த்தேன் பின்னிரவு 3 மணி என்றது அது. பல்வைத்தியர் காலை 8 மணிக்குத்தான் தொழிலை ஆரம்பிப்பார் என்றது அவரது இணையத்தளம். 5 மணிநேரம் என்னால் இவ்வலியை தாங்கமுடியாதே என்று நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அற்புதமான காட்சி நினைவுக்கு வந்தது.

அது ஒரு ஆங்கிலப்படம். பெயர் மறந்துவிட்டது. Kevin Costner. கதாநாயகனாக நடித்தார் என்றே நினைக்கிறேன். ஒரு குதிரைப்படைச் சிப்பாயுக்கு கடும் பல்வலி கண்டுவிடும். அவர்  அதை தாங்கமுடியாததால் படையில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் செல்கிறார். வைத்தியர் பல்லை பிடுங்கவேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார். ஒரு குதிரை அழைத்துவரப்படும். நோயாளி படுக்கவைக்கப்படுவார். அவரது பல்லை ஒருவித உபகரணத்துடன் இணைத்துவிடுகிறார்கள். பின்பு அந்த உபகரணத்தை குதிரையின் சேணத்துடன் இணைத்தபின் குதிரையை தட்டிவிடுவார்கள். குதிரை பாயும் வேகத்தில் பல் களன்றுவிடும். இத்தனை வலியையும் தாங்குவதற்கு அந்த குதிரைப்படைச் சிப்பாய்க்கு வைத்தியர் பல்லை பிடுங்குவதற்கு முன்பே ஒரு மருந்து கொடுத்திருப்பார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து ஒரு போத்தல் மது. சிப்பாய் அதை குடித்து மதிமயங்கிப்போயிருக்கும்போதுதான் அந்த குதிரை ஓடுவதற்கு பணிக்கப்படும். குதிரை ஓட பல்வாயைவிட்டு வெளியே பறக்கும். அந்த வலியையும் அவர் தாங்கிக்கொள்வார்.

இந்தக் காட்சி மனதில் தோன்றியதும் நான் கொன்யாக் போத்தலை தேடி எடுத்துக்கொண்டேன். பல்வலி தாங்கமுடியாததாய் இருந்தது. இடது பக்க கண்ணை திறந்துவைத்திருக்க முடியாதளவுக்கு விண் விண் என்று வலி தெறித்துக்கொண்டிருந்தது. போத்தலை திறந்து அப்படியே வாயினுள் சிறிது கொன்யாக்விட்டு கொப்பளித்தேன். என்ன அதிசயம் வலி ஓரிரு நிமிடங்களுக்குள் நின்றுவிட்டது.

எனது முதலாம் வகுப்புப் புத்தகத்தில் ” பாலா படம் பார், பாடம் படி” என்று இருந்தது. இதனாலோ என்னவோ எனக்கு பாடம் படிப்பதைவிட படம் பார்ப்பதிலேயே ஆர்வம் இருந்தது, இருக்கிறது. நான் படம் பார்ப்பதற்காக வாங்கிய திட்டுக்களும், பேச்சுக்களும், அடிகளும் அளவில்லாதவை. இப்படி நான் பார்த்த படம் ஒன்றில்தான் நான் குறிப்பிட்டகாட்சி வந்திருந்தது என்பது ஒரு வித முரண்நகை.

வலிகுறைந்தது. ஆனால் அரைமணிநேரத்தின் பின் மீண்டும் விண் விண் என்று வலியெடுத்தது. மீண்டும்  அதே மருத்துவத்தை செய்தேன். வலி நின்றது. இப்படியே காலைவரையில் நேரத்தினை கடத்திக்கொண்டேன். பல்வைத்தியர் உடனேயே என்னை அழைத்தார். அற்புதமான ஒரு இருக்கையில் இருத்தி என்னை படுக்கவைத்தார். எனது தலைக்கு நேரே மேலே ஒரு கணிணி இருந்தது.

பல்லைச்சுற்றி ஊசி போட்டார். சற்றுநேரத்தில் பலவகையான ஆயுதங்களால் பல்லைக் குடைந்து பார்த்தார். கதிரியக்ப்படம் எடுத்தார். படத்தினை தலைக்கு மேலே இருந்த கணிணியில் காட்டியபடியே விளக்கினார். நான் வாயைத்திறந்து பேச முடியாத அளவிற்கு வாயினுள் உபகரணங்கள் இருந்தன. எல்லாவற்றிற்கும் ம் ம் என்றேன். 1 மணிநேரமாக போராடியபின் மீண்டும் ஒருமுறை வந்து இப்பல்லின் பிரச்சனைகளை சரி செய்துகொள். இப்போது நான் செய்திருப்பது தற்காலிக நிவாரணம் என்று கூறி கையில் தனது சேவைக்கட்டணம்  1800 குறோணர்கள் (300 டாலர்கள்) என்ற போது எனது மனம் 1800 குறோணருக்கு நான் 4 போத்தல் கொன்யாக் வாங்கலாமே என்று கணக்குப்பார்த்தது என்பதை நான் மறைப்பதற்கில்லை.

இனிமேல்தான் கதையின் கிளைமாக்ஸ் வருகிறது.

நேற்றுக்காலை அன்பு நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கு பல்வலி இப்போது உரையாட முடியாது நாளை எடுங்கள் என்றேன்.

இன்று எடுத்தார். சுகம் விசாரித்தார். அவரின் பல் பற்றிய அறிவு அபாரமாய் இருந்தது. உனக்கு ஞானப்பல் இருக்கிறதா என்றார். எனக்கு ஞானம் என்று ஒரு நண்பர்தான் இருக்கிறார். அப்படி பல் இருப்பதாக நினைவில்லை என்றேன். மனிதர் விடுவதாயில்லை. சிறுவயதில் பிடுங்கினாயா என்றார். எனக்கு தெத்திப்பல் இருந்து பிடுங்கிய நினைவுண்டு. அதைக் கூறினேன். ”டேய் விசரா! என்று அன்பாக அழைத்தார். ஞானப்பல் வாயின் கடைசிப்பல் என்றார். நான் நாக்கினால் தடவிப் பார்த்தேன் அது அங்கிருந்தது.

கடைசிப்பல் இருக்கிறது என்றேன். அய்யோ என்று அவர் தலையில் அடித்துக்கொள்ளும் சத்தம் கேட்டது. எப்படியோ வாய்க்குள் ஒரு கடைசிப்பல் இருக்கும்தானே என்றபோதுதான் எனது முட்டாளத்தனமான பதில் எனக்கு விளங்கியது.

அப்போது அவர் இன்னொரு கேள்விகேட்டார். உனது வாயினுள் எத்தனை பற்கள் இருக்கின்றன என்றார்.

மனது மேலே 16 கீழே 16 என்று கணக்குப்போட்டது. நான் நாக்கினால தடவித் தடவித் எண்ணத்தொடங்கினேன். 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13  வந்ததும் பற்கள் முடிந்துவிட்டன.  மீண்டும் எண்ணினேன். 13 தான் இருந்தது. கீழ்த்தாடையிலும் 13 தான் இருந்தது.

நண்பரிடம் ”மச்சான் எனக்கு எல்லாமா 26 தான் இருக்கு” என்றேன்.

மறுபக்கத்தில் கடும் அமைதி நிலவியது. கடுமையாக சிந்திக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன்.

சற்று நேரத்தில் நண்பன் இப்படிச்சொன்னான்

டேய் ” விசர்நாய்களுக்குத்தான் 26 பல் இருக்குமாம்”


# நண்பேன்டா

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்