கடவுளுக்கு கடன் கொடுத்த கதை

நேற்று மாலை நண்பரின் கடையொன்றில் கணிணிதிருத்தச் சென்றிருந்தேன். நண்பர் வெளியே சென்றிருந்தார்.

அப்போது ஒருவர் உள்ளே வந்தார். பார்த்தால் வட இந்தியர் என்று கூறலாம்.  அப்படி நிறம். 20 வயதுக்கு அதிகம் என்று கூறமுடியாது. தலையைச் சுற்றி ஒரு கறுப்புத்துணி கட்டப்பட்டிருந்தது.

"I am Guru"என்றார்
”Hi Guru, I am Sanjayan" என்றேன். அவரின் பெயர் குரு என்று நினைத்தபடியே.
”no... no.. God send me... my friend.. people call me Guruji"

ஆஹா .. சனியன் என்னில் மீண்டும் கண்வைத்துவிட்டான் என்று சற்று அலேட் ஆனேன். அவனைப் பார்க்க பாவமாயும் இருந்தது.

"God says to me "என்றுவிட்டு கண்ணை மூடினான். (குரு தியானிக்கிறாராம்)
ஏறத்தாள 10 செக்கன்களில் கண்ணைத்திற்தான்.

”He says.. you good man.." என்றான்
”ம்” இது நான்”
”You good heart ... you help people but no money"

தெய்வமே என்று காலில் விழ யோசித்தேன். என்றாலும் சமாளித்தபடியே..
” Any more news from god" என்றபோது நண்பரின் கடையில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டுவிட்டான் ”குரு”

”you believe in him"
"No... I believe in Sanjayanatha"
தோழர் ”குரு” சற்று குழம்பிவிட்டார்
"you not hindu..." என்றார்
”yes.. I am"
"Then who is god Sanjayantha"
"Its me"
" Ohh my friend... you are jocking" என்றார் குரு

இப்படியே பிடி கொடுக்காமல் தப்பித்துக்கொண்டிருந்தேன்.தான் சாத்திரம் கூறுபவன் என்றும், நண்பரின் பெயரைக் கூறி ... ஆள் எங்கே என்றான்.
நண்பர்... சாத்திரம் கீத்திரம் என்று சற்று நம்பிக்கையுள்ளவர்தான். எனவே அவனில் நம்பிக்கை வந்தது.
 
நண்பருக்கு தொலைபேசினேன். ”அய்யோ... அவனா? என்று அலறினார் அவர்”
அதற்கிடையில் குரு, தொலைபேசியை பறிக்காத குறையாக வாங்கி நண்ருடன் கதைத்தான். இருவரும் படு பயங்கரமாக சுகம் விசாரித்துக்கொண்டார்கள். நண்பர் நாளை 8 மணிக்கு வா என்ற ஒப்பந்தத்துடன் தொலைபேசியை வைத்தார்.

நண்பர் 10 மணிக்குப் பின்புதான் கடையைத் திறப்பார் என்பது எனக்கு மிக நன்றாகத்தெரியும்.

குரு, என்னிடம் நண்பரின் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டான். அப்போது நண்பரின் தொலைபேசி அழைப்பு வந்தது. ”செத்தாலும் அவனிடம் தொலைபேசி இலக்கத்தை கொடுக்காதே” என்றுவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

நண்பர் எதிர்பார்த்தது போலவே குரு தொலைபேசி இலக்கத்தைக் கேட்டான்.
கடைசி இரண்டு இலக்கங்களையும் மாற்றிக் கூறினேன். படுபாவி... உடனடியாக நண்பருக்கு தொலைபேசி எடுத்தான். இலக்கம் பாவனையில் இல்லை என்று பதில் வர... திருகுதாளம் பிடிபட்டது.

நண்பரின் உண்மையான இலக்கம் கைமாறியது. அதுவும் சரியானதா என்று பார்த்தான். ரிங் போனது ... ” God is great ....... God is great" என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

இப்போது என்னைப் பார்த்து..

"you love chieldren" என்றான்.

ஆச்சர்யமாய் இருந்தது ... எப்படி இது இவனுக்கு தெரிந்தது என்று.

மடையன்போன்று ஆமா ஆமா என்று பல்லை இளித்தபடியே பதிலளித்தேன்.

”I know... God is telling me that"என்றுவிட்டு ஒரு பையுக்குள் இருந்து சில படங்களை எடுத்தான். எல்லாமே வறுமையில் வாழும் குழந்தைகளின் படங்கள்.

அத்துடன் விடவில்லை அவன்..

"Please ..help.. I am going to Nepal. I must help children" என்று போட்டானே ஒரு போடு.

காசு தரமாட்டேன் என்று அடம்பிடித்தேன்.

இறங்கி வந்தான்.

”no eating today... give me some money please" என்றான். அவனைப் பார்த்தேன். சாப்பிடாதவன் போன்று சோர்ந்து இருந்தான். பாவமாய் இருந்தது
சிறிது பணம்கொடுத்தேன்.

”God will pay you back this money" என்றுவிட்டு மறைந்துவிட்டான்.

நண்பரின் கடையை பூட்டிவிட்டு வீடு செல்வதற்காய் வாகனத்தில் ஏறியபோது ஜன்னல் தட்டப்பட்டது.... வாகனத்துக்கு வெளியே ”குருஜீ” நின்றிருந்தார்.

ஜன்னலைத் திறந்தேன்.

ஒஸ்லோவில் ஒரு இடத்தைக் கூறி அங்கு தன்னை இறக்கிவிட முடியுமா என்றார்.

15 நிமிடம் கார் ஓடியது. குருஜி எதுவும் பேசவில்லை. நானும் அவரைக் குழப்பவில்லை.

குருஜியை இறக்கிவிட்டு வீடு வந்துசேர்ந்திருக்கிறேன்.
.
.
என்ட ஒஸ்லோ முருகா! ... ஏனய்யா எனக்கு மட்டும் விதி இப்படி இருக்கிறது?

1 comment:

  1. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கிறார். இதற்குப் போய் இப்படி வருத்தப்படுகிறீர்களே?

    ReplyDelete

பின்னூட்டங்கள்