எனது மாமா ஒரு கடுந்தேசியவாதி

எங்கள் சமூகத்தில் எல்லோருக்கும் மாமா என்று ஒருவராவது இருப்பார்கள். மாமா என்னும் உறவு மற்றைய உறவுகளைவிட ஒருவித்தில் ஒரு படி நெருக்கமான உறவாயிருக்கும். மருமக்களை மாமாக்களுக்கு அதிகம் பிடிக்கும். அதைவிட மருமக்களுக்கு மாமாக்களை பிடிக்கும். அதுவும் திருமணமாகாத மாமா என்றால் கதையேவேறு. குசும்பு, குறும்பு வேலைகளுக்கு அவரையே சேர்த்துக்கொள்வோம்.

செல்வநாயகம் என்று எனக்கும் ஒரு மாமா இருந்தார். அவர் திருமணமானவர். பனைமரம்போன்று நெடிந்துயர்ந்தவர். அந்த பனைமத்தின் உச்சியில் பனையோலைகள் குறைவாக இருந்தன. அவர் எனது அம்மாவின் தம்பியல்ல. அப்பாவின் அக்காளை காதலித்து திருமணம்செய்ததால் மாமா ஆகியவர்.

அப்பாவின் அம்மாவும், அப்பாவின் இரு தங்கைகளும், மாமாவின் குடும்பத்துடன் வாழ்ந்தார்களா, இல்லை மாமா அவர்களுடன் வாழ்ந்தாரா என்று எனக்குத்தெரியாது. ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருவீட்டில்தான் வாழ்ந்தார்கள்.

எனக்கு மட்டும், எனது மாமா மிகவும் நல்லவர்,  மாமிக்கு எப்படியோ தெரியாது. மாமி, மாமாவை ”இஞ்சாரும், வாரும், பொரும்” என்று என்றே அழைத்தார். மாமா, மாமியின் சொல்லைத்தட்டாதவர். மாமி திட்டினால் எருமைாட்டில் மழைத்துளிவிழுந்தது போல உதறித்தள்ளிவிட்டு வெற்றிலையை மென்றுகொண்டிருப்பார். அந்நேரங்களில் நான்  அவரை பரிதாபமாகப் பார்த்தால், கண்ணடித்துச் சிரிப்பார். அவரின் அந்தப் பக்குவம் எனக்கு வரவேயில்லை.

மாமாவுக்கும் மலேசியாவுக்கும் ஏதோ தொடர்பிருந்ததாய் நினைவிருக்கிறது. எனது அப்பாவின் குடும்பம் பல ஆண்டுகள் மலேசியாவில் வாழ்ந்திருந்ததால் அவர்கள் மலாய் மொழியை சற்று பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். எனக்கு ஏதும் புரியக்கூடாது என்றால், அவர்கள் மலாய்மொழியில் பேசிக்கொண்டார்கள்.

எனது தந்தை, எனக்கு புரியாதவாறு எதையாவது பேசவேண்டும் என்றால் மலாய்மொழி எல்லாம் பேசமாட்டார். சுத்தத்தமிழில் ”டேய்! போடா அங்கால” என்பார். நான் கண்ணாத தேசத்துக்கு ஓடிவிடுவேன்.

எனது மாமா ஒரு கடும் தேசியவாதி அத்துடன் சோசலிவசாதியும்கூட. அதாவது உள்ளூர் பனங்கள்ளை மட்டுமே அருந்துவார்.  மனிதர் வேறு எதையும் வாயில் ஊற்றிக்கொள்ளவே மாட்டார்.

கள்ளுக்கடை வைத்திருப்பவன் வாழவேண்டுமே என்பதற்காக சற்று அதிகமாகவே காலையும் மாலையும் கள்ளை வாங்கிக் குடிக்கும் சோசலிசவாதி அவர்.

மட்டக்களப்புக்கு வந்தாலும் அவரது தேசியபானம் கள்ளுதான். கள்ளு என்பது அவரின் மாலைப்பொழுதினை அழகாக்கும் ஒரு அற்புதபானம். அவருக்கு மாலைப்பொழுதுகள் எப்பொதும் அழகாக இருக்கவேண்டும்.

