நினைவின் காயம்

நேற்று முகப்புத்தக உட்பெட்டியில் ஒரு நோர்வேஜிய மொழிச் செய்திவந்தது.
பழசு, எப்படி இருக்கிறாய் என்று இருந்தது அது.

எனது உற்ற நோர்வேஜிய நண்பர். சில ஆண்டுகளாக தொடர்பு குறைந்திருக்கிறது. தொழில் நிமித்தமாக வடமேற்கு நோர்வேயில் இருந்து ஒஸ்லோவிற்கு தற்காலிகமாக குடிவந்திருக்கிறார். 3 மாதங்கள் தங்கியிருப்பாராம்.
என் குழந்தைகளுக்கு அவர் வீடு எங்கள் வீடுபோன்றது. அவருடன் நான் அறிமுகமானது 1987ம் ஆண்டு நடுப்பகுதியில். அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது எமது நட்பு. அவரது பெற்றோருடனும் அவரது சகோதர சகோதரிகளுடனும் அவரது பாரியாரின் குடும்பத்தினருடனும்கூட எனக்கு நட்பிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு நத்தார் தினம் அவரது வீட்டில் மிக மகிழ்ச்சியாக நடந்துபோனது. அவரது குடும்பத்தவர்களுடன் எனது இளவரசிகள் இருவரும் மிக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளையவளுக்கு 4 வயது. மூத்தவளுக்கு மறுநாள் 8 வயது ஆக இருந்தது.

நத்தார் என்றால் பரிசுப்பொருட்களுக்கு கேட்க வேண்டுமா என்ன? சிறியவள் தனது பரிசுப்பொருட்களுடன் நண்பரின் மகளின் மடியில் விளையாடிக்கொண்டிருந்தாள். மூத்தவள் நண்பரின் தாயாருடன் உரையாடிக்கொண்டிருந்தாள். அம் மூதாட்டிக்கு 92 வயதிருக்கும். மூத்தவள் பிறந்திருந்த ஆரம்ப நாட்களில் எங்கள் வீட்டுக்கு இந் நாட்டு பழக்கவழக்கத்தின்படி தாய்க் கஞ்சிஎன்னும் கஞ்சியுடன் வந்திருந்தவர் அந்த மூதாட்டி. அதுமட்டுமல்ல தனது தாயின் தாயார் தனக்கு தந்திருந்த  கம்பளி ஒன்றினையும் அவர் எனது மகளுக்கு கொடுத்திருந்தார். ஏறத்தாழ 100 வருடங்கள் பழமையான கம்பளி அது. என்னை மிகவும் நெகிழ்ச்சிக்கு   உள்ளாக்கிய நிகழ்வு அது. 

அண்மையில் நண்பரின் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்றபோது நான் அதை அவனிடம் கொடுத்து அதன் பழமையைக் கூறினேன். இறுக அணைத்து கண்கலங்கி நன்றி கூறினான் அவன். நண்பரும் நெகிழ்ந்து என் முதுகில் அன்பாய் தட்டினார்.

மறுநாள் தனக்கு 8 வயது என்பதையும் அவர்கள் மாலை வீட்டுக்குவர வேண்டும் என்றும் மகள் அவர்களுக்கு கூறியபடியே தனது பரிசுப்பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். நண்பரின் மனைவிதான் வரும்போது ஒருகேக் கொண்டுவருவதாகக் கூறினார்.

நத்தார் மரத்தைச் சுற்றி சுற்றி கைகோர்த்தபடியே பாட்டுக்களை பாடியபடியே நடந்து ஓய்ந்து உண்டுகளைத்து மகிழ்ந்தோம். இளையவள் நண்பரின் மடியில் தூங்கிப்போயிருந்தாள். அவர் தனது குழந்தைபோல் அவளை அணைத்திருந்தார். அவளின் கேசத்தை கோதிவிட்டார். முத்தமிட்டார்.

