இதுவும் 1990ம் ஆண்டுப்பகுதியில் ஒரு முதியோர் இல்லமொன்றில் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற கதைதான்.
ஒரு புதிய மனிதரை முதியோர் இல்லத்திற்கு அழைத்துவந்திருந்தார்கள். அன்று வேலைக்கு வந்திருந்தபோது அவரைப்பற்றிய விபரங்கள் கிடைத்தன.
ஒரு பூங்காவில், கொட்டிக்கிடந்த உறைபனியின் குளிரில் விறைத்திருந்த ஒரு மனிதரைப்பற்றி, யாரோ அறிவித்ததால், வைத்தியப்பிரிவினர் அவரை உறைபனியில் இருந்து காப்பாற்றியிருந்தார்கள். அவர் வீதியில் வாழ்ந்திருந்தவர் என்பதை பின்பு அவர் சொல்லக்கேட்டேன்.
அவருக்கு அப்படியொன்றும் பெரிய வயதில்லை. 70 இருக்கும். ஆனால் அவருக்கு 24/7 க்கு மது, சிகரட் வேண்டும். நீண்டு வளர்ந்து பராமரிக்கப்படாத முடி, தாடியுடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் ஆகக் குறைந்தது ஒரு தூசணச்சொல் குடியிருந்தது. கடும்கோபக்காரராய் இருந்தார்.
அவருக்கு நீராடலில் ஏனோ பெரு வெறுப்பிருந்தது. பின்பொருநாள் அவருக்கு சவரம்செய்யவேண்டிவந்தது. அன்றைய நாளைப்போன்று இன்றுவரை எனக்கு யாரும் அழகழகான வார்த்தைகளால் திட்டியதில்லை.
அவருக்கும் முதியோர் இல்லத்திலிருந்த தாதியர்களுக்கும் இடையில் வெகுவிரைவில் முறுகல் நிலை உருவானது.
காரணம் அவரது கை அவர்களின் முதுகுப்புறமாக இடுப்புக்கு கீழுள்ள சதைப்பிடிப்பான இடங்களையும், கழுத்துக்கு கீழ் இருந்த சதைப்பிடிப்பான இடங்களையும் அடிக்கடி பதம்பார்த்ததே.
அதுமட்டுமல்ல அவரது கையின் மனநிலையிலேயே அவரது கண்ணும், வாயும் இருந்தது. அவரது கைக்கும், கண்ணுக்கும், வாய்க்கும் தாதியர்களின் வயதுக்கும் சம்பந்தமிருக்கவில்லை. அருகில் யார் சென்றாலும் மனிதர் சேட்டைவிட்டுக்கொண்டிருந்தார்.
இறுதியல் ஆண்களே அவரை பராமரிக்க நேர்ந்தது. ஏன் ”தேவதைகளை” அனுப்ப மறுக்கிறீர்கள் என்பார். அவரது வேதனையை எவரும் கண்டுகொள்ளவில்லை.
சில நாட்களின் பின்பொருநாள் அவரது நண்பர்கள் இருவர் அவரிடம் வந்தார்கள். அவர்களும் வீதியில் வாழ்பவர்கள் என்பதை அவரது நடையுடைபாவனைகள் உணர்த்தின. அவர்கள் அவருக்கு பதநீர் எடுத்துவந்திருந்தனர். வறண்டிருந்த நிலம் நீரை ஊறுஞ்சிக்கொள்ளும் வேகத்தில் அவர் அவற்றை அருந்தினார். அதன்பின்னான காலத்தில் ஒரு முறை நான் அவர்களைக் கண்டேன்.
வேறு எவரும் அவரைத் தேடவும் இல்லை. நட்புப்பராட்ட வரவும் இல்லை.
வெகுவிரைவில் படுத்த படுக்கையானார். இயற்கை உபாதைகளை கடந்துகொள்வதற்கும் அவருக்கு உதவி தேவைப்பட்டது. அந்நேரங்களில் உதவிக்கு வந்த தாதியர்களையும் அவர் கை விட்டுவைக்கவில்லை. எனவே எவரும் அவரிடம் செல்லமறுத்தனர். காலையில் அவரிடம் செல்லும்போதெல்லாம் அவர் மலத்திலும் சலத்திலும் ஊறியிருப்பார்.
அவருக்கு இருந்தது காமமா இல்லை சேட்டைக் குணமா என்று சிந்தித்துப்பார்க்கிறேன். திட்டவட்டமாக எதையும் கூறமுடியாதிருக்கிறது. தான் மலத்திலும் சலத்திலும் கிடப்பதற்கு தனது கைகளின் துருதுருப்பே காரணம் என்பது அவருக்கு புரிந்திருக்க முடியாததல்ல. ஆனாலும் அவரால் அதை கைவிட முடியவில்லையே. ஆக, அது காமமா? அவ்வயதிலும் இத்தனை காமம் சாத்தியமா? அல்லது அது அவரை மீறீய சேட்டைக்குணமா?
எனக்கும் அவருக்கும் கூறும்படியான உறவு இருக்கவில்லை. எனினும் காலப்போக்கில் அவரை அதிகமாக நான்தான் தினமும் காலையில் பராமரித்தேன். உணவூட்டினேன், இளவேனிற்காலத்தில் சக்கரநாற்காலியில் இருத்தி அழைத்துச்சென்றிருக்கிறேன். அவரிடம் இருந்த உடைகளில் அவருக்குப்பிடித்தமான ஒரு கம்பளி துணியில் தயாரிக்கப்பட்ட சேட் இருந்தது. அது மண்நிறமானது. பழுப்புவெள்ளை நிறத்தில் சட்டங்கங்கள் இடப்பட்டிருந்து. அவருக்கு எப்போதும் அது தேவையாய் இருந்தது. இது இல்லாத நாட்களில் இரவு உடையுடனேயே முழு நாளையும் கழித்தார்.
அன்றொருநாள் காலை, அவரைப் பராமரித்து, அவரது படுக்கையில் முதுக்கு இரண்டு தலையணைகளை வைத்தபின் அவரை உட்காரவைத்தேன். காலையுணவினை உண்டபின், காப்பி வேண்டும் என்றார். எடுத்துவந்து கொடுத்தேன். சிறுகுழந்தைபோல் கண்ணை மூடிச் சுவைத்துக்குடித்தார்.
நான் வேறு ஒருவரை பராமரிக்கச்சென்றுவிட்டு மீண்டும் வந்தபோது உட்கார்ந்திருந்தபடியே போய்விட்டிருந்தார்.
தாதிகள் அந்த மரணத்தைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
அன்று அவரது நண்பர்கள் அவரைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டபின், அவர்களை உடலங்களைப் பாதுகாக்கும் அறைக்கு அழைச்செல்ல எனக்கு உத்தரவு வந்தது. அவர்களுக்குப் பின்னால் கதவருகில் நான் நின்றிருந்தேன்.
மனிதர் அத்தனை குளிரிலும் கவலையேதுமின்றி அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தார்.
இத்தனை வருடங்களின்பின் ஏன் அவர் நினைவில்
வந்தார் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.
வந்தார் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.
வாழ்க்கையை அசைபோட பதில் அற்ற கேள்விகளும் அவ்வப்போது அவசியம்தான்.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்