மாமாவுக்கும் மலாய் மொழிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா. ஒருபின்மாலைப்பொழுதில், ”மாமா! மலாய் மொழி கற்றுத்தாருங்கள்” என்றேன். மாமா குஷியாகிவிட்டார். அவர் அப்போதுதான் தேசியவாதிகளுக்கான கொட்டிலில் இருந்து வந்திருந்தார். மாமி அன்று இடியப்பமும், சொதியும் சமைத்திருந்தார். மாமா இடியப்பத்தை உண்ணும்போதுதான் நான் அந்த சரித்திரமுக்கியத்துவம்வாய்ந்த கேள்வியைக்கேட்டேன்.

மாமா ”வாடா வா .. இந்தக் குடும்பத்திலேயே நீதான் புத்திசாலி” என்று என்னை அழைத்து தனக்கருகில் இருத்தியும்கொண்டார். பின்பு, அவர் தனது தட்டில் இருந்த இடியப்பம் ஒன்றை எடுத்து ”இது என்ன?” என்றார்.
நானும் ”இடியப்பம்” என்றேன்.
”இதுக்கு மலாய் என்ன” என்றார் அவர்.
”தெரியாது” என்றேன் நான்.
”சிக்கல்” என்றார் மாமா.
”ஓ.. இடியப்பத்தை சிக்கல் என்கிறார்கள் மலாய் மொழியில் என்று எனது மூளையில் பதிந்துகொண்டேன்.

மாமியின் வீட்டு குசினி, வீட்டுக்கு வெளியே தனியே ஒரு கொட்டிலில் இருந்தது.  அதற்கப்பால் வேலி. வெள்ளிதோறும் அதை மாமியும், அவரது தங்கைகளும் சாணத்தினால் பூசி மெழுகுவார்கள்.

அன்றிரவு அந்த குசினிக்குள் மாமி நின்றப‌டியே என்னை அழைத்து என்ன சாப்பிடப்போகிறாய் என்றார் மாமாவின் காதல் மனைவி.
நான்  ”சிக்கல்” என்றேன், மலாய் மொழியில்.
மாமிக்கு எதுவும் புரியவில்லை.

ஙே என்று முழுசினார்.

நான் மீண்டும் ”சிக்கல்” சிக்கல்” என்றேன். மாமிக்கு பொறுமை எல்லைமீற எனது காதை திருகியபடியே அப்படிஎன்றால் என்ன என்று கேட்டார். கண்கலங்கிப்போனது. இருந்தாலும் சமாளித்தபடி ”சிக்கல் என்றால் மலாய் மொழியில் இடியப்பம்” என்றேன். மாமி காதை இன்னும் அதிகமாக முறுக்கியபடியே..

 ”யார்.. உன்ட ஆசை மாமா சொல்லித்தந்தாரோ என்றார், மாமி கடும் எரிச்சலில்.

”ஓம்” என்றேன் காதைத் தடவியபடியே

அந்தாளும், அவரின்ட மலாயும் என்று மாமி தனக்குத்தானே புறுபுறுத்துக்கொண்டார்.

அன்றிரவு, மாமா ஏன் எனக்கு பொய் சொன்னீர்கள் என்றேன். அடேய்  இடியப்பத்தைப் பார். அது ஒரே சிக்கல் மாதிரியல்லவா இருக்கிறது. அதுதான் அப்படிச்சோன்னேன் என்று சொல்லிச் சிரித்தார்.

மாமா 60களின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்படையில் தொழில்புரிந்தவர். இதற்குச் சாட்சியாக பல புகைப்படங்களை வைத்திருந்தார். எனது அப்பாவும் மாமாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்: அப்பாவும் மாமாவுக்கு சளைக்காத தேசியவாதி என்பதால் இருவருக்கும் ஒத்துப்போனதோ என்னவோ.

மாமாவிடம் ஒரு சைக்கில் இருந்தது. அதுவும் மாமாவைப்போன்று பழசுதான். மாமாவிடம் இருந்த ஒரே ஒரு அசையாச்சொத்தில் அசையக்கூடியதாய் இருந்தது அது மட்டுமே. அனால் அது அசைந்தால் அதை நிறுத்துவது பெரும்பாடு. மாமாவுக்கு மட்டுமே அந்த சைக்கிலை நிறுத்தும் இரகசியம் தெரிந்திருந்தது.

மாமா சக்கரத்தில் காலைக்கொடுத்துது அதை நிறுத்தும் அழகே தனி. கள்ளுக்கொட்டிலில் இருந்து அதித களைப்பில் புறப்படும் மாமாவை மிகவும் பாதுபாப்பாக அழைத்துவரும் தன்‌மை அந்தச் சைக்கிலுக்கு இருந்தது. மாமா மாமியை எங்காவது அழைத்துச் செல்வது எனின் மாமி சைக்கிலின் கரியரில் ஏறிக் குந்திக்கொள்வார். ஒரு கையால் மாமாவின் தோளின்பின்பக்கத்தை பிடித்துக்கொள்வார். மாமா MGR போன்று விசிலடித்தபடியே சைக்கிலை மிதிப்பா‌ர்.