மூத்தவள் சோபாவில் சுறுண்டிருந்தாள். நாம் புறப்பட்டோம். அவர்களது வீடும் எங்கள் வீடும் தூரமில்லை. 50 மீற்றர்கள்தான் இருக்கும். வீடுவந்து சேர்ந்தோம். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தொலைக்காட்சியினை பார்த்தபடியே மகளின் பிறந்தநாளுக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தேன். நேரம் போய்க்கொண்டிருந்தது. தொலைக்காட்சி எங்கோ ஒருநாட்டில் பலத்த பூமியதிர்ச்சி என்று அறிவித்தது. மகளின் பிறந்தநாள் சிந்தனையில் வேறு எதுவும் மனதைக் கவரவில்லை. தூக்கம் வந்தது.  மூத்தவளை அணைத்தபடியே தூங்கிப்போனேன்.

அப்பா எழும்பு இன்று எனது பிறந்தநாள் என்று எழுப்பப்படும்வரை நான் கடும் நித்திரையில் இருந்தேன். எழும்பி வீட்டுக்குப் பின்னால் அவளுக்காக ஒளித்து வைத்திருந்த சைக்கிலை எடுத்துவந்து கொடுத்தேன். மகள் பெருமகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருந்தாள். இளையவள் என்றும்போல் கைசூப்பியபடியே தொலைக்காட்சியில் தன்னை மறந்திருந்தாள்.

நான் பிறந்தநாள் விழாவுக்கான உணவு மற்றும் வேலைகளில் என்னை மறந்திருந்தேன்.  திடீரென்று தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அவசரச் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

தென்கிழக்காசியாவில் பூமியதிர்ச்சியினால் சுனாமி என்னும்  ஆழிப்பேரலை பல நாடுகளை தாக்கியிருக்கிறது. இலட்சக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள். அதிகம் பாதிக்கப்பட்டநாடுகள் இந்தோனேசியா இலங்கை ஆகும் என்றதுசெய்தி. ஒளிப்படங்கள் வரத்தொடங்கின. அந்நாட்களில் இருந்த தமிழ் தொலைக்காட்சிகளும் பயங்கரமான படங்களை வெளியிட்டன. நான் விறைத்துப்போயிருந்தேன்.

அப்போது எங்கள் வீட்டுமணி ஒலித்தது. இளையவள் எட்டிப்பார்த்து நண்பரின் பெயரைக் கூறிவந்திருக்காறார் என்று ஓடிச் சென்று கதவைத்திறந்து அவரது கைகளுக்குள் அடைக்கலமானாள். நண்பர் உள்ளேவந்தார். அவர் கண்கள் கலங்கி இருந்தன. மகளை இறக்கிவைத்துவிட்டு என்னை அணைத்து எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. உங்கள் இனம் கடக்கும் அவலங்களுக்கு அளவில்லை என்றார். எனக்கும் பேச்சுவரவில்லை.

அன்று பல மணிநேரங்கள் எங்களுடன் தங்கியிருந்தார். மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. அம்மாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் பாதுகாப்பாய் இருந்தார்.

தொலைக்காட்சிகள் மிகவும் வேதனைமிக்க காட்சிகளை ஒலிபரப்பின. இதை எழுதும் இந்த நிமிடத்திலும் ஒருதந்தை இறந்துபோனதனது இரு குழந்தைகளை கட்டிக்கொண்டு அழுத காட்சி என்னுள்  படிந்துபோயிருக்கிறது. அந்தக் கணத்தின் வேதனை இன்றும் நினைவுகூரமுடிகிறது.

மகளுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால் வீடு மகிழ்ச்சியாய் இல்லை என்று புரிந்திருக்க வேண்டும். என்னைச் சுற்றிசுற்றியே நின்றாள். அப்போது அவள் அன்றைய நாளுக்கான அழகிய உடையை உடுத்தியிருந்தாள். நான் மெதுவாய் அழைத்து விடயத்தை விளக்கிக் கூறினேன். குழந்தைகள் இறந்திருந்த காட்சிகள் அவளுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அம்மா! இன்று உனது பிறந்தநாள். ஆனால் இன்று மிகவும் வேதனையானதொரு நிகழ்வும் பல மனிதர்கள் வேதனையிலும் இருக்கிறார்கள் என்று கூறிமாலை நேரத்து விழாவினை நாம் கொண்டாடுவதை தவிர்ப்பதே நல்லது என்றேன். அவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்துபோனது. மெதுவாய்  அழைத்து அணைத்து மடியில் உட்கார்த்திக்கொண்டார் நண்பர்.

