மார்கழி 31ம் திகதி அம்மாவுடன் தொலைபேசியில் உரையாடியபோது ”ராசா, ஒரு படம் அனுப்பு என்றார்.
நான் புகைப்படங்களில் முகத்தை நீட்டுவது குறைவு. எனவே புகைப்படங்கள் குறைவு.
ஆனால் எனது அதிஸ்டம் அம்மாவுடன் தொலைபேசியபோது நான் ஒரு நிகழ்ச்சியில் நின்றிருந்தேன்.
அங்கு 3 உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள் உடல்லெங்கும் காய்த்த மாமரம்போன்று புகைப்பட உபகரணங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
அவர்களிடம் ”ராசாக்களே.. என்னைப் பெத்த ஆத்தாவுக்கு படம் அனுப்பவேண்டும். என்னை அழகாக ஒரு படம் எடுத்துத்தாருங்கள்” என்றேன்.
முதலாமவர் அண்ணை flash போடுறதா இல்லையா என்றார்.
இரண்டாமவர், பானையில் இருப்பதுதான் அகப்பையில் என்றார்.
மூன்றாமவர் மட்டும் ”அண்ணை... இது சின்னப்பிரச்சனை” என்றார்.
இது நடந்து இன்றுடன் 4 நாட்களாகி விட்டன.
இன்று 110 படங்களை அனுப்பிருந்தார் ”அண்ணை... இது சின்னப்பிரச்சனை” என்ற தெய்வம்.
அந்தப்படங்களுக்குள் நான் என்னை தேடினேன்.
என்னை நான் அடையாளம் கண்டுகொண்டது இத்துடன் இணைத்திருக்கும் இந்தப்படத்தில்தான்.
எங்கே என்று தேடுகிறீர்களா?
முதலில் ஒரு பூதக்கண்ணாடியை எடுத்துக்கொள்ளுங்கள்.
மேடைக்கு இடதுபுறமாக, ஒரு சிவப்பு நிற உடையணிந்திருக்கும் சிறுமிக்கு அருகில் தெய்வீக அழகுடன் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்... தெரிகிறதா?
அவர் தான் ... நானாம்.
அய்யா.... போட்டோகிராபர் உங்களுக்கு நான் என் அநியாயம் பண்ணினேன்?
மற்றைய இரண்டு தெய்வங்களும் இன்றும் படங்கள் அனுப்பவில்லை.
ரொம்ப பயமாக இருக்கிறது.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்