1970களின் பின் மாமா சுண்ணாகம் சந்தையில் புறோக்கராக இருந்தார். மருதனாமடச் சந்தையிலும் அவர் பிரபலமான பிறோக்கராகவே இருந்தார் என்றே நினைக்கிறேன். மாமா ஒன்றும் பெரிய காசுக்காரர் அல்ல. அவரது தேசியபானத்திற்குத் தேவைக்கு பணம் கிடைத்தாலே அது பெரியவிடயம் என்றளவில்தான் மாமாவின் வருமானம் இருக்கும். வழமையாக மாமா பீடி மட்டுமே பிடிப்பார். வருமானம் சற்று அதிகரித்தால் சுருட்டு வாயில் இருக்கும். மாமாவின் வாயில் சிகரட் இருந்தால் அன்று மாமாவின் காட்டில் அடை மழையடித்திருக்கிறது என்று அர்த்தம்.

வாழ்க்கையை தனக்குப்பிடித்த விதத்தில் வாழ்ந்த மனிதர் அவர். பணம் பணம் என்று பறக்கவில்லை அவர். காலையில் புறப்பட்டால் மதிய உணவுக்கு முன் வீட்டுக்குத்தேவையான அனைத்துப்பொருட்களையும் கொண்டுவருவார்.  அதன்பின் மீண்டும்  கொட்டிலினூடாக சந்தைக்குச் செல்வார். மீண்டும் மதிய உணவுக்கு வருவார். அதன் பின் சிறு உறக்கம். அல்லது பத்திரிகையை மேய்வார். மாலையில் மீண்டும்  சோசலிச கடும்தேசியவாதியாகி விடுவார். ஆடியாடி வந்து மாமியிடம் வாங்கிக்கட்டிவிட்டு சிங்கம் குறட்டைக் கச்சேரியுடன் அமைதியாகிவிடும். மாமா வீட்டுக்குள் படுக்கவே மாட்டார்: அவருக்கென்று திண்ணையில் ஒரு வாங்கு இருந்தது.  மழையோ, காற்றோ, பனியோ சிங்கம் அசையாது.

மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே ஒரு மகள்தான். எனது மச்சாள் என்னைவிட வயதில் மூத்தவர். எனக்கென்று அப்பாவின்வழியில் இருந்தது இந்த மாமா மட்டுமே. எனவே மாமா ஒன்றுடன் நிறுத்திக்கொண்டது ஒரு சரித்திரத்தவறு என்பதை மாமாவும் மாமியும் அறிந்துகொள்ளவில்லை.

மாமாவுக்கென்று ஒரு மேசை இருந்தது. அதிற்கு இரண்டு லாச்சிகள். அவற்றிற்குள் அவரது பாக்குவெட்டி, அவரது சைக்கிலில் இருந்து களன்று விழுந்த பொருட்கள், சுத்தியல், உளி, அரம், இரும்பத்துண்டுகள், துருப்பிடித்த கத்தரிக்கோல், ஆணிகள், பழைய மணிக்கூடு என்று மாமாவின் சொத்துக்களில் 99 வீதமானவை அதற்குள் இருந்தன. அதிலிருந்து எதைக் கேட்டாலும் ”எடு” என்பார்.  அப்படியான கொடை வள்ளல் அவர்.

மாமா ஒரு வெற்றிலைப்பிரியர். புகையிலையின் தார்ப்பர்யத்தை நான் அறியாத காலத்தில் ஒரு நாள், நான், மாமாவிடம் வெற்றிலை கேட்டேன். சிறுதுண்டு தந்தார். பாக்கு கேட்டேன். தந்தார். சுண்ணாம்பு கேட்டேன். மெதுவாக தடவிவிட்டார். புகையிலை கேட்டேன் மறுத்தார்.

அடம்பிடித்தபோது ஒரு துண்டைத்தந்துவிட்டு, என்னை அங்கால ஓடு என்று கலைத்துவிட்டு, வெளியே புறப்பட்டார். நானும் ‌சப்பத்தொடங்கி சற்று நேரத்திரில் தலைசுற்றி குந்தியிருந்து வாந்தி எடுத்தபோதுதான் மாமி என்னைக் கண்டு விசயத்தைப் புரிந்துகொண்டார். அன்று மாலை மாமி திட்டிக்கொண்டிருந்தார். மாமா ”அவன்தான் கேட்டான்” என்றார்.