அவளுடன்  நோர்வேஜிய மொழியில் உரையாடினார். அவளை உரையாடலுக்குள் புகுத்திக்கொண்டார். உலக வரைபடம் எடுத்துவரப்பட்டு நாடுகள், பூமியதிர்ச்சி, சுனாமி என்று நாம் உரையாடிக்கொண்டிருந்தார்கள். இளையவளுக்கு அவளது பெருவிரல் வாய்க்குள் இருந்தமையினால் அவளது உலகம் அவளுக்கு அழகாக இருந்தது.

அன்று மாலைமகள் சாதாரண உடைக்குமாறியிருந்தாள். வீட்டில் எவ்வித சோடனைகளோ, விழாவுக்கான அறிகுறிகளோ இருக்கவில்லை. வீடு மயான அமைதியில் இருந்தது. மகளும் பிறந்தாள் சோபையை இழந்திருந்தாள். மரணமும், மனிதர்களின் ஓலங்களும் அவளையும் பாதித்திருந்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

அன்றைய நாளும் அடுத்து வந்த நாட்களும் மிகவும் கனமானவை. மழையில் நனைந்த கோழிகள் போன்று தமிழர்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். நானும்தான்.  அடுத்துவந்த நாட்களில் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழர்கள் இணைந்து ஏறத்தாழ நோர்வே குறோணர்கள் ஒரு லட்சத்தினை நாம் சேர்த்திருந்தோம். நண்பரும் இதற்கு பலமாய் உதவினார்.

சுனாமியினால் இறந்த மற்றும் காயப்பட்ட மக்களுக்காக உள்ளுர் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது. அப்போது தமிழர்களின் சார்பில் அங்கு உரையாற்ற அழைத்திருந்தார்கள். நான் ஆற்றிய மிகமிக சொற்பமான உரைகளில் என் மனதுக்கு நெருங்கிய உரை அது.

நண்பரைப் பற்றியும், அவரது செயல்களும், மனிதநேயமும்  எனக்கும் எனது குழந்தைகளுக்கும் எவ்வளவு ஆறுதலைத் தந்தது என்றும், உள்ளுர் மக்கள் எமது சமுதாயத்திற்கு உதவிய விதத்தையும் அங்குகுறிப்பிட்டேன். உரையின் இறுதியில் குரல் கம்மியது. அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கியிருந்ததையும் பலர் கைக்குட்டையினால் கண்களை துடைத்துக்கொண்டிருந்ததும் கலங்கிய கண்களினூடேதெரிந்தது.

தேவாலயத்தில் நான் உட்கார்ந்திருந்த வாங்கினை நோக்கி நடந்தேன். வாங்கின் அருகே நண்பர் நின்றபடியே கையைப்பற்றி அழுத்திப் பிடித்தார். அருகருகே உட்கார்ந்துகொண்டோம்.  மனதை ஊடுருவிப்பாயும் ஓர்கன் இசை தேவாலயத்தினுள் புகைபோன்று பரவிக்கொண்டிருந்தது.

இதன் பின் அந்த ஊரில் 4 வருடங்கள் வாழ்ந்திருந்தேன். என்வாழ்வில் புயலடித்தபோது ஒருவாரத்தில் குறைந்தது 2 - 3 தடவைகள் பேசிக்கொள்வோம். நான் அழும்போது அமைதியாக கண்களை ஒற்றிக்கொள்ள மெதுகாகிதம் தருவார். என் சீழ் வடிந்தோடும் வரை.

நாம் நிட்சயம் சந்திக்கவேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறேன் அவருக்கு.

1 comment:

  1. அனுபவித்தவனுக்கே அதன் வலி தெரியும். மற்றையவனுக்கு பத்துடன் பதினொன்றாக அது வெறும் செய்திமட்டுமே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்