”அவன் கேட்டால் நீர் குடுக்கிறதே” என்று மாமி மாமாவை காய்ச்சி் எடுத்தபோது எருமைமாட்டில் மழைத்துளி விழுந்தது போன்ற நிலையிலேயே மாமா இருந்தார். பின்பு என்னை அணைத்து புகையிலை பெரியவர்கள் சாப்பிட மட்டும்தான் என்றார். சரி என்று தலையாட்டினேன் நான். அன்றில் இருந்து இன்றுவரை புகையிலை சப்பியதில்லை நான். இனியும் சப்பப்போவதில்லை.

எனது அப்பா இறந்தபோது அருகில் நின்று அனைத்திற்கும் ஒழுங்குசெய்தார். பின்னிரவில் அப்பாவின் சாம்பல் அள்ளப்போனபோது அருகில் நின்றிருந்ததும் அவரே. 1985இல் இறுதியாக அவரைச்சந்தித்தேன். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று காலம் எம்மை இணைத்துவிட்டிருந்தது. காலம் ஓடியது. தொண்ணூறுகளில் ஒரு நாள், மாமா புற்றுநோய் கண்டு  இறந்துபோனார் என்று ஒரு கடிதம் வந்தது.

 2014ம் ஆண்டு விடுமுறையின்போது மாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன். மாமியின் வீட்டில் படத்தில் தொங்கிக்கொண்டிருந்தார் மாமா.  காலம் மாமியையும் வயதானவராக்கியிருந்தது. தனது ஒற்றைப்பல்லுடன் மாமி, மாமாவினதும் எனதும் திருவிளையாடல்களை நினைவுபடுத்திக்கொணடிருந்தார். நாம் சேர்ந்திருந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.

டேய்! ”உன்னால அந்த மனிசன்  தன்ட வாழ்க்கையில ஒரு நான் குடிக்காமல் வீட்ட வந்தது” அது நினைவிருக்கிறதா என்றார் மாமி.
”இல்லையே, அப்படியான ஒரு பாவியா நான்” என்றேன் சிரித்தபடியே.

மாமி அந்தக் கதையை சொல்லத் தொடங்கினார்.

13 - 14 வயதிருக்கும். நான் மாமாவுடன் சுண்ணாகம் சந்தைக்குச் சென்றிருக்கிறேன். மாமாவுடன் அலைந்துதிரிந்தபடியே பொழுது போயிருக்கிறது. ஓரிடத்தில் கோழிகளை விற்றுக்கொண்டிருந்திருக்கிறார் ஒரு வயதான மூதாட்டி. நான் என்னையறியாமலே அங்கிருந்து ஒரு கோழியை மிதிக்க அதன் கால் முறிந்துவிட்டது. மூதாட்டி கோழியை வாங்கு, வாங்கு என்று என்னைப் பிடித்திருக்கிறார். என்னிடம் பணம் இல்லை. பிரச்சனையைக் கண்ட மாமா உதவிக்கு வர, மாமாவை பணம்தா என்று அவர் பிடித்திருக்கிறார். மாமா தன்னிடம் இருந்த பணத்தைக்கொடுத்து  கடனும் கூறி என்னை மீட்டெடுத்து, என்னையும் கோழியையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். வீட்டில் கோழி கறியாகியிருக்கிறது. அன்று கையில் காசு இல்லாத காரணத்தினால் மாமா தனது தேசியத்தையும்,சோலித்தையும் மறந்து வீடு வந்தாராம் என்றார் மாமி.

எப்பேர்பட்ட ஒரு சோசலிச தேசியவாதியின் விசுவாசத்தை நான் சோதனைக்குட்படுத்தியிருக்கிறேன் என்று நினைத்துபடியே மாமியிடம் கேட்டேன் இப்படி

”மாமி, அன்று மாமா அந்த கோழிக்கறியபை் பற்றி என்ன சொன்னவர் என்று”

டேய்! அந்தாளுக்கு கள்ளு இல்லாம சாப்பாடே இறங்காதடா என்றார் மாமி

பரலோகத்தில் இருக்கும் என்ட மாமோய்! ... என்னை மன்னிப்பீராக.

1 comment:

பின்னூட்டங்கள்